சங்பரிவார் கும்பலால் கடந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட டெல்லி கலவர வழக்கில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய பல செயல்பாட்டாளர்கள், ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் சிறைகளில் தொற்று பரவி பாதிப்புக்கு உள்ளானபோதும் இவர்களுக்கு பிணைகூட அளிக்காமல் இந்திய அரசின் நீதிமன்றங்கள் பழிவாங்கிக் கொண்டிருக்கின்றன.

படிக்க :
♦ டெல்லி கலவரம் : உமர் காலித் கைது ! குறிவைக்கப்படும் அறிவுத்துறையினர் !
♦ தேர்தல் ஜுரம் : கன்னையா குமார், உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

இந்த நிலையில், செயல்பாட்டாளர்கள் உமர் காலித், காலித் சயிஃபி ஆகியோரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது கைகளை பின்னால் மடக்கி, கைவிலங்கிட்டு ஆஜர்படுத்த அனுமதி கோரி டெல்லி போலீசு அனுமதி கேட்டு மனு அளித்திருந்தது.

இந்த மனு மீதான விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி வினோத் யாதவ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவர்கள் இருவரும் அதிக ஆபத்துள்ள கைதிகள் என டெல்லி போலீசு தரப்பில் கூறப்பட்டது.

டெல்லி காவல்துறை மற்றும் சிறைத்துறை உயர் மட்டத்தினரால் இயந்திரகதியில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அது தகுதியற்ற மனு என்றும் கூறி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ஆனால், இயந்திரகதியிலா இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது? மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் அறிவுத்துறையினரை பொது வெளியில் அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களை கூனிக் குறுகச் செய்ய வேண்டும் என்பதற்காகவுமே பாசிச பாஜக கும்பலின் பிடியில் உள்ள டெல்லி போலீசு இந்த வகையில் திட்டமிட்டு மனு தாக்கல்  செய்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஏற்கனவே குற்றம்செய்து தண்டனை பெற்றவர்கள் அல்ல, அவர்கள் குண்டர்கள் கூட இல்லை ஆகவே கால்விலங்கு மற்றும் கைவிலங்கிட்டு ஆஜர்படுத்த அனுமதி வழங்க வேண்டிய அவசியம் இல்லை என ஜூன் 5 தேதியிட்ட உத்தரவில் தெரிவித்தார். மேலும், கோவிட் பெருந்தொற்று காரணமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜர்படுத்தப்படுத்த முடியாத நிலையில் இந்த மனு அவசியமற்றது என்று கூறி மனுவை நீதிபதி நிராகரித்தார்.

கோவிட்-19 தொற்றுக்கு ஆளான செயல்பாட்டாளர் உமர் காலித், சமீபத்தில் அதிலிருந்து மீண்டார். டெல்லி கலவரம் தொடர்பாக பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வழக்கில் மட்டுமே நீதிமன்றம் பிணை அளித்தது. ஊபா சட்டம் பாய்ச்சப்பட்ட வழக்கில் பிணை மறுக்கப்பட்ட உமர் காலித், தான் ஒவ்வொரு பகலையும் இரவையும் தீவிர மன பதட்டத்தோடு கழிப்பதாக சிறையிலிருந்து எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.

செயல்பாட்டாளர் உமர் காலித்

“…ஒரு நீண்ட கால விசாரணைக்குப் பிறகுதான், நாங்கள் விடுதலையாக வாய்ப்பிருப்பதாக நினைக்கிறோம். கடந்த 14 மாதங்களாக, நாங்கள் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டதிலிருந்து, எங்கள் வழக்கு விசாரணைகூட இன்னும் தொடங்கப்படவில்லை. நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கக்கூட எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த ‘சதி’ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் 16 பேரும் விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலில் உள்ளோம். மேலும், தொற்றுநோய் காரணமாக பல நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நீதிமன்ற நடவடிக்கைகள் மேலும் தாமதப்படும்.

செயல்முறையே இங்கு தண்டனையாக உள்ளது. இந்த செயல்முறை, சாதாரண காலங்களில் கூட சித்திரவதைக்குரியது, இன்று நிலவும் சூழ்நிலைகளில் மிகக் கொடூரமாகிவிட்டது” என அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை, நீதி அமைப்புகளின் மீது நம்பிக்கை கொண்டு, அது வழங்கியிருக்கும் வழிகளில் தவறானவை என நிரூபிக்க உமர் காலித் உள்ளிட்டோர் போராடுகின்றனர். ஆனால் விசாரணைக் காலகட்டத்தையே ஒரு தண்டனைக் காலகட்டமாக மாற்றியிருக்கிறது, பாசிச அரசு. அதில் ஒரு பங்காற்றிக் கொண்டிருக்கிறது நீதித்துறை.

“நீதி செயல்முறையை தொடங்குங்கள்” என்ற கோரிக்கைக்கே இங்கு போராட வேண்டியுள்ளது. இந்த நிலையில், இவர்கள் தப்பியோட வாய்ப்பிருக்கிறது என கயமைத்தனமாக காவல்துறையும் சிறைத்துறையும் சேர்ந்து புனைந்து கதைகளை உருவாக்குகின்றன. அதன் மூலம் அவர்கள் மீது அச்சத்தையும் வெறுப்பையும் நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படச் செய்கின்றன.

மக்களுக்காக குரல் எழுப்புபவர்களை கால்விலங்கிட்டும் கைவிலங்கிட்டும் ஆஜர்படுத்தி கொடூர குற்றவாளிகளைப் போல மக்களின் முன் நிறுத்தப் பார்க்கிறது பாஜக அரசு. இதன் மூலம் அறிவுத்துறையினரையும், மக்கள் போராளிகளையும் அச்சுறுத்தி விடலாம் எனவும் நினைக்கிறது. மக்களுக்காக நிற்பவர்கள் இத்தகைய அச்சுறுத்தல்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை.

டெல்லி கலவரம், பீமா கொரேகான் வழக்கு ஆகியவற்றில் திட்டமிட்டு பொய் வாழ்க்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட உமர் காலித் உள்ளிட்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவரையும்  உடனடியாக பிணையில் வெளிவிட வேண்டும் என்பதையும், அவர்கள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் முன் வைத்து நாடுதழுவிய போராட்டங்கள் நடத்தப்படும்போது தான் காவிக் கும்பலின் வெறியாட்டத்தை முறியடிக்க முடியும்.


கலைமதி
செய்தி ஆதாரம் : The Wire, The Print

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க