நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட சுரங்கங்கள், ரயில்வே, கூட்டுறவு வங்கிகள் எல்லாவற்றையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மத்திய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து 6.7.2020 அன்று காலை 11 மணிக்கு திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர் உத்திராபதி தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், “கொரோனாக் காலத்தில் ‘விழித்திரு, தனித்திரு, வீட்டில் இரு’ என்று நம்மை வீட்டில் முடக்கிப்போட்டு விட்டு, நாட்டின் பொது சொத்துக்களான ரயில்வே, சுரங்கங்கள், கூட்டுறவு வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் செயல் மக்கள் விரோதமானது.இந்த அரசு முழுக்க முழுக்க மக்கள் விரோதமாக செயல்படுகிறது. இதை அனுமதிக்கக்கூடாது, எதிர்த்துப்போராடி முறியடிக்க  வேண்டும்” என்பதை எடுத்துரைத்தார்.

அடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மணலி தாஸ் அவர் தனது உரையில், “ரயில்வே, சுரங்கம் போன்றவை தனியார்மயமாகிறது, கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கு செல்வது அபாயகரமானது. அத்துடன் இரயில்வே சந்திப்பில் காலம் காலமாக ஆட்டோ ஓட்டி பிழைத்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரமும் ஓலா-வின் வரவால் பறிக்கப்பட்டுள்ளது. ஓலா, ஊபர் போன்றவற்றின் வரவு பல சிறு தொழில்களை அழிக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் போன்றவை பல வணிகர்களை பாதிக்கிறது. ஆனால், அரசு இத்தகைய கார்ப்பரேட்டுகளின் நலனில்தான் அக்கறை காட்டுகிறதே தவிர, சிறு தொழில், சொந்த ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களின் நலனை சீரழிக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

படிக்க:
அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!
♦ ஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் !

அடுத்ததாக சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் ராஜா தனது உரையில், “இன்றைக்கு நாடு முழுவதும் லாபத்தில் இயங்கும் நூற்றுக்கணக்கான ரயில்களை கார்ப்பரேட் வசம் ஒப்படைக்கப்போகிறது. மத்திய அரசினுடைய இந்தக்கொள்கையால்  நமக்கு சொந்தமாக இருக்கக்கூடிய ரயில்வே துறை, கார்ப்பரேட்- தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்படுவதோடு நாம் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வது தடுக்கப்படும் என்றார். மோடி அரசு பொறுப்புக்கு வந்ததிலிருந்து இரயிலில் பொதுப்பெட்டிகளை குறைத்ததால் ஒரு பெட்டியில் பல நூறு பேர் புளி மூட்டை போல மக்கள் அடைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறோம். தனியார் முதலாளிகளிடம் சென்றால் அது இன்னும் அபாயகரமாக மாறிவிடும். இதை தடுத்து நிறுத்த நாம் போராட வேண்டும். தடுப்பதற்கு நாம் ஒன்றிணைவோம் என்று கூறினார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தனது உரையில், “மோடி அரசு கொரோனா ஊரடங்கு காலத்தில் இப்படி மக்களுக்கு விரோதமாக கார்ப்பரேட் நலனுக்காக  கொண்டு வருகின்ற இந்த கொள்கைகளை முறியடிக்காமல் மக்களுக்கு விடிவு இல்லை” என  தனது உரையில் பதிவு செய்தார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுந்தரராஜன் பேசும் போது, “நாடு சுதந்திரம் அடைந்ததாகக் கூறி எழுபது ஆண்டுகள் கடந்த நிலையில், 47-க்குப் பிறகு இன்று வரை உழைக்கும் மக்கள் உருவாக்கிய இந்த நாட்டினுடைய பொது சொத்துகள் அனைத்தையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மோடி அரசு ஒப்படைக்கின்றனர். காங்கிரசை விட பன்மடங்கு வேகத்தில் தனியார்மயக் கொள்கையை அமல் படுத்தி வருகின்றனர். நம் அனைவரையும் வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டு, நம்மை சிறை வைத்து விட்டு சதித்தனமாக இதை செய்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை செய்யாமல், மக்களுக்கான வாழ்வாதாரத்தைப் பாதுகாக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுடைய  நலனை – அவர்களுடைய லாபத்தை அதிகப்படுத்துவதற்கான வேலையை செய்து வருகிறது.

உலக பணக்கார வரிசையில் அவர்களை உயர்த்துவதற்காக இப்படிப்பட்ட இந்த தனியார்மயக் கொள்கையை கார்ப்பரேட் மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி கொண்டிருக்கிறார்.  இதன் விளைவு இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் குறிப்பாக 40 கோடி மக்களுக்கு மேலான அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து பிச்சைக்காரர்களாக கையேந்தி நிற்கின்றனர்.

ஆகவே இந்த கார்ப்பரேட் நலனுக்காக மோடி அரசு கடைப்பிடிக்கின்ற இந்த திட்டத்தை அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்க வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு முதலாளிகள் என அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கிப் போராடினால்தான் இத்தகைய சதித்திட்டங்களை முறியடிக்க முடியும். அப்போதுதான் நம் வாழ்வில் விடிவு கிடைக்கும். கார்ப்பரேட்-காவி பாசிச ஆட்சியை எதிர்கொள்ளாமல் விடுதலை இல்லை என்பதை உணர்ந்து களத்தில் இறங்குவோம். இந்த கார்ப்பரேட் ஆதரவு பார்ப்பன பாசிசக் கும்பலை விரட்டி நம்முடைய வாழ்வு உரிமையைப் பாதுகாப்போம்” என தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக, அமைப்பு சாரா தொழிலாளர்களின் மாநிலத் தலைவர் மகேஸ்வரன் அவர்கள் தனது உரையில், “மோடி அரசு கொண்டு வந்திருக்கின்ற கார்ப்பரேட் நலனுக்காக இந்தக்கொள்கைகள் ஆபத்தானவை. பொதுத் துறைகளான ரயில்வே, சுரங்கம், வங்கித் துறையை, கூட்டுறவு வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைப்பது என்பது இந்த மக்களை முட்டாள்களாக மாற்றி கையேந்தி நிற்கும் பிச்சைக்காரர்களாக மாற்றுகின்ற ஒரு அவல நிலைக்கு  தள்ளிக் கொண்டு இருக்கின்றது அரசு . ஆகவே இதை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, போராடுகின்ற இந்த சங்கங்கள் ஒன்றிணைந்து வீதியில்  இறங்குவோம். அப்பொழுதுதான் நமக்கு விடிவு” என்று தனது உரையை நிறைவு செய்தார். அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்டத்தலைவர் தோழர் சம்சுதீனும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இறுதியாக, பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் சுரேஷ் நன்றியுரை கூறி நிறைவு செய்தார். நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கடைகளிலும் பாலத்தில் நின்றும் ஆர்ப்பாட்டத்தை கவனித்து ஆதரவளித்தனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 89030 42388.