கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய அச்சமும் அதன் அதிர்வலைகளும் மொத்த நாட்டையும் ஏன் உலக நாடுகளையும் கூட உலுக்கின. தொழிற்சாலைகளும் அரசு – தனியார் அலுவலகங்களும் பெரிய சிறிய வணிக நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துயரம், உயிர் பலி, உழைக்கும் மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளிய அவலம் என சுருக்கமாக சொல்வதென்றால் போர் ஏற்பட்டால் எத்தகைய சூழல் உருவாகுமோ அதற்கு இணையான நிலைமை உருவாகியது என்றால் அது மிகையில்லை.
இந்த பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு அரசியல் சமூக நிலைமைகளிலும் மாற்றத்தைக் கோரின. பள்ளி – கல்லூரி பாடங்கள் மட்டும் அல்ல அரசியல் கூட்டம் கூட ஆன்லைன் மூலம் நடந்தேறின. குறிப்பாக மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் பிழைப்புக்கான வழியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தின. கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கும் முன்பாக தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தேன். கொரோனா ஊரடங்கு துவங்கிய பின்னர், வேலையும் இல்லை. வருமானமும் இல்லை.
இந்த மாதிரியான நாட்களை கடப்பதென்பது கொடூரமானது. ஒவ்வொரு நொடியும் மன அழுத்தத்தை அதிகரிக்கும். உணவும் இதர தேவைகளும் உத்திரவாதமில்லாத நிலை ஏற்படுத்தும் சூழல், மன அழுத்தத்தை அதிகமாக்கி குடும்பத்தில் சண்டைகள் வெளிப்பட்டு நிம்மதியிழக்க செய்தது. அமைப்பும் – தோழர்களின் உதவியும் நெருக்கடியில் இருந்து மீண்டு வர உதவினாலும், பிழைப்புக்கான வழியில் சுய முயற்சி இல்லாத எனது போக்கைக் கண்டு என் துணைவி விமர்சனம் செய்ததோடு, மாற்றாக செயல்படவும் துணிந்தார்.
படிக்க :
♦ அதிமுக பொதுக்குழு கூட்டம் : போலீஸ் அடாவடித்தனத்தை முறியடித்த பொதுமக்கள் !!
♦ ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினால் ஊபா UAPA சட்டத்தில் கைதா ?
கோயம்பேடு மார்க்கெட்டிற்குச் சென்று பழங்களை வாங்கிக் கொண்டு வந்து ட்ரை சைக்கிளில் வைத்து விற்கத் துவங்கினார். ஓரளவு நடந்த வியாபாரத்தின் காரணமாக குடும்பத்தின் அடிப்படை வருவாய் பிரச்சினை தீர்ந்தாலும் வேறொரு பிரச்சினை எழுந்தது.
தினந்தோறும் மார்க்கெட் செல்ல விடியற் காலை 4 மணிக்கு ஆட்டோ பிடிக்க வேண்டுமனால் 3 மணிக்கே எழுந்து தயாராகி, மெயின் ரோட்டிற்கு வர வேண்டும். அதைத் தொடர்ந்து வாங்கி வந்த பழங்களை வகை பிரித்து வியாபாரத்திற்கு கிளம்பி மீண்டு்ம் வீடு வர மதியமோ, சில நாட்கள் இரவு கூட ஆகி விடும். வியாபார வேலையை என் துணைவி பார்த்துக் கொண்ட பிறகு வீட்டு வேலையை நான் பார்க்கலானேன்.
வீட்டில் காலை – இரவுக்கு சமைப்பது துணிகளை துவைப்பது குழந்தையை பராமரிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்தாலும் எனக்கும் என் துணைவியாருக்கும் இடையே பிரச்சினை வெடிக்கும். அதுவும் வியாபரம் ஆகாத நாட்கள் என்றால் அன்றைக்கு சண்டை உக்கிரமாக நடக்கும்.
நாம்தான் ஆணாதிக்கத்தோடு நடந்து கொள்வதில்லையே மரியாதையோடுதான் பேசுகின்றோமே வேலையும்தான் செய்கின்றோமே என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. என் துணைவியார் சிறுசிறு குறைகளை சுட்டிக் காட்டினால் கூட, நாம் ஆணாதிக்கம் இல்லாமல் வீட்டு வேலைகளை செய்து வந்தாலும் இப்படி சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அக்கப்போர் நடக்கிறதே என எண்ணுவேன்.
என் துணைவியார் தள்ளுவண்டி பழ விற்பனைக்கு செல்லத் துவங்குவதற்கு முன்னரெல்லாம் என் இளைய மகள் தென்மொழி மலம் கழித்தால் கால்கழுவி விடுவதைக் கூட அருவெறுப்பாக பார்த்த நான் இந்த காலகட்டத்தில் குழந்தையை குளிக்க வைப்பது, களி (சத்து மாவு), பால் போன்ற உணவுகளை செய்து கொடுப்பது, குழந்தையை குளிக்க வைப்பது உள்ளிட்ட அனைத்து வகையான பராமரிப்பு வேலைகளையும் கற்றுக்கொண்டேன். அதை அன்றாடம் செய்து வந்தேன். மறுபுறம் குழந்தையும் என்னிடம் நெருக்கமானது. இவையெல்லாம் சேர்ந்து எனக்கு சுயதிருப்தி மேலோங்கி என்னை பரிசீலிக்காதபடி செய்தது.
சுயபரிசீலினை செய்து கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என அமைப்பு கற்றுக் கொடுத்துருக்கின்றது. அதன்படி நிதனமாக யோசிக்க துவங்கினேன். வீட்டு வேலைகளை செய்தாலும், துணைவி அதில் ஏதேனும் தவறை சுட்டிக் காட்டினால் கூட அதில் நான் எரிச்சலைடய காரணம் என்ன? சண்டை வர காரணம் என்ன ? என்று யோசித்துப் பார்த்தேன்.
“ஒரு ஆணாக இருந்து கொண்டு வீட்டு வேலைகளைச் செய்வதையே” நான் செய்யும் மிகப்பெரிய சாதனையாகக் கருதுவதால் தான், வேலைகளை ஏனோதானோவென்று செய்திருப்பதை என் துணைவியார் சுட்டிக் காட்டும் போது எரிச்சலுணர்வு ஏற்படுவதை உணர முடிந்தது.
எனது வேலைகள் ஏனோ தானோவென்றும் ஒழுங்கற்றும் இருக்கும். சான்றாக, சமையல் வேலையை சரியாக செய்தாலும், அடுப்பைச் சுற்றி சுத்தமாக துடைக்காமல் விட்டிருப்பேன். துணிகளை துவைத்திருந்தால் வீட்டை கூட்டி மாப்பு போட்டிருக்க மாட்டேன். இப்படி ஏதாவதொரு வேலையை விட்டுவிட்டாலும், அரைகுறையாகச் செய்தாலும் எனது தரப்பை நியாயப்படுத்த மட்டும் நான் ஒருபோதும் தயங்கியதே இல்லை. அதற்குக் காரணம் ஒரு ஆணாக இருந்து கொண்டு இதனைச் செய்ததே பெரிய விசயம் என்று நினைத்ததுதான்.
வீட்டு வேலை என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்னே சமையல், பாத்திரங்களை கழுவுவது, தண்ணீர் பிடித்து வைப்பது, துணி துவைப்பது, வீட்டை பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது, குழந்தையை பராமரிப்பது, கழிவறையை சுத்தப்படுத்தி வைப்பது இவை அனைத்தும் நோ்த்தியாகவும் விரைவாகவும் செய்வதே வீட்டு வேலையாகும். அதை செய்வது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான அளவுகோல்தான் உண்டு. அதை அரைகுறையாகச் செய்வதே பெரிய சாதனையைப் போல சிந்தித்து வந்ததை உணர்ந்து, அதனை மாற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டேன்.
படிக்க :
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !
♦ ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !
என் தவறை உணர்ந்ததைத் தொடர்ந்து, அந்த சிந்தனையை மாற்றிக் கொண்டு, வீட்டு வேலைகளை முழுமையான ஈடுபாட்டோடு வரிசைப்படுத்தி செய்ய முயன்றபோது, உரிய நேரத்தில் வேலைகளை முடிக்க முடியாமல் திணறினேன். குறிப்பாக சமையல் வேலையானது கவனமாகவும் நிதனமாகவும் செய்வதோடு பாத்திரங்களை கழுவும் வேலையும் அக்கம் பக்கமாகவும் செய்ய வேண்டிய வேலையாக இருந்தது. அதைச் செய்து கொண்டிருக்கும் போதே குழந்தை மலம் கழித்தால் உடனடியாக துக்கிச் சென்று கால்கழுவி விட வேண்டும்; அல்லது, விளையாட்டின் ஊடாக கீழே வீழ்ந்து விட்டால் தேற்ற வேண்டும். இதற்குள் இரவு 7 மணி ஆகி விடும். அப்போது ஏற்படும் எரிச்சலும் சலிப்பும் சொல்லி மாளாது.
ஏற்கெனவே சொன்னபடி மனைவியிடம் மரியாதையாக பேசுவது (கொரோனாவுக்கு முந்தைய காலத்தில்) மற்றும் வீட்டு வேலைகளில் சிலவற்றை செய்வதே ஆணாதிக்கத்தை விட்டொழித்து விட்டதாக கருதிக் கொண்டேன். இப்படிப்பட்ட சீர்த்திருத்தவாத கண்ணோட்டமும் அதற்குறிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்திக் கொண்டே குடும்பத்திலும் வெளியிலும் புரட்சியாளன் என தம்பட்டமடித்துக் கொண்டிருந்தேன் என்பதை இந்தக் கொரோனா காலகட்டத்தில் ஆழமாக பரிசீலிக்கையில் உணர முடிகின்றது.
சொத்துடைமை கண்ணோட்டத்தின் விளைவாக உருவான ஆணாதிக்கத்தை முதலாளித்துவம் உயர்த்திப் பிடித்திருக்கிறது. தனது இலாப நோக்கத்திற்கு இதனை பயன்படுத்திக் கொண்டது. பெண்களின் உழைப்பை மலிவான விலைக்குச் சுரண்டிக் கொழுத்தது முதலாளித்துவம். கருத்துரீதியாகவும் பலவந்தமாகவும் (உடல் ரீதியாகவும்) ஆணாதிக்கம் பிரயோகிக்கப்பட்டதை எதிர்த்து அன்றைக்கு ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளில் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவு உழைக்கும் மக்கள் தங்களது அரசியல் – ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதன் வரலாற்றை பார்க்கின்றோம்.
ஆணாதிக்கத்தை எதிர்க்கும் அல்லது மாற்ற விரும்பும் ஆண்கள் யாராக இருப்பினும் ஆணாதிக்க எதிர்ப்பில் தங்களை முழு சுய சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி உட்படுத்திக் கொள்ளத் தவறினால், மாற்றத்திற்கு வழி வகுக்காத மத போதனையாகவே ஆணாதிக்க எதிர்ப்பு எனும் கோஷம் முடிந்துவிடும். அதே சமயத்தில் ஆணாதிக்கமானது இடைவிடாது இயக்கத்தில் இருக்கின்றது. கிராமம் – நகரம், படித்தவர் – படிக்கதாவர் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து பார்ப்பனியம் – முதலாளித்துவம் ஆகிய நச்சுக்கள், ஆணாதிக்கத்தை நிலைநாட்டும் வகையிலான கருத்தையும் கண்ணோட்டத்தையும் அன்றாடம் வழங்கி வருகின்றன.
கொரோனா தொற்று ஊராடங்கின் போது அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள்தான் இந்த பெரும் நெருக்கடியிலிருந்து தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள முடிந்தது, என்றார் பு.ஜ.தொ.மு.–வின் முன்னாள் பொருளாளர் தோழர் விஜயகுமார். உண்மைதான் எனினும், சங்கமாக திரட்டப்படுவது மட்டுமல்லாமல், மா.லெ. சித்தாந்த ரீதியான கண்ணோட்டம்தான், நெருக்கடி மிகுந்த காலத்தை கடந்து வருவதற்கான பார்வையை வழங்குகின்றது. முன்னது ஒடுக்குமுறைக்கெதிராக அனைவரையும் ஒன்றுபட வைக்கின்றது என்றால் பின்னது அனைத்துப் பிரிவு ஒடுக்கப்பட்டவர்களின் பார்வையில் இருந்து சிந்திக்கவும் – செயல்படவும் வைக்கின்றது.
ஆ.கா.சிவா