ஹைட்ரோகார்பன் கண்டறிதலுக்கான (Exploration) ஆய்வும், எண்ணெய் அல்லது எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டவுடன் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அதனை வெளிக்கொண்டுவரும் துரப்பணப் பணியும் (Production) உலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்படும் பொருளாதாரம் சார்ந்த முக்கியமான தொழில், வர்த்தகப் பணியாகும். இன்றைய உலக இயக்கத்திற்குத் தேவையான எரிசக்திக்கு இன்றுவரை பெரும் ஆதாரமாக இருப்பது ஹைட்ரோகார்பன் எனும் நீர்மக் கரிமத்தில் இருந்து எடுக்கப்படும் கச்சாவும், அதனைச் சுத்திகரிப்பதன் மூலம் பிரிக்கப்படும் பெட்ரோலியம், டீசல், இயந்திர எண்ணெய், விமான எரிபொருள், மண்ணெண்ணெய், வாகன இயக்கத்திற்கு அவசியமான வழுக்கெண்ணை ஆகியனவும், அடுப்பங்கரையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது வரை தேவைப்படும் எரிவாயு என உலக மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க இயலாத அத்தியாவசிய எரிபொருட்களின் மூலப் பொருளாக ஹைட்ரோகார்பன் இருக்கின்றது.

நமது நாட்டின் பயன்பாட்டிற்கு எந்த அளவிற்கு ஹைட்ரோ கார்பன் தேவையோ அந்த அளவிற்கு நமது நாட்டில் அதன் உற்பத்தி இல்லாத காரணத்தால் கச்சா எண்ணெய் தேவையில் 80 விழுக்காடும், எரிவாயு தேவையில் 20 விழுக்காடும் இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கிறது. இதன் இறக்குமதி செலவீனத்தை அந்நிய செலாவணியைக் கொண்டே தீர்க்க வேண்டியுள்ளதால் அது நமது நாட்டின் பொருளாதாரத்தின்மீது ஒரு பெரும் சுமையாக உள்ளது. இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை – அதாவது ஏற்றுமதி வருவாய்க்கும் இறக்குமதி செலவீனத்திற்கும் இடையிலானது – இந்திய ஒன்றிய அரசின் நிதி நிலை மேலாண்மையில் ஒரு பெரும் சவாலாக இன்றளவும் திகழ்கிறது.

… நாட்டிற்கும் வீட்டிற்கும் பயணத்திற்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் அவசியமான எரிசக்திகளின் மூலமாகத் திகழும் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டம் ஒன்றிற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு ஏற்பட்டதேன்? இந்திய ஒன்றிய அரசின் பெட்ரோலியத் துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் 700 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம் நடைபெற்று வருகிறது. அதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே இப்போது எழுந்துள்ள எதிர்ப்பு தவறான புரிதலில் ஏற்பட்டதுதான் என்று கூறியுள்ளது.

அப்படியானால் தமிழ்நாட்டில், அதுவும் விவசாயம் செழித்தோங்கும் காவிரி படுகைக் கிராமங்களில் எழுந்துள்ள எதிர்ப்பு என்பது தவறான புரிதலில் உருவானதா? அந்த போராட்டங்களில் எந்த நியாயமும் இல்லையா? பெட்ரோலிய அமைச்சக அறிக்கை கூறுவதுபோல் இதுவரை பாதிப்பு தொடர்பான எந்த போராட்டமோ, எதிர்ப்போ நடந்ததில்லையா? சிற்சில ஆங்கில செய்தித்தாள்களில் சொன்னது போல் இவையாவும் மக்களைத் தூண்டிவிட்டு பின்னின்று செயல்படும் சில சக்திகளின் செயல்தானா? என்கிற எண்ணிலடங்கா கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கெல்லாம் பதில் தேட வேண்டியது இந்தக் காலகட்டத்தின் அவசியமாகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தமிழ்நாட்டின் விவசாயம் சார்ந்து வாழ்ந்து வரும் கிராமத்தினர் எதிர்க்கின்றனர் அல்லது அவர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது என்பதை, வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் என்றோ அல்லது ஹைட்ரோகார்பன் தேவையின் அவசியத்தைப் புரியாத மக்களின் எதிர்ப்பு என்ற அளவில் மட்டுமே சுருக்கிப் பார்க்காமல், இது இயற்கை சார்ந்த வாழ்வியலிற்கும் தொழில் நுட்பம் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடையிலான மோதல் (conflict) என்று பார்ப்பதும் அணுகுவதும் பயனளிக்கும் என்பதே எனது எண்ணமாகும். இங்கு அரசினைக்கூட அரசியல் கண்கொண்டு பார்ப்பதல்ல நோக்கம். அதன் செயல்பாடுகள் எக்கோணத்திலிருந்து முடிவு செய்யப்படுகிறது என்பதையும், அதன் அணுகுமுறை இந்நாட்டின் இருப்பிற்கும் இயக்கத்திற்கும் உகந்ததுதானா? இச்சிக்கலுக்கு எது தீர்வு என்கிற இறுதி இலக்கை நோக்கி பயனிப்பதையும் அடிப்படையைக் கொண்டே பகுப்பாயப்பட்டுள்ளது. (நூலின் முகவுரையிலிருந்து…)

கள ஆய்வு : பறைசாற்றும் உண்மைகள்

140 ஆண்டுகள் காணா அளவிற்கு தென்மேற்கு, வடகிழக்குப் பருவ மழைப் பொழிவு 65 விழுக்காடு குறைந்ததே தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் வறட்சிக்குக் காரணம் என்பதே நமக்கெல்லாம் தெரிந்த அல்லது தெரிவிக்கப்பட்ட செய்தி. ஆனால் பயிர் வளச் செழிப்பால் நம்மைக் கவர்ந்த பசுமை இன்று நமது கண்ணிற்குக் கிட்டாமல் செய்யும் இந்த வறட்சிக்குப் பருவ மழைக் குறைவாகப் பெய்தது மட்டுமே காரணமா? சிறு பிள்ளைப் பருவம் முதல் எத்தனையோ ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தஞ்சைத் தரணியில் பயணித்திருக்கிறேன். ஆனால் ஹைட்ரோகார்பன் துரப்பணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர மேற்கொண்ட இந்தப் பயணத்தில் அனுபவித்த வெப்பமும், நிலங்கள் வறண்டு கிடந்த காட்சியும் இதுவரை கண்டிராத ஒன்று. அந்த அளவிற்குப் பயிர் வளத்திற்கும் பசுமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இப்போது வறண்டுக் கிடக்கின்றன.

படம் : நன்றி – விகடன்

பேசத் தெரிந்த அம்மண்ணின் மைந்தர்களான விவசாயிகளும் விவசாயத்தைச் சார்ந்து வாழும் மனிதர்களும் மட்டுமின்றி, அங்குள்ள இயற்கைச் சூழலும் எப்படிப்பட்ட பாதிப்பை அனுபவித்து வருகின்றன என்பதை அங்கு சென்று பார்ப்பவர்களால் உணரமுடியும். பசுமை வயல்களுக்கு இடையே நடந்து செல்லும்போது வீசும் காற்றும், மரங்களின் நிழல்களில் நின்று பார்க்கும் போது கண்ணிற்குக் கிடைக்கும் பசுமைக் காட்சிகளும் பழங்கதையோ என்று நினைக்கும் அளவிற்கு அங்கு இயற்கைச் சூழல் உயிரற்றுக் கிடக்கிறது.

படிக்க:
’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !

மன்னார்குடியில் இருந்து நாகை மாவட்டத்தின் கடற்கரைக் கிராமங்கள் வரை மூன்று நாட்கள் பயணம் செய்து பார்த்தபோது, எங்கெல்லாம் ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய் / எரிவாயு துரப்பணக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளவோ அங்கெல்லாம் நிலவிய சூழலிற்கும், மற்ற இடங்களில் நிலவிய சூழலிற்கும் நன்கு உணரக்கூடிய வேறுபாடுகள் இருந்தன. வரலாற்றுக் காலம் முதல் வேளாண் மண்டலமாகத் திகழ்ந்த காவிரிப் படுகையில் ‘வளர்ச்சிக்கான’ எண்ணெய் துரப்பணத் திட்டங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எவ்வளவு கூறினாலும் அது எழுத்தின் போதாமையை வெளிப்படுத்தக்கூடியதாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று பார்த்தால் மட்டுமே அந்த உன்னதமான இயற்கைச் சூழல் எப்படியெல்லாம் தன்னை இழந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். (நூலிலிருந்து பக்.95-96)

♦ காப்பதற்காகப் போராட்டம், எதிர் நிலை ஊடகங்கள்
♦ எண்ணெய் கண்டுபிடிப்புத் துரப்பணம் ஆபத்தின் உருவாக்கம்
♦ ஷேல் கேஸ் – விவசாயத்தை சாய்த்து தன்னிறைவா, தன் அழிவே
♦ புவி வெப்பமடைதல் – சொல்லில் தடுத்தல் செயலில் வளர்த்தல்
♦ கள ஆய்வு : பறைசாற்றும் உண்மைகள்
♦ கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன்: எடுப்பும் எதிர்வினைகளும்
♦ மாற்று தொழில்நுட்பம் மாறும் உலகம்; யாருக்கான ஆட்சி? எது மெய் வளர்ச்சி?
♦ விவசாயத்தின் வீழ்ச்சியா நாட்டின் வளர்ச்சி?
♦ விதையாலும் வஞ்சம் விலையாலும் வஞ்சம்
♦ அரண்களைத் தகர்த்த தாராளமயமாக்கல்
♦ இந்நாடு மீள்வதும் மீட்பதும் தீர்வு …
– ஆகிய உட்தலைப்புகளில் விரிவான ஆதாரங்களைக் கொண்டும் பொருத்தமான படங்களை பின்னிணைப்பாகச் சேர்த்தும் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

நூல் : ஹைட்ரோ கார்பன் அபாயம்
(இயற்கைக்கும் மனித குலத்துக்கும் எதிரான பேரழிவுத் திட்டம்)
ஆசிரியர் : கா. அய்யநாதன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
177/103, அம்பாள் கட்டடம், முதல்தளம்,
அவ்வை சண்முகம் சாலை, இராயப்பேட்டை,  சென்னை – 600 014.
தொலைபேசி எண் : 044 – 4200 9603.
மின்னஞ்சல் (பதிப்பகம்) : support@nhm.in
மின்னஞ்சல் (ஆசிரியர்) : ayyanathan_2007@yahoo.com

பக்கங்கள்: 288
விலை: ரூ 225.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : vijaya pathippagam | marina books | nhm

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க