சரக்கு பெட்டகத் துறைமுகம் அமைப்பதற்கு எதிராக கீழமணக்குடி என்ற குமரி மாவட்டத்தின் கடலோர கிராமத்தில் கடந்த மார்ச் 27 அன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
ஏன் இந்த போராட்டம் ?:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகம், இயற்கையாக அமைந்த ஓர் பழமையான துறைமுகமாகும். அதை மிகப் பெரிய சரக்கு பெட்டகத் துறைமுகமாக விரிவாக்கம் செய்ய கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசின் சாகர் மாலா திட்டத்தின் மூலம் கொண்டுவர நினைத்தது மோடி அரசு. மக்களின் கடும் எதிர்ப்பினாலும் போராட்டத்தினாலும் துறைமுக விரிவாக்கத்தில் இருந்து பின்வாங்கியது. அதே சமயம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை மீனவர்களுக்கு மேம்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டது.
படிக்க :
♦ குமரி கடற்கரையை அழிக்க வரும் சரக்குப் பெட்டக வர்த்தகத் துறைமுகம் !
♦ துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !
அதே ஆண்டே இனயம் கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டது மோடி அரசு. அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மிகப்பெரிய சாலை மறியல் போராட்டங்கள், கடலில் படகுகளுடன் போராட்டங்கள் என பல்வேறு போராட்டங்கள் நடந்தது. அதன் விளைவாக, இனயம் கிராமத்தில் துறைமுகம் அமைக்கும் முயற்சியை ஒத்தி வைத்தது பாஜக அரசு.
அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, 2019-ம் ஆண்டு கோவளம் – தென்தாமரைக்குளம் ஆகிய கிராமங்களுக்கு இடையே துறைமுகம் அமைக்க இடம் தேர்வு செய்தது மோடி அரசு. இதற்கும் மாபெரும் எதிர்ப்புக் கிளம்பியது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் படுதோல்வி அடைந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதன்பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு வெளிப்படையான அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது மோடி அரசு. தற்போது, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகப் பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி அருகே பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு (பிபிபி) திட்டத்தில் 65 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் பசுமை துறைமுகம் அல்லது டிரான்ஷிப்மெண்ட் ஹப் அமைத்தல் பணிகளுக்கு துறைமுக கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது சாகர்மாலா திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பு கன்னியாக்குமரி மக்களிடையே மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் 14-ம் தேதி இதனைக் கண்டித்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி கிராமம் வரை போராட்டங்கள் நடந்தன. அதானி குழுமத்துக்காக தங்களது வாழ்வாதாரத்தை அழிக்க மோடி அரசு திட்டமிடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள போராடும் குமரி மக்கள்.
இந்த அறிவிப்பால் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில்(2021) அ.தி.மு.க கூட்டணிக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பொன்.ராதாகிருஷ்னணும், அதிமுக கட்சியின் தளவாய் சுந்தரமும் ‘துறைமுகம் வராது’ என தேர்தல் ஆதாயத்திற்காக கூறிக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா-வும் துறைமுகம் குறிந்து பேசுவதை தவிர்த்துவிட்டார்.
சரக்கு பெட்டகத் துறைமுகம் வருவதை எதிர்த்து குமரி மக்கள் மார்ச் 27-ம் தேதி மாலை மாபெரும் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தனர். இந்நிலையில் மார்ச் 27 அன்று காலையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி, “சரக்கு பெட்டகத் துறைமுகத் திட்டம் கண்டிப்பாக வராது” என்று கூறிச் சென்றிருக்கிறார். இதுவெல்லாம் தேர்தலுக்கான கண்துடைப்பு என்று கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
திட்டமிட்டபடி கடந்த மார்ச் 27 அன்று மாலை 4 மணியளவில் துறைமுகம் அமைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருந்த கீழமணற்குடி கிராமத்தில் ஓர் மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏன் இந்த துறைமுகம் அமைத்தே ஆகவேண்டும் என நிற்கிறது அரசு :
கன்னியாகுமரி என்பது சர்வதேச வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு வழித்தடம். அதானி குழுமத்துடன் கூட்டு சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த சரக்குப் பெட்டகத் துறைமுகத்தை அமைக்க துடிக்கிறது மோடி அரசு.
இந்த சரக்கு பெட்டகத் துறைமுகம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மிகவும் தீவிரமாக கட்டியே தீரவேண்டும் என்று அரசு செயல்படுவற்கு காரணம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் மட்டுமே. மக்கள் நலம் என்பது இதில் துளியும் கிடையாது.
துறைமுகம் அமைந்தால் என்ன ஆகும் கன்னியாகுமரி :
இந்த பிரம்மாணடமான துறைமுகம் அமைந்தால், குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உறுதி. மேலும், ராட்சச கப்பல்கள் வருவதற்கு கடற்கரைக்கு அடியில் இருக்கும் மணல், பவளப்பாறைகள், கரும் பாறைகளைத் தோண்டி எடுத்து ஆழப்படுத்துவார்கள். இதனால், நிலத்தடி நீரில் உப்புநீர் கலந்து விடும் அபாயம் உள்ளது. இது விவசாயத்தையும் மக்களின் வாழ்வையுமே கடுமையாகப் பாதிக்கும். கழிமுகம் இல்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்கள் மண்ணால் அடைக்கப்பட்டு விவசாய நிலங்களும், மக்களின் வீடுகளும் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.
சுருங்கச் சொன்னால், இந்த துறைமுகம் அமைந்தால், மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத ஒரு மாவட்டமாக குமரி மாவட்டம் மாறும். சுற்றுலா தலம், இயற்கை வளம், மீன் வளம், பறவை இனங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு குமரி மாவட்டம் பாலைவனமாக மாறும் சூழல் உருவாகும்.
படிக்க :
♦ கொன்றது ஒக்கி புயலா ? அரசுக் கட்டமைப்பா ? குழித்துறையில் ரயில் மறியல்
♦ ஒக்கி புயல் : குமரி மீனவர்களின் உள்ளக் குமுறல் – வீடியோ
இதற்கு ஓர் உதாரணமாக, சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகில் மீனவர்கள் மீன் பிடிப்பது இடையூறாக உள்ளது. எனவே மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது அதானி குழுமம்.
குமரி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சரக்கு பெட்டகத் துறைமுகத்தை எதிர்ப்போம் :
சாகர்மாலா திட்டம் தமிழ்நாட்டின் மீன் வளம் கடல் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாடுவதற்கே வழிவகை செய்யும். இலட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை வீதியில் வீசிவிடும். மக்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக அமையவிருக்கும் இந்த சரக்கு பெட்டகத் துறைமுகத்தை எதிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி விவசாயிகள், மீனவர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டுவது என்பது இன்று நெருங்கிவரும் பாசிசத்திற்கு எதிரான அவசியமான தவிர்க்கவியலாத பணிகளில் ஒன்றாகும்.
சந்துரு
செய்தி ஆதாரம் : சரக்கு பெட்டக மாற்றுமுனைய எதிர்ப்பு மக்கள் இயக்கம் – முகநூல் பதிவு