திருவையாறு: சம்பா நெல்லுக்கு சமாதி கட்டியபடி சாலை அமைக்கும் பணி!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக எட்டுவழி சாலை, நான்குவழி சாலை என திட்டங்களை அமல்படுத்தி உழைக்கும் மக்களை, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.

ஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் புறவழிச்சாலை அமைப்பதற்காக விளைநிலத்தில் மண்ணை கொட்டியுள்ளது மாவட்ட நிர்வாகம். தடுக்க முயன்றால் கைது செய்து சிறையில் தள்ளிவிடுவோம் என்று தஞ்சை விவசாயிகளை மிரட்டியுள்ளது போலீசுத்துறை.

இந்தியா முழுவதும் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் புறவழிச்சாலை அமைப்பது, நான்கு வழி எட்டு வழிச்சாலைகள் அமைப்பது, புதிய சுரங்கம் தோண்டுவது, மெட்ரோ ரயில் பாதை அமைப்பது, புதிய விமான நிலையங்கள் அமைப்பது, புதிய சிப்காட் அமைப்பது, கெயில் எண்ணெய் குழாய் பதிப்பது, ஒ.என்.ஜி.சி.யை விரிவாக்குவது போன்ற கார்ப்பரேட் நலத் திட்டங்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் இவ்வகையானத் திட்டங்கள் அனைத்தும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக நடைமுறைப்படுத்தபடுகிறது என்றும், இத்திட்டங்களுக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு சரியான இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டு வருகிறதென்றும் விவசாயிகள் தங்களுடைய நிலங்களை மணம் உவந்து கொடுத்து வருகிறார்கள் என்றும் கூறி வருகிறார்கள் அரசியல் பிழைப்புவாதிகள்.

படிக்க: பயிர்கள் விளைந்தாலும் அழிந்தாலும் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு!

ஆனால் நடைமுறையில் இந்த திட்டங்களினால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள்  தங்களுடைய நிலங்களை கொடுக்க மறுத்து அரசுக்கெதிராக தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி-கொல்லம் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக விளைந்த நெற்பயிரின் நடுவில் சென்று அளவு கற்களை ஊன்றினார்களே, அதை விட மோசமாக தஞ்சை திருவையாறு விவசாய நிலத்தில் நடவு செய்யப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கும் நெற்பயிர்களின் மீது மண், கற்கள் கொட்டி சாலை அமைக்கும் பணியை கொஞ்சமும் இரக்கமின்றி தொடங்கியது மாவட்ட நிர்வாகம்.

எந்த முன் அறிவிப்பும் இல்லை. நிலங்களை ஒப்படைப்பது பற்றியும் விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பது பற்றியும் எந்த இறுதிகட்ட முடிவும் எடுக்கப்படாத நிலையில் அரும்பாடுபட்டு நிலத்தை திருத்தி நீர் பாய்ச்சி வேளாண்மை செய்து வைத்திருக்கும் விளைநிலத்தில், திடீரென ஒருநாள் தங்களை அரசாங்க அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு மத்தியில் சாலை அமைப்பதுதான் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கும் அரசுகளின் செயல்.

தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு சுற்றியுள்ள செழிப்பான விளைநிலங்களை அழித்துவிட்டு புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான விவசாயிகள் கருப்பு கொடியுடன் வயல்களில் இறங்கி சாலைபணிக்கு வந்த இயந்திரங்கள் வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் போராடும் விவசாயிகளை பார்த்து அரசு பணியை தடுக்கக் கூடாது மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவேன் என்று விவசாயிகளை மிரட்டினார். மாவட்ட ஆட்சியர் அரசியல்வாதிகள் உட்பட எந்த உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. போலீசு போராடிய விவசாயிகளை அப்புறப்படுத்தியது. பின் சாலை அமைக்கும் பணியாளர்கள் நெற்பயிர்களை வேரோடு பிடிங்கி வீசிவிட்டு சாலை அமைக்கும் பணியை முழு வீச்சாக எடுத்துச் சென்றனர்.

நெற்பயிர்களின் மேல் மணலை கொண்டி அழித்து அமைக்கப்படும் புறவழிசாலை விவசாயிகளுக்கு ஒருபோதும் பயன்படப்போவதில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக எட்டுவழி சாலை, நான்குவழி சாலை என திட்டங்களை அமல்படுத்தி உழைக்கும் மக்களை, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.

தனது நிலத்திற்காகவும், விவசாயத்திற்காகவும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டியது அவசியம்.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க