சிறையில் இருந்து கொண்டு தனி அலுவலகமே நடத்திய
யுனிடெக் ரியல் எஸ்டேட் கும்பல் !
ந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில், மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் யுனிடெக். இந்தியா முழுவதும் ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்துவரும் இந்நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் சந்திரா, மேலாண் இயக்குனர்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா, இயக்குனர் மினோதி, கணக்காளர் சஞ்சய் கல்ரா, தொழில் பங்குதாரர் திவேஷ் வத்வா ஆகியோர் மீது நிதி மோசடிப் புகார்கள் எழுந்ததையொட்டி, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த டெல்லியின் பொருளாதார குற்றப்பிரிவுப் போலீசார் விசாரணை நடத்தி யுனிடெக் கும்பலைக் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
படிக்க :
♦ ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு ஆதரவாக அதிகாரியை தூக்கியடித்த பாஜக அரசு !
♦ எடப்பாடி கும்பல் குற்றவாளி ஏ2 சசிகலாவை சந்தித்தது குற்றமா ?
இதற்கிடையில், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரமேஷ் சந்திரா, தனது மகன்கள் சஞ்சய், அஜய் ஆகியோரை சிறைத்துறை அதிகாரிகள் துணையுடன் சிறை விதிகளை மீறி பலமுறை சந்தித்து உள்ளார். மேலும், இக்கும்பல் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி சிறையிலேயே தனது மோசடி வேலைகளைத் தொடர்ந்து செய்வதற்காக தனியாக அலுவலகம் வைத்து நடத்தி வந்துள்ளனர். அதன் உச்சமாக சிறையில் இருந்துகொண்டே, சிறை அதிகாரிகள், ஊழியர்களின் உதவியுடன் நிறுவனத்தின் சொத்துகளை இம்மோசடி கும்பல் விற்றுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
இதேபோன்று, சொத்துக்குவிப்பு வழக்கில் A2 குற்றவாளியான ‘சின்னம்மா’ சசிகலாவும் அவரது சகாக்களும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட பொழுது சசிகலாவுக்கு 5 தனி அறைகளும் தனி சமையலறையும் சிறைத்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
மோடி அ.தி.மு.க-வின் குடுமியை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தபோது, “அ.தி.மு.க எனும் கொள்ளைக்கார கும்பலைப் பாதுகாப்பதற்காக” மாமியார் வீட்டுக்கு சென்று வருவதுபோல் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் கும்பல் சசிகலாவைப் பார்க்க சிறைக்குச்சென்று வந்தனர். சசிகலா சிறையிலிருந்தபொழுது தனி சலுகைகள் அனுபவிப்பதற்கு 2 கோடி லஞ்சம் கொடுத்தது உண்மை என்று 245 பக்க அறிக்கை அளித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளது.
சஞ்சய் சந்திரா, ரமேஷ் சந்திரா, அஜய் சந்திரா
மேலும் இதேபோல, துணை நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுது அவருக்கும் ஏசி ரூம் மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
“கோடி கோடியாக கொள்ளை அடித்தவன் அரண்மனையில் உல்லாசமாக வாழ்கின்றான்; கிழிந்த துணியை தைக்க ஊசி திருடியவன் சிறையில் வாடுகிறான்” என்ற பழமொழிக்கு ஏற்ப கார்ப்பரேட்டுகள் மீதும், அரசியல் கட்சி ‘பிரமுகர்கள்’ மீதும் வழக்கு இருந்தும் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது தனிக்கதை. ஆனால், அப்படி சிறையில் அடைக்கப்பட்டாலும் இவர்கள் அங்கே தங்கள் உல்லாச வாழ்க்கையைத் தொடர்வதற்கு எந்தத் தடையும் இருப்பதில்லை.
உழைக்கும் மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடக் கூடிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் சிறையில் அடக்கி ஒடுக்கி சித்திரவதை செய்வதை அரசு இயந்திரம் தனது வாடிக்கையாகக் கடைப்பிடித்து வருகிறது. 85 வயதான போராளி ஸ்டாண்ட் சாமி, ஒரு ஸ்ட்ரா கேட்டதற்கு நீதிமன்றம் சென்று வழக்காட வேண்டிய கொடூரம் அரங்கேறியது. இன்னும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாய்பாபா, ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட செயற்பாட்டாளர்களுக்கு அரங்கேற்றப்படும் கொடுமைகள் ஏராளம்.
ஜெயராஜ், பென்னிக்ஸ்
சாதாரண சின்னச்சின்ன வழக்குகளில் கைதாகும் உழைக்கும் மக்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில் சித்திரவதையை அனுபவிக்கின்றனர். ஊரடங்கு காலத்தில் 15 நிமிடங்கள் கூடுதலாகக் கடையைத் திறந்த ‘குற்றத்திற்காக’, சாத்தான்குளத்தில் தந்தை மகனைச் சிறையில் வைத்துக் கொட்டடிக் கொலை செய்தார்கள். ஆனால், கார்ப்பரேட் கிரிமினல் கும்பல்களோ, அரசியல் கிரிமினல்களோ சிறையில் இருந்தாலும் உல்லாசமாக வாழ்கிறார்கள்.
அரசு எல்லாருக்கும் பொதுவானதாக, ஜனநாயகமாக இருப்பதாகவும், அதன் உறுப்புகளில் ஒன்றான சிறைச்சாலை, யார் தவறு செய்தாலும் அதைத் திருத்துவதற்காக, எல்லோருக்கும் பொதுவானதாக, செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிறைச்சாலைகள் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உல்லாசபுரியாகவும் இருக்கும் அதேவேளையில் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சித்திரவதை கூடங்களாக உள்ளன என்பதையே அனைத்து நிகழ்வுகளும் கோடிட்டு காட்டுகின்றன.

வினோத்
செய்தி ஆதாரம் : தினகரன் 27.08.2021

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க