லக்கிய வடிவங்கள் நிகழ்கால சமூகத்தின் பிரதிபலிப்புகளாய் விளங்குகின்றன. நாம் வாழ்கின்ற சமூகத்தில் நல்லவர்களும் – கெட்டவர்களும், மனிதர்களும் – மனித மிருகங்களும், ஒழுக்க நெறி கொண்டவர்களும், ஒழுக்க நெறி தவறியவர்களும் ஒன்று கலந்து தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதே சமூக எதார்த்த நடைமுறை.

பண்பாட்டு சீரழிவுகள், சாதிய ஒடுக்குமுறைகள், வர்க்க வேறுபாடுகள், கல்வித்தகுதி வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்களை தோற்றுவிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, “செல்லாத பணம்” நாவலின் வாயிலாக நிகழ்கால சமூக எதார்த்தத்தை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் இமையம்.

வசதியான நடுத்தரவர்க்க வீட்டுப்பெண் ரேவதி, ஒரு பொறியியல் பட்டதாரி. பர்மாவிலிருந்து வந்த அகதியும் ஆட்டோ ஓட்டுநருமான ரவியை காதலிப்பதாக கூறி அவனையே “திருமணம் செய்து கொள்வேன்” என்று பிடிவாதமாக உறுதியாக இருக்கிறாள்.

ரேவதியின் தந்தை நடேசன், தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேவதியின் மொத்த குடும்பமுமே இந்தக் காதலை எதிர்க்கிறது. சாதி – தொழில் – படிப்பு – பொருளாதாரப் பின்புலம் – சுற்றத்தார் மதிப்பு என இவற்றில் எதிலுமே ரேவதியின் குடும்பத்திற்கு சமமற்ற ஆட்டோ டிரைவர் ரவியை காதலிக்கிறாள் ரேவதி.

படிக்க :
♦ ஊறிப்போன ஆணாதிக்க சிந்தனையை அகழ்ந்தெடுத்து அகற்றிய கொரோனா ஊரடங்கு !
♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

ரேவதியின் மனதை மாற்ற, அவரது பெற்றோர்கள் எத்தனையோ வழிகளை கையாண்டும் ரவியை தான் கல்யாணம் கட்டிக் கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறாள். ரேவதியின் பெயரை உடம்பு முழுவதும் பச்சை குத்திக் கொண்டு, அவளுக்காக கையில் பிளேடால் கீறிக்கொண்ட ஆட்டோ டிரைவர் ரவியின் செய்கைகள் அனைத்தையுமே காதலின் அளவீடாகக் கருதுகிறாள் ரேவதி.

“அவன் ஸ்டேட்டஸ் தெரிஞ்சுமா அவனை காதலிக்கிறாய்?”
“ம் ”
“எப்படி !”
“பிடிச்சிருக்கு”
“எதனால ?”
“தெரியல ”
“உலக அதிசயமானது அவன் கிட்ட நீ எதை பார்த்த”
“ஒன்னும் இல்ல.”
”நீ சொல்றதெல்லாம் மனசுல நிக்கல.”
“அவன் சொன்னது மட்டும்தான் நிக்குது”

ரேவதியின் அண்ணன் மனைவி அருள்மொழிக்கும் ரேவதிக்கும் இடையிலான உரையாடல் இது. ‘தன் பெண்ணின் வாழ்க்கை சிதைந்து போய்விடுமே’ என்ற
அச்சத்தால் அந்தக் குடும்பமே அதைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறது. அவனைத்தான் கட்டுவேன் என்று பிடிவாதத்தில் உடும்பு பிடியாக இருக்கிறாள் ரேவதி.

இதன் விளைவாக அந்த குடும்பம் படும் வலி – வேதனை- துயரங்கள், அவற்றுக்கு அக்குடும்பம் காட்டும் எதிர்வினைகள், ரவி மீது காட்டும் பாரபட்சம், அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் என அத்தனையையும் மிகையான புனைவு இல்லாமல் கதைக்களம் பின்னப்பட்டுள்ளது தான் இந்த நாவலின் சிறப்பு. சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்களையும் நம் கண் முன் எடுத்துக் காட்டியிருக்கிறது இந்நாவல்.

பெற்றோர்கள், உறவினர்களின் எதிர்ப்புகளை மீறி ரவியை திருமணம் செய்துகொள்ளும் ரேவதியின் வாழ்க்கையில், ரவியின் எதற்கும் கட்டுப்படாத ஒழுக்கமற்ற நடத்தையும்; அவனது குடிப்பழக்கமும், அவனது ஆணாதிக்க சந்தேகப் பார்வையும், ஒடுக்குமுறையும் ரேவதியின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பிக்கிறது.

அடியும் உதையும் வறுமையும், கணவனின் சந்தேக குணமும், தனது தாய் தந்தையின் ஒதுக்குதலும், ரேவதிக்கு வாழ்க்கையின் மீது மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்குகின்றன. தனது பொறியியல் பட்டப் படிப்பை வைத்து நல்ல வேலையில் அமர்ந்து தனது கணவனையும், அவனது குடும்பத்தையும் சீர்தூக்கி விடலாமென்று நினைத்த ரேவதியின் கனவு சுக்கு நூறாகிப் போகிறது.

தனது மகளின் வாழ்க்கை இப்படி சீரழிந்து விட்டது என்று எண்ணி கலங்குகிறாள் ரேவதியின் தாய். ஏதாவது கேட்கும்போதெல்லாம் பண உதவி செய்கிறார். இரண்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் திருந்த மறுக்கிறான் ஆட்டோ டிரைவர் ரவி. மது அடிமையாகி, ஆணாதிக்க வெறியோடு தனது மனைவியை துன்புறுத்துகிறான். நிலைகுலைந்து போய் விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் ரேவதி. தாய் தந்தை சகோதரன் உள்ளிட்ட குடும்ப உறவுகளுடனான மனக்கசப்பு மிக்க உறவு மற்றும் கணவன், குழந்தைகள் என்ற குடும்ப உறவு ஆகிய இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறாள் ரேவதி.

தன் அம்மாவிடம் பணம் வாங்கி ஆட்டோ வாகனத்திற்கு கட்ட வேண்டிய தவணைத் தொகையை வைத்திருக்கிறாள் ரேவதி; அதை எடுத்துக்கொண்டு போய் குடித்துவிட்டு வந்து நிற்கிறான், குடிநோயாளி ரவி. விரக்தியின் விளிம்புக்கு சென்ற ரேவதி இனி உயிர் வாழ்வது அர்த்தமற்றது என்ற முடிவுக்கு வருகிறார்.

“நீ இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்ற ரவியின் ஒரு சொல்லின் பின்னே தன் வாழ்க்கையை ஒப்படைத்த ரேவதி, “சாகிறது என்றால் போய் சாவு” என்ற ரவியின் ஒற்றைச் சொல்லை கேட்டு செத்துப் போக முடிவு செய்கிறாள்.

80 சதவிகித தீக்காயங்களுடன் ரேவதி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.ஜிப்மர் மருத்துவமனையின் தீ விபத்து பிரிவு என்ற வளாகத்துக்குள் நடக்கும் நிகழ்வுகளை ஒட்டியே இந்த நாவலின் கதைக்களம் பின்னப்பட்டிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உடல் எரிந்து மருத்துவமனைக்கு புகுவதும், உடல் கொள்ளும் தவிப்புகளும், உயிர் பிரிவதும் என விவரிக்க முடியாத வேதனையான உணர்வுகளை மனதை உலுக்கும் வகையில் நமக்குக் கடத்துகிறது இந்த நாவல்.

தீக்குளிப்புக்குப்பின் நடக்கும் போராட்டங்களையும், உடனிருப்பவர்கள் படும் வலியையும்; வேதனையையும் ஆற்றாமையையும்; அழுகையையும் மனப் போராட்டங்களையும், – நேரில் காண்பதுபோல் – நாம் அங்கே நிற்பது போன்ற ஒரு உணர்வை இந்த நாவல் ஏற்படுத்துகிறது. ஜீவ மரணப் போராட்டத்தில் இந்த உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற தவிப்போடு பல்வேறு உறவுகளின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை மருத்துவமனையைச் சுற்றி சுற்றி பின்னி விரிகிறது “செல்லாத பணம்” நாவல்.

படிக்க :
♦ மல்லாக்கத் துப்பலாமா பெற்றோர்களே ? எழுத்தாளர் இமையம்
♦ நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

“எவ்வளவு பணம் ஆனாலும் பரவாயில்லை என் பெண்ணை காப்பாற்றுங்கள் “என்று கதறுகிறார் ரேவதியின் தந்தை. இவ்வளவு நாளும், தன் பேச்சை மீறி திருமணம் செய்ததால், தன் பெண்ணை முகம் கொடுத்துக் கூட பேச மனமில்லாத அதே தந்தை. மருத்துவர் ஒற்றை வரியில் சொல்லிவிடுகிறார். “இந்தப் பணம் இப்போ இங்கே செல்லாத பணம்” என்று.

ரேவதியின் மரணம் ரேவதியின் வாக்குமூலத்தின்படி அது ஒரு விபத்து. அவளது தாய்தந்தையரைப் பொருத்த வரையில் அது ரவி செய்த கொலை. ரவி விவரித்தபடி அது ஒரு தற்கொலை!

தற்கொலையோ, கொலையோ இவற்றை விட கொடுமையானது வாழும் போதே நடத்தப்படும் உணர்வுக் கொலை. ரேவதி உயிரோடு இருக்கையில் அத்தகைய உணர்வுக் கொலையை முன்னின்று நடத்தியவர்கள் தான் அவள் இறந்த பிறகு, அது கொலை என்றும் தற்கொலை என்றும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்கிறார்கள்.

“தாலி கட்டிய மறுநாளே வெளியே போகக்கூடாது, அக்கம்பக்கம் பேசக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்று கூறிவிட்டான். 24 மணி நேரமும் சந்தேகம்தான், பொறுக்கிப் பயலுக்கு” என்று தன் மகள் அவளது கணவன் ரவியிடம் பட்ட வேதனையைச் சொல்லி அழுகிறாள் ரேவதியின் தாய்.

அனைவரும் வெறுத்து ஒதுக்கும் ரேவதியின் கணவன் ரவியிடம் ரேவதியின் அண்ணன் மனைவி அருள்மொழி உரையாடுகிறார். ரவியின் வாதங்களைக் கேட்ட பின்னர்,  “இவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறானே ஆட்டோ டிரைவர்… இந்தப் புத்திசாலித்தனம் நல்ல நடப்புக்கு மாற்றப்பட்டு இருந்தால் இப்படிப்பட்ட சோகம் நிகழ்ந்திருக்காது” என்று எண்ணி வருந்துகிறாள்.

ரவியின் புத்திசாலித்தனம் ஏன் நல்ல நடப்புக்கு மாற்றப்படவில்லை? ரவியின் ஆணாதிக்க – உதிரித்தனமான மனநிலை எங்கிருந்து ஏற்பட்டது ? ரவியின் மீது ரேவதி வைத்திருந்த காதலையும், ரேவதிக்காக உடல் முழுக்க பச்சைகுத்திக் கொண்டு கையை பிளேடால் அறுத்துக் கொள்ளும் அளவிற்கு ரவி வைத்திருந்த காதலையும் தாண்டி ரேவதியை மரணத்தை நோக்கித் தள்ளியது எது ?

நிலவும் முதலாளித்துவ சமூகம், ஏற்படுத்தியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு ரவியைப் போன்ற ஆணாதிக்க, குடி நோய்க்கு அடிமையான ஒழுங்கீனமான இளைஞர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. சமூகம் ஏற்படுத்தியிருக்கும் இந்த ஏற்றத்தாழ்வில், தாழ்நிலையில் இந்தச் சமூகத்தால் இருத்தி வைக்கப்பட்டவர்கள் மீது அதற்கு சிறிது மேலே உள்ளவர்கள் காட்டும் அசூயையும், அதன் மீது அவர்க்ள் நடத்தும் மறைமுகத் தீண்டாமை நடவடிக்கைகளும், ரவியைப் போன்ற இளைஞர்களை அதே நிலையில் இருத்தி வைக்கின்றன.

ரேவதி இறந்ததும், அவரது தாய் தனது கணவரிடம், “காச கொடுத்தீங்க. பொருளை கொடுத்தீங்க. நான் எதை செஞ்சாலும் ஏன் என்று கேட்காம இருந்தீங்க. எல்லாம் செஞ்சு என்னத்துக்கு ஆச்சு? நேரில கூப்பிட்டு அந்த நாய மிரட்டல; அவனை மிரட்டி இருந்தா அவனுக்கு பயம் வந்திருக்கும்;அடங்கி இருப்பான். தெரு பொறுக்கி நாய் கிட்ட என்ன பேசறதுன்னு இருந்தீங்க; மானம் போயிடும், மானம் போய்விடும் என்று ஒதுங்கி-ஒதுங்கி போனீங்க” என ஆற்றாமையோடு கேட்கிறாள்.

மகள் தனது விருப்பத்துக்கு மாறாக, தன் ‘தரத்துக்கு’ கீழான ரவியை திருமணம் செய்து கொண்டதால், சமூக எதார்த்தத்தின் கட்டுகளுக்குள் சிக்கியிருந்த ரவியை அதிலிருந்து மீட்டெடுப்பது பற்றி ரேவதியின் தந்தையுடைய ‘உயர்தர’ மனம் யோசிக்கக் கூட இல்லை. இதை ரவியின் குரலிலேயே ஒலிக்கிறது இந்த நாவல்.

“சல்லிப்பயல் சல்லிப்பயல் ஆகத்தான் இருப்பான்.. ஆனால் பெரிய மனுஷன் பெரிய மனுஷன் ஆக இருக்க வேண்டுமா இல்லையா?” என்று ரவியின் கேள்வி நம்மை உலுக்கி எடுக்கிறது.

ரேவதியின் கல்வித் தகுதி அவளுக்கு முழுமையான சமூக விழிப்புணர்வை உருவாக்கவில்லை. சமூகத்திலும் அதன் பிரதிபலிப்பாக தனது குடும்பத்திலும் நிலவும் சாதிய, வர்க்கரீதியான ‘உயர்’ மனநிலையை ஒதுக்கும் அளவிற்கு விழிப்புணர்வு கொண்ட ரேவதியால், வாழ்க்கை பற்றிய தனது விருப்பத்திற்கு ஏற்ற துணையைத் தேர்வு செய்வதற்கு அறிவுப்பூர்வமாக சிந்திக்க முடியவில்லை. அங்கு தனது உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள். பணிக்குச் செல்லும்  தனது விருப்பம் முதல், சாதாரணமாக தெருவுக்குச் செல்வதையே தடை செய்யும் – சந்தேகிக்கும் – ‘கணவன்’ ரவியைக் கண்டு அதிர்ச்சியுறுகிறாள்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஏற்படும் உள்ளக் கலப்புக்கு நட்பு என்று பெயர். வெறும் உடல் கலப்புக்கு காமவெறி என்று பெயர். நட்புணர்வும் காமமும் கலந்ததே காதல். குணமறிந்து காதல் கொள்! உடல் அறிந்து, உடல் அழகு சார்ந்து அல்ல! கண்டதும் காதல் என்பதெல்லாம் வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடு.

நடுத்தரவர்க்க பெண்கள் பழமையான ஆணாதிக்க மேலாண்மை மதிப்புக்கு உட்பட்டு தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் இன்னல்களையும், கொடுமைகளையும் மௌனமாக சகித்துக் கொண்டு இருக்கின்றனர். குடிகார கணவனை சீர் படுத்துவதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது குழந்தைகளுக்காக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற துணிச்சலான உணர்வோடு, நிலைமைகளை மாற்றுவதற்கு போராடுவதற்கு மாறாக தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

ரேவதியின் வாழ்க்கை சிதைந்து போனதற்கு நிலவுகின்ற ஆணாதிக்க சமூகமும், குடி உள்ளிட்ட பண்பாட்டுச் சீரழிவுகளும், சாதி ஆதிக்க உளவியலும், நடுத்தர வர்க்கத்தின் ஒதுங்கும் போக்கும், வறட்டு கௌரவமும் அடிப்படைக் காரணிகளாக உள்ளன.

சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும்; சாதியப் படிநிலை வரிசையும் இதற்கு ஏற்ற, சாதி ‘அருமை பெருமைகளும்’ திருமணங்களின் மூலமாகவே நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.

பொருளாதாரம்-கல்வி-ஒழுக்கம்-தொழில் இந்த நான்கும் சரியாக இருந்தால் சாதி சற்று பின்வாங்குகிறது; சமரசம் செய்து கொள்கிறது. இந்த நான்கும் இல்லையென்றால் சாதி வெறியாக மாறி தாண்டவமாடுகிறது.

இந்த நாவலில் வரும் ரேவதியின் அண்ணன் முருகனும், அவளது கல்லூரி தோழி அருள் மொழியும் காதலிக்கிறார்கள். வர்க்க அந்தஸ்தும் கல்வித் தகுதியும் ஒன்றாய் இருப்பதால் இங்கு சாதி சமரசம் செய்து கொள்கிறது.

ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் – தனது வர்க்கத்துக்கும் குறைவான தான்தோன்றித்தனமான குணகேடுகள் கொண்டவனை திருமணம் செய்துகொண்டு சிக்கித் தவிக்கும் ஒரு பெண் – தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை யதார்த்தமாகவும் மிக நுட்பமாகவும், உணர்ச்சிகள் இழையோட, மிக ஆழமாகவும் “செல்லாத பணம்” கதைக்களம் மனதை உலுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நிலவுகின்ற சாதி அமைப்புக்கும் – பால்நிலை பாகுபாட்டுக்கும் இடையில் ஒரு நெருக்கமான உறவை பெண் விடுதலை என்ற நோக்கில் சமத்துவத்துக்கான பண்பாட்டுப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.

சமத்துவ – ஜனநாயக உணர்வை ஏற்படுத்த நடைபெறும் போராட்டத்தின் வாயிலாகத்தான் சமூக அவலங்களுக்கு தீர்வைத் தேட முடியும்.

“செல்லாத பணம்” என்கின்ற சமூக யதார்த்த நாவல் இலக்கியத்தை மிகையான புனைவுகள் இன்றி எழுத்தாளர் இமையம் சிறப்பாக படைத்துள்ளார்.

எஸ். காமராஜ்

disclaimer