ஆன்லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !

ன்பார்ந்த பெற்றோர்களே, மாணவர்களே!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வைத்ததன் மூலம் கொரோனா பெருந்தொற்று அச்சத்தில் இருந்து 10 லட்சம் மாணவர்களைக் காப்பாற்றினோம். இப்போது தனியார் பள்ளியில் படிக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவர் மீதும் ஒரே இரவில் ஆன் – லைன் கல்வி திணிக்கப்பட்டுள்ளது. இன்னொருபக்கம், கோடிக்கணக்கான அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. என்ன செய்யப் போகிறோம்?

கொரோனா பெருந்தொற்று அபாயம் காரணமாக கடந்த மார்ச் – 24 ந்தேதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இன்றுவரை நீட்டிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று அதிகரிப்பதால் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று யாராலும் கணிக்க முடியாதபடி ஒரு நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இவை எதைப்பற்றியும் கவலையின்றி தனியார் பள்ளிகள் ஜூன் -1 ந் தேதி ஆன் – லைன் வகுப்புகளை தொடங்கி வசூல் வேட்டை நடத்துகின்றன.

ஆன் லைன் கல்வி : மாணவர்கள் மீதான வன்முறை!

வழக்கமான பள்ளி நேரம் போல் காலை 9 மணி முதல் 4 மணி வரை ஆன் – லைன் வகுப்புகள் நடக்கின்றன. மாணவர்கள் பள்ளி சீருடை அணிந்து கொண்டு செல்போன், லேப்டாப் முன்பு அமர வேண்டும். 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுடன் பெற்றோர்களும் உட்கார வேண்டும். வகுப்புக்கு இரண்டுமுறை அட்னன்ஸ்.

வகுப்பின் போது ஆடியோ அல்லது வீடியோ எதாவது ஒன்று சரியாக கிடைக்காது. நெட்வொர்க் கிடைக்காது, நெட்வொர்க் கிடைத்தால் வேகம் இருக்காது. புரிகிறதோ இல்லையோ ஆசிரியர்கள் நடத்துவதைக் கவனித்து நோட்ஸ் எடுக்க வேண்டும். கடந்த ஒரு மாத அனுபவத்தில் இருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருக்கும் ஒரு சித்திரவதையாக இருப்பதாக சொல்கிறார்கள். கற்றல் கற்பித்தல் என்ற ஆரோக்கியமான கல்விக்கான அடிப்படைகள் இதில் எங்கே உள்ளது? இது மாணவர்கள் மீது திணிக்கப்படும் வன்முறை இல்லையா?

ஆன்லைன் கல்வியின் பெயரில் கட்டணக் கொள்ளை!

ஆன் – லைன் வகுப்புகளைக் காட்டி கடந்த ஏப்ரல் மாதம் முதலே கல்விக் கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்துவிட்டன தனியார் பள்ளிகள். பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும் என்ற அச்சத்தில் பெற்றோர்கள் பல ஆயிரம் கடன் வாங்கி கட்டணங்களைக் கட்டி வருகிறார்கள். உடனடியாக பணம் கட்டாத மாணவர்கள் ஆன் – லைன் வகுப்புகளில் இருந்து ஈவிரக்கமின்றி வெளியேற்றப்படுகிறார்கள். பள்ளிகளைத் திறக்கும் முன் கல்விக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை மதிக்கவில்லை தனியார் பள்ளிகள்.

அரசு அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு. ’’கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் சொன்னோம், பெற்றோர்கள் தாமாக முன் வந்து கல்விக்கட்டணம் கட்டினால் வாங்கிக் கொள்ளலாம்.’’ என பின்வாங்கிக் கொண்டது தமிழக அரசு. மூடிக்கிடக்கின்ற பள்ளிக்கு என்ன செலவு இருக்கின்றது. ஏன் கல்விக்கட்டணம் கட்ட வேண்டும்? முடியாது என்று சொல்வது நமது உரிமை.

ஆன்லைன் கல்வி: விழிபிதுங்கி நிற்கும் பெற்றோர்கள்!

ஆன் – லைன் வகுப்புக்கு தனியாக ஆண்ட்ராய்டு செல்போன் அல்லது லேப்டாப் தேவை. குறைந்தது 10 ஆயிரம் இல்லாமல் வாங்க முடியுமா?  ஒரு நாள் வகுப்புக்கு 5 முதல் 10 ஜி.பி டேடா செலவாகிறதாம். இதற்கு குறைந்தது மாதம் 1000 ரூபாய் செலவாகும். இரண்டு மூன்று பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களின் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த மக்களை கொரோனா – ஊரடங்கு நடுத்தெருவுக்கே கொண்டு வந்துவிட்டது. அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லை என்றாலும், கல்விக்கட்டணம், ஆண்ட்ராய்டு செல்போன், இணைய வசதி என பல ஆயிரங்களை செலவு செய்துதான் ஆகவேண்டும் என்கிற இந்த  ஆன் – லைன் கல்வியை யார் கேட்டது?

மாணவர்களை எந்திரங்களாக்கும் ஆன்லைன் கல்வி!

மாணவர்கள் செல்போன் – லேப்டாப்பை தொடர்ந்து பார்ப்பதால் கண் திரை, உடல்நிலை, மனநிலை பாதிக்கப்படும், மன அழுத்தம் அதிகரிக்கும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதுமட்டுமல்ல, குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் மாணவர்கள் விலகி நிற்பார்கள், எலெக்ட்ரானிக் பொருட்களை சார்ந்து வாழ பழக்கப்படுத்தப்படுவதால் மனித உணர்வும், சமூக உணர்வும் அற்ற எந்திரங்களாக மாறிவிடுவார்கள் என்று அச்சப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.

ஆன் – லைன் வகுப்புக்கு பெற்றோர்கள் செல்போன் கொடுக்காததால் கோவை, சிதம்பரத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இவ்வளவு அபாயம் நிறைந்த ஆன் – லைன் கல்விக்கு தடைபோட முடியாது என்கிறது நீதிமன்றம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆன்லைன் கல்வி அபாயத்திலிருந்து மாணவர்களை மீட்போம் !அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கப் போராடுவோம் !

’’கொரோனாவினால் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன, இந்தக் கல்வியாண்டே வீணாகிவிட்டது, ஆன் -லைன் கல்வியும் வேண்டாம் என்றால் மாணவர்களின் படிப்பு பாழாகிவிடும்?’’ என்ற பதட்டத்தை ஏற்படுத்துகிறார்கள் தனியார்பள்ளி முதலாளிகள். மாணவர்களின் படிப்பு பாழாகிவிடும் என்ற அக்கறை இருந்தால் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

சுமார் 40 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல லட்சம் மாணவர்களுக்கு கல்வி கொடுக்க எந்தவொரு ஏற்பாடும் இல்லையே, இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாமா? பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் “ஆன் – லைன் கல்விக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை. அரசுப்பள்ளியில் நடப்பதில்லை.” என்று பொறுப்பற்று ஒதுங்கிக்கொள்கிறார்.

அமைச்சர் செங்கோட்டையன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாட்சப் குழுக்களை உருவாக்குகிறோம் என்று வாயால் வடை சுடுகிறார். தனியார்பள்ளி முதலாளிகளின் கைக்கூலிகளான இவர்களிடம் இதற்குமேல் என்ன எதிர்பார்க்க முடியும்?

கல்வியில் தனியார்மயத்தை தீவிரப்படுத்தி வரும் மோடி அரசோ, ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள புதிய கல்விக்கொள்கையை குறுக்குவழியில் அமுலுக்கு கொண்டுவர துடிக்கிறது. அரசு கல்வி நிறுவனங்களை ஒழித்துக்கட்டிவிட்டு, கார்ப்பரேட் கல்வி நிறுவனங்கள், மூக் (MOOC) போன்ற பன்னாட்டு ஆன் – லைன் கல்வி நிறுவனங்களின் கொள்ளைக்கும் ஆதிக்கத்திற்கும், வழி வகுப்பதுதான்  அந்த புதிய கல்விக்கொள்கை. அதன் ஒரு பகுதிதான் சமீபத்தில் நிர்மலா சீத்தாராமன் அறிவித்த “இ.வித்யா திட்டம்” அதாவது, ஆன் –லைன் கல்வி.

வசதிபடைத்த மாணவர்களுக்கு கல்வி, ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி இல்லை என்பதுதான் ஆன் – லைன் கல்வி ஏற்படுத்தும் ஆபத்துகளில் மிகவும் முக்கியமானது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரிக்க வழிவகுக்கும், பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் ஆன் – லைன் கல்வியை திட்டத்தை முறியடிப்போம்.

தனியார்பள்ளிகளின் பிடியில் இருந்து மாணவர்களை மீட்போம். தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு முடிவுகட்ட அவைகளை அரசுடைமையாக்கப் போராடுவோம். இந்த கொரோனா காலத்தில் கேரளாவில் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் அனைத்து  மாணவர்களுக்கும் பாடம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதைப்போன்று ஒரு மாற்று வழியை சமமாக அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்ட குழு அமைத்து மாற்றுக் கல்விக்கான திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த போராடுவோம்!  வாரீர்!!

புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. 9445112675