
மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 03
அக்காக்கிய் தன் உடையைப் பற்றி அவன் சிந்தித்ததே கிடையாது. அலுவலக உடுப்பு பச்சை வண்ணம் போய் ஏதோ செம்மை படிந்த மாவு நிறமாயிருந்தது. கழுத்துப் பட்டை மிகக் குட்டையாக இருந்தபடியால் அவன் கழுத்து உண்மையில் நீளமாய் இல்லாவிடினும் காலருக்கு வெளியே துருத்திக் கொண்டு இருப்பது போல் தோன்றியது.
அவனுடைய உடுப்பில் வைக்கோல் துரும்போ, நூலோ எதுவோ ஒன்று எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும். தெருவில் நடக்கும்போது ஜன்னல் வழியே குப்பை வெளியே கொட்டப்படும் சமயம் பார்த்து அதற்கு அடியாக செல்லும் தனித் திறமை அவனிடம் இருந்தததாகையால் முலாம் பழத் தோல்களோ, அவை போன்ற வேறு குப்பையோ எப்போதும் அவன் தொப்பியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும். தெருவில் நாள்தோறும் என்னதான் நடக்கிறது என்று வாழ்வில் ஒரு தரமாவது அவன் கவனித்ததே கிடையாது. இந்த விஷயத்தில் அவன் தனது சகோதர எழுத்தர்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தான்: அவர்களோ வீதி விவகாரங்களில் நாட்டம் செலுத்துவதில் நிபுணர்கள் என்பதை யாவரும் அறிவர். எதிர் நடைபாதையில் செல்லும் எவனுடைய காற்சட்டை வடிவார் நெகிழ்ந்து விட்டது என்று கூட எதிர் நடைபாதையில் இருந்தபடியே கூர் விழிகளால் நோட்டங் கண்டு மர்மப் புன்னகை புரிபவர்கள் அல்லவா அவர்கள்!
அக்காக்கிய் எதையேனும் பார்த்தால் கூட அதில் அவன் கண்டதெல்லாம் ஒரே மாதிரியான வீச்சுடன் தான் எழுதிய கச்சிதமான வரிகளை மட்டுமே; எங்கிருந்தோ வந்த குதிரையின் முகம் அவன் தோள் மீது படிந்து அவன் கன்னத்தின் மேல் நாசித்துவாரங்கள் வழியே புயல் வீசினால் தான் அவனுக்கு உணர்ச்சி வரும் – தான் இருப்பது வரியின் நடுவிலல்ல, தெருவின் மத்தியில் என்று.
வீடு திரும்பியதுமே உணவு மேசையருகே உட்கார்ந்து முட்டைக்கோஸ் சூப்பை மடக்குமடக்கென்று பருகிவிட்டு, மாட்டிறைச்சித் துண்டை வெங்காயத்துடன், அது எப்படி ருசிக்கிறது என்று கவனிக்காமலே, அந்த வேளையில் ஆண்டவன் அனுப்பிய ஈக்கள், மற்றவை எல்லாவற்றோடும் சேர்த்து மென்று விழுங்கிவிடுவான். வயிறு நிறைந்தாற் போலப் பட்டதுமே எழுந்து, மைக்கூட்டை எடுத்துவந்து, அலுவலகத்திலிருந்து தான் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கும் ஆவணங்களை நகல் எடுக்கத் தொடங்குவான். நகலெடுப்பதற்குப் பத்திரங்கள் எதுவுமில்லாமல் தீர்ந்து போய்விட்டால், தனது சொந்த இன்பத்துக்காக, தன்னிடம் வைத்துக்கொள்ளும் பொருட்டு அதிகப்படி நகல் ஒன்று எழுதிக்கொள்வான்; நடை அழகினால் இல்லாவிடினும் யாரேனும் புதிய, அல்லது முக்கியமான நபருக்கு முகவரி எழுதப்பட்டிருக்கும் காரணத்தால் பத்திரம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலோ, கேட்கவே வேண்டியதில்லை.
பீட்டர்ஸ்பர்க் நகரின் சாம்பல் நிற வானம் ஒரேயடியாகக் கருண்டு போயிருக்கும்; அரசாங்க அலுவலர்கள் அனைவரும் தத்தம் சம்பளத்துக்கும் சுவைக்கும் எற்ப வயிறார உண்டு தீர்ந்திருப்பார்கள்; துறையில் பேனாக்களை ஓட்டி முடிந்து, ஓட்ட சாட்டங்களெல்லாம் ஓய்ந்து, தவிர்க்க முடியாத சொந்தக்காரியங்களும் பிறரது அலுவல்களும், களைப்பறியாத மனிதன் தானாக விரும்பித் தேவைக்கும் மேலாகவே தன்மேல் சுமத்திக்கொள்ளும் வேறு பலவும் முடிவடைந்தபின் எல்லாரும் இளைப்பாறியிருப்பார்கள்; எல்லா எழுத்தர்களும் மீதியிருக்கும் ஓய்வு நேரத்தை முடிந்தவரை குதூகலமாகக் கழிக்க விரைந்து கொண்டிருப்பார்கள் – அதிக உற்சாகமுள்ள ஒருவன் நாடகமன்றம் செல்வான், மற்றொருவன் பெண்களின் தொப்பிகளைக் கண்டு களிப்பதற்காக வீதியில் உலாவப் போவான், வேறொருவன் சிறு எழுத்தனது மண்டலத்தின் விண்மீனாகச் சுடரும் அழகிய கன்னிக்குப் பாராட்டுரை பகர்வதில் பொழுதை வீணடிப்பதற்காக விருந்துக் கொண்டாட்டத்திற்கு செல்வான், நான்காமவன் (பத்துக்கு ஒன்பது பேர் செய்வது போலவே) மூன்றாம் மாடியிலோ நான்காம் மாடியிலோ இரண்டு அறைகளும் சிறு நடை அல்லது சமையலறையும் கொண்ட – சாப்பிடாமலிருப்பது, நகர்ப்புறப் பயணங்களை நிறுத்தி வைப்பது போன்ற எத்தனையோ தியாகங்களை விலையாகச் செலுத்திப் பெற்ற விளக்கு அல்லது வேறு பொருள்களால் நாகரிகப் பாவனையில் அலங்கரிக்கப்பட்ட – வீட்டில் வசிக்கும் சக எழுத்தன் எவனையாவது காணச் செல்வான்.
சுருங்கக் கூறின் எல்லா எழுத்தர்களும் தங்கள் நண்பர்களின் சிறு சிறு வீடுகளில் பரவி, கிளாசுகளில் தேநீரை உறிஞ்சுவதும், ஒரு காசு விலையுள்ள ரொட்டிகளைக் கறவுவதும், நீண்ட சுங்கான்களிலிருந்து புகையை இழுப்பதுமாக உற்சாகம் கரைபுரளச் சீட்டாடிக்கொண்டும், சீட்டுக்களைக் கலைத்துப் போடும் சமயத்தில் உயர் சமூகத்தினரைப் பற்றி அவதூறாக அரட்டையடிப்பதும் (ருஷ்யனால் தான் உயர் சமூகத்தை விட்டுவிட்டு ஒரு கணங்கூட இருக்க முடியாதே), பேசுவதற்கு வேறொன்றுமில்லாவிட்டால், கோட்டைத் தலைவனிடம் யாரோ வந்து பால்கோனெட்டி என்னும் சிற்பி அமைத்த முதல் பீட்டர் சக்கரவர்த்தியின் நினைவுச் சிலையிலுள்ள குதிரையின் வால் செதுக்கப்பட்டுவிட்டது என்று சொன்ன பழைய கதையைப் பன்னியுரைப்பதுமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டுமிருப்பார்கள். ஒரு வார்த்தையில் சொன்னால் எல்லாரும் உல்லாசமாயிருக்க முயன்று கொண்டிருப்பார்கள்; ஆனால் அந்த வேளையில் கூட அக்காக்கிய் எவ்வித இன்பத்தையும் நாடுவது கிடையாது. மாலைக் களியாட்டம் எதிலும் அவனைக் கண்டதாக எவனும் சொல்ல முடியாது.
தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்ந்தபின்பு, அவன் படுக்கையில் படுத்து, மறுநாள் வரவிருக்கும் இன்பத்தைப் பற்றிய நினைப்பாலேயே முகம் முறுவலால் மலர, நாளை ஆண்டவன் நகலெழுதுவதற்கு எதை அனுப்புவானோ எனச் சிந்தித்தபடியே உறங்கிப் போவான். ஆண்டுக்கு நானூறு ரூபிள் சம்பளத்தில் தனது விதியில் திருப்தியுடன் இருக்க முடிந்த இம்மனிதனின் வாழ்க்கை இவ்வாறு அமைதியாகக் கழிந்தது; பட்டம்பெற்ற ஆலோசகர்கள் மட்டுமல்ல, அந்தரங்க, செயல்முறை, ராஜசபை முதலிய பல்வேறு வகை ஆலோசகர்கள் வாழ்விலும், எவருக்கும் ஆலோசனை கூறாமலும் எவரது ஆலோசனையையும் ஏற்காமலும் இருப்பவர்களின் வாழ்விலுங்கூட மொய்க்கும் பலவித விபத்துக்கள் நேராமலிருந்தால் இந்த வாழ்க்கை கனிந்த முதுமைப் பருவம் வரை இவ்வாறே கழிந்திருக்கலாம்.
பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆண்டுக்கு நானூறு ரூபிள்களோ, ஏறக்குறைய அதே தொகையோ சம்பளம் வாங்குபவர்கள் எல்லாருக்கும் பெரிய எதிரி ஒன்று உண்டு. அது வேறு எதுவுமன்று, நமது வடக்கத்தியக் கூதல் தான் – அது உடம்புக்கு நல்லது என்று சிலர் சொன்ன போதிலும். காலை ஒன்பது மணிக்கு, அலுவலகம் செல்லும் அரசாங்க ஊழியர்களால் தெருக்கள் நிறைந்திருக்கும் வேளை பார்த்து அது விதி விலக்கின்றி எல்லா மூக்குகளையும் வலிமையாகச் சுரீர் சுரீர் என்று நிமிட்டுகிற நிமிட்டில் அப்பாவி எழுத்தர்கள் மூக்குகளை எங்கே வைத்துக்கொள்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். மிக உயர் பதவி வகிப்பவர்களுக்குக் கூடக் கடுங்குளிர் காரணமாக நெற்றிப் பொட்டு விண்விண்ணென்று தெறித்து, கண்களில் நீர் நிறைந்து வழியும் அந்நேரத்தில் பாவம், பட்டம்பெற்ற ஆலோசகர்கள் சில சமயம் முற்றிலும் தற்காப்பற்றவர்கள் ஆகிவிடுவார்கள். மெல்லிய, நைந்த மேல்கோட்டுகளுடன் முடிந்த வரை வேகமாக ஓடி, ஐந்தாறு தெருக்களைக் கடந்து அலுவலகம் சேர்ந்ததும், வழியிலே உறைந்து போன வேலைத் திறமையும் இயற்கைத் திறன்களும் மீண்டும் குளிர் நீங்கிக் கதகதப்படையும் வரை தலைவாயிலில் கால்களைத் தொப்புத் தொப்பென்று அடித்துச் சூடேற்றிக் கொள்வது தான் அவர்களைக் காக்கும் ஒரேவழி.
படிக்க:
♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !
♦ இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !
வீட்டிலிருந்து அலுவலகம் வரையுள்ள சட்டபூர்வமான தூரத்தை எவ்வளவுதான் விரைவாக ஓடிக் கடக்க முயன்றாலும், தனது முதுகுத்தண்டும் தோள்களும் கடுங்குளிரால் ஒரேயடியாக நொந்து விறைத்துப் போவதை அக்காக்கிய் சிறிது காலமாக உணரலானான். இது தன் மேல் கோட்டின் குற்றமாயிருக்கலாமோ என்ற எண்ணம் முடிவில் அவன் மனத்தில் எழுந்தது. வீட்டிலே அதை நன்றாக ஆராய்ந்து பார்த்தவன், இரண்டு மூன்று இடங்களில், அதாவது முதுகிலும் தோள் பட்டைகளிலும் அது வலை வலையாக நெய்த நார்த்துணி போல ஆகியிருந்ததைக் கண்டான்; குளிர் தாராளமாக உட்புகும் அளவுக்கு மேல் துணி நைந்திருந்தது; உள் துணியோ இழை இழையாகப் பிரிந்து போயிருந்தது.
(தொடரும்)
« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »