ந்திய நாட்டின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை  எதிர்த்து அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களும் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த மார்ச் 15,16 தேதிகளில் நடத்தியுள்ளனர்.

வங்கித் துறையை முற்றிலும் தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 2020 – The Banking Regulation (Amendment) Bill 2020 முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாருக்கு  தாரைவார்க்கும் முடிவை அறிவித்தார்கள். படிப்படியாக வங்கித்துறை முழுவதையும்  தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது.

படிக்க :
♦ நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA
கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான பரிந்துரை : பின்புலம் என்ன? || AIBEA

2020, மார்ச் 3-ஆம் தேதியன்று கொண்டுவரப்பட்ட வங்கிகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் 2020, வங்கிகள் நடத்துவதற்கான உரிமம் பெறுவது, வங்கி மேலாண்மை, வங்கியின் செயல்பாடு உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்திய வங்கித் துறையில் தனியார் ஏகபோகத்தை மீண்டும் நிறுவுகின்ற வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மீதான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்து ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி போன்ற நிதி மோசடி கும்பலால் பஞ்சாப் நேஷனல் வங்கி மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்து அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்குகளை விற்பதன் மூலம் எதிர்வரும் மூன்று மாதங்களில் ரூ.3,200 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டம் தீட்டி இருக்கிறது.

நீரவ் மோடி, மல்லையா, லலித் மோடி

தனியார்மயம் தாராளமயத்தை தீவிரமாக அமுல்படுத்திய காங்கிரஸ் கட்சியே மிரண்டு போகும் அளவிற்கு, நாட்டை நாசப்படுத்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது கார்ப்பரேட் – காவி பாசிச கும்பல். “லாபத்தைத் தனியார்மயமாக்கி, நஷ்டத்தை தேசிய மயமாக்கும் மோடி அரசு” என்று கூறுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

நாட்டின் முதன்முதலாக இம்பீரியல் என்ற தனியார் வங்கி 1955-ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக மாற்றப்பட்டது. 1969-ம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தி 14 வங்கிகளை தேசியமயமாக்கினார். காப்பீட்டுத்துறை 1956-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு ஆதார தூணாகத் திகழ்கின்றன பொதுத்துறை வங்கிகள். இந்தியப் பொருளாதாரத்தைக் கவிழ்ந்து விடாமல் காப்பாற்றி வரும் இந்திய மக்களின் சேமிப்பு நிதி மூலதனத்தைக் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு தாரைவார்க்க முடிவு செய்துவிட்டனர்.

இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரிசர்வ் வங்கியின் மீதான கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு. 180 நாட்களுக்குள் செலுத்தப்படாத கடன் வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டு கடன் வசூலிக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர்.

கோப்பு காட்சி

வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாதப் பெரும் முதலாளிகளிடம் இருந்து பண மீட்பு நடவடிக்கை எடுப்பது குறித்து ரகுராம் ராஜன், மோடிக்கு எழுதிய கடிதத்தை நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்காமல்  கிடப்பில் போட்டுவிட்டனர் மோடி. ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி இன்று மிகப்பெரியக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

“பித்தலாட்டப் பெரும் புள்ளிகள்
கட்டாத பணத்தையெல்லாம்
வட்டியோடு வசூலிக்கப்படுகிறது
பஞ்சைப் பராரிகளிடம்”
என்ற கவிதை வரிகளுக்கு ஏற்ப கல்விக் கடன் வசூலிக்க  ரிலையன்ஸ் கும்பலின் அடியாள் படையை  ஏவுகிறது வங்கித்துறை.

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நடத்திய நாடு தழுவிய இந்த வேலைநிறுத்தம் இந்திய ஆட்சியாளர்களிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. டெல்லி தலைநகரில் மாதக் கணக்கில் முகாமிட்டு விவசாயிகள் நடத்தி வரும் வீரஞ்செறிந்தப் போராட்டத்தை எப்படி நீர்த்துப்போகச் செய்வது என்பதில்தான் கார்ப்பரேட் – காவி பாசிச கும்பல் தங்கள் முழு கவனத்தையும் செலுத்துகிறது. இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்த டெல்லி விவசாயிகளுடைய போராட்டம் ஒரு புதிய திசை வழியை நமக்குக் காட்டியிருக்கிறது.

படிக்க :
♦ தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி
♦ பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – யாருக்கு ஆதாயம் ?

வங்கி தனியார் மையத்துக்கு எதிரானப் போராட்டத்திற்குப் பரந்துபட்ட மக்களின் ஆதரவைத் திரட்ட வலிமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் ஐக்கியத்தை வலிமையாக உருவாக்க வேண்டும். உறுதிமிக்க ஒன்றுபட்ட வலிமையானப் போராட்டத்தின் வாயிலாக தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்துவோம்.


இரணியன்