த்தரப் பிரதேச மாநிலம், ஹதராஸ் மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் இளம்பெண் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ம் தேதியன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வரும் முன்னரே, அவரது உடலை பெற்றோர்களின் அனுமதியின்றி நள்ளிரவில் அவசர அவசரமாக எரித்துள்ளது யோகியின் போலீசுத்துறை. அதன் மூலம் மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹதராஸ் மாவட்டத்தில், கடந்த செப்டெம்பர் 14-ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளம்பெண்ணும் அவரது தாயும் கால்நடைகளுக்குப் புல் வெட்டச் சென்றுள்ளனர். அந்த இளம்பெண்ணின் தாயார் புல் வெட்ட சிறிது தூரத்துக்கு அப்பால் சென்றிருந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தாக்கூர் சாதிக் கிரிமினல்களான சந்தீப், ரவி, ராமு மற்றும் லவ்குஷ் ஆகிய நான்குபேரும் அந்த இளம்பெண்ணை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

படிக்க:
♦ தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
♦  ‘12,000’ ஆண்டுகளுக்கு முந்தைய ‘இந்திய’ கலாச்சார ஆய்வு !

அதன் பின்னர், அந்தப் பெண்ணின் கை கால்களை உடைத்து, நாக்கை அறுத்துள்ளனர். அந்தப் பெண்ணின் முதுகெலும்பு உடைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றிருக்கின்றனர். பின்னர் தனது மகளைத் தேடி வந்த தாயார், ரத்த வெள்ளத்தில் தனது மகளைப் பார்த்ததும் பதறியடித்து அருகிலுள்ள அலிகார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அந்த பெண்ணை பரிசோதித்த அலிகர் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும், அதனை உறுதி செய்ய மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்துக்கு மாதிரிகளை அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கிறது.  உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண்ணை டெல்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இளம்பெண் பாலியல் பலாத்காரம் நடந்தது குறித்தும், கடுமையாக தாக்கப்பட்டது குறித்தும் போலீசு நிலையத்தில் புகாரளித்தும் யோகியின் கிரிமினல் போலீசு, முதல் நான்கு நாட்களாக கிரிமினல்கள் யாரையும் கைது செய்யவில்லை.

ஹதராஸ் : நள்ளிரவில் எரியூட்டும் போலீசு

ஹதராஸ் இளம்பெண் இறந்ததைத் தொடர்ந்து குற்றவாளிகளின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசைக் கண்டித்து அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், சமாதானம் செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அப்பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் யாரும் பார்க்க முடியாத வகையில் அவர்களை தடுத்துவிட்டு, நள்ளிரவில் அவசர அவசரமாக அவரது உடலை தகனம் செய்திருக்கிறது போலீசு.

உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது புரிகிறதா – போலீசு அவசர அவசரமாக அந்த இளம்பெண்ணின் உடலை தகனம் செய்ததன் பின்னணி !

இக்கொடூர சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் மொத்தமுள்ள 600 குடும்பங்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தாக்கூர் சாதியைச் சேந்தவர்கள். அடுத்ததாக சுமார் 100 குடும்பங்கள் பார்ப்பனர்கள். மீதமுள்ளவர்களில் வெறும் 15 குடும்பத்தினர் தான் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

குற்றவாளிகளில் முக்கியமானவனான சந்தீப் என்பவன் கடந்த ஆறு ஏழு மாதங்களாகவே, தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக போலீசிடம் அளித்த தனது வாக்குமூலத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருக்கிறார். ஆதிக்க சாதியான தாக்கூர் சாதியைச் சேர்ந்த சந்தீப்பின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சாதிய வன்மத்தின் அடிப்படையில் தாக்கியது குறித்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னரே பதியப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆதிக்க சாதிக் கிரிமினல்கள் தங்களது சாதியத் திமிரையும் வன்மத்தையும் வெளிப்படுத்தும் ஒரு ஆயுதமாகவே பாலியல் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் தன்னை மீறிச் செல்கையில், அவர்களை முடக்குவதற்கு இவர்கள் பயன்படுத்தும் இரு முக்கிய ஆயுதங்கள், ஒன்று அவர்களது வாழ்வாதாரத்தைச் சூறையாடுவது. மற்றொன்று அவர்களை சமூகரீதியில் ‘தலைகுனிய’ வைக்கச் செய்வது. இந்த இரண்டாவது வழிமுறையில் அவர்கள் தலித் சமூகப் பெண்களின் மீதான பாலியல் வன்முறையை ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர்.

படிக்க :
♦ நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
♦ ‘உயர்’ சாதிக்காரரின் பைக்கை தொட்ட தலித் மீது கொலைவெறித் தாக்குதல் !

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் மிகவும் மோசமான நிலையில் இருப்பது உத்தரப்பிரதேசம் தான். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த, பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மொத்தம் 3,78,277. அதில் உத்திரப் பிரதேசத்தில் நடந்தது மட்டும் சுமார் 59,445 குற்றங்கள்.

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தபடிதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 2016-ம் ஆண்டு 3,22,929-ஆக பதிவாகியிருந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், 2018-ம் ஆண்டில் 3,78,277-ஆக உயர்ந்துள்ளது. இதுதான் மோடியின் “பேட்டி பச்சாவ்”-ன் இலட்சணம்.

ஆங்காங்கே நடக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மோடி என்ன செய்வார், யோகி என்ன செய்வார், அரசு என்ன செய்ய முடியும் என்ற அங்கலாய்ப்புகள் பலவிதமாக ஒலிக்கின்றன. வக்கிரமான சாதிய பாலியல் கொலைவெறித் தாக்குதல்களை மனதாரக் கண்டித்தாலும், அதற்கு அரசு என்னதான் செய்யமுடியும் என்ற கேள்வியை எழுப்பிவிட்டு பலரும் கண்டும் காணாமல் போய்விடுகின்றனர். பலரும் இது தனிநபர் சார்ந்த பிரச்சினையாகவே சுருக்கிப் பார்க்கின்றனர்.

இது ஒருபுறமென்றால், ஆதிக்க சாதி, பார்ப்பன சாதியைச் சேர்ந்த உயர்தட்டுப் பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்கு கூட தலித் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்குக் கொடுப்பதில்லை. பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

கருத்துப்படம் : சந்தீப் அத்வர்யூ., டைம்ஸ் ஆஃப் இந்தியா

‘நிர்பயா’ எனும் மருத்துவ மாணவி கொடூரமாகச் சிதைக்கப்பட்ட போது நாடு முழுவதும் பெருவாரியானவர்கள் கொந்தளித்தனர். அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்குக் கொடூரமாக ஒரு தலித் பெண் சிதைக்கப்பட்டு உயிரிழந்திருக்கையில் அது சமூகத்தில் வெகு குறைவான அளவிற்கே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ஊடகங்களுக்கு ஒரு பங்கு இருந்தாலும், பெருவாரியான மக்களிடம் இருக்கும் இந்தச் சிந்தனைப் போக்கின் அடிப்படை என்ன ?

இந்தியாவில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு பார்ப்பனிய ஆணாதிக்கச் சமூகமாக நீடித்திருக்கும் இந்திய நிலைமையும், சினிமா, தொலைக்காட்சி ஊடகங்கள் என அனைத்திலும் பெண்களை நுகர்வுப் பண்டங்களாகக் காட்டுகின்ற சீரழிவு நுகர்வுக் கலாச்சாரமும் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. தலித் மக்கள் மீதான தமது சாதிய வன்மத்தை வெளிப்படுத்தும் ஆயுதமாக பாலியல் வன்முறை பயன்படுத்தப்படுகிறது.

மத்தியில் ஆளும் மோடி கும்பலும், உ.பி-யில் ஆளும் யோகி கும்பலும், ஒரே இந்துத்துவக் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சங்கபரிவாரக் கும்பல் நாடு முழுவதும் பார்ப்பனியத்தைப் பாதுகாப்பதன் மூலம், சமூகத்தில் ஊறிக் கிடக்கும் பார்ப்பனிய ஆணாதிக்கத்தை அனைத்து வகைகளிலும் ஊக்கமூட்டி வளர்க்கிறது. பெண்களை பண்டமாகப் பார்க்கும் நுகர்வுக் கலாச்சாரமும் ஊட்டமளிக்கப்படுகிறது.

இவற்றின் விளைவுதான் இந்தியாவில் இந்துத்துவ சனாதனம் அழுத்தமாக பின்பற்றப்படும் அனைத்து இடங்களிலும், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கின்றன. இதையே தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை நமக்கு பிரதிபலிக்கிறது !

பார்ப்பன ஆணாதிக்க சமூகம், தனது சாதிய ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறையைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடுதான் தலித் இளம்பெண்கள் உள்ளக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொலைகள் !


சரண்

செய்தி ஆதாரம் :
இந்தியன் எக்ஸ்பிரஸ், தி வயர்

(திருத்தம் : போலீசு குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இழுத்தடித்த நாட்களின் எண்ணிக்கை அக்டோபர் 2 – 22:00 மணியளவில் திருத்தப்பட்டது. தவறுக்கு வருந்துகிறோம்)