பொங்கலின் போது எடப்பாடியின் கையில் நெற்கதிர்களையும் அரிவாளையும் கொடுத்து சினிமா பட புரோமோசன் போல பேட்டி எடுத்து ஒளிபரப்பியது தந்தி தொலைக்காட்சி. அதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பாராட்டி புகழ, சுமந்த் ராமன் போன்ற எடப்பாடியின் விசுவாசிகள் டிவிட்டரில் ‘ஜிங்சக்’ அடித்து கொண்டாடினார்கள்.
இவர்களின் புரோமோசன் வேலைகளுக்கு நடுவில் மத்திய அரசு தமிழர்களின் தலையில் அடுத்த இடியை இறக்கியிருக்கிறது. தமிழகத்தில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது, மத்திய பா.ஜ.க அரசு. மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற தேவையில்லை என்றும், பொதுமக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்றும் விதிகளில் திருத்தம் செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை நான்கு ஏலங்கள் விடப்பட்டு வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., போன்ற நிறுவனங்களுக்கு சுமார் 3,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் முன்னர் அனுமதியளிக்கப்பட்டுள்ள மொத்த பரப்பளவைவிட, கூடுதலான பரப்பளவில் 4,064 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு டெண்டர் அறிவித்துள்ளது. இந்த பகுதி கடலூர், நாகை மாவட்டத்தின் ஆழ்கடல் பகுதிகளாகும். மீன் வளம் மிகுந்த பகுதிகள். இத்திட்டத்தினால் கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி பகுதி மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.
ஆழ்கடலை ஒட்டிய நிலப்பகுதிகளில் குழாய் அமைக்கப்படும். இதனால் அதை ஒட்டிய நிலப்பகுதிகளும் பாதிக்கப்படலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இதனால் டெல்டா விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள்.
முந்தைய திட்டங்களின் போது மக்கள் எதிர்ப்பை கண்டு பின்வாங்கியதால், கார்ப்பரேட்டுகளுக்கு நம்பிக்கையளிக்கும் பொருட்டு விதிகளிலும் திருத்தம் கொண்டுவந்துள்ளது அரசு. ‘நீங்கள் தைரியமாக டெண்டர் எடுங்கள்… விதிகளை திருத்திக்கொள்கிறோம்…’ என்பது அரசு; கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் மறைமுக செய்தி.
படிக்க:
♦ ஹைட்ரோ கார்பன் சிறப்புக் கட்டுரை : மோடி ஏவிவிடும் பேரழிவு !
♦ நூல் அறிமுகம் : ஹைட்ரோ கார்பன் அபாயம்
மக்களின் வாழ்நிலையை பாதிக்கும் எந்த ஒரு திட்டமானாலும் மக்கள் கருத்தை கேட்பது என்பது ஜனநாயக நடைமுறை. அதை தூக்கிக் கடாசியிருக்கிறது மோடி அரசு. இதுவரை இல்லாத அளவுக்கு மிகமிக அதிக பரப்பளவில் செயல்படுத்தபடவிருக்கும் திட்டத்திற்குச் சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்பதே ஒரு பெரும் மோசடி. இதிலிருந்தே இந்த திட்டம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நம்மால் யூகிக்கமுடிகிறது. மோடி அரசு இத்திட்டத்தை மிக மூர்க்கமாக தமிழகத்தில் செயல்படுத்த போகிறது என்பதைத் தான் இந்த திருத்தங்கள் முன்னறிவிக்கின்றன.
இப்படி விதிகளை திருத்தி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகளையும், மீனவர்களையும் வஞ்சிக்கிறது மோடி அரசு. எந்த கேள்வியும் எழுப்பாமல் மோடியின் சொல்லிற்கு தலையாட்டி, தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது எடப்பாடி அரசு. எடப்பாடிக்கு ஒளிவட்டம் போடும் தந்தி போன்ற ஊடகங்கள், சுமந்த் ராமன் போன்ற எடப்பாடி விசுவாசிகள் என விலைபோனவர்களைக் கொண்டு மக்களை ஏமாற்றிவிடலாம் என நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
டெல்டா விவசாயிகளும், மீனவர்களும் கரம் கோர்த்து இத்திட்டத்தை முறியடிக்க வேண்டிய தருணமிது.