ரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசு, ஆட்சிக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளாக அரசின் மக்கள் விரோத போக்குகளை கடுமையாக விமர்சித்து வருபவர்களில் கார்டூனிஸ்டுகளுக்கு முக்கியமான இடம் உண்டு. அந்த வகையில், கார்ட்னிஸ்ட் மஞ்சுள் குறிப்பிடத்தகுந்தவர்.

சமூக ஊடகங்களில் இந்துத்துவ ட்ரோல்களின் தாக்குதலை தாக்குப்பிடித்து, இத்தனை காலம் கார்டூனிஸ்டாக ஊடகங்களில் பணியாற்றிய நிலையில், தனது அதிகார பலத்தால் அதற்கு முடிவு கட்டியுள்ளது மோடி அரசு.

படிக்க :
♦ திரிபுரா : பாஜக முதல்வரின் கூமுட்டைதனத்தை விமர்சித்த மருத்துவர் பணிநீக்கம் !
♦ மோடி தர்பாரில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் !

அண்மையில் ட்விட்டர் நிறுவனம், கார்ட்டூனிஸ்ட் மஞ்சுளின் ட்விட்டர் கணக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி இந்திய அரசு தங்களிடம் சட்டபூர்வமாக கோரியதாக மஞ்சுளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மஞ்சுள் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட கார்ட்டூன், இந்திய சட்டங்களை மீறியதாக மோடி அரசு கூறியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனம் அனுப்பிய இ-மெயிலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த மஞ்சுள், “மோடி அரசு வாழ்க. என்னுடைய ட்விட்டர் பதிவில், எந்தப் பதிவு அரசாங்கத்துக்கு பிரச்சனை உண்டாக்குவதாக இருந்தது எனக் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதேபோல் அண்மையில், கார்ட்டூனிஸ்ட் சதீஸ் ஆச்சார்யாவின் குறிப்பிட்ட கார்ட்டூனை நீக்கும்படி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போதோ, மஞ்சுளின் ட்விட்டர் கணக்கையே முடக்கும்படி இந்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

கார்ட்டூனிஸ்ட் மஞ்சுள் இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் அழிவுகரமான இரண்டாவது அலையின் கடுமையான யதார்த்தத்தையும், ஆமை வேகத்தில் தடுப்பூசிகள் போடப்படுவதையும் தனது கருத்துப் படங்களில் தீட்டியிருந்தார்.

அவை சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், பாஜக அரசு மீது அவர்களுக்கு வாக்கு செலுத்தியவர்கள் கூட கோபம் கொண்டனர். இனியும் இதைப் பொறுக்கக் கூடாது என முடிவெடுத்த அரசு கார்ட்டூனிஸ்டை முழுவதுமாக முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கார்ட்டூனிஸ்ட் மஞ்சுள்

முதலில் ட்விட்டர் நிறுவனம் மூலம் நோட்டீஸ் அனுப்பி மிரட்டிய நிலையில், மோடியின் கூட்டாளியான முகேஷ் அம்பானி நடத்தும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடக நிறுவனமான நெட்வொர்க் 18-ல் பணியாற்றிய மஞ்சுள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

நெட்வொர்க் 18 நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றிய மஞ்சுளை பணிநீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். எந்தக் காரணமும் சொல்லாமல் திடீர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மஞ்சுளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளன.

மஞ்சுளுக்கு எதிராக மோடி அரசின் ‘எதேச்சதிகார’ போக்கை சமூக ஊடகங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். கார்ட்டூன்களைக் கண்டு மோடி அரசு பயம் கொள்வதாக டெலிகிராப் முகப்படம் வெளியிட்டு விமர்சித்தது.

மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் போன்றோரை வெகுஜென ஊடகங்களிலிருந்து ‘அப்புறப்படுத்தியது’. ஆட்சியில் அமர்ந்தவுடன் விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் வெகுஜென ஊடகங்களிலிருந்து முன்னறிவின்றி நீக்கப்பட்டார்கள்.

படிக்க :
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்
♦ ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !

வட மாநிலங்களில் கோவிட் பெருந்தொற்றின்போது ஓடி ஒளிந்து கொண்ட மோடி அரசின் கையாலாகாதனத்தால் எங்கெங்கும் பிணக்குவியல்கள் குவிந்தன. இதை வார்த்தைகளால் பக்கம் பக்கமாக விவரிப்பதைக் காட்டிலும் கோடுகளால், மக்களை வெகுண்டெழச் செய்தவர்கள் கார்ட்டூனிஸ்ட்கள். அதை உணர்ந்த மோடி அரசு இந்த பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.


அனிதா
செய்தி ஆதாரம் : Scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க