பாபர் மசூதி  ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் !

பிரபல வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா பண்டைக்கால இந்திய சமூகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்தவர்.

வரலாற்றாய்வாளர் ஜா.

மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் பண்டைய இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நிலவி வந்ததை ஆதாரங்களுடன் நிறுவும் பசுவின் புனிதம்” என்ற அவரது நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்த போதிலும் அவற்றை அச்சமின்றி எதிர்கொண்டவர் டி.என்.ஜா.

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்தவர் ஜா.

உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு இருமாதங்களுக்கு முன் (9.9.2019) தி வயர் இணைய தளத்துக்கு அவர் அளித்த பேட்டியினை இங்கே சுருக்கித் தருகிறோம்.

  • ஆசிரியர் குழு.

♦ அயோத்தி தீர்ப்பு வரவிருக்கிறது. ஒரு வரலாற்றாய்வாளர் என்ற முறையில் இப்பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான மோதல். ஏனென்றால், அந்த 2.77 ஏக்கர் நிலப்பரப்புக்கு உள்ளேதான் ராமன் பிறந்தான் என்பதை நிரூபிக்கவியலாது. நம்பிக்கைகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதவியலாது. இப்பிரச்சனை பற்றி இதுவரை எழுதப்பட்டது, பேசப்பட்டது அனைத்துக்கும் அடிப்படை வெறும் கற்பனைதான்.

♦ ராம ஜென்மபூமி – பாபர் மசூதி: வரலாற்றாய்வாளர்கள் நாட்டுக்கு வெளியிடும் அறிக்கை என்பதை வெளியிட்ட ஆய்வாளர் குழுவில் நீங்களும் இருந்தீர்கள். நீங்கள் கண்டுபிடித்தது என்ன?

நானும், சூரஜ் பான், அதர் அலி, ஆர்.எஸ்.சர்மா ஆகியோரும்தான் அந்த ஆய்வை செய்தோம். இந்தப் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர் மட்டுமின்றி, அரசுடனும் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நாங்கள் சுயேச்சையானவர்களாக இருந்த காரணத்தினாலேயே இவர்கள் யாருடைய ஆதரவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அனைத்து ஆவணங்களையும் தொல்லியல் சான்றுகளையும் ஆராய்ந்த பின்னர்தான் மசூதிக்கு அடியில் கோயில் ஏதும் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

♦ இந்த மோதலைத் தூண்டிவிடுவதில் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் பாத்திரம் என்ன? மசூதிக்கு அடியில் சில தூண்களின் அடிப்பாகத்தைக் கண்டுபிடித்ததாகவும், கீழே கோயில் இருந்ததற்கு அதுவே ஆதாரம் என்றும் அவர்களது அறிக்கை கூறுகிறது. உங்கள் கருத்தென்ன?

இந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.

அயோத்தியில் முதன் முதலில் ஆய்வு நடத்திய இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பி.பி.லால் தனது நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். அவருடைய முதல் அறிக்கையில் தூண்களின் அடிப்பாகம் பற்றி எதுவும் இல்லை. 1988 அவர் இந்திய வரலாற்றியல் ஆய்வுக் கழகத்தில் சமர்ப்பித்த அறிக்கையிலும் இது பற்றி ஏதும் இல்லை. இராமாயணத்தின் வரலாற்றுத் தன்மை குறித்து அவர் ஆற்றிய ஆய்வுரையிலும் இது பற்றி ஏதும் இல்லை. ஆனால், 1989 நவம்பரில் பாபர் மசூதிக்கு அருகே ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டவுடனே, அவர் தலைகீழாக மாறிவிட்டார். மசூதிக்கு அருகே கோயில் தூண்களின் அடிப்பாகத்தைத் தனது ஆய்வில் கண்டதாக அக்டோபர், 1990 அதாவது ஆய்வு நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் எழுதினார்.

இரண்டாவதாக, இஸ்லாம் சாராத உருவங்கள் பொறிக்கப்பட்டு, மசூதியின் நுழைவாயிலில் பதிக்கப்பட்டிருந்த 14 கருங்கல் தூண்கள் கட்டிடத்தைத் தாங்கி நிற்பவை அல்ல. அவை வெறும் அலங்காரத் தூண்கள். இதனை மேற்கொண்டு ஆய்வு செய்யும்பொருட்டு, அகழ்வாய்வுக் குறிப்புகளைக் கேட்டோம். தொல்லியல் ஆய்வு நிறுவனம் தர மறுத்துவிட்டது.

♦ அயோத்தி அகழ்வாய்வு அறிக்கை வரலாற்றாய்வாளர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் தரப்பட்டதா? அவர்கள் அதனை மதிப்பீடு செய்தார்களா?

நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், அதனைப் படித்த வரலாற்றாய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் அதனை வெறும் குப்பை என்று நிராகரித்து விட்டார்கள். முதலாவதாக, அந்த அகழ்வாய்வை நடத்தியவர்கள் அதற்குரிய அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. இரண்டாவதாக, மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்ற முன்முடிவுடன்தான் அவர்கள் ஆய்வை நடத்தினார்கள். மூன்றாவதாக, தடயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக, மிருகங்களின் எலும்புகள், உருவங்கள் பொறித்த பானை ஓடுகள், பீங்கான் ஓடுகள் போன்றவை அகழ்வாய்வில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்து அறிக்கையில் ஏதும் இல்லை.

♦ ராமனுக்கு கோயில்கள் இருந்ததற்கான ஆவண ஆதாரங்கள் இந்திய வரலாற்றில் உள்ளனவா?

அயோத்தி வட்டாரத்தில் ராமன் பிறந்த இடம் இருப்பதாக முதன் முதலாக குறிப்பிடும் சமஸ்கிருத நூல் ஸ்கந்த புராணம். ஒன்றல்ல, பல ஸ்கந்த புராணங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல, இவற்றில் இடைச்செருகல்கள் ஏராளம். ஸ்கந்த புராணத்தில் இடம்பெறும் அயோத்தி மகாத்மியம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும் இது கி.பி. 1600 முந்தையதல்ல.

ஸ்கந்த புராணம் நூலின் முகப்பு.

அந்த நூலில் குறிப்பிடப்படும் 30 புனிதத் தலங்களில் ஒன்றுதான் இந்த ஜென்மபூமி. வேடிக்கை என்னவென்றால், ஸ்கந்த புராணத்தில் வெறும் எட்டு பாடல்கள்தான் ராமன் பிறந்த இடம் பற்றிப் பேசுகின்றன. 100 பாடல்கள் ராமன் எந்த இடத்திலிருந்து சொர்க்கத்துக்குப் போனான் என்பதைப் பேசுகின்றன. அதாவது, விசுவ இந்து பரிசத் போன்றவர்கள் ஆதாரமாகக் கூறுகின்ற இந்த ஸ்கந்த புராணம், ராமனின் பிறந்த இடத்தைவிட, இறந்த இடத்துக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது.

அந்தப் புராணத்தைத் தொகுத்தவர்களுக்கு ராமனின் பிறப்பைவிட இறப்புதான் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அந்தப் புராணம் குறிப்பிடும் சுவர்க்கத் துவாரம் என்ற ராமன் இறந்த இடம், பாபர் மசூதிக்கு வெகுதொலைவில், சரயு நதிக்கரையில் இருக்கிறது.

சுமார் 1765 முன் அயோத்தி சென்றிருந்த பிரெஞ்சு ஜெசூட் பாதிரி டிஃபென்தாலர், மசூதி கட்டுவதற்காகக் கோயில் இடிக்கப்பட்டதாக முதன்முறையாகக் குறிப்பிடுகிறார். ஆனால், நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் இந்தக் கருத்து பிரபலமாகிறது.

♦ அயோத்தி எப்போதுமே ஒரு புனிதத் தலமாக கருதப்பட்டிருக்கிறதா? அதற்கு வரலாற்றில் ஆதாரம் இருக்கிறதா? துளசிதாசரின் ராமசரித மானஸ் அயோத்தியைப் பற்றி என்ன சொல்கிறது?

பண்டைக்காலத்தில் அயோத்தி இந்துக்களின் புனிதத்தலமாகக் கருதப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 18 நூற்றாண்டில்கூட அயோத்தி ஒரு புனிதத் தலமாகக் கருதப்படவில்லை. துளசிதாசர் பிரயாகையைத்தான் (அலகாபாத்) முதன்மையான புனிதத்தலமாகக் குறிப்பிடுகிறாரேயன்றி, அயோத்தியை அல்ல.

♦ பவுத்தம், சமணம் போன்ற பிற மதங்களுக்கான மையமாகவும் அயோத்தி இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா?

மத்திய காலத்தின் முற்பகுதியில் அயோத்தி மிக முக்கியமான பவுத்த மையமாக இருந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் ஆட்சிக் காலத்தில் இங்கு வந்திருந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்திரீகர், அயோத்தியில் பவுத்தர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அயோத்தியில் 100 புத்த மடாலயங்கள் இருந்ததாகக் குறிப்பிடும் யுவான் சுவாங், தேவர்களுக்கான (அதாவது பார்ப்பனக் கடவுளர்களுக்கான) கோயில்கள் வெறும் பத்து மட்டுமே இருந்தன என்கிறார்.

பவுத்த, சமண நூல்கள் அயோத்தியை சாகேத் என்று அழைக்கின்றன. 24 சமணத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப நாதர் அயோத்தியில் பிறந்ததாகச் சமணர்கள் கூறுகிறார்கள். அக்பரின் வாழ்க்கை வரலாறான அக்பர் நாமாவை எழுதிய அபு பசல், யூத மதத்தைச் சேர்ந்த இரண்டு தீர்க்கதரிசிகள் அயோத்தியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, அயோத்தி பல மதத்தினர்க்குப் புனிதத் தலமாக இருந்திருக்கிறது.

♦ உங்களுடைய பார்வையில் அயோத்தி பிரச்சனை எப்போது எப்படி மத முரண்பாடாக மாறியது? பாபர் மட்டுமல்ல, அவுரங்கசீப் முதல் திப்பு வரையிலான பல இசுலாமிய மன்னர்கள் பல இந்துக்  கோயில்களை இடித்து விட்டதாக இந்துத்துவக் குழுக்கள் கூறுகின்றரே!

இந்துக் கோயில்களை முஸ்லிம் மன்னர்கள் இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். கோயில்களையோ பிற வழிபாட்டுத் தலங்களையோ இடித்துத் தள்ளுவதில் முஸ்லிம் மன்னர்களைக் காட்டிலும் இந்து மன்னர்கள்தான் மிகவும் கொடூரமான குற்றவாளிகள். எண்ணற்ற பவுத்த, சமண வழிபாட்டு இடங்களையும் மடங்களையும் இவர்கள் இடித்துத் தள்ளியிருப்பதை நிரூபிக்க முடியும். எனவே, யார் யார் எத்தனை வழிபாட்டு இடங்களை இடித்தார்கள் என்பதை நிச்சயமாக ஆராயலாம்.

இந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.
1949 பாபர் மசூதிக்குள் ராமர் சிலையோடு சேர்த்து
வைக்கப்பட்ட இந்துக் கடவுளர் படங்கள். (கோப்புப் படம்)

மத்திய கால இந்தியாவில் மதரீதியான மோதல்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆனால், அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதரீதியான மோதல் நடைபெற்றது. அன்றைய அவத் சமஸ்தான நவாபின் அதிகாரிகள் அதனைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். மசூதிக்கு வெளியே விக்கிரகங்களை வைத்துக் கொள்வதற்கு அனுமதியளித்து அந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தைத்தான் இன்று சீதா கி ரஸோய் (சீதையின் சமையலறை) என்று அழைக்கிறார்கள். இதற்கென ஒரு அறக்கட்டளையும் (வக்ஃப்) அன்று  உருவாக்கப்பட்டது.

1885 இந்த நிலப் பிரச்சனை இறுதியாகத் தீர்க்கப்பட்டது. மசூதி இருக்கும் இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்றும், சீதா கி ரஸோய் இந்துக்களுக்குச் சொந்தம் என்றும் பைசாபாத் சப் மற்றும் நீதித்துறை ஆணையர் ஆகியோர் தீர்த்து வைத்தனர். இதோடு இந்தப் பிரச்சனை முடிந்திருக்க வேண்டும். ஆனால், 1930 மதவெறி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து நிலைமை மாறத்தொடங்கியது.

1949 மசூதிக்குள் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டது இந்தப் பிரச்சனையின் முக்கியமான திருப்புமுனையாகும். பின்னர் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டவுடன், பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமன் கோயில் கட்டுவோம் என்ற முழக்கத்தை அது எழுப்பியது. இதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்பிரச்சினை மதவெறி அரசியலாக மாறியதற்குக் காரணமாகும்.

♦ மசூதி இடிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட வழக்குகளில் வரலாற்றாய்வாளர்களையும் தொல்லியல்துறை ஆய்வாளர்களையும் நீதிமன்றங்கள் ஈடுபடுத்தியிருக்க வேண்டும் என்று  நீங்கள் கருதுகிறீர்களா?

விசுவ இந்து பரிசத் உருவாக்கி வைத்திருக்கும்
ராமர் கோயிலின் மாதிரி வடிவம்.

நிச்சயமாக. வரலாற்றாய்வாளர்களை நீதிமன்றங்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும். என்னைக் கேட்டால், மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும் பொறுப்பைத் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். நீதிமன்றம் மட்டுமே ஒரு வரலாற்று உண்மை குறித்து ஆராய்ந்து முடிவு செய்துவிட முடியாது. ஆனால், வரலாற்றாய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆராய்ந்து அளித்திருக்கும் அறிக்கையை, அது சிலரின் கருத்து என்று அலட்சியமாக நிராகரிக்கும் நீதிமன்றத்திடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க இயலும்?

♦ உங்களது குழு இந்தப் பிரச்சனை குறித்த உங்கள் அறிக்கையை இந்திய அரசிடம் அளித்தீர்களே, அதற்கு என்ன பதில் கிடைத்தது?

பிரதமர் அலுவலகத்தில் உள்ள அயோத்தி பிரிவு (ayodya cell) பொறுப்பதிகாரி வி.கே. தால் என்பவரிடம் அளித்தோம். ஆனால், அதற்கு எந்தவிதப் பதிலும் இல்லை.

♦ வரலாறு பற்றிய இத்தகைய முரண்பட்ட கண்ணோட்டங்களிலிருந்து சாதாரண மனிதன் ஒரு புரிதலுக்கு வருவது எப்படி? மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் மட்டும்தான் என்று இந்துத்துவ சக்திகள் கூறுகிறார்களே!

சாதாரண மனிதனுக்குப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் இதனைப் புரிய வைக்க வேண்டும். இதைச் செய்வது மிகவும் கடினமான காரியம்தான். இதற்கு என்னிடம் எளிய பதில் எதுவும் இல்லை. ஆனால், மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்பது மார்க்சியவாதிகளின் பிரச்சாரம் அல்ல. தங்கள் தரப்பை நிரூபிக்க முடியாத காரணத்தினால்தான் இந்துத்துவவாதிகள் மார்க்சியம் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

மொழியாக்கம் : தமிழ்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க