ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!

சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

டிசாவின் சிஜிமாலி பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், மோடி அரசின் ஆதரவு பெற்ற நாசகர வேதாந்தா நிறுவனத்தின் கோரப் பசியில் இருந்து தங்கள் மலைகளைக் காப்பாற்றுவதற்காக கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலத்தில் ஆளும் நவீன் பட்நாயக் அரசின் கடும் அடக்குமுறைகளை மீறியும், மக்கள் உறுதியுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர். இச்சுரங்க திட்டத்தால் பாதிக்கப்படும் சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள 50 கிராம மக்கள் “சிஜிமாலி சுரக்ஷா சமிதி” என்ற அமைப்பை உருவாக்கி தங்கள் போராட்டங்களை கட்டியமைத்து வருகின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று, ஒடிசா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில் சிஜிமாலியில் பாக்சைட் சுரங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அலுமினியத்தை உற்பத்தி செய்வதற்கான முக்கிய தாதுப்பொருளாக பாக்சைட் உள்ளது. இந்தியாவின் பாக்சைட் இருப்புகளில் பாதிக்கும் மேல் ஒடிசாவில் உள்ளது. அவற்றில் 95 சதவிகிதம் ராயகவுடா, கோராபுட் மற்றும் காலாஹண்டி மாவட்டங்களில் உள்ளது. சிஜிமாலி மலை ராயகவுடா மாவட்டத்திற்குள் அமைந்துள்ளது.

சிஜிமாலி பகுதியில் கோந்த் மற்றும் பிரஜா என்று அழைக்கப்படும் பழங்குடி மக்களும் தலித் பிரிவை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சிஜிமாலி மலைகளையே சார்ந்து உள்ளதாலும் ஒடிசாவின் பிற பகுதிகளில் செயல்பட்டுவரும் சுரங்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்திருப்பதாலும், சுரங்க திட்டத்திற்கு எதிராக உறுதியாக போராடி வருகின்றனர். மேலும் தங்கள் போராட்டங்களுக்கு வேதாந்தா நிறுவனத்தை விரட்டியடித்த நியாம்கிரி மக்களிடமும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ராயகடா மாவட்டத்தின் பந்தேஜி கிராமத்தைச் சேர்ந்த லாபன்யா நாயக், “எங்கள் வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஒரே ஆதாரம் சிஜிமாலிதான். சிஜிமாலி மலைகள் இல்லாமல் எங்கள் நிலையை நினைத்துப் பார்க்க முடியாது. சுரங்க திட்டத்திற்காக சிஜிமாலி மலைகளை வேதாந்தாவிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவுக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே அரசின் இத்தகைய மக்கள் விரோத கொள்கையை அமைதியான இயக்கத்தின் மூலம் எதிர்க்கிறோம்” என்று கூறுகிறார்.

ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் அடியாட்படையைப் போல செயல்படும் ஒடிசா மாநில போலீசு, பழங்குடி மக்கள் மீது கடும் அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது. இந்த அடக்குமுறைகள் எல்லாம் வெளிஉலகத்திற்கு பெரிய அளவில் தெரிவதில்லை. இவற்றை பற்றி ஒரு சில ஆங்கில ஊடகங்களை தவிர, பிற ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில்லை. எந்த தேர்தல் அரசியல் கட்சிகளும் இம்மக்களின் போராட்டத்தை ஆதரிக்கவில்லை.


படிக்க: ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!


எனவே, சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடி மக்கள், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படையால் தங்களுக்கு என்ன நேருமோ என்ற ஒருவித அச்ச உணர்விலேயே ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கழித்து நரக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாநில அரசு, சுரங்க எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கிவரும் ஒன்பது போராட்டத் தலைவர்கள் மீது கொடிய பாசிச சட்டமான UAPA- வை பாய்ச்சியது. 200 பேர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 22 பேரை சிறையில் அடைத்தது. மேலும், அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி, பொது விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த மாநில அரசு திட்டமிட்டது. அக்கூட்டத்தில் பெரும்பான்மையான பழங்குடி மக்கள் சுரங்க திட்டத்தை எதிர்க்கவில்லை என்று அறிவித்து, சுரங்க திட்டத்தை செயல்படுத்துவதற்காக சதி வேலையில் ஈடுபட முடிவு செய்திருந்தது.

போலீசின் சதித்திட்டத்தை முன் அனுமானித்த பழங்குடி மக்கள், ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி பொது விசாரணையை ஒத்திவைக்குமாறு முறையிட்டனர். அக்கடித்தில் “16.10.2023 அன்று திட்டமிடப்பட்ட பொது விசாரணை வேதாந்தா நிறுவனத்தின் குண்டர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு, சுரங்க திட்டத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல் அழிந்துவிடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே எங்கள் பகுதிகளில் காவல்துறை அடக்குமுறை, கட்டுப்பாடு மற்றும் எங்கள் கிராம மக்கள் சட்டவிரோதக் காவலில் இருந்து விடுவிக்கப்படும் வரை பொது விசாரணை நிறுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், மாநில போலீசு மற்றும் துணை இராணுவப் படை உதவியுடன், துப்பாக்கி முனையில் பொது விசாரணையை நடத்தியது நவீன் பட்நாயக் அரசு. மக்களை பொது விசாரணைக்கு வரவிடாமல் தடுப்பதற்காக, பொது விசாரணை நடைபெறும் இடத்திற்கு சென்ற மக்கள் மீது போலீசு கொடூரமாகத் தாக்குதல் நடத்தியது. கூட்டத்திற்கு வருவதற்கு முன்னாலேயே கிராமத்திற்கு சென்று சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டியது. பொது விசாரணையைப் போல டிசம்பர் மாதத்திலும் போலீசின் துணையுடன் கிராம மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு கிராம சபைக் கூட்டங்களை நடத்தியது.

புவனேஸ்வரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நரேந்திர மொஹந்தி, “பொது விசாரணைக்குப் பிறகு, சிஜிமாலியில் உள்ள மக்களின் நிலை குறித்து அரசாங்கத்திடம் எந்த பதிலும் இல்லை. அவர்கள் தங்கள் நிலத்தை மீட்பதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசாங்கமும் வேதாந்தா நிறுவனத்தின் அதிகாரிகளும் தங்களுடைய வஞ்சகத்தின் மூலம் மக்களை வற்புறுத்த முயற்சிக்கின்றனர்” என்று கூறுகிறார்.


படிக்க: ஒடிசா: பழங்குடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடும் நவீன் பட்நாயக் அரசு!


இவ்வாறு சிஜிமாலி மலைகளைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் ஓர் ஆண்டாய் போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கடும் அடக்குமுறைகளை மீறியும் தங்கள் போராட்டங்களுக்கு எந்த அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் உறுதியுடன் போராடி வருகின்றனர். ஓர் ஆண்டாய் சுரங்க திட்டத்தை செயல்படுத்த முடியாததற்கு பழங்குடி மக்களின் போராட்ட உறுதியே காரணமாகும்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து காடுகளையும் மலைகளையும் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவது தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் கும்பல்கள் கனிம வளங்களை சூறையாடுவதற்காக வனப் பாதுகாப்பு திருத்த சட்டம் 2023-ஐ கடந்த ஆண்டில் நிறைவேற்றி உள்ளதால் இந்நிலை மேலும் மோசமாகியுள்ளது. அதேசமயம், இந்த சூறையாடலுக்கு எதிரான பழங்குடியின மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன.

அத்தகைய தன்னெழுச்சியான போராட்டங்களுடன் டெல்லி சலோ 2.0 போராட்டத்தை போன்று பிற வர்க்கங்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை இணைக்கவும் வளர்தெடுக்கவும் வேண்டும். அதில்தான் இந்திய உழைக்கும் வர்க்கத்தை கருமேகங்கள் போல் சூழ்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை அடங்கியுள்ளது.

நன்றி: மக்தூப் மீடியா


உதயன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க