குடிமை உரிமைகள் குறைக்கப்படுவது, சிறுபான்மையினர் குறிவைக்கப்படுவது மற்றும் நீதித்துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற சுயாதீன நிறுவனங்கள் அரசாங்கத்திடம் பணிந்து செல்வது ஆகிய விவகாரங்களைச் சுட்டிக் காட்டி, ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி அமர்ந்திருக்கும் இந்த ஆறு ஆண்டுகள், இந்தியாவை சர்வாதிகாரப் பாதையில் தள்ளிவிட்டன என்று பல்வேறு விமர்சகர்கள் நீண்ட காலமாக பேசி வருகின்றனர்.

ஸ்வீடனை தளமாகக் கொண்ட “ஜனநாயகத்தின் வகைகள்” (வி-டெம்) என்ற நிறுவனத்தின் பகுப்பாய்வு, பாஜகவும் அதன் கொள்கைகளும் “கட்சி தாராளமயமற்ற தன்மை குறியீட்டில்” முன்னணியில் இருப்பதைக் காட்டுகிறது – தாராளமயமற்ற தன்மையின் அடிப்படையில், அந்த அளவிற்கு எதேச்சதிகார ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில், அது “மேலும் மேலும் தாராளமற்றதாகிவிட்டது” என்பதையே வி-டெம்-இன் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

போலந்திய சட்டம் மற்றும் நீதிக் கட்சி (பிஐஎஸ்), ஹங்கேரிய ஃபிடெஸ் கட்சி, துருக்கிய நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (ஏ.கே.பி) மற்றும் இந்தியாவின் பா.ஜ.க ஆகிய நான்கு கட்சிகளை இந்த ஆய்வு நெருக்கமாக கடந்த நான்காண்டுகளில் பின் தொடர்ந்துள்ளது. இந்த நான்கு நாடுகளில் ஜனநாயகத்தின் தரம், கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளதன் காரணமாக இக்கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

மில்லினியத்தின் தொடக்கத்தில், பி.ஐ.எஸ், ஃபிடெஸ் கட்சி மற்றும் ஏ.கே.பி ஆகியவை ஜனநாயகத்தில் ஒரு பொதுவான ஆளும் கட்சியைப் போலவே தாராளமாக இருந்தன. மறுபுறத்தில் பாஜக ஏற்கனவே 1999-ல் கணிசமாக தாராளமயமற்ற தன்மையில் இருந்தது.

அடுத்த இரண்டு பத்தாண்டுகளில், நான்கு கட்சிகளும் தாராளமயமற்ற தன்மையின் ஒரே அச்சில் இணைந்தன. பைஸ், ஃபிடெஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சியிகள், வி-டெம் ஆய்வு குறிப்பிடும் எதேச்சதிகாரத்திற்கு நெருக்கமாக இருந்த நிலையில் ஏ.கே.பி கட்சி அதனையும் தாண்டிச் சென்றது.

வி-டெம்-இன் தாராளமயமற்றதன்மைக் குறியீடு, தேர்தலுக்கு முன்னர் ஒரு கட்சி வெளிப்படுத்தும் ஜனநாயக விதிமுறைகளுக்கான உறுதிப்பாட்டின் அளவைக் கணக்கிடுகிறது. அரசியல் பன்மைத்துவத்திற்கு குறைவான அக்கறை, அரசியல் எதிரிகளை பூதாகரமாகச் சித்தரித்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அவமரியாதை செய்தல் மற்றும் அரசியல் வன்முறையை ஊக்குவித்தல் ஆகியவையே தாராளமயமற்றதன்மையை அளவிடுவதற்கான விவகாரங்கள்.

மோடியின் வாய்ச் சவடாலுக்கு மயங்கிய கூட்டம்

தாக்குதலுக்கு உள்ளாகும் ஜனநாயகம்

இது உலகளாவிய போக்கு என்று வி-டெம் குறிப்பிடுகிறது. “ஜனநாயக நாடுகளில் நடுநிலையான சராசரி ஆளும் கட்சி சமீபத்திய பத்தாண்டுகளில் மிகவும் தாராளமற்றதன்மையாகிவிட்டது” என்று ஆய்வு குறிப்பிடுகிறது. “இதன் பொருள் என்னவென்றால், அரசியல் பன்மைத்துவத்திற்கு குறைவான அக்கறை, அரசியல் எதிரிகளை பூதாகரமாக சித்தரித்தல், சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அவமரியாதை செய்தல் மற்றும் அரசியல் வன்முறையை ஊக்குவித்தல் ஆகிய பிரச்சினைகளை பெரும்பாலான கட்சிகள் கண்டுங்காணாமல் போவது என்பதாகும்”

“இதற்கு முந்தைய காலகட்டங்களில், ஜனநாயகங்கள் பெரும்பாலும் வெளியில் இருந்துதான் தாக்கப்பட்டன. தற்போதைய நிலைமைகளில், அத்தகைய அச்சுறுத்தல்கள் அரசாங்கத்திற்குள்ளிருந்தே வருகின்றன” என்று வி-டெம் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டாஃபன் ஐ. லிண்ட்பெர்க் கூறுகிறார். வி-டெம் இதற்கான தரவை, நாடுகள் தொடர்பான நிபுணர்களிடமிருந்து பெற்று ஒரு புள்ளிவிவர மாதிரியைக் கொண்டு பகுப்பாய்வு செய்துள்ளது.

மூலக்கட்டுரை : ஸ்க்ரால்
தமிழாக்கம் : கலைமதி

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க