த்ராஸில் தாக்கூர் சாதிவெறியர்கஆள் நால்வரால் தலித் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் போதுமான அளவு கொடூரமிக்கதல்ல என்பது போல, இறந்த மகளின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற அந்த பெற்றோரின் குறைந்தபட்ச கோரிக்கையைக்கூட நிராகரித்து, இரவோடு இரவாகக் கள்ளத்தனமாக அவரின் உடலை எரிக்கும் அளவிற்கு கொடூரமானது உத்திரப் பிரதேச போலீசு.

இந்த மொத்த நிகழ்வும் ஆதிக்க சாதியினரின் ஆணவத்தையும் போலீசின் இரக்கமற்ற தன்மையையுமே பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. இந்தியாவில் போலீசு படையினரின் செயல்பாடு பொறுப்பற்றதாகவும், தவறுகளின் பின்விளைவுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்கிறது. உ.பி.யில் குறிப்பாக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ், போலீசுக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கப்பட்டுள்ளதை நாம் விகாஸ் துபே போலி மோதல் படுகொலையிலேயே பார்த்திருப்போம்.

தற்போது, கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் ஒரு போலீசை இடைநீக்கம் செய்யவேண்டுமென்ற யோகியின் உத்தரவை போலீசார் புறக்கணித்துள்ளனர்.

படிக்க :
♦ பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !
♦ உ.பி : காட்டாட்சியின் உச்சத்தில் ஆதித்யநாத் அரசு !

இதற்கிடையில், யோகி ஆதித்யாத் தன்னால் முடிந்தளவு அனைத்து வகைகளிலும் முஸ்லீம்களை ஒடுக்கியும், அனைத்து வகையான மாற்றுக் கருத்துக்களையும் நசுக்கியும் வருகிறார். உதாரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் கோரக்பூரில் பல குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். இதனைச் சுட்டிக் காட்டியதாலேயே மருத்துவர் கஃபீல் கான் பல மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே உ.பி.-யின் நகரங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் பெயர்களை யோகி மாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது உ.பி.யில் முதலீடு செய்ய தொழிலதிபர்களை அழைத்திருக்கிறார்.

அவர் ஏன் இப்படி செய்யக்கூடாது? இந்தியாவின் சிறந்த முதல்வராக ஆதித்யநாத்திற்கு தொடர்ந்து மூன்றுமுறை இந்தியா டுடே வாக்களிக்கவில்லையா ? தொழிலதிபர்கள் அவரை பிரதமராவதற்கான சிறந்த மனிதர் என்றுகூடப் பாராட்டலாம். அனைத்துக்கும் பிறகு நிறுவனங்கள் எவ்விதத் தொல்லையுமின்றி தொழிலாளர்களைப் பணியிலிருந்து நீக்குவதற்கு அனுமதிக்கப்படும்.

தற்போது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல 400 வருட பழைமையான மசூதி பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் முழு ஆதரவுடன் வன்முறையாளர்களால் தகர்க்கப்பட்டு, இராமர் கோயிலும் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இனி அடுத்த இலக்கு காசி. அதன் பின்னர் ? சந்தேகமே வேண்டாம் மதுராதான் அவர்களது இலக்கு. இவை அனைத்தும் யோகி ஆதித்யநாத்தின் ஆசியுடன் நிறைவேற்றப்படும்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உயர் சாதிய, சகிப்புதன்மையற்ற மற்றும் முதலாளிகள் சார்பான புதிய – மிளிரும் உத்திரப் பிரதேசம் நம் கண் முன்னால் எழுந்துவருவதைக் கவனியுங்கள். நாம் அதனை அறிவதற்கு முன்பே, இந்தியாவின் முன்மாதிரியாக உ.பி. மாறிவிடும். குஜராத் மாடல் என்பது நேற்றைய செய்தி, வருங்காலம் உ.பி. மாதிரிக்கானது.

இதற்கு முன் குஜராத் மாடல் எப்படி வடிவம் பெற்றது என்பதை இப்போது நினைவுக் கூர்வது மிகவும் முக்கியமானது.

பெரும்பான்மையாக முஸ்லீம்களை உள்ளடக்கி ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்த குஜராத் கலவரம் நடந்து பத்தாண்டுக்களுக்குப் பிறகு ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவனாக தன்னைக் காட்டிக்கொண்டார். குஜராத் கலவரத்தின் போது பிரதமராக இருந்த வாஜ்பாயால் பதவிநீக்கம் செய்யப்படாமல் மயிரிழையில் தப்பினார். (இதே வாஜ்பாய்தான் கலவரம் நடந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு, கோத்ரா இரயிலுக்கு தீ மூட்டியதாக முஸ்லீம்களை மறைமுகமாக குற்றம் சாட்டி மாற்றிப் பேசியவர்; அதன் மூலம் இந்துகளின் உணர்வினை தூண்டியவர்).

தனது பதவியை பாதுகாத்துக் கொண்டாலும், இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தினர் பலரால் வெறுத்து ஒதுக்கப்பட்டார் மோடி. இந்திய வர்த்தகர்கள் மோடி மீதான குற்றச்சாட்டில் மிகவும் கண்டிப்புடன் இருந்தனர். “சர்வதேச அளவில் நாம் ஒரு மதசார்பற்ற நாடு என்ற பெருமையை இழந்துவிட்டோம்” என வங்கியாளர் தீபக் பரேக் வேதனைப்பட்டார் (மார்ச் 2002) (இந்த கூற்றை பின்னர் அவர் மாற்றிக் கொண்டார்). வன்முறைப் படுகொலைகள் மற்றும் கொள்ளைகளுக்கு எதிராக இதர தொழிலதிபர்களும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமெரிக்கா போன்று சில நாடுகள் நேரடியாகவும், பல நாடுகள் மறைமுகமாகவும் மோடியை விசா மறுப்புப் பட்டியலில் சேர்ந்தனர். ஆனால் சில ஆண்டு கழித்து அதே நாட்டு தூதர்கள் குஜராத்திற்குச் சென்று மோடியை சந்தித்து தங்களது முதலீடு குறித்து விவாதித்தனர்.

துடிப்பான குஜராத்2013-ம் ஆண்டு, வைப்ரண்ட் குஜராத் உச்சி மாநாட்டில், பெரிய கார்ப்பரேட் அதிபர்கள் மோடியை புகழ்ந்து போற்றினர். “மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர்” என முகேஷ் அம்பானி தெரிவித்தார். அனில் அம்பானியோ, “மோடி மகாத்மா காந்தி மற்றும் சர்தார் பட்டேலைப் போன்றவர்” என்று பிரகடனப்படுத்தினார். இந்தியாவிலேயே அதிக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக குஜராத் இருப்பதற்கு முக்கிய காரணம் மோடி மட்டுமே என்று ரத்தன் டாடா பாராட்டினார்.

அதன்பிறகு, ‘அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்வு, அழகான சாலைகள், தடையற்ற மின்சாரம்’ உள்ளிட்ட தனது தேசிய இலட்சியங்களை மோடி வெளிப்படுத்தி, முதலாளிகளிடம் மட்டுமல்லாமல், சாதாரண மக்களிடமும் பிரபலமடையத் தொடங்கினார். அவர் முசுலீம்களை தனியாகப் பிரித்து ‘அவர்களுக்கான’ இடத்தை அவர்களுக்குக் காட்டியது சொல்லப்படாத வரலாறு. 2002- கலவரத்தைப் பொறுத்தவரையில் அது மறக்கப்பட்டது. விமர்சித்த விமர்சகர்கள் அவ்விவகாரத்தைக் கடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டார்கள்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். மோடியை ஆதரிக்க அனைத்து ஊடகங்களும் ஒரேகுரலில் எழுந்துநின்றன; காங்கிரசை கடுமையாக விமர்சித்து ஒதுக்கியெறிந்தன. மோடியின் ஒவ்வொரு வார்த்தையும் ஒளிபரப்பப்பட்டன. வாரணாசியில் நடத்தப்பட்ட மோடியின் கண்காட்சியைப் பார்த்து தொலைக்காட்சி நிருபர்களும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் எவ்வாறு திகைப்பில் ஆழ்ந்தனர் என்பதை நினைவாற்றல் சற்று அதிகமாக இருப்பவர்களால் நினைவுகூர முடியும். பொதுவான கண்ணோட்டத்தில் கூறப்படுவது போல, ஊடகங்கள் தனது ஆன்மாவை விற்றுவிட்டு மோடியின் ரசிகர் மன்றத்தில் சேர்ந்தது 2014-ல் அல்ல; அதற்கு முன்னமே அவர்கள் தங்களை விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வரும் மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை பாழாக்கிவிட்டார்; மோடிதான் அதனை மீட்பார். அவரால் அந்நிய முதலீடு நம் நாட்டை நோக்கி விரைந்து வரும், ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும், இந்தியா ஒரு வல்லரசு நாடாக மாறும் என்றும், மோடி இனி பிளவுபடுத்தும் வேலையில் ஈடுபடமாட்டார்; பொருளாதார வளர்ச்சியில் மட்டுமே அக்கறை கொள்வார் எனவும் நிபுணர்கள் அவருக்கு தலையசைத்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை; நடந்ததாகவும் தெரியவில்லை. மாறாக ‘சூப்பர் திறமைசாலியான’ மோடி இந்திய பொருளாதாரத்தை சரிவிலேயே இட்டுச் சென்றார். அதேநேரத்தில், வெறுப்புக் குற்றங்கள் பல அதிகரித்தன. முஸ்லீம் மக்கள் மேலும் மேலும் ஒடுக்கப்பட்டனர். சங் பரிவாரத்தின் நிகழ்ச்சி நிரலான இவை அனைத்தும், இரக்கமற்ற முறையில் செயல்படுத்தப்பட்டன.

ஒரு பரந்துபட்ட வாக்காளர் தளத்திற்கு மோடியை ‘விற்பனை செய்ய’, அவரது பிம்பத்தை மறுவார்ப்பு செய்யவேண்டியிருந்தது; நகர்ப்புற வாக்காளர்கள் பொதுவாக ஒரு வகுப்புவாத கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தாலும், அப்பட்டமாக சகிப்பற்ற ஒரு வேட்பாளருக்கு ஆட்பட மாட்டார்கள். எனவே ஒரு புதிய மோடி உருவாக்கப்பட்டார்; அது நடக்கவும் செய்தது.

படிக்க :
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !
♦ 2002 குஜராத் இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !

மத்தியில் மோடி அரசாங்கம் முதலாளிகளுக்கு சாதகமாகவும், விவசாயிகள் – தொழிலாளிகள், முஸ்லீம்களுக்கு எதிராகவும் சட்டங்களை கொண்டுவந்து, சங் பரிவாரத்தின் ஆதரவாளர்களை காவல்துறையிடமிருந்து பாதுகாத்து வருவதால் பெரும்பாலான மக்களின் அதிருப்திக்கு ஆளாகி வருகிறது.

மத்திய அரசு சில நேரங்களில் மாநில அரசுகளின் வரம்புகளில் அதிகாரம் செலுத்த முடியாது என்பதன் காரணமாக, சில சமயங்களில் அது கையாலாகாத நிலையில் இருக்கிறது. இங்குதான் யோகி ஆதித்யநாத் நம்பிக்கையளிப்பவராக இருக்கிறார். அவர் முதலமைச்சர்தான் என்றபோதிலும், தனது காவல்துறையின் மூலம் எங்கும் எப்போது வேண்டுமானாலும் பத்திரிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியும். ஏனென்றால், அவர் உ.பி.யின் கடவுள், உ.பி.யின் எஜமானன். டில்லியில் அவர் தடுத்து நிறுத்தப்பட முடியாதவர்.

உ.பி. மாடல் எந்தவொரு எதிர்ப்பையும் சகித்துக் கொள்ளாது. தன்னை குறித்து சர்வதேச அளவில் என்ன கருதுகிறார்கள் என்பதில் அதற்கு எந்தக் கவலையும் இல்லை. யோகி ஆதித்யநாத்தின் பார்வையில் வெளியுறவுக் கொள்கை – இராஜதந்திரம் தேவையேயில்லை. சட்ட நுணுக்கங்கள் நேரத்தை வீணடிப்பவையாகும். ஜனநாயகம் என்பது நலிந்துப்போன ஒன்று.

ஒரு இயக்கம் சாதிக்கப்பட வேண்டும், அதை யோகி செய்து முடிப்பார் என்பது சங் பரிவாரத்திற்கு நன்கு தெரியும். அவரது நற்சான்றுகள் பரிசுத்தமானவை. அவர் முஸ்லீம்களை ஆழமாக வெறுக்கிறார். தலித்துகள் தங்களுக்கு ‘உரிய’ இடத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறார். சங் பரிவாரத்தின் கண்ணோட்டத்தில் நரேந்திர மோடி மிகவும் மென்மையானவர். ஏனென்றால், அவர் தனது பிம்பத்தை பற்றி அதிகம் கவலைப்படுகிறார். ஆனால் ஆதித்யநாத் அவ்வாறு இருப்பதில்லை. அதனால்தான் யோகி ஆதித்யநாத் எதிர்காலத்தின் நாயகனாக இருக்கிறார்.

கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
தமிழாக்கம் : ஷர்மி
ஆதாரம்: தி வயர்