வாட்சப் பயனாளர்கள் அனைவருக்கும் மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே வாட்சப்பின் மேம்படுத்தப்பட்ட விதிமுறைகள் திரையில் தோன்றி, அதை ஏற்பது (Agree) அல்லது பின்னர் முடிவு செய்வது (Not Now) என்ற இரு முடிவில் ஏதேனும் ஒன்றை முடிவு செய்யுமாறு கேட்டு வருகிறது. பெரும்பாலானோரும் அதனை மற்றுமொரு அறிவிப்பாகக் கருதி ஏற்பது (Agree) என்பதை தேர்ந்தெடுத்துக் கடந்து சென்று விடுகின்றனர்.

ஆனால் இதில் மிகப்பெரும் தனிமனித சுதந்திர மீறல் நடந்திருக்கிறது என சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் கூறி வருகின்றன. அப்படி என்னதான் தனிமனித சுதந்திர மீறலை செய்யப் போகிறது வாட்சப் ?

வாட்சப் செயலியை அறிமுகம் செய்த நிறுவனத்தைக் கடந்த 2014-ம் ஆண்டு முகநூல் நிறுவனம் வாங்கியது. வாங்கிய பின்னர், வாட்சப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் பல்வேறு வசதிகளை மேம்படுத்தியது இந்நிறுவனம்.

படிக்க :
♦ செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?
♦ வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !

குறிப்பாக நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை துவக்கம் முதல் சென்று சேரும் இடம்வரையிலான என்கிரிப்சன் போன்ற வசதிகள், இத்தகவல்கள் இடையில் ஒட்டுக் கேட்கப்படாமலும், திருடப்படாமலும் காப்பதற்கான வசதிகள் அனைவரையும் கவர்ந்தது.

இது இந்தச் செயலியை நோக்கி பலரையும் வரவழைத்ததோடு நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தியது. இந்நிலையில இஸ்ரேலைச் சேர்ந்த பெசாகஸ் நிறுவனம் உருவாக்கிய தகவல் திருட்டு மென்பொருள் மூலம் வாட்சப் தகவல்கள் திருடப்பட்ட செய்திகள் வெளிவந்த போதிலும் இதன் பயனாளர்களின் எண்ணிக்கையை அது பெருமளவில் பாதிக்கவில்லை.

தற்போது வாட்சப் நம்மை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தும் நிபந்தனைகள், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.  தற்போதைய நிபந்தனை மேம்பாடு குறித்து வாட்சப்பே தெரிவித்திருக்கும் தகவலின் படி, நாம் வாட்சப் உரையாடல்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து அவற்றை மேலாண்மை செய்வதற்கான உரிமை வாட்சப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இருப்பதாகக் குறிப்பிட்டு இதற்கு ஒப்புதல் கொடுக்குமாறு கேட்கிறது வாட்சப் !

ஒருவேளை ஒப்புதல் கொடுக்க முடியாது என நீங்கள் கூறினால், உங்களால் இனி வாட்சப்பை பயன்படுத்த முடியாது. வாட்சப்பின் இந்த நடவடிக்கையை சட்ட விரோதமானது என்கிறார் இணைய பயனாளர்களுக்கான “லா க்வாட்ரேச்சர் டு நெட்” எனும் அமைப்பின் வழக்கறிஞரான ஆர்தர் மெஸ்ஸாட். பயனாளர்களை தங்களது தனிப்பட்ட தகவல்களை நிர்பந்திப்பதும், அப்படிச் செய்யாதவர்களை செயலியில் இருந்து வெளியேற்றுவதும் சட்டவிரோதமானது என்கிறார்.

வாட்சப் நிறுவனத்தை வாங்கிய ஃபேஸ்புக் நிறுவனம், வாட்சப்பை வாங்குவதற்கு  இரண்டாண்டுகளுக்கு முன்னர், இன்ஸ்டாகிராம் செயலி நிறுவனத்தை வாங்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க கூட்டமைப்பு வர்த்தகக் கமிசன் மற்றும் 48 மாநிலங்கள் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் அனைத்து சமூக வலைத்தளப் பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தி சந்தை ஏகபோகமாக மாறுவதற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.

இது வெறுமனே பொழுதுபோக்கிற்கான, அரட்டைக்கான செயலிதானே என்ற வகையில் சுருக்கிப் பார்ப்பது மிகவும் அபாயகரமானது. நமது சிந்தனை, நமது ரசனை ஆகியவை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை நாம் அடிக்கும் அரட்டைகளிலிருந்தும், நமது தெரிவுகளிலிருந்தும் தகவல்களாய் எடுத்து அதன் மூலம் நமது சிந்தனையில் தங்களது விருப்பத்தைத் திணிக்கும் இலாவகமும் அறிவியல் தொழில்நுட்பமும் தான் சந்தை ஏகபோகத்திற்கான அடுத்தகட்ட முதலீடு.

ஃபேஸ்புக், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட ஒவ்வொரு ஏகபோக நிறுவனங்களும் நமது தகவல்களைப் பெற்று நூதனமாக நம்மைச் சுரண்டவும், நமது மூளையில் தங்களுக்குச் சாதகமான சிந்தனையை விதைக்கவும் போட்டி போட்டு வருகின்றன.

இந்தியாவில் ஃபேஸ்புக் – ஜியோ கூட்டிணைவை இதன் பின்னணியில் பார்க்க வேண்டும்! நமது கைகளாலேயே நமது சிந்தனையோட்டத்தை ஏகபோகங்களின் கைகளில் அள்ளிக் கொடுப்பதைத் தான் இப்போது வாட்சப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக துவங்கி வைத்திருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் முதலாளிகளின் கைகளில் இருக்கும்வரையில் அவை மனித குலத்திற்கு எதிராகவே பயன்படுத்தப்படும் என்பதற்கான சான்று இது !


சரண்
நன்றி : The Wire