அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

த்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்காலத்திய மனித இனமே (ஹோமோ சேப்பியன்ஸ்) பரிணாமவளர்ச்சியில் தோன்றியிருக்கவில்லை; மனிதனுக்கு முந்தைய மூதாதையர்கள்தான் (ஹோமோ எரக்டஸ்) பூமியில் உயிர் வாழ்ந்து வந்தார்கள் என்பதுதான் அறிவியல் உண்மை. எனவே, கடவுள் இராமன் தற்காலத்திய மனித வடிவில், தற்காலத்திய அயோத்தியில், அதுவும் பாபர் மசூதியின் மையக் கோபுரத்திற்கு கீழ்தான் பிறந்தான் எனக் கருதுவது கற்பனையும் மூடத்தனமும் கலந்த நம்பிக்கை தவிர, வேறு எதுவுமாக இருக்க முடியாது. மேலும், இராம பக்தி அயோத்தியில் அனாதிக் காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறதா என்றால், அதுவும் கிடையாது.

மனிதனுக்கு முந்தைய மூதாதையர்கள்.

இந்தியாவில் இராம பக்தி 12-ம் நூற்றாண்டில்தான் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதென்றும், இராமனைக் குல தெய்வமாக வழிபடும் இராமநந்தி வகையறாக்கள் 18-ம் நூற்றாண்டில்தான் அயோத்தியில் குடியேறத் தொடங்கினார்கள் என்றும், தற்போது அயோத்தியில் காணப்படும் பத்துக்கணக்கான இராமர் கோவில்கள் அதன் பிறகுதான் உருவாகின” என்றும் குறிப்பிடுகிறார், வரலாற்றுத் துறை பேராசிரியர் கே.என்.பணிக்கர்.

பாபர் மசூதி நில வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று மனுதாரர்களுள் ஒரு பிரிவான நிர்மோகி அகாராவின் பூர்வாசிரமப் பெயர் இராமநந்தி பைராகி. இந்த பைராகிகள் அயோத்தியை ஆக்கிரமித்தது பற்றி பத்திரிகையாளர் வலாய் சிங், ”அயோத்தி: நம்பிக்கைகளின் நகரம், பூசல்களின் நகரம்” என்ற தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

மன்னன் மான் சிங்.

இராமநந்தி பைராகிகள் பீகார் பகுதியிலிருந்து அயோத்திக்கு இறக்குமதியானவர்கள் என்பதோடு, பார்ப்பன சாதியைச் சேர்ந்த மன்னன் மான் சிங்கின் ஆதரவோடு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அயோத்தியில் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். இந்த ஆக்கிரமிப்பில் மசூதிகளும் இடுகாடுகளும்கூட அடங்கும். இக்காலக்கட்டத்தில்தான் பாபர் மசூதியின் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய மேடையை எழுப்பி, அங்குதான் ராமபிரான் பிறந்ததாகக் கூறத் தொடங்கினார்கள். இச்சமயத்தில்தான் அவத் மாகாணத்தை ஆண்டு வந்த நவாப்களின் ஆட்சி வீழத் தொடங்கியது. பைராகிகள் மட்டுமல்ல, இன்னும் பலரும் தமது வழிபாட்டுத் தலத்தில்தான் இராமன் பிறந்ததாகக் கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, பாபர் மசூதியின் வடக்குப் புறத்தில், அம்மசூதியிலிருந்து 40 மீட்டர் தொலைவில் இராமஜென்ம கோவில் ஒன்று இருந்தது. இந்தக் கோவிலுக்கான நிலத்தைத் தானமாக வழங்கியவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மிர் மாசும் அலி மாஃபிதார் என செவிவழிச் செய்தியும் உண்டு.”

புராணங்களில் இராம ஜென்மபூமி

பாபர் மசூதியின் மையக் குவிமாடத்திற்கு நேர் கீழேதான் இராமன் பிறந்தான் என்பதோ மத நம்பிக்கையே கிடையாது. அது இந்து மதவெறிக் கும்பலின் அரசியல் பிரச்சாரக் கருத்து. 1850-ம் ஆண்டு, அயோத்தியில் நிர்மோகி அகாராவைச் சேர்ந்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த மோதலின்போதும், அதனையொட்டி நடந்த வழக்கிலும்கூட பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கும் இடத்தில்தான் இராமன் பிறந்தான் என இந்துக்கள் கோரியதில்லை.

இராம சரித மானஸ் நூலின் முகப்பு.

இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும், தீர்ப்பின் இணைப்பிலும் காட்டப்படும் ஸ்கந்த புராணம் மிகப் பழமையான சமஸ்கிருத நூல் கிடையாது. வெறும் 400 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட இந்நூலின் அயோத்யா மகாத்மியா என்ற பகுதியில்தான் அயோத்தி தீர்த்த யாத்திரை தலமென்றும், இராமஜென்ம பூமி பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. எனினும், அப்பகுதியிலும்கூட அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. அயோத்யா மகாத்மியா என்ற அப்பகுதி 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 19-ம் நூற்றாண்டில் ஸ்கந்த புராணத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் எனக் குறிப்பிடுகிறார்கள், வரலாற்றாசிரியர்கள்.

16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராம பக்தரான துளசிதாஸ் இயற்றிய இராமசரித மானஸ் நூல் வெளியான பிறகுதான், இராமாயணக் கதை மக்கள் மத்தியில் சரளமாகப் புழக்கத்திற்கு வந்தது. அந்த நூலில் துளசிதாஸ், தான் அவத்புரிக்குச் (அயோத்தியின் மத்திய காலப் பெயர்) சென்று ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் கண்டதாக மட்டும்தான் குறிப்பிடுகிறார்.

வரலாற்றுத் துறை பேராசிரியர் கே.என்.பணிக்கர்.

அவர் வாழ்ந்த காலத்தில் இராமஜென்ம பூமி பற்றியும், அங்கு இருந்த இராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது குறித்தும் பேசப்பட்டிருந்தால், துளசிதாஸ் அதனை வேதனையோடு பதிவு செய்யாமல் புறக்கணித்திருப்பாரா?” என வினவுகிறார், வரலாற்றுத் துறை பேராசிரியர் இர்ஃபான் ஹபீப்.

ஸ்கந்த புராணம், இராம சரித மானஸ் காலக்கட்டத்தைச் சேர்ந்த லட்சுமிதாரா, மித்ர மிஸ்ரா, புஷுந்தி ராமாயணா ஆகிய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை இந்துக்களின் தீர்த்த யாத்திரைத் தலமாகக் குறிப்பிட்டாலும், அவற்றில் ராமஜென்ம பூமி பற்றிய குறிப்புகள் இல்லை. இப்புராண நூல்களில் அயோத்தியிலுள்ள கோபுரதாரா தீர்த்தம்தான் முக்கிய புண்ணியத் தலமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதேயொழிய, ராம ஜென்மபூமியல்ல.

பயணக் குறிப்புகளில் அயோத்தி

ஜோசப் டிஃபென்தாலர் மற்றும் மோண்ட்கோமேரி மார்டின் என்ற இரு வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்களிலிருந்து, இராமரின் பிறப்பிடம் சர்ச்சைக்குரிய பகுதிதான் என இந்துக்கள் நம்பினார்கள், சீதாவின் சமையலறை, சொர்க்க வாசல், தொட்டில் ஆகிய இடங்களில் இந்துக்கள் வழிபாடு செய்தனர், இந்துக்கள் பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வழிபட்டனர், திருவிழா நாட்களில் பெரும் கூட்டம் கூடியது, 1850-க்கு முன்பாகவே இந்துக்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபட்டு வந்தனர்” ஆகிய முடிவுகளுக்கு வர முடியும் எனக் குறிப்பிடுகிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

தெருவுக்கு இரண்டு இராமர் கோயில்கள் இருக்கும் அயோத்தி நகரம்.

பயணக் குறிப்புகள் பெரும்பாலும் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படுவதில்லை. மக்களிடம் நிலவும் கருத்துக்கள், வாய்வழிச் செய்திகள் அடிப்படையில் எழுதப்படுகின்றன” என விமர்சிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். குறிப்பாக, ஜோசப் டிஃபென்தாலர் பரவலாக அறியப்படாத வெளிநாட்டுப் பயணி எனக் குறிப்பிடும் இர்ஃபான் ஹபீப், அவர் பாபர் மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுப் பதிவுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்கிறார். மசூதியைக் கட்டியது ஔரங்கசீப் என ஜோசப் டிஃபென்தாலர் தனது பயண நூலில் குறிப்பிடுவதிலிருந்தே, அவரது குறிப்புகளின் நம்பகத்தன்மையை எடை போட்டுக் கொள்ளலாம்.

1850-க்குப் பின் பாபர் மசூதி வளாகத்தினுள் அமைந்திருந்த ராம் சபுத்ரா, சீதாவின் சமையலறை ஆகிய பகுதிகளில் இந்துக்கள் வழிபட்டு வந்ததை முஸ்லிம் தரப்பும் மறுக்கவில்லை. எனினும், இந்துக்களின் இந்த வழிபாடு பாபர் மசூதிக்குக் கிழக்கே, வெளிப்புறப் பகுதியில்தான் நடந்து வந்தன. டிஃபென்தாலர் அயோத்திக்கு வந்திருந்த சமயத்தில் பாபர் மசூதி வளாகத்தில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு அது இரண்டாகப் பிரிக்கப்படவில்லை. அதனால் அவர் பாபர் மசூதி வளாகத்தினுள் இந்துக்கள் வழிபாடு நடத்தியதை உட்புறமா, வெளிப்புறமா என வேறுபடுத்தாமல் பொதுவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு, 1800-க்கு முன்பே இந்துக்கள் மசூதியினுள்ளும் சென்று வழிபாடு நடத்தி வந்தனர் என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்திருப்பது  எதார்த்தனமான உண்மைக்கு மாறான திரிபு தவிர வேறல்ல.

வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப்.

டிஃபென்தாலரைவிடப் பலராலும் அறியப்பட்ட வெளிநாட்டுப் பயணியான யுவான் சுவான் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அல்பெருனி 11-ம் நூற்றாண்டிலும் அயோத்திக்கு வருகை தந்திருந்தபோதும், அவ்விருவரும் அயோத்தி இராம ஜென்மபூமியாகக் கொண்டாடப்பட்டதாகத் தமது குறிப்புகளில் பதிவு செய்யவில்லை. மதுராவிற்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையேயான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அல்பெருனி, அயோத்தியை முக்கிய நகரமெனக் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, அயோத்தியையும் இராமரையும் தொடர்புபடுத்தி எதனையும் குறிப்பிடவில்லை” எனச் சுட்டிக்காட்டுகிறார், இர்ஃபான் ஹபீப்.

குப்பன்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart