உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 10

பாகம் – 9

V. உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி?

தோழர்களே! இப்பொழுது பிரச்சினை மிகத் தெளிவாயிருக்கிறது. உட்கட்சிப் போராட்டத்தை சரியாகவும் பொருத்தமாகவும் நடத்துவது எப்படி என்பதே பிரச்சினை.

இந்த பிரச்சினையில், சோவியத் யூனியன், இன்னும் இதர பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நிரம்ப அனுபவமிருக்கிறது; சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அப்படியேதான். லெனினும் ஸ்டாலினும் பல கட்டளைகள் விடுத்திருந்தனர்; நமது கட்சியின் மத்தியக் கமிட்டியும் அதேமாதிரி செய்திருக்கிறது. இந்த அனுபவங்களையும், கட்டளைகளையும் நமது தோழர்கள் கவனமாக கற்றறிய வேண்டும்; கட்சியைக் கட்டுவது பற்றிய பிரச்சினைக்கு வரும் பொழுது அவை விவாதிக்கப்படும். இன்று நான் அவற்றை எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்ட அனுபவத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட விசயங்களை தோழர்களின் கவனத்திற்கு இன்று நான் கொண்டு வருகிறேன்.

முதலாவதாக, உட்கட்சிப் போராட்டம் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், பொறுப்புமிக்கதுமான விசயம் என்று தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; மிகக் கண்டிப்பானதும், பொறுப்புமிக்கதுமான, மனோபாவத்துடன் நாம் அதை நடத்த வேண்டும்: அதை எப்பொழுதுமே அஜாக்கிரதையாக நடத்தக் கூடாது. உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், முதலாவதாக கட்சியின் சரியான கொள்கையை, கட்சியின் நலனுக்கு பாடுபடும் தன்னலமற்ற நிலை, இன்னும் சிறந்த வேலை செய்தால் மற்ற தோழர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் உதவி புரியவும், பிரச்சினைகளைப் பற்றி மேலும் சிறந்த போதம் பெறுவதற்கும் ஆன கொள்கையை பரிபூரணமாக அமல் நடத்த வேண்டும். முறைப்படுத்திய ஆராய்ச்சி, கல்வி முதலியவற்றின் மூலம் தாமே விசயங்களை பற்றியும், பிரச்சினைகளைப் பற்றியும் தெளிவு பெற வேண்டும். அதே சமயத்தில், முறைப்படுத்திய, நன்கு தயாரிக்கப்பட்ட, நன்கு வழிகாட்டப்பட்ட உட்கட்சி போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.

முதலாவதாக, தான் சரியான கொள்கையை கடைப்பிடித்தால் மட்டும்தான், மற்றவர்களின் தவறுகளைத் திருத்த முடியும் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் சரியாக நடந்து கொள்வதின் மூலம்தான் மற்றவர்களின் தவறான நடத்தையைத் திருத்த முடியும். “மற்றவர்களை திருத்துவதற்கு முன்பு முதலில் ஒருவர் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்பது” முதுமொழி.

தான் ஊசலாடாமல் இருந்தால்தான் ஊசலாடுபவர்கள், ஊசலாட்டத்திலிருந்து மீள்வதற்கு உதவ முடியும்.

தான் சரியான கோட்பாடுகள், தத்துவம் கொண்டு, கவசமிட்டிருந்தால்தான், மற்றவர்களுடைய தவறான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் திருத்த முடியும்.

தனக்கு கோட்பாட்டுப் பிரச்சினைகளில் தெளிவான போதமிருந்தால்தான், மற்றவர் குழப்பத்தைத் தெளிவுபடுத்த உதவ முடியும். குறிப்பான பிரச்சினைகளில் நிறைய யதார்த்தமான புள்ளி விவரங்களை தான் சேகரித்திருந்தால், அந்த பிரச்சினைகளை முறைப்படுத்தி கற்றறிந்திருந்தால்தான் மற்ற தோழர்களுக்கும், கட்சிக்கும் உதவிகரமாக இருக்க முடியும்.

ஒரு தோழர் இதைச் செய்யத் தவறினால் முதலிடத்தில் அவரே சரியான கொள்கையை கைக் கொள்ளத் தயாராயில்லையென்றால், சரியான கோட்பாடுகளை கசடறக் கற்றறியவில்லையென்றால், கோட்பாட்டின்படி யதார்த்த நிலைமையை அவர் பரிசீலனை செய்யவில்லையென்றால், முறைப்படுத்தி பிரச்சினைகளை ஆராய்ந்தறியவில்லையென்றால் அல்லது அவருக்கு ஏதும் விசேஷ குறைபாடு இருந்தாலும் சில விசயங்களைப்பற்றி அவருக்கே போதிய அளவுக்கு தெளிவு இல்லாவிட்டாலும், உட்கட்சிப் போராட்டத்தில் பிறரிடமுள்ள தவறை திருத்த முடியாது. இவையெல்லாம் இருந்தும், மண்டைக் கனத்துடன் போராட்டத்தை நடத்துவதில் பிடிவாதம் பிடிப்பார்களானால், முடிவாக அது தவறில்தான் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எதார்த்தமான அசைக்கமுடியாத விசயங்கள் மட்டுமே, நடைமுறையில் பரிசோதிக்கப்பட்ட அனுபவம் மட்டுமே, உண்மை மட்டுமே எல்லாவற்றையும் வெல்லும்.

நமது சுயவிமர்சனமும், உட்கட்சிப் போராட்டமும், கட்சியின் அமைப்பும், ஒருமைப்பாடு, கட்டுப்பாடு, கௌரவம் முதலியவற்றிற்கு தீங்கு தேடுவதற்கோ அல்லது அதன் வேலைக்கு இடுக்கண் தேடுவதற்கோ நடத்தப்படுவதன்று. அதற்கு மாறாக கட்சி அமைப்பையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தவும், அதன் கட்டுப்பாட்டையும் கௌரவத்தையும் உயர்த்தவும், அதன் வேலையைத் துரிதப்படுத்தவும்தான் அவை நடத்தப்படுகின்றன. ஆதலின் உட்கட்சிப் போராட்டம் தன்னிச்சையான போக்கிலே போகவும் அதிதீவிர ஜனநாயக வாதத்திற்கு கொண்டு செல்லவும் விடக்கூடாது; கட்சிக்குள் குடும்பத் தலைவன் தோரணையும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதமும் சரி இரண்டுக்குமே இடமில்லை. கட்சிக்குள் நிலவும் அசாதாரண நிலைமையின் இரண்டு அதி தீவிர பிரதிபலிப்புகள் இவை.

கட்சியின்பாலும், புரட்சியின்பாலும் மாபெரும் பொறுப்புணர்ச்சியுடன் உட்கட்சிப் போராட்டம் நடத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக, உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில், கட்சிக்குள் மாறுபட்ட சித்தாந்தம், கோட்பாடுகளுக்குள் நிகழும் போராட்டமாகும். கட்சியில் வேறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகளுக்குள் எழும் எதிர்ப்பை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெளிவான வரையறுப்பு வகுப்பது இன்றியமையாத அவசியங்கொண்டதாகும். ஆனால் அமைப்பு, போராட்ட வடிவம், பேசும் தோரணை, விமர்சிக்கும் விதம் முதலிய விசயங்களில் கூடுமான வரையில் எதிர்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்; விசயங்களை அமைதியான முறையில் வாதம் செய்யவும் விவாதிக்கவும் தன்னாலியன்ற வரை முயல வேண்டும். அமைப்பு நடவடிக்கைகள் எடுக்காமலிருக்க, அமைப்பு முடிவுகள் எடுக்காமலிருக்க ஆனமட்டும் முயல வேண்டும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், சித்தாந்தத்திலும், கோட்பாட்டிலும் ஐக்கியம் ஏற்படுத்த நாணயமான, மனம்திறந்த உருப்படியான, ஆராய்ச்சி பூர்வ மனோபாவம் காட்டுவதற்கு தோழர்கள் முயலவேண்டும். வேறு வழியில்லை என்ற சந்தர்ப்பங்களில்தான், அத்தியாவசியம் என்று கருதும் பொழுதுதான், நாம் போர்க்குணமிக்க போராட்ட வடிவங்களை கடைப்பிடிக்கக் கூடும்: அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்தலாம். எல்லா கட்சி அமைப்புகளுமே, குறிப்பிட்ட வரையறைக்குள் திருந்தாமல் தவறு செய்து வரும் ஒரு கட்சி அங்கத்தினர் மீது அமைப்பு முடிவு எடுப்பதற்கு பரிபூரண உரிமை உண்டு. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கட்சிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுப்பதும், அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்துவதும் முற்றிலும அவசியமாகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் பேதா பேதம் பார்க்காமலும், தன்னிச்சையாகவும் அமல்படுத்தக் கூடாது.

கட்சி அமைப்புகள் தோழர்களுக்கு மிதமிஞ்சிய தண்டனை விதிப்பதனால் மட்டுமே கட்சிக் கட்டுப்பாடு நிலைநாட்டக் கூடியதன்று. கட்சிக் கட்டுப்பாடு, கட்சி ஐக்கியம் முதலியவற்றை நிலைநாட்டுவதென்பது பிரதானமாக தோழர்களை தண்டிப்பதில் அடங்கியிருக்கவில்லை. (இந்த முறையில்தான் அவை நிலைநாட்டப்பட வேண்டுமெனில்,  கட்சியில் நெருக்கடியிருக்கிறது என்பதையே அது காட்டும்). அதற்குப் பதிலாக அது சித்தாந்த ரீதியாகவும், கோட்பாடு பூர்வமாகவும் உள்ள யதார்த்த ஒற்றுமையிலும், பெருவாரியான கட்சி அங்கத்தினர்கள் உணர்விலும் அடங்கியிருக்கிறது. இறுதியாக நாம் சித்தாந்தம் பற்றியும், கோட்பாடு பற்றியும் முற்றிலும் தெளிவு பெற்று விட்டோமானால், அவசியம் ஏற்படும் பொழுது அமைப்பு முடிவுகள் எடுப்பதென்பது நமக்கு வெகு சுலபமாகும். கட்சி அங்கத்தினரை நீக்குவதற்கும், தானாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கும் ஒரு நிமிடம் கூட பிடிக்காது.

மாறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் சம்பந்தமாக தோழர்கள் காட்டும் பிடிவாதம், எதிர்ப்பு, முன்வைக்கும் வாதங்கள் முதலியன கட்சி அமைப்பிற்கும், பெரும்பான்மைக்கு, மேல்கமிட்டிக்கு கீழ்படிவதிலிருந்து பிரிக்க முடியாதவையாகும். இல்லையென்றால் கட்சி ஐக்கியம், நடைமுறை ஒற்றுமை ஆகிய எதுவுமே இருக்கமுடியாது. தோழர்கள் கோட்பாட்டிற்கு பிடிவாதம் பிடிப்பதினால், எப்பொழுதுமே கட்சியை அமைப்பு ரீதியாக எதிர்க்கவோ, பெரும்பான்மையையும் உயர்மட்ட தோழர்களையும் மீறவோ, சுயேச்சையான நடவடிக்கைகளில் இறங்கவோ கூடாது. அது கட்சியின் அடிப்படை கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதற்கு நாம் கைக்கொள்ள வேண்டிய சரியான முறை பின்வருமாறு:

கோட்பாடு, சித்தாந்தங்கள் சம்பந்தப்பட்ட வரையில் போராடும் பொழுது போர்க்குணம் இருக்க வேண்டும்; அமைப்பு, போராட்ட வடிவம் சம்பந்தப்பட்டமட்டில் போர்க்குணம் எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைவாக இருக்க வேண்டும். பல தோழர்கள் தவறு செய்வதற்கு காரணமென்னவென்றால், ஒரு புறத்தில் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக போராட்டமோ, தெளிவாக வரையறுக்கப்பட்ட வேறுபாடோ இருப்பதில்லை; மறுபுறத்தில் அமைப்பு, போராட்ட வடிவம் சம்பந்தமாகவும் மிதமிஞ்சிய போராட்டம் நடக்கிறது. தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை விவாதிக்கின்றனர்; ஒருவருக்கொருவர் முகங்கொடுத்துப் பேச முடியாமற் போகும் அளவிற்கு சண்டையிடுகின்றனர். அவர்களுக்குள் பெரும் வெறுப்பு தோன்றிற்று; ஆனால் அதிலுள்ள விரோதம் என்னவென்றால் அவர்களுக்குள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெட்டத் தெளிவாக வரையறுப்பு எதுவுமேயில்லை.

மூன்றாவதாக கட்சி, அமைப்பு அல்லது தோழர்கள் வேலை பற்றி செய்யப்படும் விமர்சனம் பொருத்தமானதாகவும், சீராக அமைந்ததாகவும் இருக்க வேண்டும். போல்ஷ்விக் சுயவிமர்சனம், போல்ஷ்விக் அளவுகோலுக்குத் தக்கபடிதான் நடத்தப்படும். மிதமிஞ்சிய விமர்சனம், மற்றவர் குற்றங்குறைகளை மிகைப்படுத்திக் கூறுவது, பேதாபேதமின்றி திட்டுவது எல்லாம் தவறானது. உட்கட்சிப் போராட்டம் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவு உயர்ந்தது என்று அர்த்தமல்ல; அதற்கு மாறாக உட்கட்சிப் போராட்டம் முறையான வரம்புக்குள் நடத்தப்பட வேண்டும். பொருத்தமான அளவுக்குத்தான் நடத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சுவதும் சரி, குறைவதும் சரி, இரண்டுமே விரும்பதக்கதல்ல.

மற்றவர்களுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டும் பொழுதும் விமர்சிக்கும் பொழுதும், தோழர்கள் கேந்திரமான விசயங்களை கிரகித்துக் கொண்டு , முக்கியமான பிரச்சினைகளை வலியுறுத்த வேண்டும். பிரச்சினைகளை மற்றவர்களுக்கு தோழர்கள் முறைப்படியும் தெளிவுடனும் விளக்க வேண்டும். அவ்வகையிலேயே பிரச்சினைகளைத் தீர்க்கலாம். மற்றவர்களுடைய பல்வேறு தவறுகளையும் உண்மையாகத் தோன்றுகிற விசயங்களையும் தோழர்கள் இங்கு ஒன்று அங்கு ஒன்றுமாக எடுத்து கூறி, அவர்களை சும்மா அம்பலப்படுத்தக் கூடாது. நீங்கள் வேண்டுமென்றே குற்றங்கள் காண்கிறீர்கள், தாக்குகிறீர்கள், அடி கொடுக்கிறர்கள் என்று மற்றவர்கள் எண்ணுவதற்கும் இடமளிக்கும்.

ஒரு தோழரை சீர்தூக்கி பார்க்கும் பொழுதும், விமர்சிக்கும் பொழுதும், அவருடைய குற்றங்குறைகளை மட்டும், ஏதோ அவ்வளவு தான் என்பது போல் சுட்டிக்காட்டக்  கூடாது. அவருடைய சாதனைகளுக்கும், பாராட்டுவதற்குரிய கலைகளுக்கும், நல்ல குணாம்சங்களுக்கும், அவருடைய கருத்துக்களில் சரியான கருத்துக்களுக்கும் கூட மதிப்பு கொடுக்க வேண்டும். அவருடைய கருத்தில் ஒரு பகுதி, அது மிகச் சிறிய பகுதியேயாயினும் கூட சரியானதாயிருந்தால் அதை அவருக்குச் சுட்டிக் காட்ட வேண்டும். அதைச் சொல்லாமல் இருக்கக்கூடாது. அவ்வாறு செய்தால்தான், அவரைப் பற்றி பூரணமான நிர்ணயிப்பும் விமர்சனமும் செய்ய முடியும்; தன்னை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு உதவமுடியும்; அவருக்கு உணர்த்த முடியும்.

உட்கட்சிப் போராட்டத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய முறை இதுதான்; “அளவுக்கு மிஞ்சுதல், குறைதல்” முறைக்கு மாறாக பொருத்தமான விமர்சனம்; பொருத்தமான மனோபாவம் பொருத்தமான வரைமுறையைக் கைக்கொள்ளுவதாகும்.

(தொடரும்)