ரு ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமைக் குற்றம் தொடர்பான வழக்கொன்றில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நீர்த்துப் போகச் செய்தது உச்ச நீதிமன்றம்.

அத்தீர்ப்புக்கு எதிராக நாடெங்கும் தாழ்த்தப்பட்டோர் நடத்திய போராட்டங்களில், குறிப்பாக பா.ஜ.க. ஆண்ட ம.பி., உ.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். தாழ்த்தப்பட்டோரின் இத்தியாகங்களுக்குப் பிறகுதான், மோடி அரசு அத்தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றி, அச்சட்டத்தின் முந்தைய நிலையைப் பாதுகாத்தது.

படிக்க :
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !
♦ சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

எனினும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் தனது நரித்தனத்தை உச்ச நீதிமன்றம் கைவிட்டுவிடவில்லை. ‘‘ஹிதேஷ்ஷர்மா எதிர் உத்தர்கண்ட் அரசு’’ என்றொரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘‘தாழ்த்தப்பட்டோரைப் பலரும் பார்க்கும் விதத்தில் சாதிரீதியாக அவமானப்படுத்தினால்தான் தீண்டாமைக் குற்றமாகும். யாரும் பார்க்காத இடத்தில், பாதிக்கப்பட்டவர் தனது வீட்டிற்குள் தனியே இருக்கும்போது அவரை அவமதித்தால், அது தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வராது’’ எனக் குறிப்பிட்டுக் குற்றஞ்சுமத்தப்பட்டவரை விடுதலை செய்திருக்கிறார்.

யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பெழுதியிருக்கும் நீதிபதி, பெண்களுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குடும்ப வன்முறைகள் யாவும் யாரும் பார்க்காத வண்ணமும் தனிமையிலும் நடப்பதால், அவற்றையும் குற்றமாகக் கருத முடியாது எனக் கூறத் துணிவாரா? அரசியல்வாதிகளும் நீதிபதிகளும் யாரும் பார்க்காத வண்ணம் காதும்காதும் வைத்தாற்போல இலஞ்சம் பெறுவதால், அவர்களைத் தண்டிக்காமல்தான் விட்டுவிடமுடியுமா?

நீதிபதி நாகேஷ்வர ராவ்

உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் அனைத்தும் நாடாளுமன்றம் / சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களுக்கு இணையானவை. எனவே, இத்தீர்ப்பு நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால், தாழ்த்தப்பட்டவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்க முயலும்போது, முதலாவதாக, பலரும் பார்க்கும் விதத்தில்தான் சாதிரீதியாக அவமதிக்கப்பட்டேன் என்பதை அவர் சாட்சியங்களின் மூலம் நிரூபித்தாக வேண்டிய நிலை ஏற்படும். அந்த சாட்சியத்தை போலிசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். சாட்சி தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அச்சாட்சியம் போலிசு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகமுண்டு. ஆதிக்க சாதிவெறியர்கள் அல்லது அச்சாதியில் பிறந்தவர்கள் சாதிப் பற்று அல்லது பயத்தின் காரணமாகச் சாட்சியம் சொல்ல முன்வரமாட்டார்கள். இதனால் புகார் நிலையிலேயே அத்தீண்டாமைக் குற்றம் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடும்.

‘‘இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகேஸ்வர ராவ் இட ஒதுக்கீடுக்கு எதிராகத் தொடர்ந்து உத்தரவுகளை வழங்கிவருவதாகவும், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை அல்ல எனத் தீர்ப்புக் கூறியவர் இந்நீதிபதிதான்’’ என்றும் சுட்டிக் காட்டுகிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

நீதிபதி நாகேஸ்வர ராவ் விதிவிலக்கல்ல; உச்ச நீதிமன்ற நீதிபதிகளுள் பெரும்பான்மையோர் அல்லது அனைவருமே நாகேஸ்வர ராவின் மனநிலையில் இருப்பதையும் அந்நிறுவனத்துக்குச் சமூக நீதி, இயற்கை நீதி என்பதெல்லாம் எட்டிக்காயாகிவிட்டதையும் பல்வேறு தீர்ப்புகள் வழியாக எடுத்துக்காட்ட முடியும்.

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அதன் புத்தி போகாது என்பார்கள். அந்தப் பழமொழி பார்ப்பன − உயர்சாதி ஆதிக்கம் நிறைந்த உச்ச நீதிமன்றத்துக்கும் பொருந்தும்.

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க