வேலை நிமித்தமாக கடந்த 09.01.2021 அன்று கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சரியாக காலை காலை 8.15 மணிக்கு பூந்தமல்லி செல்ல உரிய பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்தில் பெரும்பாலும் வேலைக்கு செல்வோரும் வெளியூரில் இருந்து வந்தவர்களுமாக நிரம்பியிருந்தனர்.

பேருந்து ரோகிணி திரையரங்கைக் கடக்கையிலேயே, “அ.இ.அ.தி.மு.க. வின் வரலாற்று சிறப்பு மிக்க மாநில செயற்குழு – பொதுக்குழுவிற்கு வருகைத்தரும் ……………….. அவர்களே வருக ! வருக !” என வானகரம் வரை சுவரொட்டிகளும் பேனர்களும் சாலை நெடுகிலும் குத்தாட்டமும் நிரம்பி வழிந்தது தெரிந்தது. முதல்வர் பதவியை அடைவது ஒன்றுதான் சாதனை என்பதால் அடிமைகளுக்கு மேற்படி கூட்டம் வரலாறாக தெரிகின்றது.

சாலையின் சென்டர் மிடியத்தில் வாழைக் கன்னு, கரும்பு, கட்சி கொடிகளும் திருவிழா கோலமாக கட்டப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரர் – விசுவாசிகள் பலர் இருந்தாலும் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சரின் (பா.பென்ஜமின்) பாத்திரம்தான் முதன்மையானது என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடிந்தது.

படிக்க:
♦ வெள்ளாற்றில் 180 கோடி மணல் கொள்ளை ! அதிமுக ஆட்சியில் ஒரு துளி !
♦ பாஜகவும் அதிமுகவும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு !

ஏற்கெனவே சொன்னது போல சாலை நெடுகிலும் குத்தாட்டம் – கோஷம் போட கூட்டமும் நிறைந்திருந்ததானது, பொதுப் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் இடையுறாக இருந்தது அதிகார வர்க்கத்திற்கு தவறாக தெரியவில்லை. விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்வுரிமையை பறிக்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அவசியமான போராட்டம் என அனுமதி கோரினால் ஆயிரத்தட்டு நொட்டம் சொல்லி மறுப்பதையே சட்டம் என்பார்கள்.

இவர்களின் சட்டம் அதிகாரம் எல்லாம் கார்ப்ரேட்டுகளின் காலை நக்குவதையும் மக்களின் வாழ்வுரிமையை பறிப்பதையும் இலக்காக கொண்டிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் நாம் காணும் உண்மையாகும்.

வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டால் விரயமாகும் நேரம், அதன் விளைவாக திட்டமிட்ட வேலைகள் தாமதம் ஆவது அல்லது நடக்காமல் போவதால் ஏற்படும் மன உளைச்சலை விளக்க வார்த்தைகள் போதாது. ஏனெனில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்போதுதான் மெல்ல மெல்ல வேலைக்குச் செல்லும் நிலையில் இது போன்ற நிகழ்வால் மக்களின் அன்றைய நாள் பிழைப்பு நாசமாகிறது.

சிறிது தூரம் போவது பின்னர் நிற்பது என்ற நிலை மாறி பேருந்து ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது. பயனிகளிடையே முனுமுனுப்பு துவங்கியதோடு, சிலர் தங்களது வேலை நிலைமையைச் சொல்லி எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் பேருந்து மதுரவாயல் பாலம் அருகே சென்றதும் போலீஸ்காரர் ஒருவர் ஒடி வந்து பேருந்தை நிறுத்தி ஒட்டுநரிடம் போரூர் இராமச்சந்திரா வழியாக செல்லுமாறு கூறினார்.

இதற்கு ஒட்டுநர் மறுத்து காலை நேரம் எல்லோரும் வேலைக்கு செல்கின்றனர், இது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி மறுப்பை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உயர் அதிகாரி போன்ற தோற்றத்தில் இருந்தவர் தனது புருவத்தை உயர்த்தி ஒட்டுநரை பார்த்து “யோவ் நான் DC சொல்றேன் பஸ்ஸை திருப்புய்யா.. என்னய்யா பேசிக்கிட்டு இருக்க” என சொன்னதுடன் தனது கைகளால் (ஒட்டுநர் பக்கம் இருக்கும்) கதவை அடித்து மீண்டும் அதட்டும் குரலில் பேசினார்.

போலீசுக்கும் ஒட்டுநருக்குமான பிரச்சினை, மக்களுக்கும் போலீசுக்குமான பிரச்சினையாக மாறியதும், எதிர்ப்பு பலமாக வந்தது. பத்துக்கும் மேற்ப்பட்டோர் மேற்படி உயர் அதிகாரியை சூழ்ந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மறுபுறம் பேருந்தின் ஜன்னல்களின் வழியாக வசவுகளும் கண்டனங்களும் இலக்கு நோக்கி பாயும் தோட்டா போல பாய்ந்தவண்ணம் இருந்தன.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அதிகாரிகள் வழக்கமான வழியிலே செல்லலாம் என்றனர். இதற்கிடையில் பேருந்து இடது பக்கம் (அதாவது புறநகர் பேருந்துகள் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திரும்பும் இணைப்பு சாலையில்) திரும்பி விட்டபடியால் பேருந்தை முழுவதமாக பின்பக்கமாக எடுத்துதான் திரும்ப வேண்டும். அதற்குகேற்ப தயாரான ஒட்டுநரிடம் மேற்படி அதிகாரி ரிவர்ஸ் வராமாலே முன் பக்கம் இருக்கும் வழியை காட்டி அதில் வண்டியை திருப்புமாறு கூறினார்.

2-3 நாட்கள் தொடர் மழையால் சேறும் சகதியமாக இருந்ததால் ஒட்டுநர் அந்த வழியில் செல்ல தயங்கியவர் கன நேர யோசனைக்கு பிறகு ஒட்டுநர் அந்த சேறும் – சகதியுமான வழித்தடத்தில் பேருந்தை இயக்கினார் பேருந்தும் நகர துவங்கியது.

இதைப் பார்த்த மேற்படி அதிகாரி ஒட்டுநர் தயங்கியபடி பேருந்தை எடுத்ததை ஏதோ மாபெரும் குற்றமாக சித்தரித்து, “தே***யா பசங்களா! பஸ்தான் திரும்பதே இதை ஏன்ட கேக்கமாட்டிங்களா?” என்றும் ஒட்டுநரையும் – நடத்துனரையும் வாய் கூசிப் போகும் அளவு பேசினார். இவர்தான் சென்னை மாநகர் “காவல்”துறையின் துணை ஆணையர் தேன் தமிழ்வாணன்.

இது குறித்து நடத்துனரிடம் பேசுகையில், “எங்கள் இருவரையும் (ஓட்டுநர், நடத்துநர்) செல்போனில் பேட்டோ எடுத்துக் கொண்டனர். பொய்யாக புகார் அளித்து விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கவும் செய்யலாம்” என்றார்.

இப்போது பிரச்சனையை சற்று ஆழமாக பார்க்கலாம். அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரையில், ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தலும் அவர்கள் ஏற்றுக் கொண்ட சட்டப்படி அவசியமாக இருந்தாலும், ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்வதுதானே அதிகாரிகளின் கடமை ?

படிக்க :
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்

மக்கள் என்றால் ரேஷன் கடையில் வரிசையில் நிற்பவர்கள் டாஸ்மார்க் கடைக்கு செல்பவர்கள் வெள்ளத்திற்கு இரையாகிப்போன பயிர்களுக்கு நிவாரணம் கேட்பவர்கள் கூலி உயர்வு கேட்டு போராடும் தொழிலாளர்கள், இவர்களுக்கெல்லாம் எதுவும் தெரியாது; அவர்கள் மந்தைகள் என்பதுதான் அவர்களின் சட்டவியல் மற்றும் நிர்வாக இயலில் மக்கள் என்போருக்கான விளக்கம்.

சில தினங்களுக்கு முன்பு ஆவடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்துக் கொண்டிருக்கையில் காவலர் பயிற்சி பெறும் இளைஞரொருவர் வந்தார். அவரிடம் பணி நிலைமைகள் மற்றும் ஊதியம் குறித்து பேசிக் கொண்டே துத்துக்குடி துப்பாக்கி சுடு குறித்து என்ன நினைக்கின்றீர்கள்? என்றபோது, “அதைப்பற்றியெல்லாம் பேசக்கூடாது” என்றார். ஏன் என்றபோது, “அது அப்படித்தான்.. அதிகாரி சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டும்” என்றார்.

பகுத்தறிவுக்கு பொருந்தாத இவர்களது அதிகாரமும், அதற்கு கட்டுப்பட வேண்டும் என தனது துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மக்களும் கீழ்படிய வேண்டும் என நிர்பந்திப்பது, அடக்குமுறையும் அடிமைத்தனமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர்த்துகிறது. இதன் விளைவுதான் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த படுகொலை முதல் அன்றாடம் நடந்தேறும் அடக்குமுறைகள் வரை அனைத்தும். மொத்தத்தில் தனது மேல் அதிகாரிக்கு விசுவாசமாக நடந்து கொள்வதே அதிகாரப் பிரிவினரின்  நேர்மைக்கான இலக்கணமாக போதிக்கப்படுகின்றது.

நடந்த இந்த சிறு நிகழ்வில் மக்கள் பக்கம் நின்றவர்கள் யார் ? ஓட்டுநரும் நடத்துநரும் தானே அன்றி தேன் தமிழ்வாணன் போன்ற அதிகார வர்க்கத்தினர் அல்ல. அதிகார வர்க்கம் என்றுமே ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே சேவை செய்யும் என்பதோடு, மக்களுகு எதிரானது என்பதையும் இந்தச் சம்பவம் நிரூபித்திருக்கிறது.

பின் குறிப்பு : பேருந்தின் வழித்தடம் 153A  – CMBT TO திருவள்ளுர்; வண்டி எண் TN 01 AN 2972; புறநகர் பேருந்து நிலையத்தில் புறப்பட்ட நேரம் சரியாக 8.15 AM

ஆ. கா. சிவா
காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணி