மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி
12.06.2020
தஞ்சை போலீசு நடத்தியப் படுகொலை !
ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்க நகரங்கள் எல்லாம் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
போலீஸ் அமைப்பையே கலைக்க வேண்டும், போலீசு துறைக்குக்கு நிதியை வெட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்க மாநிலங்கள் போலீசு துறையை சீரமைக்கவும் போலீசின் அதிகாரங்களை குறைக்கவும் ஆலோசனைகள் செய்து வருகின்றன.
ஆனால் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களை போலீசு கொல்வதும், துன்புறுத்துவதும் கேட்பாரற்ற முறையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் போலீசின் காட்டுமிராண்டித்தனம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பட்டியலின பிரிவில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட குறவர் இன சமூகம் முழுவதையும் குற்றவாளிகளாகக் கருதி அம்மக்கள் மீது கொடிய தாக்குதல்களை மேற்கொண்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
இது குறித்த எந்த புகார் மீதும் மாநில, மத்திய மனித உரிமை ஆணையங்களோ தாழ்த்தப்பட்ட ஆணையமோ உருப்படியான நடவடிக்கை எடுப்பதில்லை.
கடந்த 10 .6 .2020 அன்று வழக்கு தொடர்பாக தஞ்சை மானோஜிப்பட்டி பொதிகை நகரில் மணி என்பவரை கைது செய்துள்ளனர். மணி திமிறிய போது அவரிடம் இருந்த அரிவாளை எடுத்த போலீசு ஒருவர், மணியின் காலை வெட்ட முயன்றுள்ளார். மணி விலகியதும் அந்த அரிவாள் இன்னொரு போலீசின் காலில் பட்டு காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் தப்பித்துவிட்டார் மணி. ஆனால் அவர் சில மணி நேரத்திலேயே அருகில் இருந்த மரக்கிளையில் பிணமாக தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார்.
போலீசை வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார் மணி என்று வழக்கம் போல ஜோடனை செய்து வழக்கு பதிந்துள்ளது. இதற்கு எதிராக மணியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து செய்த போராடினர். நைச்சியமாக பேசிய போலீசு அதனை கைவிட செய்துள்ளது.
படிக்க:
♦ விமான நிலையம் தனியார்மயம் : இலாபம் வந்தால் அதானிக்கு ! நட்டம் வந்தால் அரசுக்கு !
♦ தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சையை இலவசமாக்கு ! நீதிமன்றத்தில் PRPC மனு !
இது போலீஸ் நடத்திய படுகொலை என்பது தெளிவாகவே தெரிகிறது, என்ற போதிலும் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மறுக்கிறது.
ஆதிக்க சாதியினர் குற்றம் செய்தால் அதை தனிநபரின் குற்றமாக பார்ப்பதும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் குற்றம் செய்தால் அதற்கு சமூகத்தையே குற்றவாளியாகப் பார்க்கும் வேலையை போலீசு செய்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே மணியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து தொடர்புடைய அனைத்து போலீசாரும் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தங்கள்
தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்
மக்கள் அதிகாரம்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.