“ரஜினிக்கான எதிர்வினை : ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல் ?” என்ற தலைப்பில் தலையங்கம்  தீட்டி ‘கருத்துச் சுதந்திரத்திற்கே’ ஒரு புதுப் பரிமாணத்தைக் காட்டியுள்ளது இந்து தமிழ் திசை நாளிதழ்.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை திரையில் விசிலடித்து ரசித்து வந்த தமிழ்ச் சமூகம், பெரியார் பற்றிய அவரது சமீபத்திய பேச்சுக்களை சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் கிண்டலடித்துக் கண்டனமும் செய்து வருகிறது.

சங்க பரிவாரக் கும்பல் குருமூர்த்தி மூலமாக தனது தமிழக முகமாக ரஜினிகாந்தை ஒரு ‘ஆளுமை’யாகக் கட்டமைக்கத் திட்டமிட்டுவரும் நிலையில், அந்த ‘ஆளுமை’ சிதைக்கப்படுவதைக் கண்டு தாங்க முடியாத இந்து தமிழ் திசை தனது தலையங்கத்தின் தொடக்கத்திலேயே இந்தக் ‘கொடுமைகளை’ எல்லாம் குறிப்பிட்டு தமிழகத்தில் “சமூக வெளி மோசமாகி” விட்டதாக வருந்துகிறது.

உள்நுழைந்ததும், துக்ளக் கூட்டத்தில் பெரியார் விவகாரத்தை ரஜினி பேசுவதற்கான நியாயத்தை நம்மிடையே முன் வைத்து நமது அங்கீகாரத்தைக் கோருகிறது இந்து தமிழ் திசை. சோ ராமசாமியின் தைரியத்துக்கு உதாரணம் கொடுப்பதற்காகத் தான் 1971 சேலம் மாநாட்டைப் பற்றி ரஜினி குறிப்பிட்டாராம். அதாவது, “ரஜினி பெரியாரைப் பற்றி பேசியதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்பதைத்தான் இந்து தமிழ்திசை நமக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

அடுத்ததாக, பெரியார் நடத்திய சேலம் மாநாட்டில் கடவுள் சிலைகள் அவமதிக்கப்பட்டதை வேறு யாரும் கண்டிக்கவில்லை; சோ ராமசாமிதான் கண்டித்து எழுதினார் என்ற ‘வரலாற்றுத்’ தகவலை துக்ளக் மேடையில் ரஜினிகாந்த் சாதாரணமாக பேசியதற்காக பெரியாரிய, முற்போக்கு அமைப்புகள் கண்டனங்களையும் முற்றுகைப் போராட்டங்களையும் அறிவித்திருப்பது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் குறிப்பிடுகிறது இந்து தமிழ் திசை.

நிர்வாணமாக செருப்பு மாலை போட்டு ஊர்வலம் எடுத்துச் சென்றனர் என உண்மைக்குப் புறம்பாக ரஜினிகாந்த் பேசியதைக் குறிப்பிடாமல், ஒரு சாதாரண விசயத்தை ரஜினிகாந்த் பேசியதற்காக அவருக்கு எதிராக பெரியாரிய அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள் என்ற தோற்றத்தை இதன்மூலம் கொடுத்துவிட்டுக் கடந்து செல்கிறது இந்து தமிழ் திசை.

அடுத்த சில பத்திகளுக்குப் பிறகு,

“பெரியாரியர்களின் மொத்த வாதமும் இந்த விஷயத்தில் ஒன்றுதான், “ரஜினி குறிப்பிட்டபடி ராமர் – சீதை படங்கள் நிர்வாணமாகவோ செருப்பு மாலை அணிவித்தோ எடுத்துச் செல்லப்படவில்லை; அந்த ஊர்வலத்தில் பெரியார் மீது காலணி வீசப்பட்டதன் எதிர்வினையாகவே கடவுளர் படங்கள் காலணியால் அவமதிக்கப்பட்டதானது நடந்துவிட்டது” என்பதே அது.” என்கிறது.

படிக்க :
முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

மேற்கண்ட பத்தியில், ரஜினி தவறான தகவலைப் பேசியதாக பெரியாரியர்கள் சொல்வதாகக் கூறும் இந்து தமிழ்திசை அது குறித்து தமது கருத்தைப் பதிவு செய்யாமல், பின்வருமாறு அதைக் கடந்தும் செல்கிறது. “சரி, ரஜினி சொன்ன அந்த ஒரு தகவலில் தவறு இருப்பதாகவே கொண்டாலும், ஒரு மறுப்பு அறிக்கையோடு முடிந்திடக்கூடிய விஷயம்தானே இது? இதற்கு ஏன் இவ்வளவு பதற்றம்?” என்றும் வினவுகிறது.

பிரச்சினையின் நடுநாயகமாக வீற்றிருப்பது துக்ளக் பத்திரிகை. அதன் ஆசிரியர்களுள் ஒருவரான ரமேஷ், ராமர், சீதை சிலையை நிர்வாணமாகக் கொண்டு சென்றார்கள் என ரஜினி கூறியது தவறான தகவல் என ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். ஆனால் இந்து தமிழ் திசையைப் பொறுத்தவரையிலும் செத்துப் போன சோ ராமசாமியே மீண்டும் வந்து ரஜினி சொன்னது பொய் எனக் கூறினாலும் அதன் மீது தன்னுடைய கருத்தைக் கூற தயாராக இல்லை என்பதை மேற்கண்ட அதன் வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

நமக்குத் தெரிந்தவரையில் தலையங்கம் என்பது நடப்பு நிகழ்வுகளின் மீது ஒரு பத்திரிகை தனது சொந்தக் கருத்தை பகிரங்கமாகப் பேசுவதற்கான பகுதி.

நிர்வாண ராமர், சீதா சிலையை பெரியார் ஊர்வலமாகக் கொண்டு சென்றார் என ரஜினி சொன்ன தகவல் சரியானதா ? தவறானதா ? அதன் மீது இந்து தமிழ்திசையின் கருத்து என்ன ? “ரஜினி சொன்னது தவறுதான். ஆனாலும் அதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று கூட சொல்லட்டும், பரவாயில்லை. அல்லது “ரஜினி சொன்னதில் எந்தத் தவறும் இல்லை” என்று கூட சொல்லட்டும்; ஆனால் அதை நேரடியாகச் சொல்லக்கூடிய நேர்மை வேண்டுமல்லவா? அதுதானே யோக்கியமான பத்திரிகைக்கு அழகு ?

அடுத்ததாக ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டேன் எனச் சொன்னபிறகும் நீதிமன்றம் செல்வதாக பெரியாரிய இயக்கங்கள் கூறியிருப்பது, இந்து தமிழ் திசையைப் பொறுத்தவரையில் அபத்தமானதாம்; கருத்துச் சுதந்திரத்துக்கு விரோதமானதாம்; கண்டனத்துக்குரியதாம்.

கூச்சமே இல்லாமல் ஒரு பொய்யான தகவலைச் சொல்லிவிட்டு, அது பொய்தான் என்பதை பலரும் நிரூபித்த பின்னரும், மன்னிப்புக் கேட்க முடியாது எனத் திமிராகப் பேசும் ஒரு மனிதன் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் கண்டனத்துக்குரியது என்பதும் கருத்துச் சுதந்திரத்திற்கு விரோதமானது என்பதும் இந்து தமிழ் திசைக்கே வெளிச்சம்.

படிக்க :
ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்
♦ அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !

அந்தத் தலையங்கத்தின் மீதப் பகுதி முழுக்க கருத்துச் சுதந்திரம் பற்றியும், திராவிட இயக்கம் பற்றியும் நம் அனைவருக்கும் வகுப்பு எடுக்கிறது இந்து தமிழ் திசை.

அதில் ஒரு இடத்தில், “இத்தகு சூழலில், கடவுளையே விமர்சிக்கும் அளவுக்குக் கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஒரு இயக்கம், தம்முடைய தலைவர், இயக்கம் தொடர்பான ஒரு செய்திக்காக இவ்வளவு பதறுவதும் எதிர்ப்பதும் பெரிய முரணாக இருக்கிறது.” என்று பெரியாரிய அமைப்புகளைக் குறிப்பிடுகிறது.

இந்திய சமூகத்தில் ஏற்கெனவே கருத்துச் சுதந்திரம் வழிந்தோடிக் கொண்டிருந்தது போலவும், அதைக் கொண்டாடி கடவுள் எனும் கருத்தாக்கத்தை பெரியார் எதிர்த்தது போலவும் எளிமையாகக் கடந்து போகிறது தமிழ்திசை.

கடவுளர்களது புராணக் கட்டுக்கதைகள் மூலம் சாதிய படிநிலையை சமூக யதார்த்தமாக மாற்றிய பார்ப்பனியத்தை எதிர்த்துப் பெரியார் நடத்திய கலகத்தின் விளைவாக வெற்றிகொள்ளப்பட்டதுதான் தமிழகத்தில் தற்போது நிலவும் கருத்துரிமை. பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டத்தின் விளைபொருள் அது.

அவ்வகையில் திராவிட, ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களால் வென்றெடுக்கப்பட்ட கருத்துரிமையை, தான் பேசியது தவறு எனத் தெரிந்தே அவதூறு பேசும் அரைவேக்காட்டு ரஜினியின் உளறுவதற்கான உரிமையோடு ஒப்பிடுவதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தின் மீது புல்டோசரை ஏற்றுகிறது இந்து தமிழ்திசை.

ஜல்லிக்கட்டு போராட்டம், ஒக்கிப் புயல் , தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், பொள்ளாச்சி பாலியல் வன்முறை, பாபர் மசூதி இடிப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் என பல்வேறு விவகாரங்களிலும் செய்திகளை வலதுசாரி – ஆளும்வர்க்க சார்புத்தன்மையோடு நைச்சியமாக இந்து தமிழ் திசை எழுதி வந்திருக்கிறது என்பது நாம் அறிந்த வரலாறுதான் !

அந்த வரலாற்றில் இது பத்தோடு பதினொன்றுதான் எனினும், நமது ஆதங்கம் எல்லாம் கருத்து சுதந்திரத்திற்கு இந்தச் சாத்தான் எல்லாம் வந்து வேதம் ஓதுகிறதே என்பதுதான் !


நந்தன்