கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் இரண்டாம் அலை மிகப்பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வான கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு போலியான கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டது தற்போது அம்பலமாகி உள்ளது.

கோவிட்-19, இரண்டாவது அலை தொற்று பரவத் தொடங்கிய நிலையில் ஏப்ரல் 1 முதல் 30-ஆம் தேதி வரை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வார், டெராடூன், தெஹ்ரி, பவுரி மாவட்டங்களை உள்ளடக்கி கும்பமேளா நடத்தப்பட்டது. மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலை மீறி, மோடி அரசும், மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக அரசும் கும்பமேளாவை நடத்தின.

கும்பமேளாவில் பங்கேற்க வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் எனக்கூறியது மாநில அரசு. அதில் கோவிட் பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிபந்தனையும் ஒன்று.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ இலட்சத்தீவு : அரசியல் விவகாரங்களை விமர்சிப்பது தேசத் துரோகமல்ல !

ஆனால், பெருந்தொற்று குறித்து எந்தவித அச்சமும் இல்லாத பக்தகோடிகள், பொய்யான பரிசோதனை முடிவுகளை அளித்துவிட்டு, கும்பமேளாவில் பங்கேற்று, அந்நிகழ்வை சூப்பர் ஸ்பெரெட்டராக மாற்றி, பல உயிர்கள் பலியாவதற்கு காரணமாகியிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் பரிசோதனைகள் எடுக்கப்பட்ட நிலையில், வெறும் 177 பேருக்கு மட்டுமே கோவிட் தொற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அத்தனையும் பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்க அளிக்கப்பட்ட கோவிட் பரிசோதனை அறிக்கைகளில் சுமார் 1 லட்சம் தொற்று பரிசோதனை அறிக்கைகள் போலியானவை என உத்தரகாண்ட் அரசாங்கம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் அரசாங்கம் தானாக முன்வந்து இந்த விசாரணையை செய்யவில்லை. பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஒருவருக்கு பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தியைப் பெற்றுள்ளார். அவர் கும்பமேளாவுக்கு செல்லவும் இல்லை. இந்த நிலையில், தன்னுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்கள் திருடப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆருக்கு இமெயில் வழியாக புகார் அளித்தார். இதன் அடிப்படையை விசாரிக்க உத்தரகாண்ட் அரசுக்கு ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது.

முன்னதாக கும்பமேளாவுக்கு வருபவர்களை பரிசோதிக்க, உத்தரகாண்ட் அரசாங்கம், 24 தனியார் பரிசோதனை மையங்கள், 14 மாவட்ட நிர்வாகங்கள், 10 கும்பமேளா நிர்வாகத்தின் பரிசோதனை மையங்கள் அமர்த்தப்பட்டிருந்தன. ஆனால், இந்த மையங்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகள் பெரும்பகுதி போலியானது என உத்தரகாண்ட் அரசாங்கத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தி கூறுகிறது.

* 50 நபர்கள், ஒரே ஒரு செல்போன் எண்ணை தங்களுடைய எண்ணாகக் கொடுத்துள்ளனர். ஒரெ ஒரு ஆண்டிஜென் பரிசோதனை முடிவு 700 பேருக்கு தரப்பட்டுள்ளது.

* முகவரிகளும் பெயர்களும் கற்பனையாக உருவாக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. ஹரித்துவாரின் எண்:5 என்ற முகவரியில் 530 மாதிரிகள் பரிசோதனைக்கு தரப்பட்டுள்ளன. கான்பூர், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 18 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தோர் ஒரே தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத் துறை தாக்கல் செய்த 1600 பக்க அறிக்கையில்தான் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதே உத்தரகாண்ட் அரசாங்கம்தான், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையை கண்டுகொள்ளாமல் கும்பமேளாவில் கோவிட் இல்லை, அனைத்தும் நல்லபடியாக உள்ளது. இது ஒன்றும் சூப்பர் ஸ்பெரெட்டர் நிகழ்வு அல்ல” என மெச்சியது.

கெடுவாய்ப்பாக, உத்தரகண்ட் அரசாங்கத்தின் சொந்த சுகாதாரத் துறையே கும்ப மேளா அமைப்பாளர்களை கையும் களவுமாக பிடித்துள்ளது.

கோவிட் சோதனைகளுக்கு, மாதிரி சேகரிப்பாளர்கள் மாதிரிகளை நேரடியாக சென்று சேகரிக்க வேண்டும். ஆனால் மாதிரி சேகரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர்களில் பாதி பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், அவர்களில் பலர் மாணவர்கள் பலர் ஹரித்வாரில் இருந்ததில்லை. ” என்கிறது அறிக்கை. இதில் ஒவ்வொரு பரிசோதனை முடிவுக்கும் 350 ரூபாயை அளித்துள்ளது மாநில அரசாங்கம்.

கும்பமேளாவை நடத்துவதற்கு எதிராக பல மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர். கும்பமேளாவில் சமூக விலகல் சாத்தியமற்றது, அது ஒரு சூப்பர் ஸ்பெரெட்டர் நிகழ்வாக மாறும் எனவும் அவர்கள் கணித்திருந்தனர். ஆனால், மத்திய, மாநில அவற்றை புறம்தள்ளிவிட்டு, ஆயிரக்கணக்கானவர்கள் இறக்க காரணம் ஆகியுள்ளன.

வழக்கம்போல, பரிசோதனைக் கூடங்கள் செய்த மோசடியாக இதை மோடி அரசும் மாநில பாஜக அரசும் கூறி தப்பித்துக் கொள்வார்கள். மற்றொரு மதவாத படுகொலைக்குத் தயாராகிவிடுவார்கள்.

கலைமதி
செய்தி ஆதாரம் : த க்விண்ட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க