னோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டிருந்த  எழுத்தாளர் அருந்ததி ராயின் ‘தோழர்களுடன் நடைபயணம்’ என்ற புத்தகம் பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ABVP மற்றும் வேறுசிலரிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்தப் புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து  நீக்கப்பட்டத்திற்கு பலதரப்புகளிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பிச்சுமணி பிரண்ட்லைன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் “…. இது போன்ற சர்ச்சைக்குள்ளான மற்றும் ஆட்சேபிக்கதக்க புத்தகத்தின் வாயிலாக நாம் மாணவர்களை தவறாக வழிநடத்தக்கூடாது……” என்கிறார். “….அருந்ததி ராயின் மற்ற புத்தகங்களும்  பாடத்திட்டதிலிருந்து நீக்கப்படும்….” எனக் கூறியுள்ளார். ABVP மற்றும் RSS-BJP-ன் ஆதரவாளர்களோ, இந்த புத்தகம் இந்திய ராணுவத்தைப் பற்றி தவறானக் கண்ணோட்டத்தை மாணவர்களிடம் விதைக்கிறது என்றும் நாட்டின் நலன்களுக்கே எதிரானது என்றும் மாவோயிசக் கருத்துக்களை பரப்புகிறது என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பதறுகின்றனர். இவரகள் யாரும் இந்த புத்தகத்தினை முழுமையாக வாசிக்கவில்லை என்பது  இவர்களது வாதங்களில் இருந்தே தெரிகிறது.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !
♦ அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?

மேலும் அருந்ததிராயின் புத்தகம் உள்நோக்கம் கொண்டது என்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை மாணவர்களிடம் திணிக்கும் முயற்சியென்றும் RSS-BJP  கூறுகிறது. அப்படியானால் குஜராத் பள்ளி பாடத்தில் வேத-புராணக் கதைகளை தனி பாடமாக சொல்லித் தருவதற்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையை கட்டாயப் பாடமாக்கியதற்கும் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் காட்டாயம் என்றதற்கும் NCERT பாட புத்தகத்திலிருந்து சாதி-வர்ணம் பற்றிய பகுதிகளை நீக்கியதற்கும் உள்நோக்கம் இல்லையா? பார்ப்பனியக் கருத்துக்களை பன்முக இந்தியாவின் மீது திணிப்பதின் மூலம் இந்துராஷ்ட்ரா-விற்கான பொதுகருத்தை உருவாக்க வேண்டுமென்ற திட்டத்தோடு செயல்படும் இவர்கள் ஆதிவாசி மக்களின் துயரங்களைக் கூறும் அருந்ததி ராயின் புத்தகத்தை கருத்தியல் திணிப்பு என்று குறைகூறுவது மிகவும் நகைப்பிற்குறியது.

துணைவேந்தரோ அல்லது RSS-BJP கும்பலோ பதறுகின்ற அளவிற்கு இது ஒன்றும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல. பல சமூக அறிவியல் அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகமும் கூட. இந்த சர்ச்சைக்கு பிறகு இதன் e-copy ஏறத்தாழ பத்து லட்சம் பிரதிகள் பதிவிரக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் இரண்டாம் பதிப்பு வெளிவர உள்ளதாகவும் கூறுகின்றனர். வகுப்பறையில் வெறும் 20 மாணவர்கள் மட்டுமே படித்துகொண்டிருந்த புத்தக்கத்தை தற்போது லட்சக்கணக்கானோரிடம் கொண்டு சென்றுள்ளனர் சங்கிகள்.

***

2000-ம் ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை வளர்ச்சி என்ற போர்வையில் கொண்டுவந்தது மத்திய அரசு. அதில் மிக முக்கியமானது கனிம வளங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பது என்ற முடிவு. கனிமவளங்கள் மத்திய இந்திய மாநிலங்களான சார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மேற்குவங்கம் அகிய பகுதிளில் மிக அதிகம். இதனை கொள்ளையடிப்பதற்காக இம்மாநிலங்களின் காடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஆதிவாசிக் கிராமங்களை விரட்டுவதற்காக பல சட்டவிரோதமான வேலைகளை அரசின் மறைமுக உதவியுடன் போலீஸ் அரங்கேற்றியது.

சல்வாஜூடும் கலைப்பு: உச்ச நீதிமன்றத்தின் கோணல் பார்வை!நூற்றுக்கணக்கான ஆதிவாசி கிராமங்களை எரித்தது, பல நூறு ஆதிவாசி மக்களை மவோயிஸ்ட் என்று சொல்லி கொன்றது, நூற்றுக்கணக்கான ஆதிவாசி பெண்களை பாலியல் வன்முறை மற்றும் கொலை செய்தது, கிராம மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தது என போலீசும் இராணுவத் துணைப்படையும் செய்த அட்டுழியங்களின் பட்டியல் மிக நீளமானது. இதற்காகவே ஆதிவாசி இளைஞர்களைக் கொண்டு சல்வா ஜூடும் மற்றும் கோயா கமாண்டோ என்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இவர்களின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைளையும் கண்டித்த உச்சநீதி மன்றம் இவ்விரு அமைப்புகளையும் கலைக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றமே ஒப்புக்கொண்ட உண்மையை மாணவர்கள் தெரிந்து கொண்டால்தான் என்ன?

கார்ப்பரேட்களின் நலன்களுக்காக போலீசு மற்றும் துணை ராணுவப்படைகளால் துன்புறுத்தப்பட்டு தங்களுடைய சொந்த கிராமங்களிலிருந்து விரட்டப்பட்ட ஆதிவாசி மக்களினுடைய துயரங்களின் தொகுப்பே இந்நூல். சமூக அறிவியல் துறையில் மதிக்கதக்க ஆய்வு இதழான Economic and Political Weekly இந்த புத்தகத்தை பற்றிக் கூறும் போது “இது பெரிய கார்ப்பரேட்டுகளின் நலன்கள், இந்திய அரசு மற்றும் போலீசின் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகிறது” என்று எழுதி இருந்தது.  கார்ப்பரேட்களின் பாதுகாவலாக இருக்கும் RSS-BJP கூட்டம், அவர்களுடைய நலன்களுக்காக போலீஸ் உதவியுடன் மக்கள் கொல்லப்படுவதை அம்பலப்படுத்துவதைக் கண்டு பதறுகிறார்கள். இதனை அம்பலப்படுத்துபவர்களை தேசவிரோதிகள் என்று முத்திரைக் குத்துகிறார்கள். இதனை திசைத் திருப்ப மக்களிடமோ தேச வெறியையும் சாதி-மத வெறியையும் வேத-புராணக் குப்பைகளையும் பரப்புகின்றனர்.

*******

வகுப்பறை என்பது பல்வேறு கருத்துகளையும் சித்தாந்தங்களையும் விவாதம் செய்யக்கூடிய இடம். இது போன்ற விவாதங்களில் இருந்தே சமூக அறிவைப்பெற முடியும். இதிலிருந்தே புதிய சிந்தனைகளும் உருவாகும். ஆனால் இங்கோ என்ன படிக்க வேண்டும் என்பதை சங்க பரிவாரங்கள் கட்டளையிடுகின்றனர். அதை கல்லூரி நிர்வாகம் தன்னுடைய முதன்மைப் பணியாகச் செய்துமுடிக்கிறது. இந்தியா முழுவதும் இது போன்ற வேலைகளை ஒருங்கிணைந்த முறையில் ABVP செய்து வருகிறது.

கடந்த மாதம் கோவா மாநிலத்திலுள்ள தனியார் சட்டக் கல்லூரியில்(VM Salgaocar College of Law) பணிபுரியும் உதவிப் பேராசிரியரான சில்பா சிங் மீது ABVP யினர் கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அப்புகாரில், பேரா. சில்பா சிங் தன்னுடைய அரசியல் அறிவியல் வகுப்பில் மனுஸ்மிருதி, ரோகித் வெமுலா, தாபோல்கர், கல்புர்கி, மாட்டுக் கறி ஆகியவற்றைப் பற்றி பேசியதாகவும் இவை இந்து மதத்திற்கு எதிராக உள்ளதாகவும் பேரா. சில்பா சிங் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தது.

ABVP-ன் நடவடிக்கைக்கு கல்லூரி பேராசிரியர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் வரவே பேரா. சில்பா சிங் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது. ஆனால் இங்கோ அருந்ததி ராய் புத்தகம் நீக்கப்பட்டதிற்கு ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களிடமிருந்து சிறு சலசலப்புக் கூட வரவில்லை (ஒரு சில பேராசிரியர்களைத் தவிர).  சில தினங்களுக்கு முன்பு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் துணைவேந்தரை சந்தித்து நீக்கப்பட்ட புத்தகத்தை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

படிக்க :
♦ ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

வகுப்பறைகள் காவிகளின் மனம் நோகாதப்படி பாடம் நடத்த வேண்டிய ‘புனிதத் தளமாக’ மாற்றப்பட்டுவருகிறது. டெல்லி பல்கலைக்கழக பாடத்திலிருந்து இராமாயணம் பற்றிய கட்டுரையை நீக்கியது, உயர்கல்வி பாடத் திட்டங்களில் வேத-புராணக் கதைகளை கட்டாய பாடமாக்கியது, உயர்கல்வியின் அனைத்து மட்டங்களிலும் RSS – BJP ஆதரவாளர்களையே (பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் உட்பட) பணியமர்த்தி இந்துத்துவ-கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்துவது, இந்திய வரலாற்றை இந்துத்துவா திட்டத்திற்கேற்றவாறு திருத்தி எழுதுவது, கல்லூரி / பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் தலைவர்களையும் முற்போக்கு பேராசிரியர்களையும் மிரட்டுவது அல்லது பொய் வழக்குகளின் மூலம் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்வது என சங்கப்பரிவாரங்களின் செயல்திட்டங்கள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

பள்ளி/கல்லூரிகளை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது அவற்றை தங்களுடைய பாசிசக் கருத்துக்களை பரப்புவதற்கான தளமாக பயன்படுத்துவது என்பது பாசிஸ்டுகளின் செயல் வடிவங்களில் மிகவும் முக்கியமானதாகும். இதனை அதிகாரத்தின் உதவியோடு ஒருங்கிணைந்த முறையில் கடந்த ஆறு ஆண்டுகளாக RSS – BJP கூட்டம் செய்து வருகிறது. எழுத்தாளர் அருந்ததி ராய்-ன் புத்தகத்தை நீக்கியதும் இதன் தொடர்ச்சியே.  இதனை முறியடிப்பதும் அறிவியல் கண்ணோட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதுமே ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் முன்னுள்ள உடனடிச் சமூகக் கடமையாகும்.

ராஜன்
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு
தொடர்பு : ccce.eduall@gmail.com
ஆதாரம் : The Wire, Frontline, The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க