டெல்லியில் சி.ஏ.ஏ / என்.ஆர்.சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தின் பிம்பத்தை “கெடுக்கும்” வகையில் செயல்பட்டதாகக் கூறி சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும் சமூக செயல்பாட்டாளரான அபூர்வானந்த் மற்றும் ஆவணப்படம் தயாரிப்பாளர் ராகுல் ராய் ஆகியோர் மீது வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை (13-09-2020) டெல்லி ஜெ.என்.யூ. மாணவர் உமர் காலித்தை இவ்வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளது, போலீசு. சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் கும்பலை திரட்டவும் அவர்களை தூண்டிவிடும்படியும் பேசியதாக இவர்கள் அனைவரின் மீதும் போலீசு குற்றம்சாட்டியிருக்கிறது.

ஜஃப்ராபாத்தில் நடந்த வன்முறை தொடர்பாக, கலவரத்திற்கு முன்பு சிஏஏ எதிர்ப்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட , பிஞ்ச்ரா டோட் உறுப்பினர்களான தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் குல்பிஷா பாத்திமா ஆகியோருக்கு எதிராக, கர்கார்டூமா நீதிமன்றத்தில் அசல் குற்றப்பத்திரிகையை குற்றப்பிரிவு தாக்கல் செய்தது. டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தாக்கல் செய்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த மூவரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

துணை குற்றப்பத்திரிகையில், நர்வால் மற்றும் கலிதாவின் “ஒப்புதல்” அறிக்கைகளை போலீசார் மேற்கோள் காட்டி, ஜெயதி, அபூர்வானந்த் மற்றும் ராய் ஆகியோர் CAA மற்றும் NRC க்கு எதிராக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்க உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்பட்டுள்ளது.

யெச்சூரி மற்றும் யாதவ் ஆகியோர் குல்பிஷாவின் ஒப்புதல் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ளனர், அவர்கள் கூட்டத்தை “தூண்டுவதற்கும் அணிதிரட்டுவதற்கும்”  CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கலிதா மற்றும் நர்வாலின் ஒப்புதல் அறிக்கைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை, டிசம்பர் மாதத்தில் ஜெயதி கோஷ், அபூர்வானந்த் மற்றும் ராய், “நாம் CAA / NRC க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும், அதற்காக நாம் எந்தவொரு  நிலைக்கும் செல்லலாம்” என  அவர்களிடம் ‘விளக்கம்’ அளித்ததாக கூறுகின்றன. தீவிர ”; ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சங்க தலைவரான உமர் காலித்தின் “CAA / NRC க்கு எதிராக போராடுவதற்கான உதவிக்குறிப்புகள்” வழங்கியதாகவும் மேலும் ‘மெசேஜ்’ என்பதற்கு  பதிலாக “மசாஜ்” என எழுதுப்பிழையுடன் குற்றப்பத்திரிகை எழுதப்பட்டுள்ளது.

படிக்க :
♦ லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும் !
♦ சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !

போலீசிடம் ‘இந்த உண்மைகளை’ கூறியிருந்தபோதும், ஒப்புதல் அறிக்கையில் கையெழுத்திட நர்வால் மற்றும் கலிதா மறுத்துவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் போலீசு  தெரிவித்துள்ளது.

இரண்டு பிஞ்ச்ரா டோட் உறுப்பினர்களின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, போலீசார் கூறியது: “டிசம்பர் மாதத்தில், CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) தாக்கல் செய்யப்பட்ட பின், ஜெய்டி கோஷ், பேராசிரியர் அபுர்வா நந்த் , ராகுல் ராய் ஆகியோர்  CAA / NRC க்கு எதிராக போராடுவதற்காக  எந்தவொரு தீவிர நிலைக்கும் நாம் செல்ல வேண்டும், அரசாங்கத்தை தூக்கி எறியவும்கூட தயாராக இருக்க வேண்டும் என விளக்கினர். மேலும் உமர் காலித் CAA / NRC க்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதற்கான சில உதவிக்குறிப்புகளையும் கொடுத்திருந்தார். இந்த நபர்களின் வழிகாட்டுதலின் பேரில், உமர் காலித்தின் வெறுப்புக் குழு மற்றும் ஜே.சி.சி (ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு) மற்றும் எங்கள் பிஞ்ச்ட்ரா டோட் உறுப்பினர்கள் சேர்ந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தைத் தொடங்கினர்.” போலீசின் அறிக்கையில், ஜெயதி கோஷ், அபுர்வானந்த, பிஞ்ச்ரா டோட் போன்ற பெயர்கள் எழுதுப் பிழையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

“20.12.2019 அன்று, தர்யா கஞ்சில் சந்தர் சேகர் ‘ ராவன் ’ அழைத்த போராட்டத்தில் நான் பிஞ்ச்தா டோட் குழுமத்தின் மற்ற உறுப்பினர்களுடன் பங்கேற்றேன். ஜந்தர் மந்தரை நோக்கிய நகர்வை காவல்துறையினர் தடுக்க முயன்றபோது, நாங்கள் எதிர்ப்பாளர்களை வன்முறையில் ஈடுபட தூண்டினோம், இதன் காரணமாக பல நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. ”

பிஞ்சரா டோட் செயற்பாட்டாளர்

இரண்டு அறிக்கைகளும், “பேராசிரியர் அபுர்வா நந்த்” அவர்களிடம் “ஜே.சி.சி டெல்லியில் 20-25 இடங்களில் போராட்டத்தைத் தொடங்கப் போகிறது” என்றும், “உமர் காலித் மற்றும் பிறரின் அறிவுறுத்தல்களின்படி, நாங்கள் வடகிழக்கு டெல்லியின் உள்ளூர் பெண்ணைத் தேர்ந்தெடுத்தோம் , அதாவது குல்பிஷா என்கிற குல், மற்றும் அவர் தஸ்லிம் மற்றும் பிறருடன் CAA / NRC க்கு எதிரான போராட்டத்திற்கு கூட்டத்தை கூட்டுவதாக பொறுப்பேற்றார். சாலையைத் தடுப்பதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் அழைப்போம் என்றும் நாங்கள் அவர்களிடம் கூறினோம். இந்த போராட்டங்கள் காரணமாக, அரசாங்கம் முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானது என அரசாங்கத்தின் பிம்பத்தை குலைக்க முடியும்”.

இந்த அறிக்கைகளில், பி.எஃப்.ஐ, ஜே.சி.சி மற்றும் குறிப்பிடப்பட்ட நபர்களின் வழிகாட்டுதலின் பேரில்தான் என்று பிஞ்ச்ரா டோட் உறுப்பினர்கள் மற்றும் பலரும் “பழைய சீலாம்பூர் பேருந்து நிலையத்தில் போராட்டத்தைத் தொடங்கினர்” என போலீசு கூறியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ மத்தீன் அகமது மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத்துல்லா கான் ஆகியோர் இப்பகுதிக்கு வருகை தந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“CAA / NRC பற்றி எங்களுக்கு அறிவு இருக்கிறது, அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று பொதுவான முஸ்லீம் மக்களை தவறாக வழிநடத்த எங்கள் கல்வித் தகுதியைப் பயன்படுத்தினோம்” என்று அவர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குல்ஃபிஷாவின் அறிக்கையில், ஷாஹீன் பாக், ஜந்தர் மந்தர் மற்றும் ஐ.டி.ஓ ஆகியவற்றில் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களின் போது நர்வால் மற்றும் கலிதாவை சந்தித்ததாக போலீசார் தெரிவித்தனர்.  “சி.ஏ.ஏ / என்.ஆர்.சியை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும், எந்த அளவிற்கும் செல்ல வேண்டும் என்று ஜே.சி.சி தலைவர்களும் பிஞ்ச்தா டோட் -ஐச் சேர்ந்த தேவாங்கனா, நதாஷா நர்வால் ஆகியோரால் கூறப்பட்டது” என்று கூறியது. நடாஷா மற்றும் தேவங்கனா கலிதா மற்றும் உமர் காலித் மற்றும் பிறரின் வழிகாட்டுதலின் பேரில், “இரு சமூகங்களை பிடுங்கவும், நேருக்கு நேர் கொண்டு வரவும், வடகிழக்கு டெல்லியில் எதிர்ப்பு தெரிவிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து தெருவுக்கு அழைத்து வரப்பட்டனர்” என போலீசு கூறியுள்ளது.

படிக்க :
♦ பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

கலிதா மற்றும் நர்வால் ஆகியோர் ஜே.என்.யு அறிஞர்களாக முன்வைக்கப்பட்டனர், இதனால் கல்வியறிவு குறைந்தவர்கள் “ஏமாற்றப்படுவார்கள்” என்று குல்பிஷா கூறியதாக போலீசாரின் அறிக்கை கூறுகிறது. “ஒமர் (எழுத்துப்பிழை) உட்பட இந்த கூட்டத்தைத் தூண்டவும் அணிதிரட்டவும் பெரிய தலைவர்களும் வழக்கறிஞர்களும் வரத் தொடங்கினர். காலித், சந்தர் சேகர் ராவன், யோகேந்தர் யாதவ், சீதாராம் யெச்சூரி மற்றும் வழக்கறிஞர் மஹ்மூத் பிராச்சா, சவுத்ரி மேடின் போன்றோர். போராட்டத்தில் அமர்ந்திருப்பது உங்கள் ஜனநாயக உரிமை என்றும், CAA / NRC முஸ்லீம்களுக்கு எதிரானது என அழைப்பதன் மூலம், மீதமுள்ள தலைவர்கள் அதிருப்தி உணர்வை நிரப்பினர்”

குல்பிஷா கூறியதன் அடிப்படையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்திய வருகைக்கு முந்தைய நாட்களில் நிகழ்த்தப்பட்ட உரைகள் நாட்டின் பிம்பத்தை கெடுக்கும் வகையில் இருந்தன என்று போலீசார் தெரிவித்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் பேசிய ஆத்திரமூட்டும் பேச்சுகள் காரணமாக, “பிற சமூகங்களின்” மக்கள் வருத்தமடைந்து, சாலை மறியல் போராட்டம் நடத்தத் தொடங்கினர் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஜஃப்ராபாத்தில் நடைபெற்ற CAA எதிர்ப்பு உள்ளிருப்புப்  போராட்டம் காரணமாக, பாஜகவின் கபில் மிஸ்ராவால் CAA சார்பு பேரணி தூண்டப்பட்டது. CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களை அகற்றாவிட்டால் அவர்கள் வீதிக்கு வருவார்கள் என அவர் போலீசாரை எச்சரித்திருந்தார். ஒரு நாள் கழித்து, கலவரம் வெடித்தது.

குல்பிஷாவின் ஒப்புதல் அறிக்கையின்படி, பிப்ரவரி 24 அன்று, நேருக்கு நேர் வந்த இரு தரப்பையும் போலீசார் கலைத்தபோது, “மக்கள் துப்பாக்கிகள் உட்பட அனைத்து ஆயுதங்களுடனும் வரத் தொடங்கினர்”. பிப்ரவரி 25 அன்று, ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்திய சுமார் 10-12,000 மக்கள் கூட்டம் வந்தபோது, “வடகிழக்கு டெல்லி கலவரத்தில் எங்கள் திட்டம் சமநிலையாக்கப்பட்டது” என்று அவர் கூறியதாக போலீசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் மிளகாய் பொடியை ஆயுதமாக ஏந்தி வந்து CAA சார்பு எதிர்ப்பாளர்கள் கூடியிருந்த மவுஜ்பூரை நோக்கி அணிவகுக்க முயன்றதாக அது கூறியது. காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, கற்கள் வீசப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் கேமராக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டு, கும்பலைத் தூண்டியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் அனில் மிட்டல், அலுவல்பூர்வமான அறிக்கையில், “ஒப்புதல் அறிக்கை குற்றம் சாட்டப்பட்ட நபரின் விவரிப்பு என உண்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்புதல் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஒரு நபர் குற்றம் சாட்டப்பட்டவராக கைது செய்யப்படுவதில்லை. இருப்பினும், போதுமான சட்டபூர்வமான சான்றுகள் இருப்பதன் மூலம் மட்டுமே மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் உள்ளது.”

போலீசின் இந்த ‘ஒப்புதல்’ அறிக்கையின் அடிப்படையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியா பயணத்தின் போது டெல்லியில் வகுப்புவாத வன்முறைகளை உருவாக்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அரசியல் செயல்பாட்டாளர் உமர் காலித்தை டெல்லி போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர். அவர் மீது தேசத் துரோகம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 18 பிரிவுகள், கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குஜராத் படுகொலை பாணியில் டெல்லியில் படுகொலைகளை நிகழ்த்த இந்துத்துவ கும்பல் முனைந்ததை முழுவதுமாய் மறைத்து, வெளிப்படையான பக்கச் சார்புடன் குற்றச்சாட்டுக்களையும் கைதுகளையும் அரங்கேற்றி வருகிறது டெல்லி போலீசு. ஆதாரமற்ற, வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலான இந்த வழக்குகள், ஒருபோதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படப்போவதில்லை. ஆனாலும், செயல்பாட்டாளர்களை அலைக்கழிக்கவும், போராட்ட உணர்வை ஒடுக்கவும் பாசிஸ்ட் அரசும் அதன் அடியாளான போலீசு தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கின்றன.


அனிதா
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்
, த வயர்