மோடி அரசே! உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு!

ண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (The Essential Commodities Amendment Act 2020), விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020(Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020) மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020) ஆகியவை உழவர்களின் வாழ்வை சூறையாடிக் கார்ப்பரேட்களை வளர்த்துவிடக் கூடியவை. இச்சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் உள்ள உழவர்கள் போராடி வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின்கீழ் வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு, பயறு வகைகள், எண்ணை வித்துக்கள் ஆகிய விளைபொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இப்பொருட்களை கிடங்குகளில் இருப்பு வைத்துக்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை இச்சட்டம் விலக்கிக்கொண்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்திடம் இருப்பில் உள்ள தானியங்களை தனியார் நிறுவனங்கள் எளிமையாக வாங்கவும்,இஷ்டம் போல சேமித்துவைத்துக் கொள்வதற்கும் வழிசெய்கிறது. இத்திருத்த சட்டம் இந்திய உணவுக் கழகத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டதோடு நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்க உள்ளது.

வரும்காலத்தில் வியாபாரிகளிடம் நேரடியாக தானியங்களை கொள்முதல் செய்து செயற்கையான உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தி தேவைப்படும்போது பொருட்களை அதிக விலைக்கு பெருநிறுவனங்கள் விற்பதற்கான வாய்ப்பை இத்திருத்தம் சட்டபூர்வமாக்குகிறது. இனி எதிர்காலத்தில் இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாட்டையும் ரேசன் விநியோக கட்டமைப்பையும் இந்த திருத்த மசோதா பலவீனப்படுத்தி ஒழிப்பதற்கு வகை செய்கிறது.

படிக்க :
♦ ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !
♦ சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !

முன்னதாக இந்திய பொருளாதார ஆய்வறிக்கையிலே பொது ரேசன் விநியோக அமைப்பிற்கு மாற்றாக வங்கி கணக்கில் பணம் போடவேண்டும் என ஆலோசனை கூறப்பட்ட நிலையிலே இந்த திருத்தச் சட்டம், பொது விநியோக கட்டமைப்பை ஒழிப்பதை முன்னறிவிப்பதாக உள்ளது.

விவசாய விளைபொருள் வியாபார சட்டத்தின் மூலமாக விவசாயிகள் தங்களது வேளாண் உற்பத்தி பொருளை மண்டிகளுக்கு வெளியே நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் எனவும்,இடைத்தரகர்களை இச்சட்டத்தின் மூலமாக ஒழித்துவிட்டதாகவும் பிரதமர் கூறுகிறார்.ஆனால் நடைமுறையிலே வேளாண் விளைபொருள் சந்தைக் கழகத்தையும்(APMC) விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறையையும் ஒழிப்பதன் மூலமாக விவசாயிகளையே மோடி ஒழிக்கிறார்.

விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்த சட்டம் விவசாயிகளுக்கும் கொள்முதலாளர்களுக்குமான நாடு தழுவிய ஓர் “ஒப்பந்த பண்ணையம்” முறையை அமலாக்குகிறது.

கடந்த 2018-ம் ஆண்டில் ஒப்பந்தப் பண்ணையம் தொடர்பாக மத்திய அரசு ,மாநில அரசுகளுக்கு “மாதிரி” ஒப்பந்த பண்ணைய சட்டத்தை சுற்றுக்கு அனுப்பியிருந்தன.இந்த மாதிரி சட்டத்தின் அடிப்படையிலே இந்தியாவிலே முதல் மாநிலமாக `தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப்பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம்- 2019′ என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. கரும்பு போன்ற பணப் பயிர்கள் மற்றும் இறைச்சிக் கோழி, ஈமுக் கோழி போன்ற கால்நடை விற்பனைகளை ஒப்பந்த அடிப்படையிலே வியாபாரிகளுக்கு பல சாதகங்களை இந்த சட்டம் வழங்கியது. வேளாண் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக இந்த சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது எனவும், விவசாயிகள் நேரடியாக உற்பத்திப் பொருள்களை விற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பேட்டியளித்தார்.

நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டம்

தற்போது ,இந்த சட்டத்திருத்தம் மூலமாக, நாடு தழுவிய அளவில் ஒரு ஒப்பந்த பண்ணையசட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனடிப்படையில்
வியாபாரி/கொள்முதலாளா் /உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை,தரம்,காலக் கெடு உள்ளிட்ட அம்சங்களை எழுத்துப் பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.

ஒப்பந்த காலம் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள் வரை மாநில வேளாண் துறை அதிகார அமைப்பின் கண்காணிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளதாக மத்திய மாநில அரசுகளால் திரும்பத் திரும்ப கூறப்படுகின்றன.ஆனால் நடைமுறையில் இந்த ஒப்பந்தங்களால் விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் இல்லை என்பதற்கு தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் நடந்துவரும் ஒப்பந்த விவசாயமே சாட்சி. சிறுகுறு உழவர்களைக் கிட்டத்தட்ட கார்ப்பரேட்களின் பண்ணையடிமைகளாக மாற்றிவிடும் இந்தச் சட்டம்.
உலக வர்த்தக கழகத்தின் அடிமையாக மாறிப்போன இந்திய நாடாளுமன்றம் இந்திய உழவர்களைப் பலிபீடத்தில் ஏற்றத் துணிந்ததை அறிவிக்கும் சட்டங்கள் இவை.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுத்ததன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுதவியை இல்லாதொழிப்பது, மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மூலம் இலவச மின்சாரத்திற்கு முடிவுகட்டுவது என உழவர்களை உழவுத் தொழிலைவிட்டு விரட்டியடித்து கார்ப்பரேட் விவசாயத்திற்கு கதவைத் திறந்துவிடுகிறார் மோடி.

இதனாலேயே, நாடெங்கும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்திய உணவுக் கழகத்தை செயலற்றதாக்கி ரேசன் கடைகளை மூடி பொதுவிநியோக முறையை ஒழித்துக்கட்டக்கூடிய இச்சட்டங்கள் உழவர்களை மட்டுமின்றி பெரும்பாலான ஏழை,எளிய மக்களுக்கும் எதிரானதாகும். இவற்றை திரும்பப்பெறக் கோரும் போராட்டத்தில் விவசாயிகளோடு துணை நின்று கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த செப்டெம்பர் 25-ம் தேதியன்று நாடுமுழுவதும் விவசாய சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம், அதன் தோழமை அமைப்புகள் மற்றும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை :

செப்டெம்பர் 25-ம் தேதி காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகம் அருகில் உழவர்களின் உரிமையை அடகுவைக்க கூடிய கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இவ்வார்ப்பாட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் அமிர்தா மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னனி சார்பாக தோழர் குமரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தோழர்கள் கைது செய்யப்பட்ட மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் போலீசு தோழர்களை விடுவித்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம், சென்னை

கடலூர், சீர்காழி, விருதாச்சலம், சேத்தியாத்தோப்பு :

டலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பில் மோடி அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

காலை பத்து முப்பது மணிக்கு கடலூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையிலும் விருத்தாச்சலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையிலும் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையிலும் காந்தி சிலை அருகில் சேத்தியாத்தோப்பு பகுதி ஒருங்கிணைப்பாளர் பாலு மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணியரசன், மணிகண்டன் ஆகியோர் தலைமையிலும் மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிபிஎம். சிபிஐ மற்றும் தமிழ்நாடு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி. மா-லெ மக்கள் விடுதலை. திமுக. விசிக திராவிடர் விடுதலைக் கழகம். உள்ளிட்ட அமைப்புகளும் கலந்து கொண்டனர் .

கடலூர் :

விருதை, சீர்காழி, சேத்தியாத்தோப்பு :

தகவல் :
து. பாலு
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம் – கடலூர்.

விழுப்புரம் :

நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து விழுப்புரம் மண்டலம், மக்கள் அதிகாரம், சிபிஎம், சிபிஐ கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள், விவசாய சங்கங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்தை நிறைவேற்றிய பாஜக அரசையும் அதற்குத் துணை நின்ற அதிமுக அரசையும் கண்டித்து முழக்கமிட்டவாரு சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தோழர்களையும் போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
விழுப்புரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க