வாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியறிக்கை இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்.

மோடி அரசின் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் பேசுகையில் இந்தியாவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,149-ஆக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இதுவரை இந்தியாவில் இந்நோய்க்கு 3,303 பேர் பலியாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும், இந்தியாவில் கோவிட்-19 சோதனை விகிதம் குறித்த புள்ளி விவரங்களை எண்ணிக்கையில் பேசாமல், அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாகக் காட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1 லட்சம் பேரில் 7.9 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாகவும், உலக சராசரியைப் பொறுத்த வரையில் கோவிட்-19 பாதிப்பு, 1 லட்சம் பேருக்கு 62 பேர் என்ற விகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவை விட அதிக அளவிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில் சராசரியாக 100 முதல் 496 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் பாதிக்கப்பட்ட 15 நாடுகளின் மக்கள் தொகையையும் இந்தியாவின் மக்கள் தொகையையும் ஒப்பிட்டுக் கூறிய லாவ் அகர்வால், இந்தியாவை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள 15 நாடுகளின் மொத்த மக்கள் தொகையும் சேர்த்து 143 கோடிதான் என்றும் இந்தியாவில் மட்டும் 137 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின் படி பார்க்கையில் இந்த 15 நாடுகள் பட்டியலில் சீனா இடம் பெறவில்லை என்று தெரிகிறது.

படிக்க:
தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

இந்த நாடுகளில் மொத்தமாக 36 லட்சம் பாதிப்புகளும் 2.7 லட்சம் மரணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கையில், இந்தியாவில் இதுவரை 1 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3300 பேர் மட்டுமே மரணித்திருப்பதாகவும் ஒப்பிட்டார். அதாவது இந்த 15 நாடுகளில் இந்தியாவை விட 34 மடங்கு அதிகமான பாதிப்புகளும், 87 மடங்கு அதிகமான மரணங்களும் நிகழ்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் லாவ் அகர்வால்.

இந்தியாவில் தற்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இருக்கும் சுமார் 61,000 பேரில் 2.94% பேர்களுக்கு மட்டுமே ஆக்சிஜனேற்றம் தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில், 3% பேர் மட்டுமே இருக்கின்றனர். இதில் 0.45% பேருக்கு மட்டுமே வெண்டிலேட்டர் அவசியம் இருப்பதாகவும் லாவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6.39% பேருக்கு மட்டுமே மருத்துவமனைத் தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே போல உலக அளவில் கோவிட்-19 மரண விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 4.2 பேர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அது ஒரு லட்சம் பேருக்கு 0.2 பேர் என்ற அளவில் இருப்பதாகக் கூறினார். இந்தியாவை விட அதிக பாதிப்புகளைக் கொண்ட பிற 9 நாடுகளில் மரண எண்ணிக்கை லட்சத்திற்கு 10-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார் லாவ் அகர்வால்.

பாதிப்புகள் இந்தியாவில் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது, நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் இதனை சோதனை விகிதத்தின் அடிப்படையில் ஒப்பிட்டால் மட்டுமே உண்மையான நிலைமை தெரியவரும்.

மொத்தம் 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கடந்த செவ்வாய்க்கிழமை (19.05.2020) வரை சுமார் 1.26 கோடி பேருக்கு சோதனையை மேற்கொண்டுள்ளது. அதாவது தனது மொத்த மக்கள் தொகையில், 3.8% பேருக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தியுள்ளது அமெரிக்கா. இந்திய மக்கள் தொகையான 135 கோடி பேரில் இதுவரை 25 லட்சம் பரிசோதனைகளை மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில், 0.19% மட்டுமே ஆகும்.
இங்கு பரிசோதனை விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது முக்கியமானது. ஒரு நாட்டில் குறைவான அளவிலேயே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனில், ஒன்று அந்நாடு வைரசைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அல்லது போதுமான அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படாமல், இருந்திருக்க வேண்டும்.

இந்தியாவின் உறுதிசெய்யபட்ட பாதிப்புகள் குறைவாக இருப்பதன் காரணம், குறைவான பரிசோதனைகள் தான். இதனை உலகளாவிய அளவில் கோவிட்-19 புள்ளியியல் விவரங்களைக் கணக்கெடுக்கும் “வேர்ல்டோமீட்டர்” என்ற இணையதளம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கணக்கு உறுதி செய்கிறது. அந்த தளம் கொடுத்துள்ள தரவுகளின் படி, இந்திய மக்கள் தொகையில், 10 லட்சம் பேரில் 1800 பேர் என்ற விகிதத்தில்தான் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் 38000 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 25 லட்சம் பரிசோதனைகளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 4% பாதிப்பு. இந்தியாவில் பரிசோதனை விகிதம் குறைவாக இருக்கும் வரையில் இங்கு கோவிட்-19 பாதிப்புகள் குறைவாகவே வெளியே தெரியவரும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பரிசோதனை மேற்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு முழுமையான பாதிப்பு நிலவரம் வெளியே தெரியவரும்.

இந்தியாவில் நடத்தப்படும் குறைவான பரிசோதனைகளிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசோ கொரோனாவோடு இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று மக்களை அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவ வசதிகளையும், பரிசோதனைகளையும் அதிகரிக்கக் கோரி போராடப் போகிறோமா அல்லது மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கப் போகிறோமா ?


நந்தன்
நன்றி : த வயர். 

1 மறுமொழி

Leave a Reply to Arivu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க