20.5.2021

கொரோனா பேரிடியால் வாழ்விழந்த நாடக, நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள், இலக்கியவாதிகள் !

தற்போது கொரோனா இரண்டாம் கட்ட அலை வந்து விட்டது. இதன் காரணமாக தமிழக அரசு ஊரடங்கை அமுல்படுத்தி உள்ளது. ஊரடங்கு என்றால் வைரஸின் தன்மையை அறிந்து அதனை முறியடிக்கும் வண்ணம் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தவும், சுகாதார அம்சங்களை வலுப்படுத்தவும் அரசு மக்களிடம் கால அவகாசம் கோருவது தான் ஊரடங்கு.

ஆனால், இங்கு நடப்பதோ அதற்கு எதிர்மறையாகத்தான் உள்ளது. பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் முறையாக இயங்குவதில்லை. மருத்துவர்கள் இருப்பதில்லை. ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் பல உயிர்களின் நாடித்துடிப்பு அடங்கியது அனைவரும் அறிந்ததே. இதனால், அரசு மக்களை காப்பாற்றும் அருகதை இழந்து நிற்கிறது.

வெறுமனே ஊரடங்கு என்பது எப்படி நம்மை காக்கும்?

சென்றவருட முதல் கொரோனா அலையின்போதே மக்கள் சொல்லால் ஆகாத துயரங்களை அனுபவித்தனர். சிறு-குறு வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் விவசாயிகள் என அனைவரும் ஊரடங்கால் வாழ்நிலைகள் பாதிக்கப்பட்டு கடன் வாங்கி அதனை சரியாக திருப்பி செலுத்த முடியாமல் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டன.

அதிலும், நாடக நடிக கலைஞர்கள், கிராமிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், ஓவியர்கள் இலக்கியவாதிகள் போன்றவர்களை பற்றி சொல்லவே தேவையில்லை. சென்ற வருட கொரோனா காலகட்டத்தில் இது போன்ற பல்லாயிரக் கணக்கான கலைஞர்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன. அப்போது, ஒருசில தன்னார்வலர்களின் நன்கொடைகள் மூலம்தான் அவர்களின் வாழ்க்கை சிரமத்துடனும் வேதனையுடனும் நகர்ந்தது. இன்னும், அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் இருக்கும் இந்நேரத்தில் தான் மீண்டும் ஊரடங்கு.

பொதுவாக சித்திரை மாதம் தொடங்கி ஆடி மாதம் வரைக்கும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் கோவில் திருவிழாக்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நான்கு மாதங்களில் சம்பாதிக்கும் பணத்தை வைத்துக் கொண்டுதான் ஒரு வருட செலவுக்கு பயன்படுத்துவார்கள்.

மற்ற தொழிலாளர்களின் நிலமை கூட, ஊரடங்கு முடிந்தபின் மீண்டும் அத்தொழிலில் ஈடுபடுவதோ அல்லது மாற்று வேலை முறைகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஆனால், இவர்களைப் போன்ற கலைஞர்களுக்கு மாற்று என்ன வழி இருக்கிறது. ஏனெனில், அவர்கள் தான் சார்ந்த கலையை தன் வாழ்க்கையோடு பயணிக்கிறார்கள். தங்களை அக்கலைக்கு அர்ப்பணிக்கிறார்கள்.

ஆகையால்தான் அக்கலைஞர்கள் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி அந்த ஒரு வருட பொருளாதாரப் பிரச்சினைகளை சரி செய்து கொள்கின்றனர்.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்த இரண்டாம் கட்ட ஊரடங்கு. ஆகையால் தான் இக்கலைஞர்கள் தங்களுடைய கலையும் வாழ்க்கையும் அழிவதை அரசுக்கு உணர்த்தும் வண்ணம் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக  தற்போது  ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் மற்றும் கிராமிய நாட்டுப்புற தெம்மாங்கு இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சித்திரை மாத காலகட்டத்தில் தான் அதிக அளவில் திருவிழாக்கள் நடைபெறும் ஆகையால் தமிழக அரசு கொரோனா நெறிமுறைகளுடன் திருவிழாக்களை அனுமதிக்க வேண்டும் இல்லையேல் ரேஷன் கார்டுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து அனைவரும் நடனமாடி வேடம் தரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகமெங்கும் வீதிதோறும் பாடல், இசை, நடனம் போன்ற கலைகளின் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இக்கலைஞர்களை ஈடுபடுத்தலாம். இதனால் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும் என்பதே எங்கள் கோரிக்கை. அதை விடுத்துவிட்டு வெறும் இரண்டாயிரம் ரூபாய் நிவாரணத் தொகை என்பது கண்துடைப்பே.

தமிழக அரசே !

நாடக நடிக இசை கலைஞர்கள் மற்றும் கிராமிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் ஓவியர்கள் இலக்கியவாதிகள் போன்றோர்களை உடனே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்து !

மாதம் 10 ஆயிரத்தை நிவாரண நிதியாக வருடம் முழுவதும் வழங்கிடு !

மக்கள் கலை இலங்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு-புதுவை
9791653200

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க