லக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் சில மாபெரும் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கின்றன.”

– மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

ந்து உச்ச நீதிமன்றம் பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பை மேற்கண்ட கூற்றோடு பொருத்திப் பார்க்காமல் இருக்கமுடியாது. இந்து மதவெறிக் கும்பலால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது இந்திய முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட போர் எனக் கொண்டால், அந்த அநீதிக்கு எள்ளளவிலும் குறைந்ததல்ல உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இத்தீர்ப்பு.

முடிவாக, பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பும், அம்மசூதி கட்டப்பட்ட பிறகும், அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பகவான் ராமன் பிறந்தான் என்பதுதான் இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருவதோடு, அந்த நம்பிக்கை ஆவணங்கள் மற்றும் வாய்மொழி சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காணப்படும் இணைப்பின் இறுதிப் பத்தியில் ஆணித்தரமாகக் கூறப்பட்டிருக்கிறது. இம்முடிவிற்கும் ராம ஜென்மபூமி குறித்த ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களுக்கும் இடையே யாரும் வேறுபாடு காண முடியுமா?

பாபர் மசூதி நில வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்: (இடமிருந்து வலமாக) அப்துல் நஸீர், எஸ்.ஏ.பாப்டே, ரஞ்சன் கோகோய், டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன்.

தீர்ப்பின் இணைப்பு மட்டுமல்ல, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த ஒருமனதான தீர்ப்பும்கூட ராமனின் பிறப்பு குறித்த இந்துக்களின் நம்பிக்கை என ஆர்.எஸ்.எஸ். கூறிவரும் கருத்தை அடிநாதமாகக் கொண்டுதான் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஒரு ‘மதச்சார்பற்ற குடியரசின் உச்ச நீதிமன்றம் பார்ப்பன மத நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பை அளித்திருப்பதாகப் பளிச்செனத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது போல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கிரிமினல் வழக்குகளில் சந்தேகத்தின் பலனைக் குற்றவாளிக்கு அளித்து விடுதலை செய்யும் சட்ட நடைமுறை இருப்பதைப் போல, சிவில் வழக்குகளில் மனுதாரரும் எதிர் மனுதாரரும் முன்வைக்கும் ஆதாரங்களுள் ஒரு தரப்பு ஆதாரத்திற்கு அனுகூலத்தையும் (balance of probabilities) கூடுதல் முக்கியத்துவத்தையும் (preponderence of probabilites) அளித்துத் தீர்ப்பு வழங்கப்படும் நடைமுறை உள்ளது. சட்டப்படியான இந்தக் கொல்லைப்புற வழியையும் இந்து மத நம்பிக்கை, புராணங்கள், வரலாறு, தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றையும் தேவைக்கேற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக் கொண்டு பாபர் மசூதி வளாக நிலத்தின் மீதான பாத்தியதையைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

ஓரவஞ்சனை நிறைந்த விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த மேல்முறையீட்டு வழக்கில் நிர்மோகி அகாரா, சன்னி வாரியம் மற்றும் குழந்தை ராமர் (ராம் லல்லா விராஜ்மான்) ஆகிய மூன்று தரப்புகள்தான் முக்கிய வழக்காடிகள். இவர்களுள் நிர்மோகி அகாராவை, அத்தரப்பு ஃபைசாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூல வழக்கில் இணைந்து கொள்ள கால வரம்பைத் தாண்டி மனு செய்திருக்கிறது; குழந்தை ராமரின் பூசாரியாக இருந்து வருவதாக நிர்மோகி அகாரா உரிமை கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டு அத்தரப்பை வழக்கிலிருந்து தள்ளுபடி செய்துவிட்டனர் நீதிபதிகள்.

1900- பாபர் மசூதியின் தோற்றம் (இடது) மற்றும் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு.

சன்னி வாரியத்தின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பினும், 1528 கட்டப்பட்ட பாபர் மசூதியில், அம்மசூதி கட்டப்பட்ட ஆண்டு தொடங்கி 1857 ஆண்டு வரையிலும் அயோத்தி முஸ்லிம்கள் அம்மசூதியில் தொழுகை நடத்தியதற்கான ஆதாரங்களைத் தரவில்லை, அம்மூன்று நூற்றாண்டுகளும் அம்மசூதி முஸ்லிம்களின் முழுமையான அனுபோக உரிமையின் கீழ் இருந்து வந்ததை நிரூபிக்கவில்லை” என்ற காரணங்களைக் கூறி, பாபர் மசூதி வளாகத்தை சன்னி வாரியத்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

எஞ்சி நின்ற இந்துத் தரப்பான குழந்தை ராமரிடம் பாபர் மசூதி வளாக நிலத்தை ஒப்படைப்பதற்கு, பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கைக்கு” அப்பால், உச்ச நீதிமன்றத்திற்கு வேறு எந்தவொரு சான்றும் தேவையாக இருக்கவில்லை.

இவ்வழக்கின் ஒரு மனுதாரரான இந்து மகாசபை, முகம்மது நபி கூறிச் சென்ற மரபுகளின் (ஹதித்)படி பாபர் மசூதி அமையவில்லை. எனவே, அதுவொரு மசூதியில்லை” என வாதாடியதை ஏற்றுக்கொள்ள மறுத்து, அது மசூதிதான் என ஏற்றுக்கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். மசூதி என ஏற்றுக்கொண்ட பிறகு, அங்கே 1857 முன்பாகத் தொழுகை நடந்ததா எனக் கேள்வி எழுப்புவது அபத்தமானது.

மேலும், பாபர் மசூதி அமைந்திருந்த அயோத்தி, 1857 முன்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த அவத் மாகாணத்தின் அங்கமாக இருந்துவந்தது. ஆங்கிலேய காலனி அரசு அவத் மாகாணத்தை இணைத்துக் கொள்ளும் முன்பு வரை அம்மாகாணம் முஸ்லிம் மன்னர்களால்தான் ஆளப்பட்டு வந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் 1857 முன்பாக அம்மசூதியில் தொழுகை நடந்ததா எனக் குதர்க்கவாதிகளால் மட்டுமே கேள்வி எழுப்ப முடியும்.

1857 நடந்த முதல் வட இந்திய சுதந்திரப் போரில் அவத் மாகாணத்தில் ஏராளமான ஆவணங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறியாத ஒன்றல்ல. எனினும், இப்பாதகமான நிலைமையையும் மீறி, பாபர் மசூதிக்கு மன்னர் பாபர் அறுபது ரூபாய் நிதியுதவி அளித்ததற்கான சான்றையும், அது போலவே பிரிட்டிஷ் அரசும் சன்னி வாரியத்திடம் நிதியுதவி அளித்து வந்ததற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, சன்னி வாரியம். நிதியுதவி மசூதியின் பராமரிப்புக்கு அளிக்கப்பட்ட ஒன்றே தவிர, அது நில உரிமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது” எனக் கூறி இந்த ஆதாரங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பாபர் மசூதியை இடிப்பதற்காக அதன் மீது ஏறி நின்று வெறிக் கூச்சலிடும் சங்கப் பரிவாரக் கும்பல்.

1528 தொழுகை நடக்கவில்லை எனக் கூறப்படும் மசூதிக்கு எந்த ஆட்சியாளராவது பராமரிப்பு நிதி அளிப்பார்களா?”  இச்சாதாரண கேள்வி இந்து மத நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்த நீதிபதிகளின் மனச்சான்றிடம் எழும்பாதது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல!

அயோத்தி முஸ்லிம்கள், பாபர் மசூதியில் 329 ஆண்டுகள் தொழுகை நடத்தி வந்ததற்கான ஆவணங்களை முஸ்லிம் தரப்பிடம் கறாராகக் கேட்ட உச்ச நீதிமன்றம், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, திரேதா யுகத்தில் ராமன் பிறந்தான் என்பதற்கு நிரூபணமாகக் கூறியிருக்கும் சான்று, இந்துக்களின் நம்பிக்கை.

“பாபர் மசூதியின் மைய கோபுரத்தை நோக்கி இந்துக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள்.”

“பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கி வந்திருக்கின்றனர்.”

“பாபர் மசூதியையும் ராம் சபுத்ராவையும் பிரிக்க ஆங்கிலேயே ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் அருகே நின்று, பாபர் மசூதியை நோக்கி வணங்கியிருக்கிறார்கள்.”

“ஸ்கந்த புராணம், ராமசரித மானஸ் ஆகிய இந்து மத நூல்களில் ராமன் அயோத்தியில்தான் பிறந்தான் எனக் குறிப்புகள் உள்ளன.”

“டிஃபேன்தாலர், மார்டின் ஆகிய வெளிநாட்டுப் பயணிகள், தமது பயணக் குறிப்புகளில் அயோத்தியில் ராமன் பிறந்த இடத்தில் வழிபாடு நடந்ததாகக் குறிப்பிடுள்ளனர்.”

என  இந்நம்பிக்கைக்கு ஆதாரமாகப் புராணங்களையும், வாய்வழிச் செய்திகளையும், வெளிநாட்டுப் பயணிகள் போகிற போக்கில் கூறியவற்றையும் ஏற்றுக்கொண்டு, பகுத்தறிவுக்குப் புறம்பான, அறிவு நாணயமற்ற, ஒருதலைப்பட்சமான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.

வரலாற்றைத் திரித்த தீர்ப்பு

ஆங்கிலேயக் காலனி அரசு 1856 அவத் மாகாணத்தை இணைத்துக்கொண்ட பிறகு, பாபர் மசூதி வளாகத்தில், மசூதியையும், ராம் சபுத்ராவையும் பிரிக்குமொரு தடுப்புச் சுவரை அமைத்தது. இத்தடுப்புச் சுவரை அமைப்பதற்கு அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் காரணமாகப் பயன்படுத்திக் கொண்டது ஆங்கிலேய அரசு. முதல் வட இந்திய சுதந்திரப் போருக்கு இரண்டு ஆண்டுகள் முன் இக்கலவரம் நடைபெற்றிருக்கிறது. இந்து, முஸ்லிம் மோதலைத் தோற்றுவிப்பது கும்பினி ஆதிக்கத்துக்கே பயன்பட்டிருக்க முடியும் என்ற கோணத்திலும் இந்தப் பிரச்சினையின் அவதார நோக்கத்தை நாம் பரிசீலிக்க வேண்டும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்ட தற்காலிக இராமர் கோயில்.

1855 கலவரம், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தடுப்புச் சுவர் ஆகிய நிகழ்வுகளின் பிறகுதான், பாபர் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த ராம் சபுத்ராவில் இந்துக்கள் வழிபாடுகளையும் திருவிழாக்களையும் தொடர்ந்து நடத்தத் தொடங்கினர். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ 1855 நடந்த இந்து மோதலையும், அதன் விளைவாக அமைக்கப்பட்ட அத்தடுப்புச் சுவரையும் இந்துக்கள் பாபர் மசூதியினுள் வழிபாடு நடத்தும் தமது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாகத் தீர்ப்பில் சித்தரித்து வரலாற்றையே வளைத்துள்ளனர்.

முதலாவதாக, 1855 இந்து இடையே நடந்த கலவரம் ராம ஜென்ம பூமிக்காக நடைபெறவில்லை. இக்கலவரம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் கழித்து நிர்மோகி அகாரா ராம் சபுத்ராவில் கோவில் கட்டிக்கொள்ள தம்மை அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்த வழக்கிலும் ராம் சபுத்ராவைத்தான் ராமர் பிறந்த இடமாகக் கூறியதேயொழிய, பாபர் மசூதியை அல்ல.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இந்துக்கள் அத்தடுப்புச் சுவரின் அருகே நின்றுகொண்டு, பாபர் மசூதியின் மையக் கோபுரத்தை நோக்கி, ( மசூதியின் மையக் கோபுரத்தைத் தீர்ப்பில் கர்ப்பக் கிரகம் என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.) வணங்கி வந்தனர்” என வாய்வழிச் செய்திகள் கூறுவதைக் காட்டி, இந்துக்களின் இந்நடவடிக்கை, அம்மசூதி கட்டப்பட்ட இடத்தில்தான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்றும், மசூதியில் தமது உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சியென்றும் புது விளக்கம் அளித்திருக்கின்றனர். மேலும், 1857 முன்பாக பாபர் மசூதி அயோத்தி முஸ்லிம்களின் முழு அனுபவப் பாத்தியதையின் கீழ் இல்லை, இந்துக்கள் மசூதியினுள் சென்று வழிபாடு நடத்தியிருக்கின்றனர் என்பதையும் இவை காட்டுவதாகப் பொழிப்புரை எழுதியுள்ளனர்.

பாபர் மசூதி வளாகம் தடுப்புச் சுவர் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, ராம் சபுத்ரா அமைந்திருந்த வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேசமயம், வளாகத்தின் உட்புறப் பகுதியில் அமைந்திருந்த பாபர் மசூதியிலும் தமது உரிமையை நிலைநாட்டத் தொடர்ந்து முயன்று வந்தனர்” எனக் கூறுகிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

தேவகி நந்தன் அகர்வால்.

இந்துக்கள் வெளிப்புறப் பகுதியில் இருந்தபடியே மசூதியின் மையக் குவிமாடத்தை நோக்கி வணங்கி வந்தார்கள், பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வணங்கினார்கள், தடுப்புச் சுவர் அருகே நின்றுகொண்டு பாபர் மசூதியை நோக்கி வணங்கினார்கள்” எனப் பட்டியல் இடும் நீதிபதிகள், இவற்றையெல்லாம் பாபர் மசூதியின் மீது தமக்குள்ள உரிமையை நிலைநாட்டும் இந்துக்களின் முயற்சிகளாகச் சித்தரித்துள்ளனர்.

இந்துக்கள் கடைப்பிடித்து வந்ததாகக் கூறப்படும் இந்த வழிபாடுகளுக்கு அப்பால், 1930 மசூதியின் குவிமாடத்தை இந்துக்கள் சேதப்படுத்தியது, 1949 மசூதியினுள் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டது உள்ளிட்ட கிரிமினல் நடவடிக்கைகளையும் இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிக்கிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இந்த அடாவடித்தனங்களை ஒருபுறம் சட்டவிரோதச் செயல் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கும் நீதிபதிகள், இன்னொருபுறத்தில் இச்சட்டவிரோதச் செயல்களை இந்துக்களின் முயற்சியாகச் சித்தரிப்பது மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் மோசடியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதப்படிப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். காலிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட கிரிமினல் குற்றத்தையும்கூட இந்துக்களின் முயற்சியாகக் கூறமுடியும். தீர்ப்பின் இம்மோசடியின் காரணமாகத்தான், பாபர் மசூதியை இடித்த முதன்மைக் குற்றவாளியான அத்வானி, தீர்ப்பு வெளிவந்தவுடனேயே, மசூதி குறித்த தனது நிலைப்பாடு சரியானது” என நிரூபிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

1855 அயோத்தியில் இந்து  முஸ்லிம் கலவரத்தையடுத்து, அப்பொழுது அவத் மாகாணத்தின் மன்னனாக இருந்த நவாப் வாஜித் அலி ஷா, அக்கலவரம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமரசத்தின் காரணமாகவே நிர்மோகி அகாரா பிரிவினர் ராம் சபுத்ராவை வழிபாட்டுத் தலமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். மேலும், இந்துக்களின் வழிபாட்டில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை எனக் கூறுவதோ அப்பட்டமான பொய், வரலாற்றுத் திரிபு.

1949 பாபர் மசூதி வளாகத்திற்குள் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட
குழந்தை இராமன் சிலை.

நிர்மோகி அகாராக்கள் மசூதியின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு நிரந்தரமான மேடையை அமைத்து வழிபாடு நடத்தத் தொடங்கியது குறித்து பாபர் மசூதியில் தொழுகை நடத்திவைத்து வந்த மௌல்வி முகமது அஸ்கர் 30.11.1858 அன்று காலனிய நீதிமன்றத்திடம் புகாராகத் தெரிவித்திருக்கிறார். மேலும், 1860, 1877, 1883, 1884 ஆண்டுகளிலும் இந்துக்களின் வழிபாடு குறித்துப் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. (அயோத்தி: இருண்ட இரவு, பக்.90) இவையெல்லாம் ராம் சபுத்ரா பகுதியில் தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முஸ்லிம்கள் எடுத்த முயற்சிகளாக நீதிபதிகளின் காவி காமாலைக் கண்களுக்குத் தெரியவில்லை.

அப்படியே அவர்கள் தலையீடு செய்யவில்லை எனக் கொண்டால், அது அயோத்தி முஸ்லிம்களின் பெருந்தன்மையையும், சகிப்புத்தன்மையையும்தான் எடுத்துக்காட்டுகிறது. ஒருபுறம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் முஸ்லிம்களின் இப்பெருந்தன்மையை நன்றியறிதலோடு அங்கீகரிக்கவில்லை என்பதோடு, முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை என்ற பொய்யைச் சொல்லி முஸ்லிம்களின் சொத்தான பாபர் மசூதி வளாக நிலத்தைக் கயமைத்தனமாக அபகரித்துக் கொண்டிருக்கிறது.

மேலும், 1857 பின் மசூதியின் வெளிப்புறப் பகுதியில் இந்துக்களுக்கு வழிபாட்டு உரிமைதான் வழங்கப்பட்டது. அந்த வழிபாட்டு உரிமையை சொத்தின் மீதான உரிமையாக கிரிமினல்தனமான முறையில் மடைமாற்றிவிட்டது, உச்ச நீதிமன்றம்.

அரசியல் சாசனத்தின் இந்து ஆன்மா

வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து மசூதியைச் சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும் என்ற சூட்சுமம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே புரிந்திருந்தது.

உரிமையியல் சட்ட விதி 32 இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமையைக் கடவுள் சிலை பெற்றிருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. சட்டரீதியான இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த நில உரிமை வழக்கில் முதலில் தேவகி நந்தன் அகர்வாலும், அவர் இறந்த பிறகு விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த திரிலோகி நாத் பாண்டேயும் குழந்தை ராமரின் காப்பாளர் என்ற பெயரில் இணைந்து கொண்டனர்.

கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்டத் தகுதியைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் விதிக்கப்படும் கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 எழுந்த பிரச்சினைக்கு 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனுவை அனுமதிக்கத்தக்கதாக உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்தச் சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 பிரிவுகள் வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை ராமனின் சிலை கள்ளத்தனமாக மசூதியினுள் வைக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, அப்படிக் கள்ளத்தனமாக வைக்கப்பட்ட சிலைக்கு இறைத்தன்மையை வழங்க முடியாது; சுயம்புவாகத் தோன்றிய கடவுளர்க்குத்தான் சட்டபூர்வத் தகுதியை வழங்க முடியுமேயொழிய குழந்தை ராமருக்கு வழங்க முடியாது” என சன்னி வாரியத்தின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்குரைஞர் ராஜிவ் தவான் மறுப்புத் தெரிவித்ததை, பக்தனின் நம்பிக்கையில் குறுக்கிட முடியாது என்ற காரணத்தைக் கூறி உச்ச நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது.

மசூதி சட்டவிரோதமானது, கோவிலை இடித்துவிட்டு மசூதியைக் கட்டியிருக்கிறார்கள், ராம ஜென்மபூமி என்ற நிலப்பகுதியே சட்டபூர்வ நபர்” எனக் குழந்தை ராமரின் தரப்பில் வாதிடப்பட்டு, நிலத்தின் மீதான உரிமை கோரப்பட்டது. இம்மூன்று வாதங்களையுமே நிராகரித்திருக்கும் உச்ச நீதிமன்றம், நிலத்தின் மீது குழந்தை ராமர் தரப்பு உரிமை கோருவதையும் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், இத்தர்க்க நியாயத்திற்கு முரணாக, பாபர் மசூதியின் மைய மாடத்தின் நேர் கீழேதான் ராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிலத்தை குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்திருக்கிறது.

இந்த நம்பிக்கைக்குச் சட்டப்படியான அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு, சட்டத்தின் சந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாபர் மசூதி கட்டப்பட்ட 1528-ம் ஆண்டு தொடங்கி 1857 முடியவுள்ள காலக்கட்டத்தில் அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியதற்கான சாட்சியங்கள் எதுவுமில்லை. அதேசமயம், 1857 முன்பே பாபர் மசூதியில் ராமரை இந்துக்கள் வழிபட்டு வந்ததற்கு டிஃபேன்தாலர், மார்டின் ஆகியோரின் பயணக் குறிப்புகள் உள்ளிட்டுப் பல சான்றுகள் உள்ளன என எடுத்துக்காட்டி, அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்தும் (preponderence of probabilites);

இராமர் கோயில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிசத் அடுக்கி வைத்திருக்கும் தூண்கள்.

1857-க்கு பின், ராம் சபுத்ரா, சீதாவின் சமையலறை ஆகியவை அமைந்திருந்த பாபர் மசூதி வளாகத்தின் வெளிப்புறப் பகுதி இந்துக்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் முஸ்லிம்கள் தலையீடு செய்யவில்லை. அதேபொழுதில் 1857-க்கு பின் பாபர் மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திவந்தபோதும், ராமனின் பிறப்பிடம் என்ற நம்பிக்கையில் பாபர் மசூதியில் தமது உரிமையை நிலைநாட்ட இந்துக்கள் தொடர்ந்து முயன்று வந்துள்ளனர் என்ற அடிப்படையில் அதற்குக் கூடுதல் அனுகூலம் (balance of probabilites) அளித்தும் பாபர் மசூதி வளாகத்தைக் குழந்தை ராமர் தரப்பிடம் ஒப்படைத்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

சட்டப்படியான இந்த அனுகூலத்தையும், முக்கியத்துவத்தையும் இந்து தரப்புக்கு அளிப்பதற்கு மத நம்பிக்கை, புராணங்கள், வெளிநாட்டுப் பயணக் குறிப்புகள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றைத் தமது நோக்கத்திற்கு ஏற்ப நைச்சியமாகப் பயன்படுத்திக்கொண்ட நீதிபதிகள், முஸ்லிம்கள் தரப்பில் நின்று சன்னி வாரியம் அளித்த பல சான்றுகளை மட்டையடியாக மறுத்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். அடியாட்படை

இந்தத் தீர்ப்பு வேறுவிதமாக, அதாவது முஸ்லிம்களுக்குச் சாதகமாக வருவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது என்பதை பாபர் மசூதி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் கடந்த கால  அணுகுமுறையில் இருந்தே யாரும் புரிந்துகொள்ள முடியும்.

கோவிலை அங்கேயே கட்டுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார அமைப்புகள் இந்து மதவெறியைத் தூண்டிவருவதை அறிந்திருந்தும், 1992, டிசம்பரில் பாபர் மசூதி வளாகம் அருகே பூமி பூஜை செய்வதற்கு சங்கப் பரிவாரக் கும்பலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அக்கும்பலோ இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திட்டமிட்டபடி பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதோடு, அந்த இடிபாடுகளின் மீதே குழந்தை ராமருக்கு ஒரு தற்காலிகக் கோவிலையும் அமைத்தது.

பாபர் மசூதிக்குள் குழந்தை ராமர் சிலைக் கள்ளத்தனமாக வைக்கப்பட்டதை ஃபைசாபாத் மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது என்றால், மசூதியை இடித்துவிட்டு அமைக்கப்பட்ட அத்தற்காலிகக் கோவிலுக்கு அங்கீகாரம் அளித்தது, உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய பாபர் மசூதி இறுதித் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு கட்சிகள் சார்பில் கோவையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுது இருந்த காங்கிரசு அரசு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டமொன்றை இயற்றியது. இந்தியா சுதந்திரமடைந்த 1947 எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எந் தெந்த மதத்தினருக்குச் சொந்தமாக இருந்ததோ, அதனை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது என அச்சட்டம் கூறினாலும், இந்து மதவெறிக் கும்பலின் ராம ஜென்மபூமி அரசியலுக்குச் சாதகமாக, அதில் பாபர் மசூதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இந்தச் சட்டத்திற்கும் அதில் அளிக்கப்பட்ட விதி விலக்கிற்கும் உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.

பாபர் மசூதி வளாக நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அந்நடவடிக்கைச் சரியா, தவறா எனத் தீர்ப்புக் கூறுவதற்கு அப்பாலும் சென்று, இசுலாம் மதத்தைப் பின்பற்றுவதற்கும் தொழுகை நடத்துவதற்கும் மசூதி என்பது அவசியமான ஒன்றல்ல. முஸ்லிம்கள் திறந்தவெளியில்கூடத் தொழுகை நடத்தலாம்” என அத்தீர்ப்பில் குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம்.

பாபர் மசூதி நில உரிமை மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, மசூதி குறித்து உச்ச நீதிமன்றம் கூறியிருந்த இந்தக் கருத்தை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென முஸ்லிம் தரப்பினர் வாதிட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இதற்கு நேர்எதிராக, இந்து மதம் குறித்து சங்கப் பரிவார அமைப்புக்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்துத்துவா அல்லது இந்துயிசம் என்பது மதம் என்ற குறுகிய பொருள் கொண்டதல்ல, அது இந்திய வாழ்க்கை முறை” என இந்து மத உணர்வைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது குறித்த வழக்கொன்றில் குறிப்பிட்டது, உச்ச நீதிமன்றம்.

1992 ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அப்பொழுதிருந்த நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த மைய அரசு, அவ்விடத்தில் அகழ்வாராய்ச்சி நடத்தவும், அவ்வாராய்ச்சியின் முடிவுப்படி அந்த இடத்தின் உரிமை யாருக்கு எனத் தீர்மானிக்கவும் முடிவு செய்து, இது பற்றிக் கருத்துக் கூறுமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றம் இவ்விடயத்தில் கருத்துக்கூற மறுத்துவிட்டது. எனினும், 2003 அலகாபாத் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தை அணுகாமலேயே, தன் விருப்பப்படி பாபர் மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட்டது. தானே சம்மதம் தெரிவிக்காத அந்த அகழாய்வு முடிவுகளைத்தான் ஆதாரமாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

பாபர் மசூதி மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டால், அந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது மட்டும்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னிருந்த கேள்வி. ஆனால், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளோ அந்த வரம்பையும் தாண்டி, மைய அரசு மூன்று மாதங்களுக்குள் ஓர் அறக்கட்டளையை அமைத்து, அதனிடம் நிலத்தை ஒப்படைத்து, கோவில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

படிக்க:
அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! அச்சுநூல்
மோடியின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ! என்ன செய்யப் போகிறோம் ? PRPC 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் ! – செய்தி | படங்கள்

ராமர் பிறந்த இடத்தில் மசூதியா?” என்ற பொய்யைச் சொல்லித்தான் மசூதியை இடித்தது ஆர்.எஸ்.எஸ். அங்குதான் ராமன் பிறந்தான்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளித்து, அந்த நிலத்தில் கோவிலை கட்டச் சொல்லித் தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். பொய்ப் பிரச்சாரத்திற்கு சட்ட அங்கீகாரத்தை வழங்கிவிட்டது உச்ச நீதிமன்றம்.

அயோத்தியில் ராமர் கோவில், 370 ரத்து செய்வது, ஒரே சிவில் சட்டம்  இந்த மூன்றும்தான் ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க.வின் உயிராதாரமான திட்டங்கள்.

இவற்றுள் ராமர் கோவில் திட்டத்தை உச்ச நீதிமன்றமே நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு ஒரே சிவில் சட்டம் என்பதல்ல ஆர்.எஸ்.எஸ்.  இன் நோக்கம். முஸ்லிம்களுக்குத் தனிச்சலுகை வழங்கும் சிவில் சட்டங்களை ஒழிப்பதுதான் அதனின் எண்ணம். முத்தலாக் மணமுறிவு முறையைச் சட்டவிரோதமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த சிவில் விவகாரத்தைக் கிரிமினல் குற்றமாக்கிவிட்டது, மோடி அரசு.

அரசியல் சாசனச் சட்டப்பிரிவு 370 செயலற்றதாக்கியிருக்கும் மோடி அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களிடமிருந்து பாபர் மசூதி நிலத்தை அபகரித்துவிட்ட உச்ச நீதிமன்றம், காஷ்மீர் மக்களிடமிருந்து 370 பிரிவு அபகரிக்கப்பட்ட நடவடிக்கையைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்திவிடாதா என்ன?

இவை மட்டுமின்றி, தேசியக் குடியுரிமைப் பதிவேடு வழக்கு, ரஃபேல் ஊழல் வழக்கு, நீதிபதி லோயாவின் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்த வழக்கு, மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு குறித்த வழக்கு, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த மீளாய்வு எனப் பல்வேறு வழக்குகளிலும் பா.ஜ.க.விற்குச் சாதகமாகவே உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு ஒருமனதாக அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பினும், தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்ற விவரம் மறைக்கப்பட்டு, நீதிமன்ற மரபு மீறப்பட்டிருக்கிறது. மேலும், இந்து மத நம்பிக்கைகளைக் கொண்டாடும் தீர்ப்பின் இணைப்பை எழுதிய நீதிபதியின் பெயரும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. இவை, தீர்ப்பு மண்டபத்தில் எழுதப்பட்டு நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டிருக்கிறதா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.

இந்திராவின் அவசர நிலைக்கால ஆட்சிக்குத் துணை நின்ற குற்றத்தை இழைத்த உச்ச நீதிமன்றம், இப்பொழுது ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க.வின் இந்து ராஷ்டிர கனவை நிறைவேற்றிக் கொடுக்கும் அடியாட்படையாகச் செயல்படுகிறது. ராமன் பிறப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கும் பொய்மையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கும் இத்தீர்ப்பு அதனை உறுதிப்படுத்துகிறது.

செல்வம்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க