லேரியாவுக்கு பயன்படுத்தப்படும் Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு உலகின் பல நாடுகள் கையாள்கின்றன. இது, பலன் அளிக்கிறது என்பதற்கான அறிவியல்பூர்வமான முடிவுகள் இல்லை. இருந்தாலும், ’கிடைக்கும் மருந்துகளில் ஓரளவுக்கு பயன் தரக்கூடியது’ என்ற அடிப்படையில், இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.

இந்த Hydroxychloroquine – ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அமெரிக்கா ஆர்டர் கொடுத்திருந்த நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி அனைத்துவிதமான மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கும் இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மோடியுடன் பேசி, தாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மருந்தை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஆரம்ப கட்ட செய்திகள் வந்தன. ஆனால், இப்போது ட்ரம்ப் அப்பட்டமாக இந்தியாவை மிரட்டியிருக்கிறார்.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை விடுவிக்கவில்லை எனில், நிச்சயமாக இந்தியாவுக்கு உரிய பதிலடி இருக்கும்” என்று மிரட்டியிருக்கிறார். நமது 56 இஞ்ச் இப்போது என்ன செய்யப் போகிறார்?

“உனக்கு குடுத்துட்டு, நாளைக்கு எங்க நாட்டுல பிரச்னைன்னா மருந்துக்கு எங்கே போறது? அதெல்லாம் தர முடியாது” என்று சொல்லப் போகிறாரா, அல்லது ‘அனுப்பி வைன்னா அனுப்பிடப் போறேன். அதுக்கு ஏன் இப்படி மிரட்டி, வேஸ்ட்டா எனர்ஜியை வீண் பண்றீங்க என் தெய்வமே..’ என்று கமுக்கமாக மருந்துகளை அனுப்பிவிட்டு, ‘பரஸ்பர நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பி வைத்தோம்’ என்று சொல்லப் போகிறாரா தெரியவில்லை.

படிக்க:
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
நாம் ஏன் தனிமையில் இருக்க வேண்டும் ? | ஃபரூக் அப்துல்லா

ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அனுப்பி வைப்பதற்கு உரிய வழிகாட்டுதல்கள் வரத் தொடங்கிவிட்டதாக Livemint பத்திரிகையின் இணையச் செய்தி தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமாக இன்னும் வரவில்லை.

இந்தியாவுக்கு உரிய அளவில் கையிருப்பு இருக்கும்பட்சத்தில் இந்த மருந்தை அனுப்பி வைப்பதில் தவறேதும் இல்லை. நமக்கு நாளை, வேறு ஏதேனும் ஒரு மருந்துப் பொருள் தேவையெனில், அமெரிக்காவிடமோ, வேறு எந்த நாட்டிடமோ கேட்கத்தான் வேண்டியிருக்கும். இப்போதே வெண்டிலேட்டர்ஸ் போன்ற உபகரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

உலகின் அனைத்து நாடுகளும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தாராள மனதுடன் ஒருவருக்கு ஒருவர் அள்ளிக்கொடுக்க முடியாது என்றாலும் இடர்காலத்தில் கொடுத்து உதவுவது அவசியம்தான்.

ஆனால், இப்போது கேள்வி அமெரிக்காவின் அணுகுமுறை குறித்தது. இப்போது உலகிலேயே அதிக கொரோனா பாதித்தவர்கள் இருப்பது அமெரிக்காவில். மரண எண்ணிக்கையில் அந்நாடு மிக விரைவில் உச்சம் தொடும் அபாயமும் இருக்கிறது. இப்படி ஒரு இக்கட்டில் இருக்கும்போது, ‘நான் கேட்டதை குடுக்கலன்னா, விளைவுகள் மோசமாக இருக்கும்’ என்று மிரட்டுகிறது. இது, டொனால்ட் ட்ரம்ப் என்ற தனிப்பட்ட நபரின் அணுகுமுறை அல்ல. இதுதான் அமெரிக்கா.

இந்த திமிருக்கு அடிபணிந்து போகவில்லை எனில், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை தடுத்து நிறுத்துவார்கள். ஈரானுக்கும், வெனிசூலாவுக்கும், கியூபாவுக்கும் இன்று என்ன நடக்கிறதோ, அது நாளை இந்தியாவுக்கும் நடக்கும்.

ஆனால், நாம் கவலைப்படத் தேவையில்லை. கண்டிப்பாக மோடி இந்தியாவை அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டுசெல்ல மாட்டார். அடிபணிவார்; ட்ரம்ப் கேட்டதை அனுப்பி வைத்து தன் விசுவாசத்தை பறைசாற்றுவார். சப்இன்ஸ்பெக்டர் சவுண்ட் விடுறது எல்லாம் உள்ளூர் ஸ்டேஷன்லதான். ஐ.ஜி.கிட்ட உதார் விட்டா தூக்கிப்போட்டு மிதிப்பானா இல்லையா? அந்த பயம் வந்து போகும்ல…

குறிப்பு: நமது நம்பிக்கையை மோடி ஏமாற்றவில்லை. இந்தப் பதிவு எழுதப்பட்டு அரை மணி நேரத்தில் வந்திருக்கும் செய்தி, ஏற்றுமதிக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி