கொங்குநாடு !
தனி யூனியன் பிரதேசமாகிறது தமிழக மேற்கு மண்டலம்
திமுக. வின் மோதல் போக்கால் மத்திய அரசு கோபம்
ஸ்டாலின் அரசுக்கு ‘விளையாட்டு’ காட்ட பலே திட்டம்”

இது கடந்த ஜூலை 10-ம் தேதியன்று வெளிவந்த தினமலர் பத்திரிகையின் முதல் பக்க கொட்டையெழுத்துச் செய்தித் தலைப்பு !

இந்தத் தலைப்பு வந்தவுடன் தமிழகம் முழுவதும் முற்போக்கு அமைப்புகள் பலவும் இதற்கு எதிரான கண்டனங்களைத் தெரிவித்தன. சமூக வலைத்தளங்களிலும் இதற்கு வலுவான கண்டனங்கள் எழத் துவங்கின.

ஒருபுறம், பெருகி வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தடுப்பூசி போதுமான அளவு கொடுக்க வக்கில்லாத நிலைமையில் மக்களை திசை திருப்ப மோடி கும்பல் செய்யும் “சீப் பாலிடிக்ஸ்” என்று ஒரு தரப்பினர் அதைப் புறங்கையில் தள்ளிவிட்டனர். கோவையை தொழில் ரீதியாகவும் , சொத்து ரீதியாகவும் ஆக்கிரமித்திருக்கும் வட இந்திய மார்வாடிகளை வைத்து சங்க பரிவாரத்தினர் கிளப்பிவிட்டிருக்கும் புதுக்கதை இது என்று பலரும் கூறினர்.

படிக்க :
♦ அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் … தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம் !
♦ 9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் – தினமலர் வக்கிரம்

மற்றொரு புறம், பாஜக – சங்க பரிவாரக் கும்பலும், அதன் அடிபொடி ட்ரோல்களும் கொங்கு நாடு ஏன் தேவை என்பது குறித்து விசமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டன. இந்நிலையில் இது குறித்து பாஜக எவ்வித உறுதியான கருத்தையோ, பதிலையோ தெரிவிக்கவில்லை.

பொதுவாகவே, பொதுச் சமூகம் சிந்திக்காத விசயங்களைஅதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விசயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், அதற்கான பீடிகை போடுவதையும், அதற்காக ஆழம் பார்க்கும் வேலையையும் ஆளும் வர்க்கங்கள் செய்யும்.

மக்களின் மனதில் ஒரு சட்டத்தைப் பற்றியோ அல்லது திட்டத்தைப் பற்றியோ ஒரு நேர்மறையான ஆதரவான சிந்தனையை எழச் செய்வதற்கும், இத்தகைய சட்டங்களோ திட்டங்களோ அறிமுகப்படுத்தப்பட்டால், அதற்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும் என அறிந்து கொள்வதற்கும் இத்தகைய பணிகளை அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் திட்டமிட்டு மேற்கொள்ளும்.

இதற்கு சங்க பரிவாரக் கும்பலும் அதன் தலைமையிலான மோடியின் ஆட்சியும் விதிவிலக்கல்ல. இதே பாணியில் தான் தனது இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தத் துவங்கும் முன்னர், ஆழம் பார்ப்பதற்காக கொங்குநாடு விவகாரத்தைக் கொளுத்திப் போட்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

தாம் உள்ளே நுழைய விரும்பும் இடங்களின் தன்மையை ஆராய்ந்து, அவற்றின் சமூக அடிப்படையை நொறுக்குவதோடு, அந்த இடங்களில் உள்ள அரசியல் அணி சேர்க்கையையும் அதற்கேற்றவாறு கட்டியமைக்கும் தந்திரத்தில் கை தேர்ந்தது பாஜக கும்பல். காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் பாஜக பெற்ற வெற்றிகளே இதற்கான சமீபத்திய சாட்சிகள்.

அந்த வகையில் தற்போது சங்க பரிவாரக் கும்பல், தமிழ் நாட்டை தனது கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அரசியல் அணி சேர்க்கையையும், தமிழ்நாட்டின் அடிப்படையாக இருக்கும் மொழி சார்ந்த ஒற்றுமையையும் உடைக்கும் வகையில் திட்டமிட்டுக் களமிறங்கியுள்ளது.

சங்க பரிவாரத்தின் அணி சேர்க்கையைப் பொறுத்தவரையில், பத்தாண்டு ஆட்சியில் ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டையும், கொள்ளையடித்துச் சேர்த்த சொத்தை மத்திய அரசின் கைகளிலிருக்கும் வருமான வரித்துறை, இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அதிமுகவின் எடப்பாடி .பி.எஸ். கும்பல் அதன் முதல் கூட்டாளி.

தனது சாதிய சனாதன தர்மத்தை களத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் பாமக ராமதாஸ், பார்ப்பனியப் படிநிலையில் தமது சாதிக்கான இடத்தை சிறிது மேம்படுத்தி தமக்குக் கீழே பிற சாதிகளை மிதிக்கக் காத்திருக்கும் “புதிய தமிழகம்” கிருஷ்ணசாமி ஆகியோர் எல்லாம் சங்க பரிவாரத்தின் கொள்கைரீதியான கூட்டாளிகள்.

பணத்திற்காகவும், பதவிக்காகவும், சாதி ஆதிக்கத்திற்காகவும் சுயமரியாதையை இழந்து சங்க பரிவாரத்துக்குச் சேவகம் செய்யத் தயாராக இருக்கும் இவர்கள்தான் பாஜகஆர்.எஸ்.எஸ்.-ன் நிரந்தரக் கூட்டாளிகள்.

இவர்கள் தவிர, தென் தமிழகத்தில் நாடார் சாதி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் மறவர் சாதி மற்றும் கொங்கு வட்டாரத்தில் கவுண்டர் சாதி உள்ளிட்ட சாதிச் சங்கங்களுக்குள் இரண்டரக் கலந்து நிறைந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். இதுதான் சங்க பரிவாரத்தின் அரசியல் அணி சேர்க்கை.

தமிழ்நாட்டில் மொழியை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் ஒற்றுமையை உடைப்பதன் மூலம் சாதியரீதியான அணிதிரட்டலையும் அதன் மூலமாக மதரீதியான பிளவையும் உண்டாக்குவதற்குத் திட்டமிடுகிறது சங்க பரிவாரம். அதன் முதல் வெட்டு கொங்குநாடு என்பதாக விழுந்திருக்கிறது.

தமிழகத்தைத் துண்டாட பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் சதி செய்கிறது என தமக்கு எதிராக கொங்குநாடு விவகாரம் திரும்பிவிடக் கூடாது என்பதில் சங்க பரிவாரம் தெளிவாக இருக்கிறது. அதனால் தான் முன்னெச்சரிக்கையாக தமக்கு புரோக்கர் வேலை பார்க்கும் தினமலர் மூலம் “கொங்கு நாடு ” விவகாரத்தை கொளுத்திப் போட்டுள்ளது.

இப்படி கொளுத்திப் போட்டுவிட்டு, தமக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜக ஒதுங்கியிருக்கும் போதே, சங்க பரிவாரத்தின் பிற உதிரி அமைப்புகள் கொங்குநாடு விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு உருட்டுகின்றன. இந்த உருட்டுகள் ஒரு பக்கத்தில், இரைச்சல் வடிவில் ஓலம் எழுப்பிக் கொண்டிருக்கையில் கவித்துவமாக மற்றொரு புறத்தில் உருட்டுகிறார், ‘எழுத்தாளர்’ மாலன்.

சமூக வலைத்தளங்களில் ‘மேஜர் மாமா’ என சில ஆண்டுகளாக போற்றப்படும் மாலன், தினமணியில் கடந்த ஜூலை 14-ம் தேதி ஒரு நடுப்பக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார். மாநிலச் சீரமைப்பு : அம்பேத்கர் சொல்வது என்ன ?” என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் தினமலர் பற்ற வைத்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிநிரலை அணையவிடாமல் ஊதிவிடும் வேலையைச் செய்ய மெனக்கெட்டிருக்கிறார் மாலன்.

கட்டுரையை துவக்கும்போதே, “பெரிய மாநிலங்களைச் சிறிய மாநிலங்களாக பிரிப்பது நல்லதா? தீங்கானதா? ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டிருப்பது சரியா தவறா என்ற கேள்விகள் இன்று பல தளங்களில் ஒலிக்கின்றன” என்று பீடிகை போட்டு துவங்குகிறார்.

தமது நோக்கத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் அடிப்படை நேர்மையற்ற கோழைகளின் வழிமுறைதான் இத்தகைய பீடிகைகள். நடக்காத ஒரு விவாதத்தை, பெரும் அறிவுத்துறை விவாதம் என்பதாகக் காட்டி, தனது சுயநலத்திற்காக எடுக்கும் நிலைப்பாட்டை அறிவுத்துறை விவாதத்தில் தாம் கண்டறிந்த சமூகத் தீர்வாக முன் வைக்கும் சந்தர்ப்பவாத வழிமுறைதான் இது. மாலன் போன்ற உயர் ரக’ அறிவுஜீவிகள் இதைக் கடைபிடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

படிக்க :
♦ மாணவர் போராட்டம் குத்தாட்டமா ? தினமலர் எரிப்புப் போராட்டம் !
♦ ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?

சரி, விசயத்திற்கு வருவோம். கட்டுரையின் பெரும்பகுதியில், அம்பேத்கர் மாநிலப் பிரிவினை குறித்து எழுதியுள்ள நூலில் இருந்து சில பகுதிகளை எடுத்தாண்டு, கடைசிக்கு முந்தைய பத்தி வரை வளைத்து வளைத்து எழுதி, ஒரு மொழி பேசும் ஒரே மாநிலம் தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாகத்துக்காக இரண்டு மூன்றாகக் கூட பிரித்துக் கொள்ளலாம் என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார் .

அதாவது தமிழ் மொழி பேசும் தமிழ்நாட்டை நிர்வாகத்துக்காக இரண்டு மூன்றாகக் கூடப் பிரித்துக் கொள்ளலாம் என்பதைத்தான் அம்பேத்கரை எல்லாம் துணைக்கு அழைத்து வந்து கூறியிருக்கிறார். திடீரெனெ தமிழ்நாட்டை பிரித்துக் கொள்ளலாம் என ‘சும்மா’ சொல்லிவிட்டுப் போக முடியாது அல்லவா, அதனால்தான் கடைசி பத்தியில் அதற்கான காரணங்களைச் சொல்லி கட்டுரையை முடித்திருக்கிறார் மாலன்.

அதாவது, சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் தான் வளர்ச்சியடைந்திருக்கின்றன என்றும் பிற மாவட்டங்கள் வளர்ச்சியடையவில்லை என்றும் தமிழகம் தலை பெருத்து உடல் வற்றியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் மாலன்.

எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்த “கம்பி கட்டும்” கதையை சொல்கிறார் என்பதை அவர் எழுதவில்லை. எழுதவில்லை என்றாலும் நாம் கேள்வி கேட்கக் கூடாது. பாவம் .. அவருக்கும் பதவிப் பசி எடுக்குமல்லவா ? விட்டுவிடுவோம். சாதகமாக தீர்ப்பெழுதியவனுக்கு கவர்னர் பதவி கிடைக்கும் நாட்டில், இப்படியான கவித்துவ உருட்டல்களுக்கு ஒரு டவாலி பதவியாவது கிடைக்காதா என்ன ?

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றோ, மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றோ எந்தப் பகுதி மக்களிடமிருந்தும் வராத ஒரு கோரிக்கையை இங்கு கொளுத்திப் போடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதிக்கு தூபம் போடுகிறார் மாலன்.

வட தமிழகத்தை நிர்வாக ரீதியாக பிரிக்க வேண்டும் என ராமதாஸ் அவ்வப்போது ஈனக்குரலில் புலம்புவது மட்டும்தான் எப்போதாவது நடைபெற்றிருக்கிறதே அன்றி, இத்தகைய கோரிக்கைகள் என்றும் மக்களிடமிருந்து வந்த கோரிக்கைகள் அல்ல.

கவுண்டர் சாதியினரின் ஆதிக்கம் அதிகமுள்ள கொங்குமண்டலத்தைத் தனியாகவும், வன்னியர் சாதியினரின் ஆதிக்கம் அதிகமுள்ள வட தமிழகத்தைத் தனியாகவும் பிரிப்பதன் மூலம் சாதிய முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி அதன் மூலம் தமது இருப்பை தமிழகத்தில் உறுதி செய்து கொள்ள எத்தனிக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

நான்காண்டு அடிமைகளின் ஆட்சியில், ஏற்கெனவே தமிழ் நாட்டிற்குள் தலைதூக்கிக் கொண்டிருக்கும் சாதிய முனைவாக்கத்தை விரைவுபடுத்தும் சங்க பரிவாரக் கும்பலின் முயற்சிகளை முறியடிப்போம். அதற்குத் துணை போகும் மாலன், தினமலர் போன்ற ஊடக புரோக்கர்களையும், சாதியக் கட்சிகளையும் புறக்கணிப்போம் !!

சரண்
செய்தி ஆதாரம் : தினமலர் – 10.07.2021 , தினமணி – 14.07.2021

 

2 மறுமொழிகள்

  1. சென்னையில் இருந்து மதுரை புரோட்டா கடைக்கு பலர் வேலை தேடி வருகிறார்கள் . ராமநாதபுரத்திற்கு டிக்கெட் கிடைப்பது இல்லை . ராமநாதபுறத்தில் வேலை செய்து விட்டு வாராவாரம் சென்னைக்கு வீட்டுக்கு செல்லும் பலரை எனக்கு தெரியும் .
    சென்னை தான் பின்தங்கி இருக்கிறது , சங்கிகளுக்கு புரிவதில்லை

  2. கொங்கு பகுதியை (மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் ஆக) தனியாக பிரிப்பது என்பது கவுண்டர் சமூகத்துக்கு ஆபத்தானதாகவே முடியும். கவுண்டர்கள் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் என்பது இல்லாமல் போய்விடும். கொங்கு பகுதியில் கூட கவுண்டர்கள் கணிசமாக வாழ்கிறார்கள் (தோராயமாக முப்பத்தைந்து சதம்) என சொல்லலாமே தவிர பெரும்பான்மையாக இருக்கும் சாதி என சொல்ல முடியாது. தனியாக பிரியும்போது கவுண்டர்களுக்கு எதிராக மற்ற சாதிகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் அணி திரட்டப்பட்டு எதிராக செயல்படுவது நடக்கக்கூடும். இப்போது கொங்கு பகுதியை பிரிப்பதற்கு கவுண்டர்களை உசுப்பி சதி செய்யும் சக்திகள் இதனையும் செய்வார்கள். சாதி கலவரங்களுக்கு பஞ்சமிருக்காது. கூடவே மத ரீதியாக பிளவுபடுத்தும் வேலையும் வன்முறையும் நடக்கும். சாதி வெறி மற்றும் மதவெறி ஆகியவற்றால் உந்தப்படும் கவுண்டர்கள் பலர் இந்த பிரிவினை திட்டத்திற்கு உடன்படுகிறார்கள். தங்களுடைய வருங்கால தலைமுறைகளின் எதிர்காலத்தை பலி கொடுக்கிறோம், தங்கள் பகுதியின் இயல்பு தன்மையை கெடுக்கிறோம் என்பதைக்கூட இவர்கள் உணரவில்லை. இவர்களுக்கெல்லாம் யார் சொல்லி புரியவைப்பது? வெளிமாநிலங்களில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் குடியேறி உள்ளார்கள். அவர்களில் கணிசமானவர்கள் கொங்கு பகுதியில் உள்ளார்கள். கொங்கு பகுதி தனியாக பிரிக்கப்பட்டால் ஓட்டுரிமை கொண்ட இவர்களுடைய அரசியலுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கும். இது கொங்குப் பகுதியின் மண்ணின் மைந்தர்களுக்கு எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. கொங்கு பகுதி தனியாக பிரிக்கப்பட்டால் அதனுடைய தமிழ் அடையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்திய அடையாளமே தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். கோவை மற்றும் திருப்பூர் ஆகிய தொழில் நகரங்களை மார்வாடிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு போவதற்கும் இந்த பகுதியின் வளங்களை சுரண்டுவதற்கும் நடக்கும் மிகப்பெரிய சதி இது. கவுண்டர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், சிறு சிறு வியாபாரம் கூட மார்வாடிகளின் அல்லது வந்தேறிகளின் கைக்கு போகும். திராவிட கட்சிகளுக்கு கப்பம் கட்ட வேண்டி இருக்கிறது என்பதற்காக கொங்கு பகுதியை தனியாக பிரிக்க வேண்டும் என அங்கிருக்கும் முதலாளிகள் சிலர் நினைப்பது தலையில் பேன் இருக்கிறது என்பதற்காக கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்வதற்கு சமம். கொங்கு பகுதி தனி யூனியன் பிரதேசம் ஆனால் கோவை நகரம் வெளிமாநிலத்தவரால் ஹைஜாக் செய்யப்பட்டுவிடும். இப்போதே நிலவரம் கிட்டத்தட்ட அப்படித்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க