பெரியார் பல்கலை : பெரியார் கருணாநிதியின் புகைப்படங்களுடன் “வேதஷக்தி” ஆய்வரங்கம் !

சேலம் மாநகரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (16-08-2021) ஒரு ஆய்வரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்களும் ஊழியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது அப்பல்கலைக்கழக நிர்வாகம்.

“வேதஷக்தி வர்மக்கலையும், பண்பாட்டுப் பின்புலமும்” என்ற தலைப்பில்தான் அந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தது, பல்கலைக்கழகத்தில் செயல்படும் “கலைஞர் ஆய்வு மையம்” என்பதுதான் கூடுதல் ‘சிறப்பு’. திமுக ஆட்சியில் அமர்ந்த பின்னர்தான் இந்தப் பல்கலையின் துணைவேந்தர் ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்

திராவிட மண் என சவடால் பேசி ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, தேர்தலுக்கு முன்னாள் பாஜக-வை விமர்சித்த அளவிற்குக் கூட தேர்தலுக்குப் பின்னர் பாஜக-வை விமர்சிப்பதில்லை. கூடுதலாக திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வெட்கமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சேவா பாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

இப்போது பெரியாரின் பெயரில் உள்ள ஒரு அரசு பல்கலைக் கழகத்தில், “வேதஷக்தி” குறித்த ஒரு கருத்தரங்கம் கலைஞர் பெயரில் அமைந்த ஒரு ஆய்வுக் கூடத்தால் நடத்தப்படுகிறது என்பதுதான் திராவிடத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்ய முடிந்த ‘பெருந்தொண்டு’ போலும்.

பொய்யையும் புரட்டையும் வரலாறாக திரித்துக் கூறும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலை கீழே பண்பாட்டுத் தளத்திலும் கல்வித்தளத்திலும் வளரவிட்டு தமிழகத்தை உத்தரப்பிரதேசம் போன்ற ஒரு பசுப் பாதுகாப்புக் கும்பலின் விளைநிலமாக மாற்றுவதற்குத் தயாராகிறதா திமுக ?

ஏற்கெனவே, அடிமைகளின் ஆட்சியில் சாஸ்திரா பல்கலை உள்ளிட்ட தனியார் பல்கலைக் கழகங்களிலும், ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களிலும் நடத்தப்பட்டு வந்த இத்தகைய சங்கப் பரிவாரக் கும்பலின் கிரிமினல்தனமான கருத்தரங்கங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் தமிழக அரசுக்கு கீழ் உள்ள பல்கலைக் கழகங்களிலேயே நடைபெறுவதுதான் அவலத்தின் உச்சம்.

பாஜக-விடம் பணிந்ததற்காகத்தான் எடப்பாடி கும்பலை அடிமைக்கும்பல் என்று தமிழகமே தூற்றி வருகிறது. இன்று ஆர்.எஸ்.எஸ் எனும் நச்சுப் பாம்பு செழித்து வாழ்வதற்கான நிலமாக தமிழகத்தை மாற்ற உதவும் திமுக-வையும் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிமைக்கும்பல் என அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர் நீக்கம் உள்ளிட்ட கண் துடைப்பு நடவடிக்கைகளை ஒருபுறத்தில் நிறைவேற்றிக்கொண்டு, மறுபுறத்தில் ஆர்.எஸ்.எஸ், வளர்வதற்கான அடித்தளத்தை தமிழகத்தில் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக. ஆட்சியில் அமர்ந்த பிறகு, ஆர்.எஸ்.எஸ்.-ன் சேவா பாரதி துவக்க விழாவில் இரண்டு அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டது, பாரத மாதா சிலையை திறந்து அமைச்சர் திறந்து வைப்பது என தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.-ன் நச்சு விதைகளை தமிழகம் முழுக்க நட்டு வருகிறது திமுக.

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களையும், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரையும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தி ஆர்.எஸ்.எஸ். ஆதரவு கும்பலை அனைத்துக் கல்வி நிலையங்களில் இருந்தும் களையெடுக்க வேண்டும். அப்படி செய்யத் தவறும் பட்சத்தில் தமிழ்நாட்டை மற்றுமொரு உத்தரப் பிரதேசமாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு திமுக உதவுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.


கர்ணன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க