குஜராத்தை மதவாத பிரிவினைக்கான சோதனைக்கூடமாக கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்துத்துவ சக்திகள் வெற்றிகரமாக மாற்றியுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் குஜராத் மாநிலத்திலுள்ள முசுலீம்கள் தங்களுடைய பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளும் முனைப்பில், அரசியலமைப்பு வழங்கியிருக்கிற உரிமைகள் குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக குஜராத் சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் கமிட்டி உள்ளிட்ட பல அமைப்புகள், குழுக்கள் அரசியல் கட்சிகளிடம் தங்களுடைய எதிர்பார்ப்புகளை அறிக்கைகளாக தெரிவித்துவருகின்றன. எஸ்.சி. / எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் போல முசுலீம்கள் மீதான கொடூர தாக்குதல்களை தடுக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது அவர்களுடைய கோரிக்கைகளுள் ஒன்று.

குஜராத்தில் இந்துமதவெறியர்கள் நடத்திய இனப்படுகொலைக்கு (குல்பர்க் சொசைட்டி கட்டிடம் எரிப்பு) பலியான இசுலாமியர்கள்.

“முசுலீம்கள் பல ஆண்டுகளாக ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தாங்கள் உடுத்தும் உடைக்காகவும் உண்ணும் உணவுக்காகவும் குறிவைக்கப்படுகிறார்கள். சமுதாயத்தின் ஒரு பகுதியாக தாங்கள் பார்க்கப்படுவதில்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். தீண்டத்தகாதவர்களாக தங்களை அவர்கள் உணர்கிறார்கள்” என்கிறார் குஜராத் சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் கமிட்டியைச் சேர்ந்த முஜாஹித் நஃபீஸ். இந்த அமைப்பு  சிறுபான்மையினர் தொடர்புடைய விசயங்களை பேசுவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ச்சியாக மதக் கலவரங்களை இவர்கள் எதிர்கொண்டுவரும் நிலையில், இவர்களின் முதன்மையான அக்கறை பாதுகாப்பு தொடர்பானதாக இருக்கிறது. அதனால்தான் மத வன்முறைகளுக்கு எதிரான சட்டம் வேண்டும் என இவர்கள் கோருகிறார்கள். மத வன்முறையைத் தூண்டும் போராட்டங்களை தடுப்பது, ஆயுதப்பயிற்சி மற்றும் விநியோகத்தைத் தடுப்பது, போலீசு என்கவுண்டர்களை விசாரிக்க நீதிமன்ற ஆணையத்தை அமைப்பது போன்றவற்றை இவர்கள் கோரிக்கையாக வைக்கிறார்கள்.

“அச்சுறுத்தலும் பயமும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் பல கட்சிகளிடம் எங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்தால் 70% ஆதரவை உடனடியாக தருவோம் என சொல்லிக்கொண்டிருக்கிறோம். இந்துத்துவ சக்திகளிடமிருந்து மட்டுமல்ல, அரசு நிர்வாகத்திடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது” என்கிறார் அல்ப்சன்கியாக் அதிகார் மன்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்  ஷம்ஷாத் பதான்.

ஒடுக்குமுறை புதிய உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் கவனமும் பாதுகாப்பும் மிக முக்கிய அம்சங்களாகிவிடுகின்றன என்கிறார் ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த இக்ரம் மிர்சா.

“உதாரணத்துக்கு, கடந்த சில வாரங்களுக்கு முன் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள செமிராடி என்ற கிராமத்தில் நடந்த சம்பவத்தை பார்ப்போம். ஒரு குற்றவாளியை போலீசு பிடிக்க முயன்றபோது, ஒரு காவலர் காயமடைந்தார். அதைக் காரணம் காட்டி, போலீசு படை 45 முசுலீம் குடும்பங்கள் இருந்த அந்தக் கிராமத்தைச் சுற்றி வளைத்து, வீடுகளை அடித்து நொறுக்கியது. வீட்டில் இருந்த பொருட்களை அழித்தது. சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் மிகப் பெரும் அட்டூழியத்தை நடத்தியது போலீசு” என குஜராத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் முசுலீம்கள் மீதான ஒடுக்குமுறையை கூறுகிறார் இக்ரம்.

தொடர்ந்த அவர், “பாதுகாப்பு மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், தூய்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன.  இந்த சமூகத்தைச் சேர்ந்த 80% பெண்கள் சத்துக் குறைபாடு உடையவர்கள்; காசநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள். முசுலீம்கள் வாழும் பகுதிகளில் நல்ல மருத்துவமனைகளும் பள்ளிகளும் தேவை.  மற்ற மதத்தினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.  அரசியல் அல்லது சமூகம் சார்ந்து நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பொது அரங்குகள் எங்களுக்கு மறுக்கப்படுகின்றன.” என்றார்.

இந்தச் சூழலில் சச்சார் கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில் சம உரிமை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்படுகிறது. அதுபோல, தேசிய சிறுபான்மையின ஆணைய சட்டம் 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்த ஆணையத்துக்கு அரசியலைப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும் எனவும் சிறுபான்மையினர் ஒருங்கிணைப்புக் கமிட்டி கோருகிறது.

அதோடு, மாநில சிறுபான்மையினர் ஆணையம் நாடு தழுவிய அளவில் அமைப்பது கட்டாயமாக்கப்படும் எனவும் இவர்கள் கேட்கின்றனர். குஜராத் மாநிலத்தில் மட்டும்தான் மாநில சிறுபான்மையினர் ஆணையம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அமைக்கப்பட்டு சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களுக்காக பணியாற்ற வேண்டும். குஜராத்தில் உள்ள 11.5% சிறுபான்மையினர் வாய்ப்புகளை இழந்துள்ளதாக அல்ப்சன்கியாக் அதிகார் மன்ச்  கூறுகிறது.

மற்றொரு முக்கியமான பிரச்சினையாக, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள், சாதியை சேர்ந்தவர்களுக்கிடையே நடக்கும் திருமணங்கள் செய்கிறவர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். மதம், சாதி, பாலின அடிப்படையில் பிரிவினைகளை உண்டாக்குகிறவர்களை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் இவர்கள் கோருகிறார்கள்.

கடந்த காலங்களில் நடந்த மதக் கலவரங்கள் காரணமாக வீடு, சொத்துக்களை இழந்தது, வாழ்வாதாரத்தை இழந்தது ஆகியவற்றுக்கு போதிய நிவாரணம் பெறாமல் உள்ளனர் குஜராத் முசுலீம்கள். மத்திய அரசு அளவில் இதற்கென கொள்கைகள் வகுக்கப்பட்டு, அது மாநிலத்தில் அமலாக்கப்படவேண்டும் எனவும் இந்த அமைப்பினர் கோருகின்றனர்.

சிறுபான்மையினர் மாநில பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கி, அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதும் இவர்களுடைய கோரிக்கையாக உள்ளது.  சிறுபான்மையினர் நிதி உதவி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டு சிறுதொழில் கடன்கள் மற்றும் வழிகாட்டுதலைத் தரவேண்டும் எனவும் கேட்கின்றனர்.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
இறுதித் தீர்ப்பு : 2002 குஜராத் இனப்படுகொலை ஆவணப்படம்

அரசியல் தீண்டத்தகாதவர்களாக தாங்கள் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த சமூகம் தன்னைபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் சேர்த்து அரசியல் வெளியில் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்டம் வேண்டும் எனக் கேட்கிறது.

மாநிலத்திலும் மத்தியிலும் உள்ள கட்சிகள் தங்களுடைய கோரிக்கைகளை பரிசீலிக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், இவர்களுடைய கோரிக்கைகளில் ஒரு சிலதாவது நிறைவேற்றப்பட்டால், தொடர் தாக்குதலுக்கு, ஒடுக்குமுறைக்கு உள்ளான குஜராத் முசுலீம்களுக்கு அது நீண்ட வழியை ஏற்படுத்திக்கொடுக்கும்.


கட்டுரை : ராஜீவ் கன்னா
தமிழாக்கம் : கலைமதி
நன்றி :
The Wire


இதையும் பாருங்க…

நெருங்குவது காவி இருளடா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க