thiruvannamalai prpc Conferenceகுடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் PRPC மாநில அமைப்புச் செயலர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆற்றிய உரை.

வழக்கறிஞர் பொன்.சேகர் உரை

னைவருக்கும் வணக்கம்,

“சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன” என்பார் அம்பேத்கர். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாட்டின் அரசியல் கட்டமைப்பு சரியாக இருந்து, சமூகக் கட்டமைப்பு சரியாக இல்லை என்றால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

இன்றைய அரசியல் கட்டமைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஊராட்சித் தொடங்கி நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை அரசியல் கட்டமைப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஆனால் சமூகக் கட்டமைப்பு மட்டும் அப்படியே நீடிக்கிறது. தற்போது மோடி-அமித்ஷா கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தங்கள் தற்போதைய சமூகக் கட்டமைப்பை மேலும் கெட்டிப்படுத்தவே செய்யும்.

மக்களின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம்-மாண்பு ஆகியவை காக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனமும் இதைத்தான் வலியுறுத்துகிறது. 1993 மனித உரிமைகள் சட்டமும் இதைத்தான் சொல்கிறது. ஆனால் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.

வழக்கறிஞர் பொன்.சேகர்.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் நிலைநாட்டத் துடிக்கும் வருணாசிரம தர்மம் – சனாதன தர்மம் என்பது அடிப்படையிலேயே சக மனிதனின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், மாண்பு ஆகியவற்றை பறிக்கக் கூடியது. ரிக்-யஜூர்-சாம-அதர்வண எனும் நான்கு வேதங்கள், நாரதர்-யாக்ஞவல்கியர்-மனு உள்ளிட்ட பதினெட்டு ஸ்மிருதிகள்/சாஸ்திரங்கள், விஷ்ணு-பாகவதம் உள்ளிட்ட பதினெட்டு புராணங்கள், மகாபாரதம்-இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் அனைத்தும் வருணாசிரம தர்மம் மற்றும் சனாதன தர்மத்தைத்தான் வெவ்வேறு வடிவங்களில் வலியறுத்துகின்றன. கடந்த கால வரலாறும் அப்படித்தான் இருந்துள்ளது.

மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் வருணங்களாவும், சாதிகளாகவும் பிரித்து அவர்களிடையே ஏற்றத்தாழ்வை கற்பிப்பதுதான் வருணாசிரம தர்மம். பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், இதில் பார்ப்பானே உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன் என்று பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கிறது. மற்ற மூன்று வருணத்தாருக்கும் சேவை செய்வது சூத்திரர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இன்று சாதிகளுக்கிடையில் காதல் திருமணங்கள் நடப்பது போல அன்று வருணங்களுக்கிடையில் கலப்புகள் நடந்துள்ளன. மண்ணைத் தொட்டவனையும் பொண்ணைத் தொட்டவனையும் என வீர வசனம் பேசுகின்றனர் மஞ்சள் சட்டிக்காரர்கள். எத்தனை திரௌபதிகள் வந்தாலும் மனிதக் காதலை ஒருக்காலும் அழிக்க முடியாது. திரௌபதிகள் வேண்டுமானால் வீழ்வார்களேயொழிய ஒருக்காலும் காதல் வீழாது.

அன்று நான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட வருணக் கலப்பினால் பிறந்தவர்களை அனுலோம, பிரதிலோம, அந்தராள, பாகியா சாதிகள் என வகைப்படுத்தி அவர்களை ஊருக்கு வெளியே வாழும்படி நிர்பந்தித்தனர். இந்த சாதிகளுக்குள் ஏற்பட்ட சாதிக் கலப்பால் பிறந்தவர்களை மேலும் பல்வேறு சாதிகளாக்கி அவர்களை ஈனச் சாதிகளாக இழிபடுத்தியது பார்ப்பனியம்.

பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறந்தவனை சண்டாளன் என அடையாளப்படுத்தி அவனைத் தீண்டத்தகாதவனாக்கியது மனு தர்மம். இன்றைய பறையர்கள்தான் சண்டாளர்கள் எனப்படும் சேரி மக்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் இருக்கும் சேரி மக்கள் என்பவர்கள் இவர்களே. தொழிலுக்காக இவர்கள் அலைந்து திரிய வேண்டும், கழுதை-நாயைத் தவிர வேறு சொத்துக்கள் எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும், பிணத்தை எரிப்பதும் புதைப்பதும்தான் இவர்களது தொழில் எனவும் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது வாழ்வுரிமையைப் பறித்தது பார்ப்பனியம்.

தீண்டத்தகாத மக்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் பிரவேசிக்கக் கூடாது என தடை விதித்தனர். பகல் நேரத்தில்கூட அரசன் கொடுத்த அடையாளத்தோடுதான் செல்ல வேண்டும். அன்றே ஆதாரை அறிமுகப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்தான். 200 ஆண்டுகளுக்கு முன்பு பேஷ்வாக்கள் ஆட்சிக் காலத்தில் புனே நகரத்திற்குள் மகர்கள் பிரவேசிக்க வேண்டுமானால் காலை 9 மணிக்குப் பிறகும் மாலை 3 மணிக்கு முன்னதாகவும்தான் வரவேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தனர்.

காரணம் காலை மற்றும் மாலை நேரத்தில் நீண்ட நிழல் விழும், அந்த நிழல் பார்ப்பனர்கள் மேல்விழுந்தால் தீட்டாகிவிடும் என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு. மேலும் அவ்வாறு வரும் போது எச்சிலை கீழே துப்பக் கூடாது என்பதற்காக கழுத்தில் ஒரு பானையையும், பாதச்சுவடுகளை அழிப்பதற்காக முதுகுக்குப்பின்னால் நீண்ட மிலாரையும் கட்டிக் கொண்டுதான் வரவேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சுதந்திரமாக நடமாடக்கூட மகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டத்தான் 200 ஆண்டகளுக்கு முன்பு ஆங்கிலேயனோடு மகர்கள் கைகோர்த்து பீமா கோரேகானில் பேஷ்வாக்களை வீழ்த்தினார்கள். இது வரலாறு.

நான்கு வருணங்களுக்கிடையிலேயே சமத்துவம் கிடையாது. நூறு வயது சத்திரியனும் பத்து வயது பார்ப்பானும் மகன்-தந்தையாகக் கருதப்பட வேண்டும் என்கிறது மனு தர்மம். தொன்னூறு வயதுக்கு மேல்தான் சூத்திரனுக்கு மரியாதை கிடைக்கும் என்கிறான் மனு. அதனால்தான் பார்ப்பனச் சிறுவர்கள்கூட பிற சாதி மக்களை அவர்கள் வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் பெயர் சொல்லி மரியாதைக் குறைவோடு அழைக்கிறார்கள். சாட்சி சொல்வதிலும் தண்டனை அளிப்பதிலும் சமத்துவம் இல்லை. சூத்திரன் மற்ற வருணத்தாருக்கு சாட்சி சொல்ல முடியாது. குற்றம் ஒரே தன்மையுடையதாக இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு குறைவான தண்டனையையும் பிற வருணத்தாருக்கு அதிகப்படியான தண்டனையையும் கொண்டதுதான் மனு தர்மம். இந்து மதத்தில் மக்களுக்கிடையில் சமத்துவம் எப்பொழுதும் இருந்ததே இல்லை.

வருண தர்மம் மக்களை கண்ணியமாக, மரியாதையாக நடத்துவதில்லை. புனிதம்-தீட்டு என்கிற கோட்பாட்டை உருவாக்கி ஒரு சாராரை தீண்டத்தகாத-பார்க்கத் தகாத மக்கள் என வகைப்படுத்துகிறது வருண தர்மம். பறையனை ஒரு பார்ப்பான் பார்த்துவிட்டால் தீட்டாகி விடுமாம். காயத்திரி மந்திரம் ஓதினால் பார்த்த தீட்டு கழிந்து விடுமாம். சண்டாளர்கள் தீண்டின பாத்திரம் எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அது சுத்தமாகாது. அதனால்தான் சேரி மக்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கும் போது சொம்பில் கொடுக்காமல் படியில் கொடுப்பார்கள் அல்லது கையில் ஊற்றுவார்கள். இந்த நடைமுறை இன்றும் கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறது.

சேரி ஆட்கள் சாதி இந்துக்களின் வீடுகளில் சாப்பிட நேர்ந்தால் அவர்கள் சாப்பிட்ட இடத்தைத் தண்ணீர் தெளித்து மெழுகிக் கழுவுவார்கள். அதே போல கோவில் மற்றும் வீடு கட்டும் போது அது போன்ற இடங்களுக்கு சண்டாளர்கள் உள்ளிட்ட சேரி மக்கள் வேலை செய்வதற்காக வந்து போயிருப்பார்கள். அதனால் அந்த இடம் தீட்டுப்பட்டு இருக்குமாம். கிரகப் பிரவேசம் மற்றும் கும்பாபிஷேகத்தின் போது பசுமாட்டை உள்ளே ஓட்டுவது, கோமியம் தெளிப்பது, மெழுகுவது, கழுவுவது, புதுமண்ணை அள்ளிப் போடுவது இவை தீட்டுக் கழிப்புக்காக செய்யப்படும் சடங்குகளே.

சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை, பொதுக்கிணறு, கோவில் வழிபாடு, காதல் – சாதி மறுப்புத் திருமணங்கள் என பல்வேறு வழிகளில் இன்றும் இந்தத் தீண்டாமைக் கொடுமை இந்து மதத்தின் பெயரால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தீண்டாமைதான் ஒருசாராரை கண்ணியக் குறைவாகவும், மரியாதைக் குறைவாகவும் நடத்துவதற்கு வழி செய்கிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்படி மதத்தின் பெயரால் ஒரு சாராரை கண்ணியக் குறைவாக நடத்தவதுதான் வருண தர்மம்-சனாதன தர்மம்.

ஒருவருடைய வாழ்வுரிமை-சுதந்திரத்தைப் பறிப்பதும், சமமாக நடத்தாததும், மாண்பைக் குறைக்கும் வகையில் கண்ணியக் குறைவாக நடத்துவதையும்தான் சட்டங்கெட்டச் செயல்கள் என்கிறார் அம்பேத்கர். இந்த சட்டங்கெட்ட செயல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினால் இந்து தர்மத்திற்கு ஆபத்து என்கிற போர்வையில் சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு போராடுபவர்களை் மீது தாக்குதல் நடத்தி சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக நிலை பெறச் செய்கின்றனர். அதனால்தான் சட்டங் கெட்டச் செயல்களே சட்டமாகின்றன என்கிறார் அம்பேத்கர்.

படிக்க :
வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க !
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

நான் எனது உரையின் துவக்கத்தில் சொன்னது போல அரசியல் கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்கள் நடந்திருந்தாலும், சமூகக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. கிராமங்களில் உள்ள ஊர்-சேரி என்கிற சமூகக் கட்டமைப்பு அப்படியேதான் நீடிக்கிறது. தீண்டாமை நீடிப்பதற்கு இந்தக் கட்டமைப்பு மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்தக் கட்டமைப்பு நீடிக்கும் வரை சட்டங்கெட்டச் செயல்கள்தான் சட்டமாகிக் கொண்டிருக்கும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பவை மக்களை மத அடிப்படையில் பாகுபடுத்துகிறது. சமத்துவத்தைக் குலைக்கிறது. ஒரு சாராரின் வாழ்வுரிமையை, சுதந்திரத்தைப் பறிக்கிறது. முகாம்கள் என்ற பெயரில் புதிய வகைச் சேரிகளை உருவாக்கி அதில் அவர்களை அடைக்க முனைகிறது. முகாம்களில் கண்ணிமான வாழ்க்கைக்கு ஏது உத்தரவாதம்?

இதற்கு எதிராகப் பேசினால், போராடினால் வழக்கு, சிறை, படுகொலை  என அடக்கு முறைகளை ஏவுகிறது மோடி அரசு. ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் சாதி இந்துக்களைப் போல நேரடியாகத் தாக்குதல் தொடுக்கின்றனர். இதன் மூலம் சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல்.

மீண்டும் பேஷ்வாக்கள் ஆட்சியை நிறுவ முயல்கிறது ஆா்.எஸ்.எஸ் கும்பல். எனவே ஜோதிராவ் புலே-அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம். நாம் மகர்களாக அவதாரம் எடுப்போம். பீமா கோரேகான்களை நடத்திக் காட்டுவோம். சட்டங் கெட்டச் செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!

நன்றி! வணக்கம்.


உரை : பொன்.சேகர்

தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்