“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழும்!” என்ற தலைப்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் 12.08.2020 அன்று, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் பாலன் தலைமை தாங்கினார். தனது உரையில் “மோடி அரசு கடந்த 2015-ல் இருந்து இந்தக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த தொடர்ச்சியாக முயற்சித்து வந்தனர். இது மட்டுமின்றி இந்த கோரோனா சூழலில் 196 சட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது…” இந்த மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அடுத்து உரையாற்றிய திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார் “மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது மோடி அரசு. அன்றைக்கு ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து பெரியார் அன்று அதனை முறியடித்தார், இன்று மோடி தலைமையிலான பிஜேபி அரசு மீண்டும் குலத்தொழிலை திணிக்கிறது. இதனை எதிர்த்து போராடவேண்டும்” என்றார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா. “இந்தக் கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கல்வியை மறுக்கின்றது. தாய்மொழி வழியில் படித்தவர்கள் தான் இன்றைக்கு பல துறையில் சாதிக்கின்றனர். ஆனால் மோடி அரசு யாரும் பேசாத மொழியான சமஸ்கிருதத்தை திணிக்கிறது, இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கின்றனர். ஆனால் இந்தி படித்த பல வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் தான் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இந்த அரசு ஏன் வேலை கொடுக்கவில்லை? இதை எதிர்த்து பேசினால் பல முற்போக்காளர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கிறது. இந்த பாசிச அடக்குமுறையை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்து உரையாற்றிய தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் முனுசாமி “பரவலாக்கப்பட்ட கல்வி அறிவை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் முன்னேறுகின்றனர். நாம் கல்வியறிவை பெறக் கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி கும்பலின் நோக்கம். நமது கல்வியை பறிக்கின்ற கல்விக் கொள்கை தான் இந்த புதிய கல்விக் கொள்கை. நாம் கல்வியைப் பெற வேண்டுமானால் இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும்.” என்று கூறினார்.

படிக்க :
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

அடுத்து உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் லட்சுமணன் “மோடி அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்க கூடாது என்று தான் இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்துகிறது. அன்றைக்கு பெரியார் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றிணைத்து இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார். இன்று நாமும் பெரியார் – அம்பேத்கர் வழியில் போராட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி -யின் கொள்கைகளை திணித்துக் கொண்டு இருக்கின்றன. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும்.” என்றார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் “பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது பிஜேபி கும்பல். குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது; குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துவது. என பல சட்ட விதிகளை தனக்கு ஏற்ப மாற்றுகின்றனர். மக்களின் கடவுள் நம்பிக்கை வைத்து நம்மை பிளவுபடுத்துகிறனர். இந்த புதிய கல்விக் கொள்கையும் அதுபோன்ற ஒன்றுதான்.” என்று விளக்கினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தனது உரையில் “பாசிச மோடி அரசு சமீபகாலமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது; அரசு கலை கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து! இணையவழிக் கல்வி முறை! கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! உயர்கல்வி ஆணையம்! இப்படி பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் வகையில் இவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.

அதேபோன்றுதான் இந்த புதிய கல்விக் கொள்கை 450 பக்கங்களைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் நோக்கத்தில் 3,5,8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.

ஏற்கனவே இடைநிற்றல் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மை மாணவர்கள் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள். குடும்பச் சூழலின் காரணமாக உயர்கல்வி செல்வதே பெரிய விஷயம், இந்த நிலையில் இந்த பொதுத்தேர்வு முறை என்பது பள்ளிக் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றும். அதோடு மட்டுமல்லாமல் கூலித் தொழிலாளர் முறையை அதிகரிக்கும்.

தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் அரசு பள்ளி கல்லூரிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி இயங்குகிறது. குடிநீர் கழிப்பறை போன்ற வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள் படிக்கின்றனர் அரசுப் பள்ளி – கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, அந்த கட்டமைப்புகளை சரிசெய்வது என்று இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அரசு துணை நிற்கிறது. குறிப்பாக ஒரு செங்கல்லை கூட நடாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, உலகத் தரச் சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்துள்ளது.

படிக்க :
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

இவை இன்றி ஏர்டெல் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தரச் சான்றிதழ் இனி உள்ளூர் முதலாளிகள் கொள்ளை அடித்தது போதும், கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்கு இந்த புதிய கல்விக் கொள்கை அடித்தளம் இடுகிறது. இதுமட்டுமின்றி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எந்த மாநிலத்திலும் பேசாத; வழக்கத்தில் இல்லாத செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்திற்கு அதனுடைய மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மோடி ஆட்சி ஏற்றுக் கொண்ட 2014-ல் இதற்கு ஒரு வாரம் விழா நடத்துவது, அதைத் தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை கட்டாயமாக்குவது என தொடர்ச்சியாக சமஸ்கிருத திணிப்பை செய்தது. அதுபோன்றுதான் சமீபத்தில் திருப்பூரில் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்துகிறது. புராண இதிகாசங்களை மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும் என்று கூட்டம் நடத்துகின்றனர். இந்த புராண இதிகாசங்களை மாணவர்கள் படித்தால் என்ன நடக்கும்? மருத்துவதுறை எப்படி இருக்கும்? நோய் வந்தால் அந்த நோய்க்கு மாட்டு மூத்திரம், அப்பளமும், சாணியும், சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்.

நீதிபதிகள் தீர்ப்பு எப்படி எழுதுவார்கள் “குற்றவாளிகளை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுங்கள்..” இப்படி புராண இதிகாசங்களை கொண்டு, கல்வியில் விஞ்ஞானத்துக்கு புறம்பான குப்பைகளை கொண்டு வந்து திணிக்கிறது.

இது புதிய கல்விக் கொள்கை அல்ல பார்ப்பன மனுநீதி கல்வி கொள்கை. ஆகவே இந்தக் கல்விக் கொள்கையை நாம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும். கல்வி இல்லாதவன் கலர் நிலத்துக்கு சமம் என்றார் வள்ளுவர், நம்மை களர் நிலம் ஆகும் மோடி அரசின் இந்த கல்விக் கொள்கையை எதிர்த்து அனைத்து ஜனநாயக இயக்கங்களும் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராடுவோம்!” என்று அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் நன்றியுரை கூறினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தருமபுரி. தொடர்புக்கு : 63845 69228.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க