பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததற்கான பின்புலமும், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணமும் !
கடந்த சில நாட்களாக பத்ம சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு கொடுத்த பாலியல் சீண்டல் பிரச்சினை தமிழகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனால், இதற்கு முன்பும் பள்ளி, கல்லூரிகளில் இது போன்ற பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. எனினும் இப்பள்ளி பிரச்சினை மட்டும் ஏன் இவ்வளவு பெரிதாக மாறியது. அதற்கு பின்புலம் என்ன?
படிக்க :
♦ பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்
♦ அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை
பார்ப்பனியத்தால் உயர்த்தி பிடிக்கப்பட்ட பள்ளி :
முதல் காரணமாக பார்க்கையில், தர்மத்தைக் காக்க வந்ததாக சொல்லிக் கொண்ட இப்பள்ளி, இப்படிப்பட்ட பாலியல் கொடுமையைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு, பார்ப்பனத் திமிரெடுத்து பேசியது பலரது வெறுப்பையும் தூண்டிவிட்டது
தங்களை ஆகச் சிறந்த தர்மத்தைக் காக்க அந்த பள்ளியின் விளம்பரங்களே அதற்கு சாட்சியாக உள்ளன. காயத்திரி மந்திரம் சொல்லிக் கொடுக்கிறோம், வேதங்கள் – இந்து புராணங்கள் சொல்லிக் கொடுக்கிறோம், சமஸ்கிருதம் கற்றுத் தருகிறோம் என்றெல்லாம் பில்டப் செய்துக் கொண்டனர்.
அப்பள்ளி விளம்பரம் ஒன்றில் “பகவான் ராமர் ராவணனை வதம் செய்து தர்மத்தை காக்க அவதாரம் எடுத்தாரே, அதேபோல் கல்வி சாம்ராஜ்ஜியத்தில் தர்மத்தை முன்னிறுத்தி ராமராஜ்ஜியத்தை பரிபாலனம் செய்தார் Dr.YGP” என்று அவர்களே தங்களை ‘யார்’ என்று முத்திரைகுத்திக் கொண்டனர்.
அப்படிப்பட்ட ‘யோக்கியர்கள்’, தங்கள் பள்ளியில் படித்த மாணவிக்கு இளைக்கப்பட்ட அநீதிக்காக பொங்கி எழாமல், கிரிமினல் ஆசிரியரையும் பள்ளிப் பெயரையும் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலரது எரிச்சலையும் ஈர்த்தன.
இரண்டாவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர்நடுத்தர வர்க்க மற்றும் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். பல்வேறு பிரபலங்களும் இப்பிரச்சனையில் தலையிட்டு கண்டிக்கவும் செய்கின்றனர். ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர அல்லது ஏழ்மையான குடும்பங்களை சார்ந்தவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு பெரிதாக பேசப்பட்டிருக்காது என்பதை உறுதியாக நம்பலாம்.

மூன்றாவதாக, YG மகேந்திரனும் அவரது மகளான மதுவந்தி நடந்துக் கொண்ட முறை அருவருப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியது. மதுவந்தி பாஜக-வில் இணைந்த பிறகு, தான் பிரபலமடைவதற்கு சில உத்திகளை பயன்படுத்தினார். தமிழிசை சௌந்தராஜன் பின்பற்றிய அதே உத்தி.
அபத்தமான கருத்துக்களை பார்ப்பனத் திமிரோடு, முட்டாள்தனமாக உளறுவது, அதை சமூக வலைத்தளங்களில் அது கேலி கிண்டலாக்கப்பட்டாலும், அக்கருத்துக்கள் எவ்வளவு இழிவானவையாக இருந்தாலும், அதற்கு ஆதரவாக திமிராகப் பேசுவது என தன்னை ‘பிரபலப்படுத்திக்’ கொண்டார். “பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி… ரொம்பவே ஜாஸ்தி” என்றெல்லாம் இவர் பேசியது எடுத்துக்காட்டு.
தற்போது இப்பிரச்சனை வெடித்தப் பிறகும் இதை சாதிரீதியாக எடுத்துச் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்ததே இவர்கள் தான். பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனவாசன் “மதுவந்தியால் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்திற்கே தலைகுனிவு” என்று சொல்லியது நினைவிருக்கலாம். பிராமணர்களை தாக்குவதற்காகவே ராஜகோபாலன் செய்த தவறை வைத்து PSBB பள்ளியை திராவிடர்கள் தாக்குகிறார்கள் எனக் கூறிவந்தார்.
எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு தற்போது இவர்களும், கமலஹாசன், சுப்பிரமணியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர், சாதி ரீதியாக இப்பிரச்சனையை பார்க்கக் கூடாது என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். எல்லாவற்றையும் அவர்களே செய்துவிட்டு, தற்போது பழியை மற்றவர்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறார்கள்.
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது போல் இவர்களே மற்றவர்களை இழிவுபடுத்தி தங்களை உயர்வாக காட்டிக்கொண்டார்கள், தற்போது வசமாக சிக்கிக் கொண்ட பிறகு அவர்களது வெட்டி ஜம்பமே எமனாக மாறி நிற்கிறது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மீது அத்துமீறல்கள் நடந்ததற்கான பின்புலம் என்ன?
கடந்த 4 ஆண்டுகளில் குறிப்பாக அ.தி.மு.க. மூலம் மறைமுகமாக பா.ஜ.க. தமிழகத்தை தன் பிடியில் வைத்திருந்தபோது மறைந்திருந்த அல்லது அடங்கி கிடந்த ராஜகோபாலன்கள் சுதந்திரமாக, துணிச்சலுடன் எல்லாவித குற்றங்களையும் செய்யத் தொடங்கினர்.
சில உதாரணங்களைப் பார்க்கலாம். 2017-ல் அரியலூரை சேர்ந்த நந்தினி என்ற பெண் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்டு நெஞ்சைப் பதற வைக்கும் வகையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதை முன்னின்று நடத்தியது இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள்.
2018-ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக ‘பேராசிரியர்’ நிர்மலா தேவி பிரச்சினை பெரிதாக வெடித்தது. தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. நிர்மலா தேவியில் தொடங்கிய அப்பிரச்சனை கவர்னரை விசாரிக்க வேண்டும் என்றளவுக்கு சென்று அப்படியே மூடி மறைக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு தமிழகத்தையே அதிரவைத்த பல பெண்களை சீரழித்த பொள்ளாச்சி பாலியல் கொடூரம், பொள்ளாச்சி ஜெயராமன் மகன் வரை சென்று அதற்கு பிறகு ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டது. இன்று வரை அதற்கான நியாயம் கிடைக்கவில்லை.
2020-ம் ஆண்டில் இதேபோன்று நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவன் பல பெண்கள் புகார் அளித்ததற்குப் பிறகு குண்டாசில் கைதானான்.
இவையெல்லாம் சில உதாரணங்கள், “Tip of the Iceberg” போன்றவை மட்டும் தான். இத்தகைய பிரச்சனைகள் வெளிவந்ததும் பல்வேறு தடைகள், இடையூறுகளை தாண்டித்தான். அப்படியென்றால் ‘iceberg’ன் முழு பரிமாணத்தையும் தொகுத்துப் பார்த்தால் எவ்வளவு இருக்கும்? பத்ம சேஷாத்திரி பள்ளி மட்டுமல்லாமல் தற்போது பல பள்ளிகளில் நடந்த பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.
நெல்லையில் சட்ட கல்லூரியின் உதவி பேராசிரியர் ராஜேஷ் பாரதி ஒரு மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்துக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய செய்தி சில நாட்கள் முன் வெளிவந்தது, இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் பல வெளிவர தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே பெண்களை தங்களுக்கு கீழாக, போகப் பொருளாக, தனது இச்சைக்கு பயன்படுத்தும் ஒரு இயந்திரமாக பாவிக்கும் இந்தியா போன்ற நிலப்பிரபுத்துவ பண்புகள் எஞ்சியிருக்கும் சமூகத்தில், ஆபாச நுகர்வுவெறி கலாச்சாரமும் இணைந்து, பெண்கள் மீது பாய்ந்து குதறிவிட நினைப்பவர்களுக்கு அதிகாரமும், குற்றமிழைப்பதற்கு பாதுகாப்பும் கிடைத்தால் என்ன ஆகும்?
இப்படிப்பட்ட கிரிமினல்தனங்களில் ஈடுபடுபவர்கள் வலதுசாரிகளாகவும், பிற்போக்குவாதிகளாகவும், சமூக விரோதிகளாகவும் குறிப்பாக பணபலம், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவே பார்க்க முடிகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகளும் வலதுசாரி, பிற்போக்கு, பாசிச சித்தாந்தத்தை கொண்டவை.
பா.ஜ.க பாசிசத்தின் எழுச்சியும், சாதி, மதவெறி போன்ற பிற்போக்குவாதிகளும் இணையும் புள்ளிதான் இந்த வலதுசாரி சித்தாந்தம். ரவுடிகள் பலர் பா.ஜ.க-வில் இணைந்த செய்திகள் பலவற்றை நாம் பார்த்து வருகிறோம். இந்த பிரச்சனைகளில் எல்லாம் இந்த பிற்போக்கு பாசிச கும்பல் அணுகிய விதங்களே அவர்களின் சித்தாந்தங்களை தோலுரித்து காட்டுகிறது.
பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சனையில் பாஜக பிரமுகர் ஒருவர் “அவசரப்பட்டு ராஜகோபாலனை தண்டிக்கக் கூடாது, இன்று மாணவிகள் நெட்பிளிக்ஸில் அடல்ட் மூவி பார்க்கின்றனர். அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல” என சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிறார். இதுதான் இப்பள்ளி மற்றும் ராஜகோபாலனை ஆதரிப்பவர்களின் எண்ணம். பொள்ளாச்சி பிரச்சனையில் எடுத்துக் கொண்டாலும், “இவளுங்க எதுக்கு அவனோடு போனாளுங்க” என்றதையும், ராமதாஸ் கும்பல், “டீ சர்ட், குளிங்கிளாஸ், ஜீன்ஸ் போட்டு வந்தால் பெண்கள் மயங்கி விடுவார்கள்” என்கிற விதங்களில் அணுகியதையும் பார்க்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் மீது, பெண்கள் மீதே பழி சுமத்துவதுதான் இவர்களின் சித்தாந்தம்.
பா.ஜ.க அதிகாரத்திற்கு வந்த பிறகு நாடு முழுவதும் சிறுபான்மையினர், தலித் மக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். அவ்வாறு இருக்கும்போது ஒடுக்கப்பட்ட பாலினமான பெண்களின் நிலையும் அவ்வாறு தானே இருக்கும்? பாசிஸ்டுகளின் அதிகாரம் வளரும்போது இயல்பாகவே வலதுசாரிகள், பிற்போக்குவாதிகள், சாதி – மத வெறியர்கள் துணச்சலுடன் கிரமினல் தனங்களை செய்ய தொடங்குகின்றனர்.
இவைதான் இதுபோன்ற குற்றங்களுக்கு பின்புலமாக அமைகின்றன. பா.ஜ.க மறைமுகமாக தமிழகத்தை கட்டுப்படுத்தியபோதே இப்படியென்றால் இன்னும் பா.ஜ.க தமிழகத்தை ஆண்டால் என்ன ஆகும் என்பதற்கு இவையெல்லாம் “ஒரு சோறு பதம்”.
பார்ப்பனர்களுக்கே எதிரானது பார்ப்பன பாசிசம் :
சங்கரராமன் என்ற பார்ப்பனர் சங்கராச்சாரி ஜெயேந்திரனின் ஊழல், பாலியல் லீலைகளை கேள்விக் கேட்டார் என்பதற்காக படுகொலை செய்யப்பட்டார். இவ்விருவரில் பாசிஸ்டுகள் யார் பக்கம் நின்றார்கள்?
பத்ம சேஷாத்திரி பள்ளி பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையோர் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்த மாணவிகள். ஆனால், பாசிஸ்டுகள் ராஜகோபாலன் மற்றும் பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை பாதுகாக்கவே வரிந்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்குகின்றனர்.
ஜனநாயக, முற்போக்கு, கம்யூனிச இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்ட பார்ப்பனர்களுக்காக குரல் கொடுக்கின்றனர். பார்ப்பன பாசிஸ்டுகள் அரசியல் செல்வாக்கு, பணபலம், அதிகாரமுள்ள பக்கம்தான் சேரந்துக் கொள்கின்றனர்.
ஒருவரோ, ஒரு பள்ளி நிர்வாகமோ குற்றம் இழைத்ததற்காக அனைத்து பார்ப்பனர்களையும் குற்றம் சொல்ல முடியுமா என்று அம்பிகள் பொங்கி எழுகின்றனர். அன்று மதுவந்தி போன்ற கழுசடைகள் “பிராமணர்களுக்கு மூளை வலிமை ஜாஸ்தி” என்று உளறும்போது அதை கண்டித்திருந்தால், இன்று “எல்லாரையும் குற்றம் சொல்ல முடியுமா?” என்று பேசவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இனியாவது உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பார்ப்பனர்கள், தங்களை ‘உயர்ந்தவர்கள்’ என்று வெட்டி ஜம்பமடிக்காமல் இதர உழைக்கும் மக்களுடன் இணைந்து பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து போராடினால்தான், அவர்கள் மீதுள்ள பார்வை மாறும்.
சுப்பிரமணியசாமி எனும் கோமாளி :

பத்ம சேஷாத்திரி-க்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தி.மு.க ஆட்சியை கலைத்து விடுவேன் என்று பா.ஜ.க-வின் என்று சு.சாமி மிரட்டல் விடுக்கிறார். தி.மு.க-வே பெரும்பாலான சமயங்களில் பார்ப்பன பாசிசத்தை பகிரங்கமாக எதிர்த்து நிற்காமல் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தங்களின் எதிர்வினைகளை ஆற்றி வருகிறார்கள். சு.சாமி-யின் மிரட்டலுக்கு பிறகு இன்னும் பலர் எதிர்வினை ஆற்றுகிறார்கள்.
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக தமிழர்களின் உணர்வுகளை மேலும் தட்டியெழுப்பியது தான் நடந்துள்ளது. இவ்வாறெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் தமிழக பி.ஜே.பி அடக்கி வாசிக்கிறது. தனது பார்ப்பனத் திமிரை வெளிப்படையாகக் காட்டவே டிவிட்டரில் ‘வாண்டடாக வந்து வண்டியில் ஏறுகிறார்’ சு.சாமி.
“விசாகா” கமிட்டி அமைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா?
தண்டனையை கடுமையாக்க வேண்டும், விசாகா கமிட்டி அமைத்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்று பல்வேறு அறிவுஜீவிகளும் அறிவுரை சொல்கின்றனர். ஒரு சமூக பிரச்சனையை மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் தனிநபர்கள் சார்ந்த பிரச்சனையாக பார்ப்பதன் விளைவே இவ்வாறெல்லாம் வெளிப்படுகிறது.
விசாகா கமிட்டியை ஒவ்வொரு நிர்வாகத்திலும் ஏற்படுத்தியிருந்தால் இதுபோன்ற குற்றங்களை தடுத்திருக்க முடியுமா? இன்று கூட மகளிர் போலீசு நிலையங்கள் உள்ளன, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் அங்குபோய் தைரியமாக புகார் கொடுக்க முடிகிறதா? போலீசுத்துறையே அதிகார, பணபலம், அரசியல் செல்வாக்கிற்கு தான் துணைபோகும் என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவங்களால் அறிந்து வைத்துள்ளனர்.
அதேபோன்று தான் விசாகா கமிட்டியும். இப்பள்ளியில் கூட பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்கும் கமிட்டியில் ராஜகோபாலனே உள்ளார். இது தான் யதார்த்தம். விசாகா கமிட்டி அமைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, சட்டமாக்கினாலும் எங்கும் நடைமுறைப்படுத்தவில்லை, ஒருவேளை இதுபோன்ற கமிட்டிகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்தாலும் நடைமுறையில் செயல்பட போவதுமில்லை.

நிர்மலா தேவி பிரச்சினையில் இருந்து பத்ம சேஷாத்திரி பிரச்சனை வரை பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்த அத்துமீறல்களை தங்களை தாங்களே தற்காத்துக் கொண்டேதான் அம்பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மூலமாகதான் வெளிப்படுத்தியுள்ளனர். இல்லையேல் எதாவது ஒரு வகையில் அதிகாரவர்க்கத்தால் இவர்கள் நசுக்கப்பட்டிருப்பார்கள், பொதுவெளியில் வெளிவந்து பலரது கண்டனங்கள், எதிர்ப்புகள், போராட்டங்களுக்குப் பிறகுதான் விசாரணை, கைது என்று பெயரளவிலான நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன.
ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினையை தைரியமாக வெளிப்படுத்துவதற்கான “களம்” வேண்டும் என்பது உடனடி அவசியம் என்று கருதுகிறோம்.
“ME TOO” இயக்கம் போல் தமிழகம் முழுக்க கடந்த ஆண்டுகளில் நடந்த பாலியல் அத்துமீறல்களை வெளிக் கொண்டு வருவதற்கு முற்போக்கு பெண்கள் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள், பெண் வழக்கறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இயக்கங்கள் போன்றோர் உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை இந்த சமூகமும், அரசும் முன்னின்று செய்ய வேண்டும். எனினும் இது தற்காலிக தீர்வுதான்.
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உள்ள மாணவ – மாணவிகள் ஜனநாயக ரீதியான மாணவர்கள் சங்கங்களை தொடங்க வேண்டும். தங்களுடைய பிரச்சனைகளுக்கு எதிராகப் போராடும் பண்பை வளர்த்தெடுக்க வேண்டும். மதிப்பெண்களை பெறுவதற்கான இயந்திரமாக மட்டுமல்லாமல், சமூக, அரசியல் பிரச்சனைகளில் ஈடுபடுவதன் மூலமாகத்தான் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
படிக்க :
♦ #Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் மாணவச் சங்களை கட்டியெழுப்புவதும், ஆணாதிக்க, ஆபாச நுகர்வுவெறி, சாதி – மதவெறி போன்ற பிற்போக்குகளின் கூடாரமாக இருக்கும் இந்த சமூகத்தை தலைகீழாக, புரட்சிகரமாக மாற்றியமைப்பதற்காக வேலைகளை முன்னெடுப்பதே முழுத் தீர்வாக அமையும் !
மக்கள் அதிகாரம்,
நெல்லை.
9385353605