போராடும் 16 அமைப்புகளைப் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்த பாசிச தெலுங்கானா அரசு!

30.3.2021 தேதியிட்ட ஒரு அரசாணையின் மூலம் 16 ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளைச் சட்ட விரோதமானது முத்திரை குத்தி உடனடியாகத் தடை செய்துள்ளது தெலுங்கானா மாநிலத்தின் பாசிச சந்திரசேகர ராவ் அரசு.

படிக்க :
♦ தெலுங்கானா : போலீசின் புனையப்பட்ட கதையில் உருவான என்கவுண்டர்கள் !
♦ சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !

சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்ட அமைப்புகள் பின்வருமாறு; தெலுங்கானா  பிரஜா முன்னணி (TPF), தெலுங்கானா அசங்கதிதா கர்மிகா சமகியா (TACS), தெலுங்கானா வித்யார்த்தி வேதிகா(TVV), ஜனநாயக மாணவர் அமைப்பு (DSU), தெலுங்கானா வித்யார்த்தி சங்கம் (TVS), ஆதிவாசி மாணவர் யூனியன் (ASU), அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான  குழு (CRPP), தெலுங்கானா ரைதங்க சமிதி (TRS), டுடம் டெபா (TD), பிரஜா காலா மண்டலி (PKM), தெலுங்கானா ஜனநாயக முன்னணி (TDF), இந்துத்துவ பாசிச தாக்குதலுக்கு எதிரான மன்றம் (FAHFO), சிவில் லிபர்ட்டிஸ் கமிட்டி (CLC), அமருலா பந்து மித்ருலா சங்கம் (ABMS), சைதன்யா மகிலா சங்கம் (CMS) மற்றும் புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம் (RWU).

அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்புகளை மாவோயிஸ்டு கட்சியின் முன்னணி அமைப்புகள் என்று முத்திரை குத்தி தடைவிதித்துள்ளது சந்திரசேகர ராவ் அரசு. மார்ச் 30-இல் தடை உத்தரவைப் பிறப்பித்தாலும் பொதுவெளியிலும் பத்திரிக்கைகளுக்கும் இவ்வமைப்புகளுக்கும் கூட ஏப்ரல் 23-ஆம் தேதி வரை வெளிப்படுத்தாமல் இரகசியமாக வைத்துள்ளது.

CDRO (Coordination of Democrotic Rights Organisations)-வின் அங்கமான  சிவில் லிபர்டிஸ் கமிட்டி (CLC) கடந்த 50 ஆண்டு காலமாக தெலுங்கு மாநிலங்களில் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வருகிற அமைப்பாகும். ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிவிற்கு முன் இருந்து தற்போது வரை அந்த மக்களுக்கான தனிமனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது.

மற்ற 15 அமைப்புகளும் அரசமைப்புச் சட்டத்திற்குட்பட்டே முப்பது, நாற்பது ஆண்டு காலம் வெளிப்படையாக செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அமைப்பும் தனக்கென ஒரு கொள்கைத் திட்டத்தையும் நடைமுறையையும் கொண்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ளன.

இப்போதைய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனித் தெலுங்கானா  இயக்கத்தின்போது சிவில் லிபர்ட்டிஸ் கமிட்டியின் வேலைகளை வெகுவாகப் பாராட்டியவர்தான். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த அமைப்பே அவர் கண்களுக்குச் சட்ட விரோதமாகத் தெரிகிறது.

பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்ற கறுப்புச் சட்டத்தை ஆயுதமாகக் கொண்டு போராடும் அமைப்புகளை ஒடுக்குகிறது தெலுங்கானா அரசு. எந்தவித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், D.G.P அளித்த கடிதத்தின் அடிப்படையில் அவ்வமைப்புகள் மீது இந்த ஒடுக்குமுறையை ஏவியுள்ளது.

தடை செய்யப்பட்ட அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மோடி அரசின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடிய ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளாகும். தெலுங்கானா அரசின் இந்த பாசிச நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியமானக் காலகட்டம் இது. ஏனென்றால் காவி பாசிச சூழலில், பேச்சிலும், எழுத்திலும், கருத்திலும் ஜனநாயகம் படிப்படியாகக் குறைந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

படிக்க :
♦ டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?

♦ தெலுங்கானா – கர்நாடகா – ஒடிசா : தினம் சாகும் விவசாயிகள் !

ஒருபுறம் மதவெறியூட்டி, ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்துமதவெறி அமைப்புகள் சுதந்திரமாக உலவும் நம் நாட்டில் மறுபுறம் ஊபா, என்.எஸ்.ஏ, பொதுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்களைக் கொண்டு ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குகின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்த 16 அமைப்புகள் மீதான தடையை திரும்பப் பெறக் கோரி தெலுங்கானாவில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், அதுமட்டும் போதாது. இத்தகைய பாசிச கறுப்புச் சட்டங்களை கலைக்கும் நோக்ககிலும் இந்துமதவெறி அமைப்புகளைத் துடைத்தெறியும் நோக்கிலும் போராட வேண்டியது ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் அனைவரது கடமையாகும். அப்படிப் போராடத் தவறினால், இன்று தெலுங்கானாவில் நடந்ததுதான் நாளை தமிழகத்துக்கும்.


சாதனா
செய்தி ஆதாரம் : Countercurrents