பொ. வேல்சாமியுடன் ஓர் நேர்காணல் | பாகம் – 01

இந்திய மெய்யியலின் அறுபடாத தொடர்வளர்ச்சியைத்
தமிழகத்தில் மட்டுமே காணமுடியும் !

பொ.வேல்சாமி.

பொ.வேல்சாமி (1951) தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொம்மையா நாயக்கர், பாப்பம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர். தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். முட்டை வணிகம் செய்து வருகிறார். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1990-களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய ‘நிறப்பிரிகை’ இதழின் ஆசிரியர் குழுவில் ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஆகியோருடன் பணிபுரிந்தவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். இவர் எழுதிய நூல்கள் 1. பொற்கலங்களும் இருண்ட காலங்களும், 2. கோவில் நிலம் சாதி, 3. பொய்யும் வழுவும். இந்த நேர்காணலுக்குத் தேவையான நிழற்படங்களை எடுத்துதவியவர் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த முதுநிலைக் காட்சித் தொடர்பியல் பயிலும் மாணவர் சே. தனபால்.

தமிழக மெய்யியல் வரலாறு பற்றிப் பேசுவோம். Philosophy என்னும் புலமைத் துறைக்காகத் தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் யாவை? இந்தப் புலமைத்துறை தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு நோக்கப்பட்டிருக்கின்றது?

மெய்ப்பொருள், மெய்யுணர்தல் போன்ற சொற்களைத் திருக்குறளில் காண்கிறோம். வாதம், சமயம் போன்ற சொற்களை மணிமேகலையில் காண்கிறோம். திருக்குறளின் மெய்யுணர்தல் அதிகாரத்திற்கு விளக்கம் சொல்லும்போது பரிமேலழகர் “மெய்யுணர்தலை வடமொழி நூலோர் தத்துவ ஞானம் என்பர்” என்று கூறுகின்றார். இங்குதான் ‘தத்துவ ஞானம்’ என்னும் சொல் முதன் முதலாக வருகின்றது. ‘தத்வ ஞானி’ என்ற சொல் வில்லி பாரதத்தில் வருகின்றது.

Philosophy என்பதற்குச் சமமான சொல்லாக ‘தத்துவ ஞானம்’ என்ற சொல்லைக் கொள்கிறோம். இது நாம் இத்துறையைப் புரிந்துகொள்வதில் சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம். Atom என்பதை ‘அணு’என்று நவீன காலத்தில் மொழிபெயர்க்கிறோம். இந்த அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் எங்கெங்கு வருகின்றதோ அங்கங்கெல்லாம் Atom என்றே பொருள் கொள்கிறோம். Atom என்ற சொல்லுக்கு அறிவியல் துறையில் உள்ள பொருளில் அணு என்ற சொல் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தப் படவில்லை.‘அணு’ என்பது மிகச் சிறிய துகள் என்ற பொருளிலேயே தமிழ் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதைப் போலத்தான் ‘தத்துவ ஞானமும்’ ‘Philosophy’. ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக்குப் பிறகு Philosophy என்ற புலமைத் துறை பெற்ற இலக்கணங்களை எல்லாம் இங்குத் ‘தத்துவ ஞானம்’ என்னும் புலமைத்துறை பெறவில்லை. Philosophy என்பதைத் ‘தத்துவ ஞானம்’ என்று மொழிபெயர்ப்பது இத்துறையைச் சரியாக விளங்கிக் கொள்வதற்குத் தடையாய் மாறிவிடுகின்றது.

தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் உலகத்தைப் பற்றி, வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றி, இந்தப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு மனிதன் படுகின்ற பாடுகள் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கின்றனர்; விவாதித்து இருக்கின்றனர். வாழ்க்கைப் பிரச்சினைகள், பாடுகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அடைவது வாழும்போது சாத்தியமா அல்லது இறந்த பிறகு சாத்தியமா? என்று கேட்டால் இறந்த பிறகுதான் கிடைக்கும் என்கின்றனர். அதனை முக்தி என்று சொல்கின்றனர். சில பேர் வாழும் போதே முக்தி அடையலாம் என்று கூறுவர்.

ஒருவன் உயிரோடு இருக்கும்போது முக்தியடைதல் என்பது தன் சக மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்டிருத்தல்; அதாவது அவனளவிலே முக்தியடைதல் என்பதுதான் இருக்கிறது. விடுதலை என்பதை மனிதகுல விடுதலையாகப் பார்க்காமல் தனிமனிதனுக்கான விடுதலையாக இங்கே பார்த்திருக்கின்றனர். மனித குல விடுதலை என்பதற்கு மனித நடவடிக்கைகள் அனைத்தையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்; வெறும் மனம் அல்லது சிந்தனை சார்ந்த விடுதலை என்பது மட்டுமாகப் பார்க்க முடியாது. மனிதகுல விடுதலை என்பது மொத்த மனித நடவடிக்கையையும் மாற்றியமைப்பது, விமர்சிப்பது, நடை முறையிலிருக்கின்ற கூறுகளில் மனிதனுக்கு எதிரான கூறுகளை அகற்றிவிட்டு, மனித வாழ்வுக்கு வளம் சேர்க்கிற கூறுகளை இணைப்பது. இவையெல்லாம் சாதாரணமாக நடக்காது. அதற்குப் பெயர்தான் புரட்சி. இந்த மாதிரியான சிந்தனை மரபுகள் இங்குத் தோன்றவில்லை. அப்படி வரவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இங்கு ஒரு தனித்துவமான நிலக்கிழமை முறை இருந்தது.

இந்தத் தனித்துவமான, ஐரோப்பிய மாதிரியில் இருந்து விலகின நிலக்கிழமை முறையைத்தான் மார்க்ஸ் ஆசிய பாணி உற்பத்தி முறை என்று சொல்லி விளக்குகிறார். இங்கிருந்த நிலக்கிழமை உற்பத்தி முறையில் நிலம் அடிப்படை வாழ்வாதாரமாக இருந்தாலும், நில உரிமை ஐரோப்பாவில் இருந்த மாதிரி இங்கு இல்லை. அப்போது அங்கிருந்த மாதிரியான உற்பத்தி முறை இங்கு இல்லை என்றாகிறது. இங்கு இருந்த உற்பத்தி முறை மனிதர்களைத் தொகுதிதொகுதியாகப் பிரித்து வைத்திருந்தது. இதுதான் சாதி. ஒரு சாதிக்கான உணவு இன்னொரு சாதிக்குக் கிடையாது. ஒரு சாதிக்கான உடை இன்னொரு சாதிக்குக் கிடையாது. ஒரு சாதிக்கான சிந்தனையும் இன்னொரு சாதிக்கானதாக இருக்க முடியாது. இப்படி இருக்கும் போது எப்படி ஒரு சிந்தனை, சமூகம் தழுவியதாக மாற முடியும்; சமூக விடுதலையைப் பேச முடியும்?

இங்குத் ‘தத்துவ ஞானம்’ என்று பேசப்பட்டவை எல்லாம் இறையியல் சார்ந்தவையாக இருந்தன; இறையியலுக்குக் கீழ்ப்பட்டவையாக இருந்தன. அதனால்தான் ஐரோப்பிய அறிஞர்கள் இந்தியச் சிந்தனை மரபை இறையியல் சார்ந்தது என்று சொன்னார்கள். கிறித்துவ மதம் சார்ந்த சிந்தனைகளை இறையியல் என்று சொல்வது போல இங்கிருந்த சிந்தனை முறைகள் இருந்தன. அப்படியென்றால் மதம் எப்படி இருந்தது. மேலிருந்த இரண்டு,மூன்று சாதிகளைத் தாண்டி இங்கிருந்த மதங்கள் பொதுமக்கள் மதமாக இல்லை. அது சைவமாக இருந்தாலும் சரி, வைணவமாக இருந் தாலும் சரி,எந்த மதமும் அனைத்துச் சாதி களையும், மக்களையும் உள்ளடக்கிய மதமாக இல்லை. பார்ப்பனர், வேளாளர், முதலியார் மதமாகத் தாம் அவை இருந்தன. மக்கள் மதமாக அவை இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் எவையும் இல்லை. இதனால்தான் எந்தவொரு சிந்தனைமுறையும் சமூகம் தழுவியதாக நிலவ இங்கு வாய்ப்பே இல்லை. இன்றுவரை இங்கு வாழ்கின்ற மனிதர்களை ஒருங்கிணைப்பதற்கான பொதுத்தன்மை என்ன இருக்கின்றது? தமிழ் மொழியைப் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பதைத் தவிர ஒன்றுமில்லை.

இப்படி ஒருங்கிணைக்கப்படாத, கூறுகூறாகப் பிரித்திருக்கின்ற சமூகங்களாக இருப்பவை பழங்குடிச் சமூகங்கள். அவை இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைந்த சமூகமாகத் திரள முடியாமல் இயற்கைக்குக் கீழ்ப்பட்டுக் கிடக்கும். இங்கு ஒரு சமூகத்திற்குள் நாம் சாதிகளாகப் பிளவுபட்டுக் கிடக்கிறோம். அதனால் ஒருங்கிணைந்த பண்பாடு இல்லை. வெவ்வேறான திருமணமுறைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகள் இருக்கின்றன. இவற்றை ஒருங்கிணைப்பது மதம் தான். கிறித்துவம், இசுலாம் எல்லாம் அப்படிச் செயல்பட்டன. இங்கிருந்த மதங்கள் அப்படிச் செயல்படவில்லை. எனவே மதங்களும், மதரீதியான சிந்தனைகளும், உலகம், மனிதன், அவன் படுகின்ற பாடுகள் பற்றிய சிந்தனைகளும் குறிப்பிட்ட சாதிகளுக்கே உரியவையாக இருந்தன. தமிழ் மக்கள் அனைவருக்குமான ஒரு சிந்தனை முறை இங்குத் தோன்றவே இல்லை.

படிக்க:
லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !

இதனை வேறு மாதிரியாகவும் சொல்ல முடியும். உபரி உற்பத்தி முறையை அனுபவித்துக் கொண்டிருந்த சாதிகளுக்கு ஓய்வு நேரத்தில் நாட்டியம், நாடகம், இசை, இலக்கியம் போன்ற இன்பம் தரும் பொழுதுபோக்குகள் போன்றே ‘தத்துவ ஞானமும்’ இங்கு ஒரு பொழுது போக்காகவே இருந்தது. ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையைப் பற்றிச் சிந்திக்கும் ‘தத்துவ ஞானம்’ இங்குத் தோன்றவே இல்லை. செயற்படவும் இல்லை. அப்படியானதொரு தொடக்கத்தைப் பெரியாரிடம்தான் காண்கிறோம்.

உரையாடியவர் : க.காமராசன்
நன்றி : (உங்கள் நூலகம், Friday, June 10, 2011)

(தொடரும்)

……………………………………………………………………. அடுத்த பாகம் »