அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் !

1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை.

ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்தினர்களும் அதை தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதாலாகவே உணர்ந்தார்கள். மீதமுள்ள 10 சதவிகிதம் பேரும் இந்தப் பெருவாரியான கருத்துக்களுக்கு முன்பு தங்களது கருத்தை வெளியில் சொல்லவில்லை. அந்த 10 சதவிகிதம் பேரில் பெருவாரியானவர்கள் சங்பரிவாரின் ஆதரவாளர்கள்.

நாங்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட அன்று மாலை வாயிற்கூட்டத்தில் நான் பேசினேன். பைபிளில் உள்ள ஒரு வாசகத்தை அப்போது நான் அவர்களிடம் சொன்னேன். உத்தேசகமாக அந்த வார்த்தை இயேசு சிலுவையேற்றி அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்காக அழுத மக்களைப் பார்த்து அவர் எனக்காக அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் சந்ததியினருக்காகவும் அழுங்கள் என்று பேசியதாக என் நினைவில் இருந்ததைச் சொன்னேன்.

எல்லோர் தலையும் கவிழ்ந்திருந்தது. பலர் கண்ணீர் வடித்தார்கள். அப்போது எங்களில் யாருக்கும் 35 வயதைத் தாண்டவில்லை. எனக்கு வயது 32. எங்களில் இளையவருக்கு 29 வயது இருக்கும். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். எங்களை வருடுகிற பார்வைகள், தங்களை விடவும் எங்களை நேசித்ததை நாங்கள் அறிவோம்.

நாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தையும் அதேசமயம் நாங்கள்தான் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்று தெரியாமலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘உங்க கம்பெனில கொஞ்ச பேர டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களாமே, அவர்களை கொஞ்சம் நல்லா பாத்துகோங்கப்பா’ என்று சொன்னபோது உலகமே எங்களுக்கு ஆதரவாக நிற்பது போன்ற உணர்வை நாங்கள் பெற்றோம். இதையெல்லாம் சொல்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. இன்று அதுபோல ஒரு நிலை இருக்கிறதா?

இன்று ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு இவையெல்லாம் தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ன மாதிரியான மனஉளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாவார்கள் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

படிக்க:
♦ நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

எங்கள் விசயத்தில் ஒரு போராட்டம். ஒரு நீண்ட நெடிய விசாரணை. அதன்பிறகு விளக்கம் கேட்பு. அதன் பின்பு வேலைநீக்கம் என்றிருந்தது. ஆனால், நேற்றைய தினம் ஆனந்த விகடன் குழுமத்திலுள்ள தொழிலாளிகளை திடீரென அழைத்து நாளை முதல் உங்களில் 176 பேரை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 600 பேர் வேலை செய்கிற அந்த நிறுவனத்தில் இந்த முடிவுகளை எடுத்த சில பேரைத் தவிர, கடந்த 24 மணி நேரமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அது தங்கள் பெற்றோராக, தங்கள் பிள்ளையாக, தனது கணவராக அல்லது தனக்கு மருகமளாகவோ, மருமகனாகவோ இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

இது எத்தனை பெரிய கொடூரம். 176 பேர் என்று நிச்சயிக்கப்பட்ட பிறகு, வேறு யாருக்காகவாவது வந்துவிட வேண்டும் என்று மனிதத்தைச் சிதைக்கிற ஒரு சிந்தனைக்கு தூண்டும் இந்த முடிவை எவ்வித தயக்கமுமின்றி அந்த நிர்வாகம் எடுத்திருக்கிறது.

மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இவர்கள். கடந்த மாதமோ அதற்கு முன்பாகவோ இந்த நிறுவனம் தொழிலாளிகளை அழைத்து உங்களில் யாரையும் வீட்டிற்கு அனுப்பப் போவதில்லை. அதன் காரணமாகவே 30 சதவிகிதம் வரை சம்பளத்தை வெட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மூன்றில் ஒரு பகுதியை வெளியேற்றப் போகிறார்கள். இது திடீரென இறங்கிய இடி. யாரும் எதிர்பாராத ஒரு பெரும் திடீர் தாக்குதல்.

விகடன் சைத்தான்தங்களின் எந்த நேரடிக் காரணத்திற்காகவும் அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவில்லை. லாபம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள்.

பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். அந்த லாபத்திற்கு முன்பாக அனைத்து மனித மாண்புகளும் விழுமியங்களும் அடித்து நொறுக்கப்படும். சிதைத்து அழிக்கப்படும்.

அந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னதாக சமீபத்தில் ஒரு கருத்தை பார்க்க நேர்ந்தது. “உங்கள் தொழிலாளிகளை வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை எனில் அவர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் அவர்களைக் குறைப்பதற்கு இரண்டு முறை கூட யோசிக்காதீர்கள்”. இதன் பொருள் உங்கள் லாபத்திற்கு பாதிப்பு வருமெனில் அவர் எத்தனை திறமையானவராக இருந்தாலும் சரி, எத்தனை நல்லவராக இருந்தாலும் அவரை வெளியே துரத்திவிடுங்கள், தாமதிக்காதீர்கள், இன்னொரு முறை கூட யோசிக்காதீர்கள் என்பதுதான்.

மனிதர்கள் முக்கிமல்ல, லாபம் மட்டும்தான் முக்கியம் என்பதுதான். ஒப்பீட்டளவில் நிரந்தரமான வேலை ஆனந்த விகடனில் பணிபுரிவது என்று ஊடகவியலாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமே இப்படி செய்கிறது. மற்ற நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாது என்று நம்புவதற்கு எந்தவிதமான தர்க்கமும் இடமளிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் இப்போதுள்ள நிலையில் இதிலுள்ள பலராலும் மாற்று வேலை தேடுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நம்பிக்கையோடு ஒரு பதிலை சொல்ல முடியவில்லை.

மத்திய பாஜக அரசு ஏதோ தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போன்று கொரோனா காலத்தில் யாரையும் வேலைநீக்கம் செய்யக் கூடாது, சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது என்று உபதேசித்துவிட்டு தன் பணி முடிந்ததாக ஒதுங்கிக் கொண்டது.

உலகின் பல முதலாளித்துவ நாடுகள் 60% முதல் 100% வரை தொழிலாளர்களின் சம்பளத்தை, இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர்களுக்கு ஆகிற செலவைக் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கமும், ஊடகவியலாளருக்கான அமைப்புகளும் பெருமளவிற்கு போராட்ட குணங்களை அதற்கு தேவையான அளவில் கொண்டிருக்காத நிலையில் மிக இயல்பாக கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இதை அனுமதிப்பது சரியல்ல, நியாயமல்ல. அவர்கள் எல்லாம் யார் வீட்டுப் பிள்ளைகளோதான். ஆனால், அவர்கள் தாக்கப்படும்போது, நிராதரவாக விடப்பட்டால், நாளை நமது பிள்ளைகளுக்கு ஏற்படும்போது கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.இவையெல்லாவற்றையும்விட இந்த வேலைநீக்கங்கள் சட்ட விரோதம்.

வாசகர்களும் விளம்பரதாரர்களும் குறைந்தபட்சம் அவர்களின் செயலியிலாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.

இதற்கெதிராக அனைவரும் சாத்தியமான அனைத்து வகைகளிலும் வழிகளிலும் குரல் எழுப்ப வேண்டும்…

கே.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர். CPIM

***

விகடனில் நடைபெற்றுவரும் ஊழியர்கள் வேலை நீக்கம் தொடர்பாக, சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் எழுதியுள்ள பதிவு…