லகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து 97 ஆண்டுகள் கடந்து விட்டன. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின்.

மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.

அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும் லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது ? எது அவரை புரட்சியை சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது ? அவரது சமகாலத்திய பிற மார்க்சிய அறிஞர்களுக்கும் லெனினுக்கும் என்ன வித்தியாசம் ? இக்கேள்விகளுக்கு தோழர் லெனினின் வாழ்க்கைத் துணைவர் தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையா, லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் ?” என்ற நூலில் பதிலளிக்கிறார்

கற்றலில் இருந்துதான் அனைத்துமே துவங்குகிறது. ஒரு புரட்சியை சாதிக்கவல்லவராக வளர்ந்த லெனின், முதலில் மார்க்சியத்தை எவ்வாறு கற்றறிந்தார் என்பதைப் புரிந்து கொண்டால்தானே அவர் புரட்சியை எவ்வாறு சாதித்தார் எனக் கற்றுக் கொள்ள முடியும். லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் என்பதை விளக்குகிறார் குரூப்ஸ்கையா.

விளாதிமீர் இல்யீச் (லெனின்) இவற்றைத் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை) தமது நூல்களில் பயன்படுத்தினார், இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தார், இவற்றில் தமது குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார். என்கிறார் குரூப்ஸ்கையா.

பொதுவுடைமைக் கல்வியை எப்படிக் கற்க வேண்டும் என்று இளைஞர்கள் மத்தியில் தோழர் லெனின் உரையாற்றியதையும் அந்நூலில் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.

“ “1920-ம் ஆண்டு பொதுஉடைமை இளைஞர் சங்கத்தின் மூன்றாம் அகில ருஷ்ய மாநாட்டில் உரையாற்றும் போது, “மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுஉடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று விளாதிமீர் இல்யீச் கூறினார். ”

ஒரு விசயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதனை அதன் அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்த்தால்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

அதே போல, மார்க்சிய சித்தாந்தத்தைப் படிக்கும் போதும் அதனை அனைத்துக் கோணங்களில் இருந்தும் படித்து தர்க்கரீதியில் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் லெனின்.

மார்க்ஸ் எழுதியவற்றை தோழர் லெனின் படித்த முறை குறித்து குரூப்ஸ்கையா விளக்கும்போது, மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவ முகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார். என்கிறார் தோழர் குரூப்ஸ்கையா.

மேலும், “ மாறுபட்ட கருத்துக்களின் விளைவாகத் தோன்றுவதே உண்மை” என்று ஒரு பிரெஞ்சுப் பழமொழி கூறுகிறது. இல்யீச் (லெனின்) இதை விருப்பத்துடன் மேற்கோள் காட்டினார். தொழிலாளர் இயக்கத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பல வர்க்கத்தினரின் கருத்துக்களையும் வெளிக்கொணர்ந்து அவற்றை எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப்பார்த்து ஆராய்ந்தார். லெனின் அதைத் தமக்கே உரித்தான பாணியில் செய்தார்.என்கிறார்.

பல்வேறு வர்க்கங்களின் கருத்துக்கள் என்பவை, வெவ்வேறு வர்க்கங்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் பிற இயக்கங்கள் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் வைக்கும் விமர்சனங்களாக வெளிப்படுகின்றன.

தங்கள் மீதான விமர்சனங்களையும் கம்யூனிசத்தின் மீதான விமர்சனங்களையும் மார்க்சும் எங்கெல்சும் எப்படி எதிர்கொண்டனரோ, அதற்குச் சற்றும் குறையாமல் தம் மீதான விமர்சனங்களையும், மார்க்சிய சித்தாந்தத்தின் மீதான விமர்சனங்களையும் காத்திரமாக எதிர்கொண்டு கூர்மையாக பதிலளித்தார் தோழர் லெனின்.

தோழர் லெனின் விமர்சனங்களை எதிர்கொண்டது பற்றி குரூப்ஸ்கையா கூறுகையில்,

“ “விமர்சகர்களின்” கூற்றுகளை அவர் கவனமாகப் படிப்பார். மிகவும் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுவார். பிறகு அவற்றை மார்க்ஸின் கருத்துக்களோடு ஒப்பிடுவார். பலதரப்பட்ட விமரிசனங்களை விரிவாக ஆராய்ந்த அவர் அவற்றிற்கு எதிராக முக்கியமான, உடனடியாகத் தீர்க்கவேண்டிய கேள்விகளைத் தொடுத்து அவர்களது வர்க்கத் தன்மையைக் காட்ட அவர் முயன்றார். குறிப்பிட்ட சில பிரச்சினைகளை லெனின் அடிக்கடி வேண்டுமென்றே வலியுறுத்துவார். தொனி எப்படியிருந்தாலும், குறித்த பொருளினின்று நழுவாமல் இருக்கும் ஒருவர் கடுமையாகவும் முரடாகவும் இருக்கலாம் என்பதே அவர் கருத்து.

பி.. ஸோர்கேயின் கடிதங் களுக்கு முகவுரை எழுதும்போது அவர் மேரிங்கை மேற் கோள் காட்டிக் கூறுகிறார்: “மார்க்சும் எங்கெல்சும் ‘நல்ல தொனியுடன்’ எப்பொழுதும் இருக்கவில்லை என்று மேரிங்க் கூறுவது சரிதான். தாங்கள் பிறரைத் தாக்கும்போது, தொனி பற்றி வெகுவாகச் சிந்தனை செய்யாத அவர்கள் தங்களைப் பிறர் தாக்கும்போது விம்மியழவும் இல்லை.” வெடுவெடுப்பான நடை லெனினது இயல்பாகும். அவர் அதை மார்க்ஸிடமிருந்து கற்றார்.

தாமும் எங்கெல்சும் ‘சமூக ஜனநாயகவாதிகளால்’ ‘படுமோசமான’ முறையில் நடத்தப்பட்டு வந்ததை விடாது எதிர்த்ததாகவும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களை அடிக்கடி கடுமையாக வெளியிட்டதாகவும் மார்க்ஸ் கூறுகிறார்” என்று லெனின் எழுதினார். கடுமையான தொனியைக் கண்டு லெனின் பயப்படவில்லை. ஆனால் விமர்சனம் மையப்பொருளிலிருந்து நழுவாமல் இருக்க வேண்டும் என அவர் கருதினார் என்று நினைவு கூர்கிறார் குரூப்ஸ்கையா.

படிக்க :
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
♦ ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

புரட்சி குறித்த மார்க்ஸ் எங்கெல்ஸின் கருத்துக்களை அன்றைய சமூக ஜனநாயகவாதிகள் அப்படியே ரசியாவிற்குப் பொருத்த முயன்றதை வன்மையாகக் கண்டித்தார் லெனின். ரசிய நிலைமைகளையும் சர்வதேச அளவில் முதலாளித்துவம் அடைந்த மாற்றத்தையும் எதார்த்த நிலைமையில் இருந்து மார்க்சிய கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து தீர்வை முன் வைத்தார். அதன் மூலம்தான் ரசியப் புரட்சி சாத்தியமானது.

மார்க்சியத்தின் மூல ஆசான்கள் அவர்களது காலத்திய முதலாளித்துவத்தை எந்தக் கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு முறையிலிருந்து பரிசீலித்தார்களோ, அந்தக் கண்ணோட்டத்தை அந்த ஆய்வுமுறையை மார்க்ஸ் எங்கெல்ஸின் எழுத்துக்களில் இருந்து லெனின் கற்றுக் கொண்டார்.

மார்க்ஸும் எங்கெல்ஸும் அவர்களது சமகாலத்து முதலாளித்துவம் குறித்து எழுதியதை அப்படியே பெயர்த்தெடுத்து ரசியாவில் அதனை லெனின் நடைமுறைப்படுத்தவில்லை. ஒருவேளை லெனின் அப்படியே எடுத்துப் பொருத்தியிருந்திருப்பாரெனில், வரலாறு ஒரு பிளக்கனோவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தோடு மட்டுமே லெனினையும் கடந்து சென்றிருக்கும். இன்று அவர் பாட்டாளி வர்க்க ஆசானாக அறியப்பட்டிருக்க மாட்டார்.

இன்று புரட்சியின் நாயகனாக முதலாளித்துவத்தாலேயே தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இடத்தில் லெனின் நிற்பதற்கான காரணம், அவர் தமது நாட்டினையும், உலக முதலாளித்துவத்தையும் பரிசீலிப்பதில் சரியான சமூக அறிவியலை மார்க்சியத்தை பிரயோகித்தார். அத்தகைய சமூக அறிவியல்பூர்வமான ஆய்வுதான் “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனும் லெனின் எழுதிய நூல்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்ததை முன்வைத்ததோடு லெனின் நின்றுவிடவில்லை. ஏகாதிபத்தியமாக வளர்ந்த முதலாளித்துவத்தின் தன்மைகளையும், அதன் பலவீனமான கண்ணியையும் கண்டறிந்தார். அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.

ரசிய நிலைமைகளில் மார்க்சியத்தைப் பிரயோகிப்பது குறித்த லெனினின் கருத்துக்களையும் தமது நூலில் சுட்டிக்காட்டுகிறார் குரூப்ஸ்கையா. மார்க்சியத்தை ரசியாவிற்குப் பிரயோகிப்பது பற்றி லெனினின் பார்வை குறித்து அவர் எழுதுகையில்,

“ “ஸோர்கேயின் கடிதங்கள்” என்ற நூலுக்கான முகவுரையில் லெனின் கூறுகிறார் :

பிரிட்டிஷ், அமெரிக்கத் தொழிலாளர் இயக்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் கூறிய ஆலோசனைகளை அப்படியே இலகுவாகவும் நேரடியாகவும் ருஷ்ய சூழ்நிலைகளில் உபயோகிக்கலாம் என்று எண்ணுவது, மார்க்சியத்தை அதன் ஆராய்ச்சி முறைகளை அறிந்து கொள்வதற்கோ அல்லது குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தொழிலாளர் இயக்கங்களின் திட்டமான வரலாற்று ரீதியான தனிச்சிறப்புகளை ஆராய்வதற்கோ உபயோகிப்பது அல்ல; மாறாக அறிவுஜீவிகளைப் போல ஏதோ சில்லரை குழுப் பிரச்சினைகளின் கணக்கைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக உபயோகிப்பதாகும்.” ”

நதேழ்தா க்ரூப்ஸ்கையா, “லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார்” என்று குறிப்பிட்டுக் கூறுவதன் பொருள், மார்க்சிடமிருந்து மார்க்சியத்தை இம்மி பிசகாமல் எப்படி கற்றுக் கொண்டார் என்பதுதானே தவிர, மார்க்ஸின் எழுத்துக்களை எப்படி படித்துத் தெரிந்து கொண்டார் என்பது பற்றியது அல்ல.

மார்க்சின் எழுத்துக்களில் இருந்து மார்க்சியத்தை தாம் கற்றுக் கொள்வதை, “மார்க்ஸிடம் ஆலோசனை பெறுவதாக” லெனின் குறிப்பிட்டதை சுட்டிக் காட்டி, இக்கட்டான கொதிப்பான சூழல்களில் அவற்றுக்கான விடை காண்பதற்கு அவர் எப்படி மார்க்ஸை நாடினார் என்பது குறித்தும் இந்த நூலில் சுட்டிக் காட்டுகிறார் குரூப்ஸ்கையா.

மார்க்சின் நூல்களில் இருந்து மார்க்சியத்தைப் பயில்வது என்றால் எப்படி ? மார்க்சியத்தை சமகாலச் சூழலுக்குச் சரியாகப் பொருத்துவது என்றால் என்ன? லெனின் அதைச் செய்தார் என்று வெறுமனே சொல்லிக் கடந்து விடுவது எளிது. ஆனால் எப்படி அதைச் செய்தார் என்பதை புரட்சியை விரும்பும் ஒவ்வொரு தோழருக்கும் கற்றுத்தருவது அவசியமான மற்றும் சற்று அதிக உழைப்பைக் கோருகிற பணியுமாகும்.

அதையும் தமது நூலில் சாரமாக விளக்கியிருக்கிறார் குரூப்ஸ்கையா. மார்க்சியத்தை லெனின் கற்றுக் கொண்ட முறை பற்றிக் கூறுகையில்,

“ …. எந்த ஒரு சூழ்நிலையிலும், அதையத்த சூழ்நிலை சம்பந்தப்பட்ட மார்க்ஸின் நூல்களை எடுத்து, அவற்றைக் கவனமாகப் பகுத்தாராய்ந்து, அந்நூலில் காணப்பட்டுள்ள சூழ்நிலைமையைத் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையுடன் ஒத்துநோக்கி, இவ் விரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் வெளிக்கொணருவதே லெனின் கடைப்பிடித்த கற்றல்முறை. லெனின் இதை எப்படிச் செய்தார் என்பதற்கு 1905 – 07 புரட்சியில் இம் முறையை அவர் கடைப்பிடித்ததே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.”

“ …… (1905-ம் ஆண்டு) புரட்சி தோல்வியடைந்ததையடுத்து ருஷ்யாவில் எழுந்த பிரச்சினைகளை பற்றி மார்க்ஸ் கூறியவற்றையும், இயங்கியல் மற்றும் வரலாற்றுரீதியான பொருள் முதல் வாதத்தையத்த விஷயங்களையும் அதே சமயத்தில் ஆராய்ந்த லெனின் வரலாற்றுரீதியான வளர்ச்சியைக் கற்றறிய இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை மார்க்ஸிடமிருந்து கற்றறிந்தார்.”

“……. இவ்வாறு மார்க்ஸை கற்கும் இந்த முறைதான், மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்துப் போராடவும், அதன் புரட்சிக் கருத்துக்களை உறிஞ்சி சாரமற்றதாக்கும் முயற்சிகளைத் தடுக்கவும் லெனினுக்கு உதவியது. அக்டோபர் புரட்சிக்கு ஏற்பாடு செய்வதிலும் சோவியத் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் லெனினது “அரசும் புரட்சியும்” என்ற நூல் எத்தகைய பிரமாண்டமான பங்கு வகித்தது என்பது நமக்குத் தெரியும். அரசு பற்றிய மார்க்ஸின் புரட்சிகர போதனையை ஆழ்ந்து கற்றதின் அடிப்படையில் தோன்றியதே இந்த நூல்.”

“….. பாட்டாளி வர்க்கம் சர்வாதிகாரத்துக்கு வந்துள்ள சகாப்தத்தில் லெனின், சமூகஉடைமை கட்டுமான வேலைகளில் மார்க்சியத்தைக் கொண்டுவர முடிந்தது. ஏனென்றால் மார்க்ஸ், எகெல்ஸின் ஆராய்ச்சி உரைகளில் கூறப்பட்டுள்ளனவற்றை லெனின் அப்படியே எழுத்துக்கு எழுத்து கடைபிடிக்கவில்லை. மாறாக அவற்றின் புரட்சிசாரத்தை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டார்என்று குறிப்பிடுகிறார் தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையா.

தாம் மார்க்சியத்தைக் கற்று நடைமுறைப்படுத்தி அதனை சாதிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை லெனின். மார்க்சியத்தை தொழிலாளர்களுக்கு எளிமையான வகையில் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தையும் உணர்ந்திருந்தார். புரட்சியை சாதிக்கப் போகிறவர்களும், சமூக மாற்றத்தின் உந்து சக்தியாக இருப்பவர்களுமான தொழிலாளர்களுக்கு மூலதனம் முதல் பகுதியை எளிமையாக விளக்க முற்பட்டார்.

படிக்க :
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

மார்க்சியப் பார்வை என்றும், மார்க்சியத்தின் சாரம் என்றும் நாம் எதைக் குறிப்பிடுகிறோம்? சித்தாந்தமாகட்டும், கட்சி அமைப்பாகட்டும், போராட்டங்களாகட்டும், புரட்சியாகட்டும் இவை அனைத்தையும் இயங்கியல் பொருள்முதல்வாத, வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின்படி பார்ப்பதுவே அதன் பொருளாகும்.

லெனின் இதனை வலியுறுத்தியது பற்றிக் கூறுகையில்,

1921-ல் தொழிற்சங்கங்கள் பற்றிய விவாதத்தில், எந்தப் பொருளையும் சம்பவத்தையும் இயங்கியல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து ஆராய்வதற்கான முறைகளைப் பற்றிப் பேசம் போது லெனின் குறிப்பிட்ட ஒன்றே இதற்குச் சிறந்த உதாரணமாகும். லெனின் கூறினார்: “ஒரு பொருளை உண்மையாகவே அறிய வேண்டுமானால் அதைப் பல கோணங்களிலிருந்து அணுக வேண்டும். அதைப் பற்றிய எல்லாவற்றையும், எல்லா நேரடித் தொடர்புகளையும், எல்லா மறைமுகத் தொடர்புகளையும் ஆராய வேண்டும். இதை நாம் முற்றிலும் தீரச் செய்ய முடியாது. ஆயினும் இவ்வாறு அழ்ந்து ஆராய்வதால் பெருந்தவறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும், உணர்ச்சியற்றுச் செயல்படுவதைத் தடுத்துக்கொள்ளலாம். இது முதலாவது;

இரண்டாவதாக, இயங்கியல் தர்க்கப்படி ஒரு பொருளை அதன் வளர்ச்சி நிலையிலும் ‘இயங்கு நிலையிலும்’ (ஹெகல் அவ்வாறு சில சமயங்களில் கூறினார்), மாறும் நிலையிலும் வைத்துக் காண வேண்டும்

மூன்றாவதாக, ஒரு பொருளை முழுமையாக ‘வரையறுக்கும்’ போது மனித குலத்தின் முழு அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும். இந்த அனுபவம் உண்மையின் அளவுகோலாகவும், அப்பொருளுக்கும் மனிதனின் தேவைகளுக்குமிடையே உள்ள தொடர்பை நடைமுறையில் நிர்ணயிக்கவும் பயன்படுகிறது.

நான்காவதாக, காலஞ்சென்ற பிளெகானவ் ஹெகலைப் பின்பற்றிக் கூறியது போல் ‘புறநிலை உண்மை என்று எதுவும் இல்லை. உண்மை எப்பொழுதும் திட்டவட்டமானது’ என்பதை இயங்கியல் தர்க்க வாதம் கற்பிக்கிறது.”

என்று சுட்டிக் காட்டுகிறார் குரூப்ஸ்கையா.

இங்கு லெனின் பொதுவான சொல்லாடலாக “பொருள்” எனும் பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். நமது சமூக நிலைமைகள், கட்சி, புரட்சி என அனைத்தையும் அந்தச் சொல்லில் பொருத்தி புரிந்து கொள்ளலாம்.

தோழர் லெனின் ஒவ்வொன்றையும் தர்க்கரீதியில், இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார். தமது கற்றலையும் அவ்வழியிலேயே மேற்கொண்டார்.

ஒருவரை நினைவுகூர்வது என்பது அவரது வாழ்வை கிரகித்துக் கொள்ள முயற்சிப்பதுதான். அந்த வகையில் தோழர் லெனினின் 97-ம் ஆண்டு நினைவு கூர்தலில் அவர் மார்க்சியத்தைக் கற்றுக் கொண்ட முறையைக் கற்றுக் கொள்வதற்கு “லெனின் மார்க்ஸை எவ்வாறு பயின்றார்?” எனும் நூல் கண்டிப்பாகப் பயன்படும். மார்க்சியத்தைக் கற்றுக் கொள்ள விரும்பும் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

லெனின் மார்க்ஸை எவ்வாறு பயின்றார்?” எனும் நூலைப் பயில்வோம் ! தோழர் லெனினை உண்மையாக நினைவுகூர்வோம் !!

வினவு