ஜாரியா: எரியும் நகரத்திற்குள் மக்களை அமிழ்த்தும் பாசிச மோடி அரசு

மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பல சதுர கி.மீ. தொலைவிற்கு நீண்ட சங்கிலித் தொடராக நிலக்கரி வயல்கள் அமைந்துள்ளன. இந்த நிலக்கரி வயல்கள், நெடுங்காலமாக-சற்றேக்குறைய 108 ஆண்டுகளாக நிலத்திற்கு அடியே தணலாய் எரிந்து குமைந்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே பல பகுதிகளில் நிலத்துக்கு அடியிலிருந்து புகை கசிந்து வெளிவந்த வண்ணமும் உள்ளது. இதன்காரணமாக இப்பகுதியின் வெப்பநிலை சாதாரணமாகவே 50 முதல் 60 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மேலும், மொத்த நிலப்பகுதியும் எப்போது வேண்டுமானாலும் பூகம்பம்போல் உள்வாங்கிகொண்டு புதைந்து போகக்கூடும் என்ற நிலையில் இருப்பதை சூழலியலாளர்களும் புவியியலாளர்களும் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதனால் மக்கள் தங்கள் உயிருக்கு அஞ்சி சில ஊர்களை காலி செய்துவிட்டனர். எனினும் பல ஊர்களில் இன்னமும் மக்கள் குடியிருக்கிறார்கள்.

அவ்வாறு தொடர்ந்து எரிந்து குமைந்து கொண்டிருக்கும் நிலக்கரி வயலின் முக்கிய நடுப்பகுதியாக ஜாரியா எனும் ஊர் அமைந்திருக்கிறது. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கினாலும் வேறு வழி தெரியாமல், அரசாங்கம் ஏதாவது மாற்று வழி செய்யும் என்று எதிர்பார்த்து, அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆபத்திலும் மக்கள் வசிக்க காரணம் ஒன்று இருக்கிறது.

இந்த ஜாரியா நிலப்பகுதியில் குறைந்த ஆழத்திலேயே மிகவும் சுத்தமான “கோக்” (Coke) எனும் வகை நிலக்கரி பரவலாக கிடைக்கிறது. இந்த கோக் நிலக்கரி இரும்பு எஃகு உருக்கு ஆலைகளில் முதன்மையான எரிப்பொருளாகும். அதேபோன்று இன்னும் பல அடிப்படை தொழிற்சாலைகளிலும் உலோகங்களை உருக்கும் உலைகளில் எரிப்பொருளாக பயன்படுகிறது. எனவே கோக் நிலக்கரி இயல்பாகவே விலை உயர்ந்ததாகும்.

இப்பகுதியில் வாழும் நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் நிலங்களில் கோக் நிலக்கரியை தோண்டி எடுத்து விற்பனை செய்வதன் மூலம் கணிசமான வருமானம் பார்க்கின்றனர். அரசுக்கு சொந்தமான பொது நிலங்களில் இருந்து நிலக்கரியை தோண்டி எடுத்து பல நிலக்கரி மாஃபியாக் கும்பல்கள் வியாபாரம் செய்து வருகின்றன. இந்த வியாபாரத்தில் போட்டியும் மோதல்களும் ஒருவரை ஒருவர் அழித்தொழிக்கும் கூலிப்படைகளின் ஆதிக்கமும் அதிகம்.


படிக்க: ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!


ஆனால், கடுமையான வெப்பம் மற்றும் அதிக அழுத்தம் காரணமாக அவ்வபோது நிலப் பகுதிகள் குபீர் குபிரென்று தீப்பிடித்து எரிகின்றது. இந்த நிலப்பகுதியே மக்கள் தங்கி வாழ்வதற்கு உகந்ததில்லை என்பதுடன் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலைமை தொடர்ந்து நிலவி வருகிறது. ஒரு பக்கம் ஆபத்து இருக்கும்பொழுதே இன்னொரு பக்கம் அரசுக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடி மதிப்புள்ள மிக உயர்ந்த வகை நிலக்கரி வீணாக எரிந்து சாம்பலாகி நாசமாகி வருகின்றது என்பதும் கவனத்துக்குரியதாகும்.

ஜாரியாவில் அரசு ஆவணங்களின்படி முதல் தீப்பிடிப்புச் சம்பவம் 1916-இல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் 1972-க்கு பிறகு சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்ட காலத்தில்தான் ஒன்றிய அரசு இப்பிரச்சினையை அங்கீகரித்துப் பேசத் தொடங்கியது. பிறகும் வெறும் வாய்ப்பேச்சோடு பிரச்சினையை மீண்டும் கிடப்பில் போட்டது, காங்கிரஸ் அரசாங்கம். அதன் பின்னர் 1996-இல்தான் பிரச்சினையை ஆய்வு செய்வதற்கான ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் பரிந்துரையின்படி, “ஜாரியா பிரதான திட்டம்” (Jharia Master plan) என்ற பெயரில், ஜாரியா பகுதி மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவதற்கான ஒரு திட்டத்தை தயாரித்து வேலைகளை தொடங்கியது ஒன்றிய அரசு. ஆனால், 2004-இல்தான் திட்டம் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. பிறகு திட்ட குழுவிற்கு போனது. திட்டக்குழு குடியிருப்புகள் அமைப்பது குறித்து சில வழிகாட்டுதல்களை கொடுத்தது. ஆனாலும், அதற்குப் பிறகு 2008-ஆம் ஆண்டில் இத்திட்டம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு கூறிவிட்டது.

அதன்படி, தரைக்கடியில் எரியும் நெருப்பை கட்டுப்படுத்தும் பொறுப்பை “பாரத் கோக் நிலக்கரி லிமிடெட்” (BCCL – Bharath Coking Coal Limited) எனும் பொதுத்துறை நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வது என்றும் நிலக்கரி அகழும் அதன் ஊழியர்களுக்கு மட்டும் அந்நிறுவனமே மாற்றுக் குடியிருப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அடுத்து ஜாரியா பகுதி பொதுமக்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்குவதற்கு மாநில அரசும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் இரண்டு பணிகளையும் ஒருசேர கண்காணித்து இயக்க என்று ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகளைக் கொண்ட “ஜாரியா மக்கள் மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு ஆணையம்” (JRDA – Jharia Rehabilitation and Development Authority) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.


படிக்க: நிலக்கரிச் சுரங்கத்திட்டத்திற்கு எதிராக போராட்டம் – போலீசு துப்பாக்கிச்சூடு | தோழர் ரவி


அதனைத்தொடர்ந்து, பெலகாரியா என்ற இடத்தை தெரிவுசெய்து அங்கு “டவுன்ஷிப்” போன்ற குடியிருப்பு வீடுகளை கட்டித்தர திட்டமிடப்பட்டது. அதன்பிறகு இன்று 28 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இன்னும் அத்திட்டம் நிறைவு பெறாமல் அரைகுறையாக அப்படியே பாதியில் நிற்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் “இந்திய நிலக்கரி கழகம்” (Coal India Ltd) ஒன்றிய அரசுக்கு சொந்தமானது என்பதனால் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுவிட்டால் அவ்வளவுதான் என்ற நிலை நீடிக்கிறது.

இத்திட்டத்தை முடுக்கிவிட்டு செயல்படுத்தவோ கண்காணிக்கவோ மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்கிறார் ஜாரியாவின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காங்கிரசுக் கட்சியை சேர்ந்த பூர்ணிமா சிங். “நானே ஜாரியாவை சேர்ந்தவள்தான் என்றாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை” என்கிறார். சட்டமன்ற உறுப்பினர் பூர்ணிமா சிங் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சராக இருக்கும் பிரகலாத் ஜோஷியையும் எல்லா மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசியபோதும் அவர்கள் உடனடியாக முடிப்பதற்கு வாக்களித்த போதிலும் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்கிறார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் பூர்ணிமா சிங். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடுபவர் வேறு யாருமல்ல, இவருடைய கணவரின் சகோதரி ராகினி சிங் ஆவார். ராகினி சிங்கின் கணவர் சஞ்சீவ் சிங் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அப்பகுதியில் நிலக்கரி மாஃபியா தலைவர்களில் ஒருவராக அறியப்படும் சூர்யா தியோ சிங்கின் மகனும் ஆவார்.

பூர்ணிமா சிங்கின் கணவர் நீரஜ் சிங் ஏற்கெனவே துணை மேயராக இருந்த ஒரு காங்கிரஸ் தலைவராவார். நீரஜ் சிங்கை தன் மனைவியின் சகோதரர் என்றும் பாராமல் சுட்டுக் கொலை செய்தது சஞ்சீவ் சிங்கின் ஆட்கள்தான். அதற்குப் பின்னர்தான் பூர்ணிமா சிங் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் நின்று, பா.ஜக. சார்பில் எதிர்த்து போட்டியிட்ட ராகினி சிங்கைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அப்பகுதியில் நிலவும் நிலக்கரி மாஃபியா கும்பலின் ஆதிக்கத்தை புரிந்துகொள்ள இந்த ஒரு விவரம் போதுமானதாகும்.


படிக்க: கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!


ஜாரியாவின் நிலத்துக்கு அடியில் எரியும் நெருப்பு காரணமாக பல பகுதிகளில் சிறு சிறு அளவில் நிலம் உள்வாங்கி வீடுகள் உட்பட பலவும் புதையுண்டு போயிருக்கிறன என்பதைக் கூறுகிறார் ஜாரியா வாசியான சஞ்சய் குமார் பிரஜாபதி. பிரஜாபதியின் வீட்டுக்கு மிக அருகில் 15 மீட்டர் தூரத்தில் வீடுகள் எவ்வாறு புதையுண்டள்ளன என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அவரது வீடே தரையும் சுவர்களும் பாளம் பாளமாக வீரல் விட்டு வெடித்து காணப்படுகிறது. சஞ்சீவ் பிரஜாபதியும் அரசின் இடமாற்ற மறுவாழ்வு திட்டத்திற்காகத்தான் இன்னமும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

ஜாரியா பகுதி முழுவதுமே எங்கும் சாம்பல் படிந்து காணப்படுகிறது. இரவில் பனி பெய்வதை போல் சாம்பல் எப்போதும் 24 மணி நேரமும் மேலிருந்து உதிர்ந்து கொண்டே இருக்கிறது. எரியும் நிலக்கரி வாயுக்களை தொடர்ந்து சுவாசிப்பதனால் ஜாரியா மக்களுக்கு பலவகை சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. பலருக்கு காசநோய் (TB-Tuberculosis) எனப்படும் எலும்புறுக்கி நோய் தாக்கியிருக்கிறது. மேலும் பலர் வளர்ச்சியை பாதிக்கும் குட்டைத் தன்மை (Dwarfism) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், கடும் துன்பங்களுக்கு இடையில் வாழ்ந்தாலும் எப்படியும் அரசாங்கம் ஏதாவது செய்யும் என்கிற நம்பிக்கையுடன்தான் ஜாரியா மக்கள் எல்லா கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

இப்பகுதியில் “இடமாற்றம் தேவைப்படுபவர்கள்” என ஒரு லட்சம் குடும்பங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. போதிய எண்ணிக்கையிலும் கட்டப்படவில்லை. பல வீடுகளில் ஜன்னல்களில் கதவுகள் வைக்கப்படவில்லை. பல வீடுகளில் தரை பூசப்படவில்லை. எல்லாமும் அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளன. எந்தவித போக்குவரத்து சாலை தொடர்பும் அமைக்கவில்லை. அந்த குடியிருப்பில் பள்ளிக்கூடம், மருத்துவமனை என்று எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. அனைத்தையும்விட மாற்றுக் குடியிருப்புக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும் பெலகாரியா என்கிற இடமே ஒரு காட்டுப் பகுதியாகும். மேலும் அது இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

அங்கே கட்டப்பட்டிருக்கும் வீடுகளும் 8-க்கு 10 அடி என்ற அளவில் இரண்டு அறைகளை மட்டும் கொண்டவையாகவே உள்ளன. பெற்றோர்கள் இருவரையும் குழந்தைகளையும் கொண்ட ஒரு குடும்பம் எப்படி அதனுள் வாழ முடியும் என்று நியாயமாக கேள்வியை எழுப்புகிறார், ஜாரியாவில் சலூன் கடை வைத்திருக்கும் ஷ்ரவண் குமார் சர்மா. இவர் 30 ஆண்டுகளாக அங்கே வாழ்ந்து வருகிறார். இப்பொழுது புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டிருக்கும் பெலகாரியா பகுதியில் அவருக்கு வீட்டுச் சாவியும் கூட கிடைத்துவிட்டது. இப்படி ஒரு சிலருக்கு மட்டுமே வீட்டுச் சாவி கொடுத்திருக்கிறார்கள். இன்னும் மக்களில் பலருக்கும் வீடுகள் கிடைக்கவில்லை என்பதால் யாரும் அங்கே குடி போகவில்லை, குடிபோக மறுத்து வருகின்றனர்.

ஒன்றிய அரசின் இந்த மெத்தனமான பொறுப்பற்ற மக்கள்விரோத செயல்பாடுகளைப் பார்க்கும் போது இங்கு நிலக்கரி வயல்களில் நெருப்பை அணைத்து விட்டு இந்த பிராந்தியத்தில் இருக்கும் நிலக்கரியைக் கொள்ளையடிப்பதே அரசு மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் நோக்கம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எந்த நேரத்திலும் பெரும் விபத்து நேரிடக் கூடும் என்ற அவசர நிலையிலும் எவ்வகையிலும் அங்கு துன்பப்படும் மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஒரு லட்சம் பேருக்கு மாற்றுக் குடியிருப்பு அமைப்பது, சொந்த நிலங்களுக்கு உரிய விலை கொடுப்பது, மக்கள் அனைவரின் மறுவாழ்வுக்கு நட்ட ஈடு வழங்குவது என்று பெருந்தொகையாக இருப்பதால் ஏதாவது சாக்குபோக்குகளை சொல்லிக்கொண்டு தொடர்ந்தும் தள்ளிப் போட்டு வருகின்றனர். இப்படி தள்ளிப் போட்டால் ஒரு கட்டத்தில் அவர்களாகவே உயிருக்கு பயந்து ஓடி விட வேண்டும், ஓடி விடுவார்கள் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு செய்கின்றனர் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதே கருத்தையே அங்குள்ள சுற்றுச்சூழலியலாளர் மனோஜ் சிங்கும் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.

தற்போதும் மக்கள் நெருக்கமாக குடியிருக்கும் ஜாரியா பகுதியை தவிர்த்துவிட்டு பிற இடங்களை வாங்கி தீயை அணைத்து நிலக்கரி அகழும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

இயற்கையின் தாக்கத்தினாலும் ஒன்றிய அரசின் துரோகத்தினாலும் இருதலை கொள்ளியாய் பாதிக்கப்பட்டிருக்கும் ஜாரியா மக்களைக் காப்பாற்ற இந்தியாவின் உழைக்கும் மக்கள் குரலெழுப்ப வேண்டும். அரசியல் கட்சிகளை நிர்பந்திக்க வேண்டும்.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க