டந்தாண்டு மார்ச் மாதம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில், டெல்லியின் நிஜாமுதீன் என்ற இடத்தில் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய மதம் சார்ந்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகமுழுவதிலும் இருந்து இஸ்லாமியர்கள் பலர் கலந்து கொண்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத இந்து மதவெறி பாசிச மோடி கும்பலோ, பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்தி, தப்லிக் ஜமாத்தை சேர்ந்தவர்களை “கொரோனா பரப்பிகள்” என்று முத்திரை குத்தி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை செவ்வனே செய்தது.

ABP இந்தி செய்தி நிறுவனமோ Warriors of Covid-19” என்றும் India TV சேனலோ “தற்கொலைப் படையினர்” என்றும் ஜீ நியூஸ், கொரோனா ஜிகாதிகள்” என்றும் தப்லிக் ஜமாத் அமைப்பினருக்கு பல பல பெயர்களையும் சூட்டி, மோடி அரசுக்கு துதிப்பாடின.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது வெறும் தப்லிக் ஜமாத் அமைப்பினர் மட்டுமல்ல. ஏமன், எத்தியோபியா, சோமாலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தங்கள் உயிரைக் காக்க பல்வேறு காலங்களில் இந்தியாவிற்கு வந்திருக்கும் அகதிகள் பலரையும் இந்த சம்பவம் பாதித்துள்ளது. சமுதாயத்தின் ஒரு பிரிவினரால் தாங்கள் “ஜமாத்கள்” என்று அழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் பீடிக்கப்பட்டுள்ளனர். (2019 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான், மியான்மர், திபெத், இலங்கை மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் இருந்து 41,000 அகதிகள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள் என்று UNHCR புள்ளிவிபரம் கூறுகிறது. உள்நாட்டுப் போரினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் 2020-ம் ஆண்டில் முதலிடத்தில் சோமாலியா உள்ளது).

படிக்க :
♦ எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?
♦ அடுத்ததாக தாஜ்மகாலுக்கு குறிவைக்கும் சங்கிகள் !

டெல்லி நீதிமன்றம் 36 வெளிநாட்டவர்களை (தப்லிக் ஜமாத்தினரை) விடுவித்திருந்தாலும், டெல்லியின் கிர்கி பகுதி, மால்வியா நகர், போகல், ஜுங்புரா, வசிர்புர் பகுதிகளில் வாழ்ந்து வரும் பெரும்பாலான அகதிகள் அச்சத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

கொரோனா தாக்குதலுக்கு ஆளாவோம் என்ற அச்சமல்ல; எங்கே எங்களை தப்லிக் ஜமாத்தை சேர்ந்த ஆட்கள் என்று முத்திரைக் குத்திவிடுவார்களோ என்று அஞ்சிதான் மார்ச் முழுக்க நாங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தோம்” என்கிறார் 42 வயதான சோமாலியா அகதி காத்ரா. அவரது 17 வயது மகள் அமிரா, “பல வாரங்களாக நாங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தோம். வீட்டில் இருந்த பொருட்களை வைத்துதான் சமாளித்தோம்” என்றார்.

காத்ரா மற்றும் அவரது மகள்கள் அமிரா, சமிரா ஆகியோர் தென் டெல்லியில் ஒரு சிறிய வீட்டில் ஒரு சோமாலியர் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சோமாலியா உள்நாட்டு போரில் இருந்து தப்பிப் பிழைத்து, போரற்ற ஒரு அமைதியான வாழ்க்கையைத் தேடி 2014-ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த அமைதி அவர்களுக்கு கிடைக்கவில்லை. பிப்ரவரி 2020 CAA எதிர்ப்புப் போராட்டத்தில் கலவரத்தை தூண்டிவிட்டது; அதற்கு அடுத்த மாதமே தப்லிக் ஜமாத் கொரோனாவை பரப்பியது என்று கூறியது அனைத்தும் அவர்களை (அகதிகளை) நிம்மதியிழக்க செய்திருக்கிறது.

டெல்லியில் இருந்த இந்த ஆறு வருடத்தில், நாங்கள் எங்கள் இனத்தின் வாயிலாகத்தான் நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டோம். இப்போதோ எங்களது மதமே எங்களுக்கு ஆபத்தாகிவிட்டது” என்கிறார் காத்ரா. கொரோனா பரப்பிகள் (தப்லிக் ஜமாத்) வரிசையில் தங்களையும் இணைத்துவிடுவார்களோ என்ற பயத்தினால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைம் வழங்கும் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களைக்கூட வாங்க வீட்டை விட்டு வெளியே வர தயங்கி இருக்கிறார்கள்.

இதே பயத்தில்தான் சோமாலியாவைச் சேர்ந்த 29 வயதான முஸ்தாப் அப்துல்லாஹி அகமதுவும் இருக்கிறார். சோமாலியாவில் பாலியல் வன்கொடுமை, கடத்தல், சித்திரவதை மற்றும் கொலைவெறிக்கு ஆளாகும் பானாதிரி பந்தபோ பஹர் சூஃபி (Banadiri Bandabow Bahar Sufi) என்ற சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர் முஸ்தாப். ஹாபர் கிதிர் (Habar Gidir) என்ற இராணுவத்தால் அவரது வீடு கைப்பற்றப்பட்டு, அவரது தந்தை கொல்லப்பட்ட பிறகு 2007 ஆம் ஆண்டு அவர் அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.

கடந்த 2007-ல் சோமாலியா தலைநகர் மொகாடிஷு அருகில் ஒரு அகதி முகாமில் அவர் தங்கியிருந்தபோது பல இளைஞர்களை போலவே இவரையும் அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு கடத்தியது, அங்கிருந்து எப்படியோ தப்பித்து முஸ்தாப் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். 2012-ல் மைசூரில் தன்னை இன ரீதியாக கிண்டல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை ஒரு கும்பல் கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் தனது முகத்தை அறுவைகிச்சை (Maxillofacial Surgery) செய்து சரிசெய்துள்ளார்.

என்னை நன்கு அறிந்த மக்கள் அக்கம் பக்கத்தில் இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்; வெளியே செல்வதை குறைத்து கொண்டேன். ஏற்கெனவே நடந்த டெல்லி கலவரமே எங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிட்டது. மக்கள் அவர்களது சொந்த இனத்தையே கொல்லும்போது வெளிநாட்டு முஸ்லீம்களை சும்மா விட்டுவிடுவார்களா என்ன?” என்கிறார் முஸ்தாப்.

நாங்கள் ஏமனுக்கே திரும்பிச் செல்கிறோம்!

2014 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் இந்தியா வந்திருக்கிறார் எத்தியோபிய அகதி ஹனன் அலி. மாணவர்களால் மட்டுமல்ல ஆசிரியர்களாலும் கிண்டலுக்கும் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளவர் இங்கு அரசு பள்ளியில் தான் எதிர்க்கொண்ட இனவெறி சம்பவத்தை நினைவுக் கூறுகிறார். ஹனன் ஆறாம் வகுப்பு படிக்கையில், “படித்து என்ன சாதித்துவிட போகிறாய்?” என்று ஒரு ஆசிரியர் கேட்டிருக்கிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹனன் தேசிய திறந்த பள்ளி நிறுவனம் ஒன்றில் சேர்ந்திருக்கிறார். ஏற்கெனவே இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஹனனை தப்லிக் ஜமாத் விவகாரம் மேலும் அச்சத்திற்கு தள்ளியிருக்கிறது.

படிக்க :
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்த துண்டு துணியே (அவருடைய பர்தா) திடீரென எங்களை சிக்கலுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது. இதனை நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. ஆனால் இப்போது நாங்கள் எங்கள் இனத்தால் மட்டுமல்ல எங்கள் மதத்தாலும் தாக்கப்படுகிறோம்” என்கிறார் ஹனன்.

ஹனன் தங்கைகள் மற்றும் அவரது தாயார் அமினாக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளன. Maulvis-களை கொரோனா பரப்பிகள் என்று ஊடகங்கள் தூற்றுவதை கண்டு அஞ்சி, அவர்கள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்கோ அல்லது மருந்துகள் வாங்கவோகூட மார்ச் மாதம் வெளியில் செல்லவில்லை. எத்தியோப்பியாவில் நடந்த இனக் கலவரத்தில் தனது கணவனையும் வீட்டையும் இழந்த அமினா, மீண்டும் இதுபோன்றதொரு இழப்பை சந்திக்க நான் விரும்பவில்லை என்கிறார் படபடப்புடன்.

2015 முதல் டெல்லியில் வசித்து வருகிறது 19 வயதான் ஃபர்ஹியா இப்ராஹிமின் குடும்பம். 2011 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து தப்பித்து ஏமனுக்கு சென்ற அவரது குடும்பம், அங்கு ஏடனில் ஏற்பட்ட நெருக்கடியில் தனது தந்தையையும் சகோதரனையும் இழந்து கடைசியாக இந்தியாவிற்கு வந்திருக்கிறது. பல வருட போர்கள், பதட்டங்களுக்கு பிறகு அமைதியான வாழ்க்கையைத் தேடி வந்த இப்ராஹிமின் குடும்பத்திற்கு டெல்லி கலவரமும் தப்லிக் ஜமாத் சம்பவமும் மீண்டும் மனவுளைச்சலை தந்திருக்கிறது.

கலவரங்கள் எங்களை அச்சத்தில் ஆழ்த்தினாலும், அது ஒருநாள் முடிவுக்கு வந்துவிடும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், தப்லிக் ஜமாத் சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அதிகரிக்க தொடங்கியது. இது எந்தளவிற்கு என்றால், எனது தாய் ஏமனுக்கே மீண்டும் திரும்பிவிடலாம் என்று சொல்லும் அளவிற்கு!” என்கிறார் இப்ராஹிமின்.

கட்டுரையாளர் : தாருஷி அஷ்வனி
தமிழாக்கம் : ஷர்மி
நன்றி : The Wire