முழு ஊரடங்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எனக் கடந்த ஏழெட்டு மாதங்களில் விதவிதமான ஊரடங்குகளை இந்திய மக்கள் அனுபவிக்க நேர்ந்த பிறகும் கரோனா நோய்த் தொற்றை மத்திய, மாநில அரசுகளால் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. நவம்பர் மாத மத்தியில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 இலட்சத்தைத் தாண்டியும் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இந்நோய்த் தொற்று சமூகப் பரவல் நிலையை எட்டிவிட்டதா என்ற கேள்விக்கு இதுவரை இந்திய அரசு எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. அதேசமயத்தில் இந்நோய்த் தொற்று மிகத் தீவிரமாகப் பரவிவந்த மாதங்களில்கூட, இந்தியாவில் இந்நோய்த் தொற்று சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என்றுதான் மட்டையடியாகக் கூறி வந்தன மத்திய, மாநில அரசுகள்.

அதேசமயத்தில், இந்நோய்த் தொற்றின் பரவும் வேகம் அதிகரிக்கத் தொடங்கிய ஏப்ரல், மே மாதங்களில், அப்பரவலுக்குக் காரணம், ‘‘கரோனா ஜிகாத்’’ என்றொரு கண்டுபிடிப்பை அவிழ்த்துவிட்டன சங்கப் பரிவார அமைப்புகள். சங்கிகள் முஸ்லிம் வெறுப்பு திரியைப் பற்ற வைத்தவுடன், அதற்குக் கை, கால், மூக்கு வைத்து எழுதத் தொடங்கின ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள். குறிப்பாக, தமிழகத்தில் தினமணியும், தினமலரும் சங்கிகளே தோற்றுப்போகும் வண்ணம் கரோனா பரவலை முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி எழுதின. ‘‘இதை (கரோனா பரவலை) மதப் பிரச்சினை ஆக்கக்கூடாதெனக் கூறி அடக்கி வாசிக்க முயலுவது ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்’’ என ‘‘மன்னிக்க முடியாத குற்றம்!’’ எனத் தலைப்பிட்டுத் தலையங்கமே தீட்டியது, தினமணி. (தினமணி, 04.04.2020)

தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் டெல்லி அரசால் வெளியேற்றப்படும் காட்சி.

இந்திய முஸ்லிம்கள் மீது இப்படியொரு அபாண்டமான பழியைச் சுமத்துவதற்கு சங்கிகளுக்கும் தினமலம்களுக்கும் கையில் கிடைத்த சாக்கு, தலைநகர் டெல்லி−நிஜாமுதின் பகுதியில் மார்ச் 13 முதல் 15−ம் தேதி வரை நடந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பினரின் மாநாடு.

முஸ்லிம் மதம் சார்ந்த இம்மாநாடு அரசுக்குத் தெரியாமல் சட்டவிரோதமாக நடந்த மாநாடு அல்ல. இம்மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் மட்டுமின்றி, பல்வேறு முஸ்லிம் நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்து கலந்துகொள்வார்கள் என்பதும் அரசுக்குத் தெரியும். அப்படி வந்தவர்களுக்கு விசா அளித்து, விமான நிலையத்திலேயே கரோனா பரிசோதனை நடத்தி முடித்து அம்மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளித்ததும் மைய அரசுதான். மேலும், மாநாடு முடிந்த பிறகு, மாநாட்டுப் பிரதிநிதிகள் முஸ்லிம்கள் மத்தியில் மதப் பிரச்சாரம் செய்வதற்காக இந்தியாவெங்கும் பயணிப்பார்கள் என்பதும் மைய அரசிற்குத் தெரியும்.

இம்மாநாட்டின் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்குவதற்கு முன்பே, அதாவது ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே கரோனா உலக அளவில் பரவக்கூடிய எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துவிட்டது. அதற்கடுத்த பிப்ரவரி மாதத்திலேயே எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரசு கட்சியின் ராகுல் காந்தி கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்திலேயே கேள்வி எழுப்பினார். இம்மாநாட்டை அனுமதிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு மோடி அரசிற்குப் போதிய கால அவகாசம் இருந்தும், மாநாடு குறித்து மட்டுமின்றி, இந்தியாவில் கரோனா பரவலைத் தடுப்பதற்கு எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் அவரது அரசு எடுக்கவில்லை. குறிப்பாக, கரோனா நோய்க் கிருமியை இறக்குமதி செய்யும் அபாயம் கொண்ட சர்வதேச விமானப் போக்குவரத்துகூட மார்ச் 23 அன்றுதான் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மோடி அரசு இப்படி அலட்சியமாக இருந்ததற்கு வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மத்தியப் பிரதேச காங்கிரசு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும், தனது தனிப்பட்ட புகழுக்காக அமெரிக்க அதிபர் டிரம்பை அழைத்து வந்து குஜராத்தில் பிரம்மாண்டமான வரவேற்பு விழா நடத்துவதற்கும்தான் முன்னுரிமை கொடுத்து வந்தது மோடி அரசு.

இம்மாநாடு தொடங்கிய நாளன்றுதான் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாளன்றுதான் இத்தடையுத்தரவு ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது எனத் திருத்தப்பட்டது. அதற்கடுத்த பத்து நாட்களில் மக்கள் ஊரடங்கு, நாடு தழுவிய ஊரடங்கு, பொதுப் போக்குவரத்துக்குத் தடை என மக்களின் நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இந்தப் பத்து நாட்களில் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர். மாநாடு நடந்த பள்ளிவாசலிலேயே தங்கியருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊரடங்கின் காரணமாகத் தமது சொந்த ஊருக்கும், நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாத இக்கட்டில் சிக்கிக் கொண்டனர்.

கரோனா பரவத் தொடங்கிய சமயத்தில் (பிப்.21) உள்நாட்டு மற்றும் சர்வதேச ‘இந்துக்கள்’ பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற ஜக்கியின் மகா சிவராத்திரி கூத்து.

இம்மாநாட்டில் கலந்துகொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய முஸ்லிம்களுள் பலருக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும்; மசூதியிலேயே தங்க நேரிட்ட பலருக்கும் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டதற்கு இந்தப் பின்னணிதான் காரணம். இதில் தனக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை எனக் கையைக் கழுவிவிட்டு, முழுப் பழியையும் முஸ்லிம்கள் மீது போட்டது மைய அரசு. தனது தவறுக்கு யாரையாவது பலிகிடா ஆக்க வேண்டும் என்ற தந்திரத்தையும் தாண்டி, மோடி அரசின் முஸ்லிம் வெறுப்பு அரசியல்தான், கரோனா ஜிகாத் என்ற இந்த அவதூறுக்கு அடிப்படையாகும்.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகுதான் உ.பி. முதல்வர் ஆதித்யநாத், தனது படை பரிவாரங்கள் சூழ அயோத்திக்கு வந்து ராமர் சிலையை இடமாற்றும் வைபவத்தில் கலந்துகொண்டார். இந்தியாவில் கரோனா அறிகுறி கொண்ட நோயாளிகள் கண்டறியப்பட்ட சமயத்தில்தான், பிப்ரவரி 21 அன்று ஆர்.எஸ்.எஸ்.க்கு நெருக்கமான கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் பல்லாயிரக்கணக்கான இந்துக்களையும் வெளிநாட்டவர்களையும் திரட்டிவந்து மகா சிவராத்திரி களியாட்டத்தை நடத்தினார். மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் மார்ச் 13 அன்று அமிர்தபுரியில் நூற்றுக்கணக்கானரைத் திரட்டி சன்னியாசம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.  ம.பி. காங்கிரசு அரசைக் கவிழ்த்த வெற்றியை நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கொண்டாடினார் பா.ஜ.க. தலைவர் சிவராஜ் சிங் சௌஹான். இந்த நிகழ்வுகளையெல்லாம் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.−ம், தேசிய ஊடகங்களும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டின் மீது மட்டும் பழியைப் போடுவதற்குக் காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கரோனா பரவலுக்கும் தப்லீக் ஜமாஅத் மாநாட்டிற்கும் முடிச்சுப் போட்டு, இந்திய முஸ்லிம்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்ற தீவிரத்தோடு ஆர்.எஸ்.எஸ். அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டதென்றால், அம்மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள், மருத்துவ ஊழியர்களைத் தாக்குகிறார்கள் எனத் தம் பங்குக்கு பா.ஜ.க. அரசுகள் முஸ்லிம்கள் மீது பழிபோட்டன. தனிப்பட்டவர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகள் இந்திய முஸ்லிம்கள் மீதான களங்கமாக மாற்றப்பட்டன.

மேலும், அம்மாநாட்டில் கலந்துகொண்ட உள்நாட்டு முஸ்லிம்கள் மற்றும் வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டம், வெளிநாட்டவர் சட்டம் மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டம் உள்ளிட்டுப் பல்வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் பல மாநிலங்களில் 209 வழக்குகள் தொடுக்கப்பட்டன. தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு தனிமைச் சிகிச்சையில் இருந்துவந்த ஆறு முஸ்லிம்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது, உ.பி. அரசு. தப்லீக் ஜமாஅத் தலைவர் மௌலானா முகம்மது ஸாத் மீது கொலைக் குற்றமாகாத மரண வழக்கு (culbable homicide)ப் பதிவு செய்யப்பட்டது. தப்லீக் அலுவலகங்கள் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டன. இவற்றின் மூலம் ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறுகளுக்குச் சட்டபூர்வத் தகுதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்தன.

தப்லீக் மாநாடு நடைபெற்ற நிஜாமுதீன் பகுதியிலிருந்து வரும் முஸ்லிம்கள் மீது கிருமி நாசினி தெளித்து விலங்குகளைப் போல நடத்திய மாநகராட்சி ஊழியர்கள்.

இந்த அவதூறுகளும், பழி தூற்றலும், வழக்குகளும் இந்திய முஸ்லிம்களுக்குப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. குறிப்பாக, உ.பி. மீரட் நகரிலுள்ள வாலண்டிஸ் புற்றுநோய் மருத்துவமனை முஸ்லிம் நோயாளிகளுக்கு மட்டும் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்கி, விளம்பரம் வெளியிட்டது. காரணம், முஸ்லிம்களை கரோனா குண்டுகள் என ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட அவதூறு பிரச்சாரம். இதேபோன்று இராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவமனை முஸ்லிம் நோயாளிகளுக்கு வாட்ஸ் அப் வழியாக மருத்துவ ஆலோசனை கொடுக்க மறுத்தது. இம்மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு இமாச்சலப் பிரதேசத்திலுள்ள தனது கிராமத்திற்குத் திரும்பிய ஒரு முஸ்லிம் தன்னார்வலர் இந்த அவதூறுகளின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இவை, பானைச் சோற்றுக்குப் பதம் போன்றவை.

மேலும், தப்லீக் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பென்றும், அதில் கலந்துகொண்டவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்றும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தப்லீக் ஜமாஅத்திற்கும் தொடர்பிருக்கிறது என்றும், இந்துக்களை மதம் மாற்றும் நோக்கத்தோடுதான் இம்மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது என்றும் இந்த அவதூறு பிரச்சாரம் அருவெறுக்கத்தக்க அளவில் உச்சத்தைத் தொட்டது.

தினசரிகள், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பொது ஊடகங்களிலும்; முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்ட இந்த அவதூறுகளின், பல்வேறு மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளின் இன்றைய நிலை என்ன?

தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட 29 வெளிநாட்டவர்கள் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆறு முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த மும்பய் உயர்நீதி மன்றத்தின் அவுரங்காபாத் கிளை, அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்துவிட்டதோடு, ‘‘அரசியல்ரீதியில் இயங்கும் அரசாங்கம் பெருந்தோற்றோ, பேரழிவோ ஏற்படும் காலங்களில் பலிகிடாக்களைத் தேடுகிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலிகிடா ஆக்கப்பட்டதற்கான வாய்ப்பிருப்பதைச் சூழ்நிலைகள் மூலம் அறிய முடிகிறது’’ எனத் தனது உத்தரவில் குறிப்பிட்டது.

நீதிபதி டி.வி. நளவாடே.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளுள் ஒருவரான நீதிபதி டி.வி. நளவாடே, ‘‘இந்த வெளிநாட்டு முஸ்லிம்கள்தான் இந்தியாவில் கரோனா பரவியதற்குக் காரணம் என்றொரு பிரச்சாரத்தை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் நடத்த முயன்றிருப்பது, அவர்களை மதரீதியாகத் துன்புறுத்தும் கொடுமையாகும்’’ எனக் குறிப்பிட்டதோடு, ‘‘தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவர் மீதும் வழக்குப் போடும் இந்த முடிவானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக விடப்பட்டிருக்கும் மறைமுகமான எச்சரிக்கையாகும்’’ என இவ்வழக்கின் பின்னுள்ள மோடி அரசின் நோக்கத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

‘‘இந்த வழக்குகள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இந்திய முஸ்லிம்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக எதற்காகவும் எந்தவொரு வடிவிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் விதத்திலேயே இந்த வழக்குகள் புனையப்பட்டுள்ளன’’ என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார், நீதிபதி டி.வி.நளவாடே.

இவ்வழக்கை விசாரித்த அமர்வைச் சேர்ந்த மற்றொரு நீதிபதி ஸேவ்லிகர் நீதிபதி டி.வி.நளவாடேயின் இந்தக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தீர்ப்பின் செயல்பாட்டுப் பகுதியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

‘‘தப்லீக் ஜமாஅத் அமைப்பு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு அல்ல. அம்மதத்தைச் சீர்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் இயக்கம்’’ எனக் குறிப்பிட்டுள்ள அந்த உத்தரவு, ‘‘வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும்கூட, அம்மாநாட்டில் கலந்துகொண்ட எந்தவொரு தன்னார்வலரும் மாற்று மதத்தினரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் நோக்கில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை’’ எனத் தெரிவித்து, தப்லீக் ஜமாஅத் மீது புனையப்பட்ட மத மாற்றம் குற்றச்சாட்டை ரத்து செய்துவிட்டது.

ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவதேவி கோவிலுக்கு வழிபடுவதற்காக வந்த இந்துக்கள் திடீர் ஊரடங்கின் காரணமாகத் தமது ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் அக்கோவிலிலேயே தங்கிவிட்டதைக் கண்ணியமாகக் குறிப்பிட்ட ஊடகங்கள், தப்லீக் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்ததை, மசூதிகளில் வெளிநாட்டு முஸ்லிம்கள் பதுங்கியிருப்பதாகவும் ஒளிந்திருப்பதாகவும் குறிப்பிட்டு அவதூறு செய்தன. அதனை மறுத்திருக்கும் இந்தத் தீர்ப்பு, ‘‘அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவுகள் 25, 20, மற்றும் 21−இன்படி, சட்டப்படியான விசா பெற்று இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்குத் தமது மதக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யும் உரிமை உண்டு’’ எனக் குறிப்பிட்டுள்ளது.

மும்பய் உயர்நீதி மன்றம் மட்டுமல்ல, இது போன்றதொரு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ‘‘தப்லீக் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த வெளிநாட்டு முஸ்லிம்களைச் சிறைப்படுத்தியது அநீதியானது’’ எனக் குறிப்பிட்டதோடு, ‘‘இந்தியாவில் கரோனா பரவலுக்கு அவர்கள் காரணமல்ல’’ எனத் தீர்ப்பு அளித்திருக்கிறது.

படிக்க :
♦ கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள்!
♦ முஸ்லீம்கள் மீதான தாக்குதலைத் தடுக்கச் சட்டம் : குஜராத் முசுலீம்களின் எதிர்பார்ப்பு

கர்நாடகா உயர்நீதி மன்றம் ஒன்பது வெளிநாட்டு முஸ்லிம்கள் மீது போடப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது. தம் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த 44 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பூர்வாங்க ஆதாரமில்லை எனக் கூறித் தள்ளுபடி செய்துவிட்டது அந்நீதிமன்றம்.

மும்பய், சென்னை, டெல்லி, கர்நாடகா உயர்நீதி மன்றங்கள் அளித்திருக்கும் இத்தீர்ப்புகள் கரோனா பரவலை முகாந்திரமாகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்., அதன் கைத்தடி ஊடகங்கள் மற்றும் மோடி அரசு ஆகியவை இணைந்து முஸ்லிம்கள் மீது ஓர் அவதூறுப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளன என்பதை நிரூபித்திருக்கும் அதேசமயம், மதரீதியான அவதூறையும், அடக்குமுறைகளையும் (persecution) ஏவிவிட்ட அக்கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்தவொரு நீதிமன்றமும் பரிந்துரைக்கவில்லை. முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்திருக்கலாம், ஆனால், குற்றவாளிகளுக்குச் சலுகை காட்டப்பட்டிருக்கிறது என்பதும்தான் உண்மை.

பின்குறிப்பு :

கரோனா பரவல் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை காரணமாக இந்த ஆண்டு தீபாவளி நாளன்று டெல்லி உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க, அதுவும் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த உத்தரவுகளெல்லாம் தீபாவளி நாளன்று கழிப்பறை காகிதமாகின. இந்துக்களின் இந்த அலட்சியம், பொறுப்பற்றதனம் குறித்து தினமணியோ, தினமலரோ மன்னிக்க முடியாத குற்றம் எனத் தலையங்கம் தீட்ட முன்வருமா? அப்படி யாராவது எழுதினால், அவர்களை ஆர்.எஸ்.எஸ். கும்பல் சும்மாவிட்டுவிடுமா?

அறிவுமதி

1 மறுமொழி

  1. ஜமாத் கூட்டம் நடத்தி மலேஷியா பாகிஸ்தானில் கொரானா பரவி இருக்கிறது என்று தெரிந்த பிறகும் அரசின் எச்சரிக்கையை மதிக்க வேண்டாம், கொரானா நம்மை ஒன்றும் செய்து என்ற மூட நம்பிக்கையில் கூட்டம் நடத்தினார்கள் பாருங்கள் அவர்கள் தான் ஆபத்தானவர்கள். அதற்கு பிறகு பொய்களையும் அவதூறுகளையும் பரப்பும் வினவு கூட்டங்கள் இன்னும் ஆபத்தானவர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க