சேவா பாரதி அமைப்போடு திமுக-வின் அமைச்சர்கள் இருவர், எம்.எல்.ஏக்கள் கூட்டு சேர்ந்து கொரோனா வார்டு திறந்து வைத்ததையும், பாரத மாதாவுக்குப் பூஜை செய்ததையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.

திமுக-வுக்கு வாக்கு கேட்ட முற்போக்கு பேசும் தோழர்கள், யூட்யூப் சேனல்கள், இயக்கங்கள் முதலானவை சேவா பாரதியின் அழைப்பின் பெயரில் திமுக-வினர் கலந்து கொண்டுள்ளனர் என்று normalise செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், சேவா பாரதியின் வரலாறு அப்படிப்பட்டது.

படிக்க :
♦ “பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் !
♦ காவி மயமாகும் வடகிழக்கு இந்தியா ! சிறப்புக் கட்டுரை

  • ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மக்கள் சேவைப் பிரிவுதான் சேவா பாரதி. அவர்களின் அகராதியில் ‘சேவா’ என்பது வெறும் சேவை கிடையாது. ’சேவா’ என்றால் சாதியால் பிரிந்திருக்கும் இந்துக்களை ஒரு அணியில் திரட்டுவதற்கும், இந்துக்கள் அல்லாத கிறித்துவ, இஸ்லாமியர்களை மீண்டும் தாய் மதம் திருப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் பணியாகும்.
  • 2001 குஜராத் பூகம்பத்தின் போது, வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும் சேவை செய்த அமைப்பு சேவா பாரதி. மற்ற அமைப்புகள் பணியாற்றுவதைத் தடுத்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளை வைத்து இந்துக் கோயில்களைக் கட்டியிருக்கிறது இந்த அமைப்பு.
  • அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 31 சிறுமிகளை குஜராத், ராஜஸ்தான் முதலான மாநிலங்களுக்குக் கடத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது சேவா பாரதி. இது குறித்து அவுட்லுக் இதழில் 2016-ஆம் ஆண்டு விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது.
  • சேவா பாரதியின் சர்வதேச அமைப்பான சேவா இண்டர்நேஷனல் அமைப்புக்கு குஜராத் பூகம்பத்தின் போது, பிரிட்டிஷ் மக்கள் அளித்த நிதி, 2002 குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக அப்போதைய பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனம் சேனல் 4 செய்தி வெளியிட்டது.
  • கடந்த ஆண்டு, சாத்தாங்குளம் லாக்கப் மரணத்தில் சேவா பாரதி அமைப்பு ஊடுறுவிய Friends of Police குழுவுக்குத் தொடர்பு இருந்தது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கோவை, திருப்பூர் முதலான கொங்கு பகுதிகளில் காவல் நிலையங்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களைச் சுற்றியுள்ளவர்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவா பாரதி தொண்டர்களைப் பார்க்க முடியும்.

இப்படியான வரலாற்றைக் கொண்டிருக்கும் சேவா பாரதியோடு மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது திமுக. மேலும், Heartfulness என்ற மற்றொரு தொண்டு நிறுவனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது ஸ்ரீ ராமசந்திரா மிஷன் என்ற பெயரில் செயல்படும் கார்ப்பரேட் சாமியார் கமலேஷ் படேலின் நிறுவனம். கமலேஷ் படேலின் பணிகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து பாராட்டி வருகிறார். சர்வதேச அளவில் யோகாவை பரப்புவதற்காக இந்த அமைப்பின் பணிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தியிருக்கிறார்.

This slideshow requires JavaScript.

Heartfulness அமைப்பின் கொரோனா உதவிச் சேவையை சென்னையில் திறந்து வைத்திருக்கிறார் திமுக-வின் மாநில இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். எதிர்காலத்தில் இந்த அமைப்பு மற்றொரு ஈஷாவாக உருவாகும் போது, அப்போது இவை பயனற்றதாக இருக்கும்.

திமுக அமைச்சர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தனது பதவியில் இருந்து விலகிய முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், பிஜேபி துணைத் தலைவர் அண்ணாமலை, தமிழக ஆர்.எஸ்.எஸ் மூத்த பொறுப்புதாரிகள் முதலானோர் பங்கேற்றுள்ளனர்.

வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையினரிடம் பாசிச பாஜக பூச்சாண்டி காட்டியும், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் போராட்டங்களை அறுவடை செய்தும் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் திராவிட முகமாக மாறுவதற்கான ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
♦ அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !

எப்படி தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான சாதிவெறி, திராவிடக் கட்சிகளால் வாக்கு வங்கிக்காக கண்டிக்க இயலாத அளவுக்கு normalise ஆகியிருக்கின்றதோ, அதே போல இந்துப் பெரும்பான்மைவாதமும் மாறப் போகிறது.

ர.முகமது இல்யாஸ்
முகநூலில் : Ilyas Muhammed Raffiudeen
disclaimer