விவாதங்களுக்குப் பதில் உரை

பாகம் – 2

4 ஊழியர்களை சோதித்துப்பார்ப்பது, கடமைகளை நிறைவேற்றியதை சரி பார்ப்பது என்பதன் பொருள் என்ன?

ஊழியர்களை சோதித்துப் பார்ப்பது என்பது அவர்களது உறுதி மொழிகளையும், அறிவிப்புகளையும் கொண்டு அல்ல, அவர்களது வேலைகளின் முடிவுகளைக் கொண்டுதான்.

கடமைகளை நிறைவேற்றியதைச் சோதித்துப் பார்ப்பது என்பது வழக்கமாக அறிக்கைகளின் மூலம் சரிபார்ப்பதும் சோதிப்பதும் மட்டுமல்ல, முதன்மையாக வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும் சரியான முடிவுகளின் அடிப்படையில்தான்.

இத்தகைய சோதித்துப் பார்ப்பதும், சரிபார்ப்பதும் தேவைதானா? சந்தேகத்துக்கு இடமில்லாமல் இது தேவைப்படுகிறது. முதலாவதாக, இத்தகைய சோதித்துப் பார்ப்பதும், சரிபார்ப்பதும்தான் அந்தத் ஊழியரைப் பற்றி  நாம் அறிந்து கொள்ளவும், அவரது உண்மையான தகுதிகளை நாம் நிர்ணயிப்பதற்கும் தேவைப்படுகிறது. இரண்டாவதாக, இத்தகைய சோதனையிடலும், சரிபார்த்தலும் மட்டுமே இந்த நிர்வாக இயந்திரத்தின் நிறைகளையும், குறைபாடுகளையும் நிர்ணயிக்கத் தேவைப்படுகிறது. மூன்றாவதாக, இத்தகைய சோதனை யிடலும், சரிபார்த்தலும் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கடமைப் பொறுப்பின் நிறைகளையும், குறைபாடுகளையும் நிர்ணயிக்க நமக்குத் தேவைப்படுகிறது.

சில தோழர்கள் ஊழியர்களைச் சோதித்துப் பார்ப்பது மேலிருந்து மட்டுமே செய்யப்பட வேண்டும், அப்போது தங்கள் வேலைகளின் முடிவுகளால் வழிகாட்டப்பட்ட தலைவர்கள் அவர்களைச் சோதித்துப் பார்க்க முடியும் என்று கருதுகிறார்கள். ஊழியர்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும், கடமைகளை நிறைவேற்றியதைச் சரிபார்ப்பதற்கும் மேலிருந்து சோதித்துப் பார்ப்பது ஆற்றல் வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்று என்பது உண்மைதான். ஆனால், மேலிருந்து சோதித்துப் பார்ப்பது சோதித்துப் பார்க்கும் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சாத்தியமற்றதாக்கி விடுகிறது. இங்கு இன்னொரு வகையான சோதித்துப்பார்க்கும் முறையும் உள்ளது. அதுதான் கீழிருந்து சோதித்துப்பார்ப்பது. மக்கள் தங்களுக்கு வழிகாட்டும் தலைவர்களைச் சோதித்துப் பார்க்கும்போது, அவர்களுடைய தவறுகளில் கவனம் செலுத்துகிறார்கள். அந்தத் தவறுகள் எவ்வாறு சரிசெய்யப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். இந்த வகையான சோதித்துப் பார்க்கும் முறை ஊழியர்களைச் சோதித்துப் பார்க்கும் ஆற்றல் வாய்ந்த வழிமுறைகளில் ஒன்றாகும்.

கட்சி உறுப்பினர் தனது தலைவர்களை, கட்சிச் செயல்பாடுகளில், கூட்டங்களில் மாநாடுகளில், கட்சிப் பேரவைகளில் அவர்களது அறிக்கைகளைக் கேட்டு, குறைபாடுகளை விமர்சனம் செய்து மற்றும் இறுதியாக, கட்சியின் தலைமை அமைப்புகளுக்கு அந்தத் தோழர் களைத் தேர்வுசெய்து அல்லது தேர்ந்தெடுக்காமல் இருப்பது ஆகியவற்றின் மூலம் சோதித்துப் பார்க்கிறார்கள். நமது கட்சியின் விதிகள் கோருவது போல ஜனநாயக மத்தியத்துவத்தை மிகக் கறாராகக் கடைப்பிடிப்பதால் நமது கட்சி அமைப்புகளுக்கான கடப்பாடாக உள்ள தேர்தலில் வேட்பாளர்களை முன்மொழியவும், ஆட்சேபிக்கவும் உள்ள உரிமை, இரகசிய வாக்குச்சீட்டு, விமர்சனம் மற்றும் சுய விமர்சன உரிமை – இவை எல்லாம் மற்றும் இவை போன்றவையுமான நடவடிக்கைகள் மற்ற பிறவற்றோடு சோதித்துப்பார்க்கவும் கட்சித்தலைவர்கள் கட்சி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவும் வேண்டும். இது கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும்.

கட்சி சாராத மக்கள் தங்களுடைய வர்த்தக, தொழிற்சங்க மற்றும் பிற தலைவர்களை, கட்சிசாராத நடவடிக்கைக் கூட்டங்களில், எல்லாவகையான மக்களின் மாநாடுகளில் தங்கள் தலைவர்களின் அறிக்கைகளைக் கேட்டு, அவற்றின் குறைபாடுகளை விமர்சனம் செய்து, அந்தக் குறைபாடுகளை எந்தவகையில் நிவர்த்தி செய்யலாம் என்பதைச் சுட்டிக்காட்டி சோதித்துப் பார்க்கிறார்கள்.

இறுதியாக, மக்கள் நாட்டின் தலைவர்களை, சோவியத் ஒன்றியத்தின் அரசு அமைப்புகளின் தேர்தல்களின்போது அனைவருக்குமான, சரிசமமான, நேரடி மற்றும் இரகசிய வாக்குரிமையின் மூலம் சோதித்துப் பார்க்கிறார்கள்.

இங்குள்ள கடமை என்னவென்றால், மேலிருந்து சோதித்துப் பார்ப்பதை, கீழிருந்து சோதித்துப் பார்ப்பதுடன் இணைப்பதுதான்.

5 தங்களது சொந்தத் தவறுகளிலிருந்து ஊழியர்களுக்குக் கற்பிப்பது என்பதன் பொருள் என்ன?

கட்சியின் தவறுகளை உளச்சான்றுகளுக்கு கட்டுப்பட்டு அம்பலப்படுத்துதல், இத்தகைய தவறுகள் எழுவதற்கான காரணங்களை ஆய்வு செய்தல், இந்தத் தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகளைச் சுட்டிக்காட்டுதல் ஆகியவை கட்சி ஊழியர்களை முறையாகப் பயிற்றுவிப்பதற்கும், கற்றுத் தருவதற்கும், உழைக்கும் வர்க்கத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் முறையாகப் பயிற்றுவிப்பதற்கும், கற்றுத் தருவதற்குமான உறுதியான வழிமுறைகளில் ஒன்று என லெனின் நமக்குக் கற்பித்தார். லெனின் கூறுகிறார்:

  • “ஓர் அரசியல் கட்சியானது தனது சொந்தத் தவறுகளை நோக்கிக்கொண்டுள்ள மனப்பாங்குதான் அந்தக் கட்சியின் பொறுப்புமிக்க தன்மை பற்றிய மிகவும் முக்கியமானதும், உறுதியானதுமான – மேலும் அது தனது வர்க்கத்துக்கும், உழைக்கும் மக்களுக்குமான கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதற்குமான அளவுகோலாகும். தவறுகளை வெளிப்படையாக ஒத்துக் கொள்வது, அதற்கான காரணங்களை வெளிப்படுத்துவது, அத்தகைய தவறுகள் ஏற்படக் காரணமான சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்வது, அவற்றை சரிப்படுத்து வதற்கான வழிமுறைகளைக் கவனமாக ஆய்வுசெய்வது – இவை தான் ஒரு பொறுப்புமிக்க கட்சியின் அடையாளங்கள்; இது, அதன் கடமைகளைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது, இது, வர்க்கத்துக்கும், அதன் பின் மக்களுக்கும் கற்பிப்பதையும், பயிற்சி அளிப்பதையும் அர்த்தப்படுத்துகிறது.” இதன் பொருள், நம்மிடையே அடிக்கடி நிகழ்வதுபோல், தங்களுடைய தவறுகளை குறைத்துக்காட்டி, மாயத்தோற்றத்தை உருவாக்குவது அல்ல, தங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்வதிலிருந்து நெளிவுசுளிவாக இருப்பது அல்ல. ஆனால், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வதும், இந்தத் தவறுகள் எவ்வாறு திருத்தப்படலாம் என்பதற்கான வழியை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டுவதும், தங்கள் தவறுகளை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் திருத்திக் கொள்வதும்தான் போல்ஷ்விக்குகளின் கடமை.”

நமது தோழர்களில் பலர் இதை மகிழ்வுடன் செய்வதற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று என்னால் கூறமுடியாது. ஆனால், போல்ஷ்விக்குகள், அவர்கள் உண்மையிலேயே போல்ஷ்விக்குகளாக இருக்க விரும்பினால், தங்கள் தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கான, அதற்கான காரணங்களைக் கூறுவதற்கான, எந்தவகையில் அவை திருத்தப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கான தைரியத்தைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அந்தவகையில் கட்சி அணிகளுக்கு முறையான பயிற்சியையும், முறையான அரசியல் கல்வியையும் தருவதற்கு கட்சிக்கு உதவ வேண்டும். ஏனென்றால் இந்த ஒருவழியில் மட்டுமே, வெளிப்படையான மற்றும் நேர்மையான சுயவிமர்சன சூழலில் மட்டும்தான் உண்மையான போல்ஷ்விக் ஊழியர்களுக்கு, உண்மையான  போல்ஷ்விக் தலைவர்களுக்கு கற்றுத்தருவது சாத்தியமாகும்.

லெனினின் கோட்பாட்டின் சரியான தன்மையை விளக்க இரண்டு எடுத்துக்காட்டுகள்:

உதாரணத்துக்கு, கூட்டுப்பண்ணைக் கட்டமைப்பில் உள்ள நமது தவறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 1930இல் மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருந்து வந்த விவசாயத்தை, கூட்டுப்பண்ணைக் கட்டமைப்புக்குள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மாற்றுவதைத் தங்களால் நிறைவேற்ற முடியும் என்று நமது கட்சித்தோழர்கள் நினைத்ததையும், அப்போது கட்சியின் மத்தியக்குழு மிகவும் அதீத ஆர்வம் கொண்ட இந்தத் தோழர்களை கட்டுப்படுத்துவது தனது கடமை என்று கண்டறிந்ததையும் நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அது நமது கட்சி வாழ்வில் மிகவும் ஆபத்தான காலகட்டங்களில் ஒன்று.

நமது கட்சித் தோழர்கள் கூட்டுப் பண்ணையை விருப்பார்ந்த இயல்பில் கட்டமைக்க வேண்டும் என்பதையும், நிர்வாக அழுத்தத்தின் காரண மாக விவசாயக் கூட்டுப்பண்ணை பாதைக்கு மாற்றப்படக் கூடாது என்பதையும் மறந்துவிட்டதுதான் தவறாகிப்போனது. கூட்டுப் பண்ணைக் கட்டமைப்புக்குத் தேவையானது சில மாதங்கள் அல்ல, மிகவும் கவனமாகவும், ஆழ்ந்து சிந்தித்த வேலைகளையும் கொண்ட ஆண்டுகள் தேவைப்படும் என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். இதைப்பற்றி அவர்கள் மறந்து விட்டார்கள். மேலும், தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ளவும் மறுத்துவிட்டார்கள்.

தோழர்களுக்கு மத்தியக்குழு, வெற்றியில் தலைசுற்றி மயங்குவது பற்றிய குறிப்பையும், மாவட்டங்களில் உள்ள தோழர்களுக்கு, உண்மையான சூழ் நிலைகளைப் புறக்கணித்து மக்களுக்கு முன்னே தீவிரமாக சென்றுவிட வேண்டாம் என்று அளித்த எச்சரிக்கையும் நமது தோழர்களால் வெறுப்புணர்வுடனேயே பார்க்கப்பட்டன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இது மத்தியக்குழுவை இந்த நீரோட்டத்துக்கு எதிராகச் செல்வதிலிருந்தும், நமது கட்சித்தோழர்களை சரியான பாதைக்கு திருப்புவதிலிருந்தும் தடுக்கவில்லை. நல்லதுதானே? நமது கட்சித் தோழர்களை சரியான பாதைக்கு திருப்பியதன் மூலம் கட்சி தனது நோக்கத்தை நிறைவேற்றி விட்டது என்பது ஒவ்வொருவருக்கும் இப்போது தெளிவாகியிருக்கும். இப்போது நாம் கூட்டுப்பண்ணை கட்டுமானத்துக்காக, கூட்டுப் பண்ணை தலைமைக்காக பல்லாயிரக்கணக்கான அற்புதமான விவசாய ஊழியர்களைப் பெற்றுள்ளோம். இந்த அணியினர் 1930-ன் தவறுகளிலிருந்து கற்பிக்கப்பட்டவர்கள், பயிற்சி அளிக்கப்பட்டவர்கள். ஆனால், கட்சி அப்போது தனது தவறுகளை உணர்ந்து கொள்ளாமல் இருந்திருந்தால், அவற்றை அது உரியகாலத்தில் திருத்தியிருக்காமல் இருந்திருந்தால், இன்று நாம் பெற்றிருக்கும் இந்த ஊழியர்களைப் பெற்றிருக்க முடியாது.

இன்னொரு உதாரணம், தொழில்துறைக் கட்டுமானத்தின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நான் ஷக்டி சீர்குலைவு காலத்தின் நமது தவறுகளை எனது மனதில் கொண்டிருக்கிறேன். நமது தவறுகளாக இருந்தவை: தொழில்துறையில் நமது ஊழியர்களின் தொழில்நுட்ப பிற்போக்குத்தன்மையை நாம் முழுதும் அறிந்திருக்கவில்லை. நாம் இந்தப் பிற்போக்குத்தன்மையை நீக்கிக்கொள்ளவில்லை. நம்மிடம் வெறுப்புணர்வு கொண்டுள்ள நிபுணர்களின் உதவியோடு விரிவான சோசலிசத் தொழில்துறைக் கட்டமைப்பை நம்மால் வளர்க்க முடியும் என்று நாம் நினைத்தோம்.

முதலாளித்துவ நிபுணர்களோடு இணைக்கப்பட்டிருந்த மோசமான மக்கள் அரசுப்பணி அமைச்சர்கள் என்ற பாத்திரத்தை நமது வர்த்தக ஊழியர்களுக்கு தண்டனையாக்கி விட்டோம். அந்த நேரத்தில் நமது வர்த்தக ஊழியர்கள் தங்களது தவறுகளை எவ்வளவு மனமின்றி ஒத்துக் கொண்டார்கள் என்பதை, எவ்வளவு விருப்பமின்றி தங்களது தொழில்நுட்ப பிற்பட்ட தன்மையை ஒப்புக்கொண்டார்கள் என்பதை, மேலும் எவ்வளவு மெதுவாக, ‘தொழில் நுட்பத்தில் தேர்ச்சி கொள் என்ற முழக்கத்தை அவர்கள் தங்களுக்குள் உள்வாங்கிக்கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது நல்லதுதானே? ‘தொழில் நுட்பத்தில் தேர்ச்சிகொள்’ என்ற முழக்கம் நல்ல பயனைத் தந்தது, நல்ல விளைவுகளை உருவாக்கியது என்பதை உண்மைகள் காட்டுகின்றன.

இப்போது நாம் அற்புதமான பல நூற்றுக்கணக்கான, பல ஆயிரக்கணக்கான போல்ஷ்விக் வர்த்தக ஊழியர்களைப் பெற்றுள் ளோம், அவர்கள் ஏற்கெனவே தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். நமது தொழில்துறையை முன்னெடுத்துச் செல்பவர்கள். ஆனால், தங்களுடைய தொழில்நுட்ப பிற்பட்ட தன்மையை ஒப்புக்கொள்ளாத வர்த்தக ஊழியர்களின் பிடிவாதத்தன்மைக்கு நமது கட்சி பலியாகியிருக்குமானால், அவர்களுடைய தவறுகளை நமது கட்சி அவ்வப்போது உணர்ந்து கொள்ளாமல் இருந்திருக்குமானால், மேலும் அவர்களது தவறுகளை உரிய காலத்தில் திருத்தாமல் இருந் திருக்குமானால் இப்போது இத்தகைய ஊழியர்களை நாம் பெற்றிருக்க முடியாது.

சிலதோழர்கள், நமது தவறுகளைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது உகந்ததல்ல, வெளிப்படையாக நமது தவறுகளை ஒப்புக் கொள்வது நமது பலவீனம் என்று நமது எதிரிகளால் உய்த்துணரப்பட்டுவிடும். மேலும் அது, அவர்களால் பயன்படுத்திக் கொள்ளப் படும், என்று கூறுகிறார்கள். அது முட்டாள்தனம், தோழர்களே. நெறியற்ற முட்டாள்தனம். அதற்கு மாறாக நமது தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும், அந்தத் தவறுகளை மிகவும் நேர்மையாக திருத்திக்கொள்வதும் மட்டும்தான் நமது கட்சியைப் பலப்படுத்தும், நமது கட்சியின் நன்மதிப்பை தொழிலாளர்கள், விவசாயிகள், உழைக்கும் அறிவுத்துறையினர் பார்வையில் உயர்த்தும், நமது அரசின் வலிமையையும், ஆற்றலையும் அதிகப்படுத்தும். மேலும் அதுதான் முக்கிய விசயம். தொழிலாளர்களும், விவசாயி களும், உழைக்கும் அறிவுத்துறையினரும் நம்மோடு இருந்தால், எஞ்சியுள்ள அனைத்தும் வந்தே தீரும்.

படிக்க :
♦ மூவர் கும்பலின் வலது விலகலை எதிர்ப்போம் || தோழர் ஸ்டாலின்
♦ ‘புரட்சிகர’ சதிகாரர்களின் ரிஷி மூலம் !

வேறுசில தோழர்கள், ‘நமது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்வது நமது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், பலப்படுத்துவதற்கும் வழியமைக்காது, ஆனால், அவர்கள் பலவீனம் அடையவும், தொல்லைப்படவும் செய்துவிடும். எனவே நாம் கட்டாயம் அதை ‘விட்டுவைத்து’ நமது அணியினர் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் கட்டாயம் அவர்களது சுய மதிப்பையும், மன அமைதியையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறுகிறார்கள். ஆகையால் அவர்கள் நமது தோழர்களின் தவறுகள் மீது நெளிவு சுளிவாக இருக்கவேண்டும், விமர்சனத்தை தளர்த்தவேண்டும், இன்னும் சிறப்பாக இந்தத் தவறுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று முன்மொழிகிறார்கள். இத்தகைய போக்கு யாரை இவர்கள் விட்டு வைக்கவும்’, ‘கவனம் செலுத்தவும்’ வேண்டும் என்கிறார்களோ அந்த ஊழியர்களுக்கு நாம் செய்யும் தீவிரமான தவறு மட்டுமல்ல, உச்சகட்ட ஆபத்துமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆபத்தான தாகும். அவர்களது தவறுகளை நெளிவுசுளிவாக மூடிமறைப்பதன் மூலம் அந்த ஊழியர்களைப் பாதுகாப்பதும்’, ‘கவனம் செலுத்துவதும்’ என்பதன் பொருள் இந்த அதே ஊழியர்களை மிக உறுதியாகக் கொல்வதாகும். நாம் 1930-களின் தவறுகளை அம்பலப்படுத்தி இருக்காவிட்டால், இந்தத் தவறுகளைப்பற்றி அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்காவிட்டால் தொழிற்துறை போல்ஷ்விக்குகளை நாம் உறுதியாகக் கொன்றிருப்போம். ஷக்டி சீர்குலைவு காலகட்டத்தில் நமது தோழர்களின் தவறுகளை நாம் அம்பலப்படுத்தியிருக்கா விட்டால், இந்தத் தவறுகள் பற்றி நமது தொழில்துறை ஊழியர்களுக்கு கற்றுத் தந்திருக்காவிட்டால், நாம் உறுதியாகத் தொழில்துறை போல்ஷ்விக் ஊழியர்களைக் கொன்றிருப்போம். நமது தோழர்களின் தவறுகளை நெளிவுசுளிவாக மூடிமறைத்து அவர்களைப் பாதுகாக்கவும், சுயமதிப்பைக் காப்பாற்றவும் யார் எப்பொழுது முயற்சித்தாலும், அந்த ஊழியர்களையும், அவர்களது சுயமதிப்பையும் கொல்கிறார்கள். அவர்களது தவறுகளை மூடிமறைப்பதன் மூலம் அவர்கள் புதிய இன்னும் அபாயகரமான தவறுகளைச் செய்ய உதவுகிறார்கள். அவை ஒட்டு மொத்த ஊழியர்களையும் உடைந்து போகவும், அவர்களது சுயமதிப்பும், மன அமைதியும் குறைந்து போகவே வழிவகுக்கும்.

(தொடரும்)

நூல் : ஜே.வி.ஸ்டாலின் தொகுப்பு நூல்கள் – தொகுதி -14
கிடைக்குமிடம் :
அலைகள் வெளியீட்டகம்
5/1 ஏ, இரண்டாவது தெரு, நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089
தொடர்புக்கு : 98417 75112

4 மறுமொழிகள்

  1. கட்டுபாடான என்பதற்கு பதில் கடடுப்பான என்று உள்ளது, என்பதை என்பதற்கு பதிலாக எனபதை என்று உள்ளது தயவுசெய்து பிழைகளை திருத்தவும்.

  2. நமது தோழர்களின் தவறுகளை நெளிவுசுளிவாக மூடிமறைத்து அவர்களைப் பாதுகாக்கவும், சுயமதிப்பைக் காப்பாற்றவும் யார் எப்பொழுது முயற்சித்தாலும், அந்த ஊழியர்களையும், அவர்களது சுயமதிப்பையும் கொல்கிறார்கள். அவர்களது தவறுகளை மூடிமறைப்பதன் மூலம் அவர்கள் புதிய இன்னும் அபாயகரமான தவறுகளைச் செய்ய உதவுகிறார்கள். அவை ஒட்டு மொத்த ஊழியர்களையும் உடைந்து போகவும், அவர்களது சுயமதிப்பும், மன அமைதியும் குறைந்து போகவே வழிவகுக்கும்.

    தவறுகளுக்கு எதிராக உள்ளும் புறமும் போராட வேண்டும் என கட்டுரை எனக்கு உணர்த்தியது.

Leave a Reply to Siva பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க