புடவை என்றவுடன் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவிழா, திருமணம், கோவில். இவை எல்லாம் தானே புடவையை பற்றி நாம் அதிகம் பேசும் இடம். ஆனால், ஆண்களுக்கு புடவை என்றவுடன் நினைவுக்கு வருவது பெண்களின் வெட்கமும், அழகும். இப்படி ஆடை ஒருவருக்கும் ஒரு விதமான பார்வையை தருகிறது. இந்த புடவை வரலாற்றறை புரட்டும் முன் ஆடையை பற்றி  புகழ்ப்பெற்ற ஒரு  நகைச்சுவையைப் பார்ப்போம்.

பிரான்ஸ்சில் ஒரு பள்ளியில் குழந்தைகளை ஓவியக் கண்காட்சிக்கு அழைத்து சென்றார்களாம். அங்கே ஆணும் பெண்ணும் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது போன்று ஒரு ஓவியம் இருந்தாம். அதைப்பார்த்த ஆசிரியர் குழந்தைகளிடம் இதில் ஆண் யார்? பெண் யார்? என்று கேட்டபோது, ஆடை அணியாமல் இருகிறார்களே எப்படி ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும் என்று குழந்தைகள் ஆசிரியரிடம் கேட்டார்களாம்.

படிக்க :
♦ மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா
♦ பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா

நம்மைச் சுற்றி உள்ள சமூகம்தான் நமது ஆடையை கட்டமைகின்றது. அது ஆணுக்கு ஒருவிதமாகவும் பெண்ணுக்கு ஒரு விதமாகவும் ஆடை அணிவிக்கிறது. இதைப் பார்த்தே பழகிய கண்கள் ஆண் என்றால் ஒருவிதமாகவும் பெண் என்றால் வேறுவிதமாக பார்க்கிறது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வை அவர்களுக்கான உடையிலே பிரதிபலிக்கிறது. இதில் ஏதேனும் மாற்றத்தை  நிகழ்த்தினால் , அதை உடனே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எளிதில் வந்துவிடுவதில்லை.

ஆண், பெண் பேதம் தாண்டி, ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இப்படி எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும் ஆடை ஏதோ ஒரு இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருவது வேட்டி, புடவைதான். இதில் பெண்களின் புடவைதான் இந்தியாவின் கலாச்சார அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது.

சேலை உலகின் மிகப் பழமையான ஆடை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் (3,300–1,300 B.C.E.) முதன் முதலில் சேலை பயன்படுத்தினார்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் சேலை புழக்கத்தில் வந்தது.

இந்தியாவில் சேலை ஒவ்வொரு பகுதிலும் வெவ்வேறு பெயர்களை கொண்டு உள்ளது. இந்த saree என்ற வார்த்தை “satika” சமஸ்கிரத மற்றும் பாலி மொழியில் இடம்பெற்று உள்ளது. “satika” என்பது பெண்கள் அணியும் ஆடை என்று புத்த இலக்கியத்தில் ஜகர்தா கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் இந்த பெயர் புழக்கத்திலிருந்து எளிமையாக “saree” என்று மாறியது.

இன்றும் புத்த துறவிகள் உடுத்தும் தைக்கபடாத ஆடையே தூய்மையின் அடையாளமாக கருதுகின்றனர். இதைப் போன்றே இந்துமத நம்பிக்கையில் தைக்கப்படாத ஆடையை  அணியும் பெண்களே தூய்மையானவர்களாக பார்க்கப் படுகின்றனர். இதனால் தான் பெண்கள் கோவில், திருவிழா, திருமணம் போன்ற நாட்களில் புடவை அணிய வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்த காரணம்.

முகலாயர்களின் வருகைக்குபின் சேலையில் கற்கள், ஜமிக்கிகள் கொண்ட வேலைபாடுகளும், முந்தியில் அன்னம், மயில், யானை போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டும், புடவையின் ஓரங்களில் வேலைபாடுகளையும் கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் வருகைக்குப் பின் நீண்ட தைக்கபடாத ஆடையையுடன் தைக்கப்பட்ட ரவிக்கை மற்றும் பாவாடை இணைக்கப்பட்டது.  பின்னாட்களில் புடவையுடன் இந்த இரண்டும் இணைந்து கொண்டன.

இந்த நாலரை முழம் முதல் எட்டு முழம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே இருந்தது வந்துது. பின் நீள கால்சட்டைகளின் வருகைக்குபின் ஆண்களிடமிருந்து வேஷ்டி மறைந்தது. ஆனால், உடுக்க வசதியற்ற உடை என்றாலும் பாரம்பரியம், கலாச்சாரம் என்ற பெயரில் புடவை மீது பெண்களுக்கு ஒரு அதீத ஈர்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த சாவித்திரி பூலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர பள்ளிக்குச் செல்லும் வழியில் அதனைத் தடுக்க ஆதிக்கச் சாதியினர் அவரை கற்கள் மற்றும் சாணியை கொண்டு அவமதித்த போதும் மாற்று புடவையை எடுத்துச் சென்று மாற்றிக் கொள்வார் என்பது வரலாறு.

அதுமட்டுமா, வாராணசியில் ஜான்ஸி போரிலும் கூட புடவை அணிந்து சென்று போரிட்டார். தெலுங்கனாவில் ருத்ரமாதேவி என்ற பெண் அரசி, ஆணின் ஆடையை உடுத்தியே போர்களத்தை எதிர்கொண்டாலும், பின்னாளில் புடவையுடன் போர்க்களத்தில் வெற்றிகொண்டார். கல்விக் கூடம் முதல் போர்க்களம் வரை புடவை இந்தியாவில் பெண்களுக்கான உடையாக இருந்துள்ளது.

ஆனால், இந்தப் புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. கேரளாவில் முளச்சிபரம்பில் முலைவரி சட்டத்தை எதிர்த்து நங்கேளி நடந்திய  போராட்டம் இதற்கு ஒரு சாட்சி.

கிழத்தஞ்சையில் முழங்கால் சேலையை கணுக்காலுக்கு இறக்கி கொடுத்த மணலி கந்தசாமி போன்றோர்களின் போராட்டமும் மற்றொரு சாட்சி. விவசாயக் கூலிகளாகவும், பண்ணை அடிமைகளாகவும் வாழச் சபிக்கப்பட்ட பெண்கள் வரப்பில் நிற்கும் ஆண்டைகளின் வக்கிரப்பார்வைக்குத் தீனியாக்கப்படவும், வேலை வேகமாக செய்ய வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தங்கள் சேலைகளை முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். செங்கொடி இயக்கத்தின் தலைமையில் போராடி தான் அந்த சேலை கணுக்கால் வரை இறங்கியது. இப்படி போரட்டங்களுடனே பெண்களின் புடவை பயணித்து வந்துள்ளது.

புடவையை சுமார் 80 வகையான புடவை ரகங்களை கொண்டு உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் புடவையின் தரம், ரகம் மாறுபடும் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டா பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, பெங்காலில் பல்சுரி பட்டு என நகரத்திற்கு எற்றவாரு புடவைகள் இருக்கக்கூடும்.

சேலை மூன்று பகுதிகளை கொண்டது பாவாடை, ரவிக்கை அல்லது மாராப்பு, சீலை. இதை வடமேற்கில் லேஹெங்கா, காக்ரா மற்றும் சோலி என சொல்கின்றனர். சோலி அல்லது சீலையை வடமேற்கில் தலைக்கும் தெற்கில் தோளில் பல்லுவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிதான் 6-ம் நுற்றாண்டில் புடவையை வகைப்படுத்தி இருந்தனர்.

உலகம் முழுவதும் சுமார் 108 வகையாக புடவையை உடுத்துகின்றனர். புடவை சற்று உடுத்த கடினமான உடை என்றாலும் அதன் மீது மக்களுக்கு அதீத ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் புடவையை பலவிதமாக இன்றைக்கு வடிவமைக்கின்றனர். புடவை உலக அரங்கில் சுமார் 38,000 கோடி வர்த்தக மதிப்பை கொண்டுள்ளது. இது இன்னும் 6 ஆண்டுகளில் 60,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட வீராங்கனைகள் முதல் தற்போது இருக்கும் பெண் அரசியல் ஆளுமைகள் வரையில் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என அனைத்து ஆளுமைகளும் புடவையைப் பயன்படுத்தியது, இந்த ஆடையின் மீதான பார்வையை மேம்படுத்தியிருக்கிறது. சேலை அணிவதற்கும், தமது சுயமரியாதையை காப்பாற்றுவதற்குமான போராட்டத்தை பெண்கள், புடவையை முன் வைத்து இந்தியாவில் முன்னெடுத்திருக்கின்றனர்

படிக்க :
♦ ஜீன்ஸ் : ஆடையின் வரலாறும் – பொதிந்துள்ள உழைப்பின் வரலாறும் !
♦ பொள்ளாச்சி கொடூரமும் சீழ்பிடித்த சமூகமும் – சிந்துஜா

சாவித்ரிபாய் பூலே முதல் அருந்ததிராய் வரை பல பெரிய ஆளுமைகளும் சேலையை தங்களின் உடையாக தேர்ந்தெடுத்து இருகின்றனர். புடவை கடந்து வந்த பாதை துயரங்கள் நிறைந்து இருந்தாலும் உலகம் முழுவதும் பெண்களின் விருப்ப ஆடையாக இருந்து வருகிறது.

பெண்கள் பணிக்குச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், சேலை உடுக்கவும், அவசர உலகில் பயணிக்கவும் வசதியற்றதாக இருக்கிறது. ஆகையால் பெண்களின் உடையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆடையைப் பொறுத்தவரையில் ஒருவர் உடுக்கும் உடை, அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. அதை தேர்தெடுக்கும் உரிமை அவர்களுக்கானது மட்டுமே. தொடர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிப்போம் !!

சிந்துஜா
சமூக ஆர்வலர்
disclaimer

2 மறுமொழிகள்

  1. புடவை, தாவணி, வேட்டி போன்றவை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு ஏற்ப இருந்ததும், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஏற்ப சுடிதார், டீசர்ட், பேண்ட் என மாறுவதும் அவசியமாகிறது…

  2. அதை தான் கடைசி வரிகளில் சொல்லி இருக்கிறேன். மாற்றம் சுழலுக்கு ஏற்றவாறு நிகழ வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க