ன்பார்ந்த பொதுமக்களே!

இந்தியப் பொருளாதாரம் இன்று தீர்வுகான முடியாத அளவிற்கு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி படுவீழ்ச்சி அடைந்துள்ளது. நுண்கடன் கொடுமையில் சிக்கி பெண்கள் விபச்சாரத்திற்குத் தள்ளப்படும் அவலம் அதிகரித்து வருகின்றது. ஜி.எஸ்.டி. கொடுமையாலும், பொருளாதாரமந்தத்தாலும் சிறுதொழில் நடத்துவோர், நட்டமடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர். சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களை மேலும் வறுமைக்கு ஆட்படுத்தி வருகிறது.

மோடியின் பா.ஜ.க. அரசோ தத்தளிக்கும் மக்களை மேலும் சுரண்ட அம்பானி, அதானி போன்ற குஜராத், பம்பாய், இராஜஸ்தான் பகுதிகளைச் சார்ந்த பனியா, பார்சி, மார்வாடி, சிந்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மற்றும் அமேசான், வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கும் வரிச்சலுகைகளை அறிவித்ததுடன் நமது பொதுத்துறைகளையும், வங்கி பணத்தையும் வாரிவாரி வழங்கி வருகின்றது.

70 சதவீத மக்களின் சொத்து மதிப்பைவிட (95 கோடி மக்கள்) நான்கு மடங்கு அதிகமாக ஒரு சதவீத பணக்காரர்களிடம் சொத்து குவிந்துள்ளது. 63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பை வைத்து 130 கோடி மக்களுக்கும் ஒரு ஆண்டுக்கான பட்ஜெட் (25 இலட்சம் கோடி) போட முடியும். ஏழை – பணக்காரன் ஏற்றத்தாழ்வு அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் வேலையற்றவர்களை, வாங்கும்சக்தி அற்றவர்களை ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்றே கருதுகிறது.

பா.ஜ.க. அரசு மக்கள் போராட்டங்களை திசைதிருப்பவும், தனது இந்து ராஷ்டிர கொடுங்கனவை அமல்படுத்தவும் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையிலெடுத்திருக்கிறது. குடியுரிமைச் சட்டத் திருத்தம் மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமையைத் தீர்மானிக்கிறது. ராம் என்ற பாகிஸ்தானிய இந்து அகதி என்.ஆர்.சி. பதிவேட்டின்போது எந்த ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை . சி.ஏ.ஏ. மூலம் தானாகவே குடியுரிமை கிடைத்துவிடும். ஆனால், பல தலைமுறைகளாக இந்தியாவில் வசிக்கும் ரஹீம் என்ற முசுலீம் என்.ஆர்.சி.யின்படி உரிய ஆவணங்களைக் காட்டத் தவறினால் குடியுரிமை பறிக்கப்படும்; அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்; வதை முகாம்களில் அடைக்கப்படுவர். இந்துக்களாக இருந்தாலும் சொந்த பிறப்பிடத்தை விட்டு வேலைதேடி குடிபெயர்ந்தவர்கள், நகர்ப்புற சேரிகளில் வசிப்பவர்கள் என பல கோடிக்கணக்கான மக்களுக்கும் இச்சட்டம் எதிரானது. உரிய ஆவணங்களைக் காட்டி அதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாதவர்கள் சந்தேகப்படும் நபர் என்ற பட்டியலுக்கு மாற்றப்படுவர்.

படிக்க:
குடியுரிமைச் சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல் !
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! அச்சுநூல்

இந்தச் சட்டம் பெரும்பான்மை இந்துமத மக்களுக்கும் எதிரான கொடூர சட்டம். அதுமட்டுமல்ல, மோடி – அமித்ஷா ஆட்சியை எதிர்த்துப் போராடுபவர்கள், விமர்சிப்பவர்கள், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்கள் அனைவரையும் தேச துரோகிகள், பாகிஸ்தானின் ஏஜெண்டுகள், துக்கடா கும்பல்கள் என்று முத்திரை குத்துவதோடு அவர்களை ‘எரித்துக் கொல்வோம்’, ‘மண்ணில் புதைப்போம்’ என்று பாசிச ஆணவத்தோடு பேசுகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி கூட்டம். இஸ்லாமியர்களை எதிரியாகக் காட்டி, இந்து ராஷ்டிரத்தை அமைக்க முயல்கிறார்கள். எதிர்ப்பவர்களை கவுரி லங்கேஷ், கல்புர்கியைப் போல் கொலை செய்வார்கள்; அல்லது உபா சட்டத்தில் கைது செய்து விசாரணையின்றி பல ஆண்டுகள் சிறையில் அடைப்பார்கள்; மக்களுக்குள் பிளவை எற்படுத்தி சாதி, மதவெறி மோதல்களை உருவாக்குவார்கள்; பொய்யை ஊதிப் பெருக்கி உண்மையாக்குவார்கள். கார்ப்பரேட் – காவி பாசிசம் மாநிலத்திற்கு தகுந்தாற்போல் எந்த வடிவத்திலும் உருவெடுக்கும்.

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து அமைதியாக போராடிய மாணவர்கள் மீது போலீசின் கொடூர கொலைவெறித் தாக்குதல், ஜே.என்.யு. பல்கலைக்கழக விடுதியில் நுழைந்து முகமூடி அணிந்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் நடத்திய தாக்குதல், இதன் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் எனக் கருதிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மொத்த இந்தியாவும் போராடத் துவங்கி உள்ளது. பா.ஜ.க-வின் எந்த சமாதானங்களையும், வாக்குறுதிகளையும், நம்பத் தயாராக இல்லை.

இந்திய முசுலீம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என மோடி உத்திரவாதம் அளித்த நிலையில்தான் உ.பி. யோகி ஆதித்யநாத் அரசு, பால் வாங்கச் சென்ற முசுலீம் இளைஞரையும் தொழுகைக்குச் சென்ற முசுலீம் இளைஞரையும் முகத்திலும் கண்ணிலும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இணையதள முடக்கம், சொத்து பறிமுதல், 144 தடையுத்தரவு, 20-க்கும் மேற்பட்ட முசுலீம்கள் மீது துப்பாக்கிச் சூடு ; ஓய்வுபெற்ற 70 வயதிற்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட ஆயிரக்கணக்கானோர் மீது பொய் வழக்கு, கைது, சிறை; போராடுபவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது; போராட்டக்காரர்களை கலவரக்காரர்கள் என வரையறுத்து அவர்களை பழிவாங்குவேன் என முதல்வர் யோகி சவால் விட்டது என உ.பி.யில் நடந்தது இந்து ராஷ்டிர அரசுக்கான ஒரு வகைமாதிரி.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 130 கோடி இந்திய மக்களும் இந்துக்களே என சொல்கிறார். பார்ப்பன வர்ணாசிரம சாதி ஒடுக்குமுறை சித்தாந்தத்திற்கு ஆயிரம் ஆண்டு அனுபவம் உள்ளது. பல மதங்களை உண்டு செறித்தவர்கள். பாபர் மசூதியை இடித்து, அதை சரி என்று தீர்ப்பு பெற்றவர்கள். 75 இலட்சம் காஷ்மீர் மக்களை வீட்டுச் சிறையில் உரிமைகளற்றவர்களாக ஆக்கியவர்கள். ஒரே இரவில் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்து பல நூறு பேரை பலிகொடுத்து நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்தியவர்கள். குஜராத்தில் இரண்டாயிரம் முசுலீம்களை இனப்படுகொலை செய்தவர்கள். சி.பி.ஐ. நீதித்துறை, ரிசர்வ் பேங்க், இராணுவம், பத்திரிகை, கல்வித்துறை என அனைத்திலும் இந்துத்துவாவை புகுத்தி ஆக்கிரமித்தவர்கள். இவைகள்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு இந்து ராஷ்டிர கனவை அமல்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அடிமைத்தனம், சகிப்புத் தன்மை, ஒதுங்கும் போக்கு, வலிமையான எதிர்க்கட்சி இல்லாததும், கார்ப்பரேட் – காவி பாசிஸ்டுகளுக்கு துணிவை வரவழைத்திருக்கிறது.

குடியுரிமைச் சட்டத் திருத்தம் பாசிச பயங்கரவாதத்தை கொண்டுவரும் வாகனமே. எனவே, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக நமது ஆவணங்களை கேட்டு வரும் அதிகாரிகளிடம் எந்த விவரங்களையும் சொல்லாமல் புறக்கணித்து திருப்பி அனுப்ப வேண்டும். ஆதார் அட்டையில், வாக்காளர் அட்டையில், ரேசன் கார்டில் இல்லாத தகவல்களை யாரும் புதிதாக சொல்லிவிட முடியாது. பெற்றோர் பிறந்த இடத்தை கேட்டால் நம் முன்னோர்களின் சுடுகாட்டு கல்லறையைக் காட்டுங்கள்.

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான இந்தப் போராட்டம் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் சுயசார்பு பொருளாதாரம், கல்வி, வேலை, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமாக நாடு முழுவதும் விரிவடைய வேண்டும். ஹிட்லரின் வாரிசுகளான பா.ஜ.க. – மோடி – அமித்ஷாவை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியாமல் நமக்கு வாழ்வில்லை என முழங்க வேண்டும்.

உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராடி வழிகாட்டி உள்ளனர். அதைத் தொடர்ந்து பல்துறை பிரபலங்கள் உட்பட பரந்துபட்ட மக்கள் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் அணிதிரண்டு போராடுகின்றனர்.

அன்று இந்திரா காந்தியின் எமெர்ஜென்ஸி பாசிசத்தை எதிர்த்து நடந்த மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து கோடிக்கணக்கான மக்கள் திரண்டு போராடினார்கள். அதற்குப் பின்னால் இப்படி ஒரு போராட்டம் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக இன்று எழுந்துள்ளது. ஆறாண்டு கால மோடி ஆட்சியில் பல்வேறு கொடுமைகளினால் குமுறிக்கொண்டிருந்த மக்கள் அடக்கிவைத்த ஆத்திரத்தை எல்லாம் இந்தப் போராட்டம் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.

மோடி – அமித்ஷா பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்ட அலை ஓங்கட்டும். புதிய இந்தியா எழட்டும்! கார்ப்பரேட் – காவி பாசிசம் வீழட்டும்!

மாநாட்டு பிரசுரம் : அஞ்சாதே போராடு !

மக்கள் அதிகாரம்
தகவல்:
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு : 99623 66321


இதையும் பாருங்க !

காவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song

1 மறுமொழி

  1. இன்றைய காலச்சூழலில் மிகவும் அவசியமான மாநாடு…வெற்றி பெற வாழ்த்துக்கள்…அஞ்சமாட்டோம் போராடுவோம்…காக்கி சங்கிகள் மாநாடு நடக்கவிடாமல் செய்யும் சதித்தனங்களையும் தாண்டி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க